Sunday, October 30, 2005

ஜெய்ப்பூரில் தீபாவளி பட்டாசு

முதலிரண்டு ஆட்டங்களையும் பார்க்க முடியவில்லை, ஆனால் இந்த ஆட்டத்தில் இரண்டாவது பாதியையாவது தொலைக்காட்சியில் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். டெண்டுல்கர் திரும்பி வந்து விளையாடும் நேரம் அவரது க்ரிப் எப்படி இருக்கிறது, மட்டை கனம் குறைந்துள்ளதா, கால்கள் நகர்த்துவதில் ஏதாவது மாறுதல் உள்ளதா, ஷாட் தேர்ந்தெடுப்பதில் ஏதாவது புதுமை உள்ளதா - இதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

காலையில் அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது, எனவே காலையில் இலங்கை பேட்டிங் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அட்டப்பட்டு டாஸில் ஜெயிக்க நான் நினைத்தபடியே நடந்தது. இந்த ஆடுகளத்தில் 275 ரன்கள் நிச்சயம் உண்டு என்றுதான் ரேடியோ வர்ணனையாளர்களும் (ரவி சாஸ்திரியும்) சொன்னார்கள். ஆனால் முதல் முப்பது ஓவரில் இந்தியாவின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. விக்கெட்டுகளைப் பெறாவிட்டாலும் ரன்களை சிறிதும் கொடுக்கவில்லை. இலங்கை 10 ஓவரில் 51/1, 20 ஓவரில் 77/1, 30 ஓவரில் 117/2 என்ற கணக்கில் இருந்தது. 30வது ஓவரின் போது அணியின் ரன் ரேட் வெறும் 3.9!

பொதுவாக, அணிகள் தாம் முதல் 30 ஓவர்களில் எடுத்த எண்ணிக்கையையாவது அடுத்த 20 ஓவர்களில் எடுக்க முனைவார்கள். அப்படிப் பார்த்தால் இலங்கை 250ஐயே தொடாது. இன்றும் ஜெயசூரியா அதிக நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. அகர்கர் வீசிய அற்புதமான ஓவரில் அந்த விக்கெட் விழுந்தது. ஜெயசூரியா ஆக்ரோஷமான தனது ட்ரேட்மார்க் அடியின் மூலம் கவர் திசையில் நான்கு ரன்களைப் பெற்றார். அடுத்த இரண்டு பந்துகளும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்து உள்நோக்கி ஸ்விங் ஆகி கால் காப்பில் பட்டது. இரண்டு முறையும் எல்.பி.டபிள்யூ அப்பீல், ஆனால் அவுட் கொடுக்கப்படவில்லை. அடுத்த பந்தும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்தது, ஆனால் அதிகமாக எழும்பவில்லை. ஜெயசூரியா வெட்டி ஆடப் போனார், ஆனால் பந்து உள்விளிம்பில் பட்டு அவர் பவுல்ட் ஆனார். மோசமான ஃபார்மில் இருந்த அட்டபட்டு ஜெய் பிரகாஷ் யாதவின் பந்தில் விக்கெட் கீப்பர் தோனியிடம் பிடிகொடுத்து அவுட்டானார்.

அதன்பிறகு விக்கெட் விழ வெகு நேரம் ஆனது. மிகவும் மெதுவாக, ஆனால் கவனமாக சங்கக்கார-ஜெயவர்தனே ஜோடி ரன்களைச் சேர்த்தது. சில கேட்ச்கள் ஆளரவமற்ற பகுதிகளில் விழுந்தன. திராவிட் ஒரு கேட்ச் விட்டார். ஹர்பஜன் தன் பந்தில் தானே ஒரு கேட்ச் விட்டார் என்று நினைக்கிறேன்.

சரியாக 30 ஓவர்கள் தாண்டியதும் ஜெயவர்தனேதான் முதலில் ஆக்ஸிலரேட்டரை அழுத்தினார். அடுத்த பத்து ஓவர்களில் இலங்கை பெற்ற ரன்கள் 8, 8, 9, 3, 9, 4, 11, 8, 7, 10 = 77! முக்கியமாக அடி வாங்கியவர் முரளி கார்த்திக். கார்த்திக்குக்கு பத்து ஓவர்களையும் கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்த திராவிட், சேவாக், டெண்டுல்கர் இருவரையும் பந்து வீச அழைத்ததில் அவர்களும் எக்கச்சக்கமாக ரன்களைக் கொடுத்தனர். கடைசி பத்து ஓவர்களில் இலங்கை பெற்ற ரன்களோ 104! இர்ஃபான் பதான் இந்த நேரத்தில் வீசிய எல்லா ஓவர்களிலும் ரன் மழைதான். ஹர்பஜன் ஒருவருக்குத்தான் ஏற்றுக்கொள்ளக்கூடிய பவுலிங் புள்ளிவிவரம் - 10-0-30-0. ஜெயவர்தனே 71-ல் அவுட்டாக, சங்கக்கார கடைசிவரை அவுட்டாகாமல் இருந்து மஹரூஃபின் துணையுடன் அணியை 298க்குக் கொண்டு சென்றார்.

சங்கக்கார அற்புதமாக ஆடினார். ஆனால் பிரயோஜனமில்லாமல் போய்விட்டது.

இந்தியா மிகவும் மோசமான சேஸிங் அணி. 225 இலக்கு என்றால் கூட அதையும் சொதப்பும். அதுவும் டெண்டுல்கர் சேஸ் நேரத்தில் நின்றாடுவது கிடையாது. சேவாகும் அப்படியே. இன்று என்ன செய்யப்போகிறார்கள்? நான் வீட்டுக்குப் போய்ச்சேர்வதற்கு முன்னமேயே முதல் ஓவரிலேயே டெண்டுல்கர் ஆஃப் ஸ்டம்புக்கு வெகு வெளியே சென்ற - விட்டிருந்தால் வைட் - பந்தைத் துரத்திச் சென்று கிட்டத்தட்ட இரண்டாம் ஸ்லிப் முன்னால் கேட்ச் கொடுத்தார். சங்கக்கார அற்புதமான கேட்ச் பிடித்தார். திராவிட் ஒவ்வோர் ஆட்டத்திலும் ஒரு புது 3-ம் எண் ஆட்டக்காரரை அனுப்புகிறார். இம்முறை மஹேந்திர சிங் தோனியை அனுப்பினார்.

காரணம் புரிந்தது. முதல் ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. அதனால் இர்ஃபான் பதானை பிஞ்ச் ஹிட்டர் என்ற ரூபத்தில் அனுப்பினார்கள். இந்தியா மீது எந்த அழுத்தமும் இல்லை. அது ஒரு சர்ப்ரைஸ் மூவ். இரண்டாம் ஆட்டம் - யார் வேண்டுமானாலும் இறங்கியிருக்கலாம். ஜெய் பிரகாஷ் யாதவை அனுப்பினார்கள். அவர் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை, தேவையும் இருக்கவில்லை. இன்றோ மாபெரும் இலக்கை அடைய வேண்டுமானால் ரன்களும் வேகமாக வேண்டும், விக்கெட்டையும் இழக்கக் கூடாது. அதற்கு பதானை அனுப்புவதை விட தோனியை அனுப்புவது உசிதம். சேவாக், தோனி இருவருமே அடித்தாட வேண்டும் என்று எதிர்பார்த்தார்களோ என்னவோ...

ஆனால் தோனியின் ஆரம்பத்தைப் பார்த்த சேவாக் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். தோனியின் ஆட்டத் தொடக்கம் வித்தியாசமாக இருந்தது. ஒன்றிரண்டு பந்துகள் தடுத்தாடுவார், பின் ஒரு சிக்ஸர். சமிந்தா வாஸ் வீசிய இரண்டாவது, மூன்றாவது ஓவர்கள் ஒவ்வொன்றிலும் தோனி கவர் திசைக்கு மேல் சிக்ஸ் அடித்திருந்தார். மறு பக்கம் தில்ஹாரா ஃபெர்னாண்டோ நன்றாக வீசினார். அட்டபட்டு வாஸுக்கு பதில் மஹரூஃபைப் பந்து வீச அழைத்தார். தோனி அவரையும் பந்து வீச்சாளர் தலைக்கு மேலாக ஒரு சிக்ஸ் அடித்தார். அதே ஓவரில் சேவாகுக்கு ஒரு நான்கு, தோனிக்கு ஒரு நான்கு. அவ்வளவுதான். எட்டாவது ஓவரில் இந்தியாவின் 50. பத்தாவது ஓவரில் இந்தியா 75/1.

இந்த நிலையில் அட்டபட்டு பவர்பிளே-2ஐ எடுக்கவில்லை. பந்துத் தடுப்பு வியூகத்தைத் தளர்த்தி, முரளிதரனைப் பந்துவீச அழைத்தார். அவரது நோக்கம் என்னவென்றால் தோனி ஏதாவது தப்பு செய்து முரளியிடம் விக்கெட்டை இழப்பார், அப்பொழுது பவர்பிளே-2ஐக் கொண்டுவரலாம் என்பதே. ஆனால் தோனி, சேவாக் இருவருமே முரளிக்கு எதிராக எந்த ரிஸ்க்கையும் எடுக்கவில்லை. பந்துக்கு ஒரு ரன், இரண்டு ரன்கள் என்று தட்டித் தட்டி ரன்கள் பெற்றனர். ஆனால் நிகழ்வுக்கு மாறாக முரளியின் பந்துவீச்சில் சேவாக் எல்.பி.டபிள்யூ ஆனார். தொலைக்காட்சி ரீப்ளேயில் எனக்கு அவ்வளவு திருப்தியில்லை. சேவாகின் துரதிர்ஷ்டம். இந்தப் பந்து லெக் ஸ்டம்பில் விழுந்தது, ஒருவேளை அதற்கு வெளியே கூட விழுந்திருக்கலாம். 99/2, 14.5 ஓவரில். அப்பொழுது தோனி 50 பந்துகளில் 56 ரன்கள் பெற்றிருந்தார், 6x4, 3x6.

அடுத்து அணித்தலைவர் திராவிட் நடுவே வந்தார். தோனி தன் சிக்ஸ் தாகத்தை மறக்கவில்லை. உபுல் சந்தனாவின் அடுத்த ஓவரில் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸ் பறந்தது. என்ன செய்வதென்று தெரியாத நிலையில் அட்டபட்டு பவர்பிளே-2ஐத் தொடங்கினார். மீண்டும் தடுப்பு வியூகம் உள்வட்டத்துக்குள். இப்பொழுது தோனி இன்னமும் இலகுவாக ரன்கள் பெறத் தொடங்கினார். சந்தனாவைப் பின்னிப் பெடலெடுத்தார்... முரளியையும் விட்டுவைக்கவில்லை. சில டென்னிஸ் ஷாட்களும் உண்டு இதில். பல ஷாட்கள் பார்க்கக் கொடூரமாக, அசிங்கமாக இருந்தன. பல அற்புதமாக இருந்தன. ஒரு பந்தை கிட்டத்தட்ட புல் ஷாட் அடிப்பது போல அடித்து லாங் ஆஃப் திசையில் (ஆம்!) நான்கைப் பெற்றார்! பவர்பிளே-2 முடியும்போது - 21 ஓவரில் - இந்தியா 155/2 என்ற எண்ணிக்கையில் இருந்தது. ரன் ரேட் 7.38!

அட்டபட்டு இப்பொழுது பவர்பிளே-3ஐ எடுக்க விரும்பவில்லை. மீண்டும் வியூகத்தைத் தளர்த்தி எப்படியாவது தோனியை அவுட்டாக்கி விடலாம் என்று பார்த்தார். ஆனால் நடக்கவில்லை. 85 பந்துகளில் தனது சதத்தைப் பெற்றார் தோனி. (10x4, 5x6).

அட்டபட்டு, 28வது ஓவரில் மீண்டும் முரளியைப் பந்துவீச்சுக்குக் கொண்டுவந்தார். அத்துடன் பவர்பிளே-3ஐ எடுத்தார். இந்த ஓவரில் திராவிட் மிக மோசமான தவறைச் செய்தார். பந்தின் வேகத்தைக் கணிக்காமல் அதை ஃப்ளிக் செய்யப்போய், முரளிக்கே எளிதான கேட்சைக் கொடுத்தார். இந்தியா 185/3.

இது மோசமான கட்டம். தோனி சதம் அடித்துவிட்டதால் எந்நேரமும் அவுட்டாகி விடுவார் என்று நினைத்தேன். திராவிடும் அவுட்டானதால், இந்தியா நல்ல நிலைமையில் இருந்தாலும் இனிவரும் மாணிக்கங்கள் ஊத்தி மூடிவிடுவார்களோ என்று நினைத்தேன். யுவராஜ் வந்தது முதல் அவ்வளவு நன்றாக விளையாடவில்லை. ஆனால் தோனியோ தன் வேகத்தைக் குறைக்கவேயில்லை. மஹரூஃபை லாங் ஆன் மேல் அடித்து தன் ஆறாவது சிக்ஸரைப் பெற்றார். நான்குகள் எளிதாகவே கிடைத்தன. அடுத்து திலகரத்னே தில்ஷனை சைட் ஸ்க்ரீன் மேல் அடித்து தன் ஏழாவது சிக்ஸைப் பெற்றார். ஆனால் இந்த சிக்ஸ் அடிக்கும் முன்பாக தில்ஷனை இறங்கி வந்து அடிக்கப்போய் தன் கால்களை அதிகமாக அகட்டி வைத்தார். அதனால் கொஞ்சம் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. ஆனாலும் அடுத்த பந்தில் சிக்ஸ் அடிக்கத் தயங்கவில்லை. ஆனால் அதற்கடுத்து தனக்கு ரன்னர் தேவை என்று கேட்டுக்கொண்டார். சேவாக் ரன்னராக வந்தார். அந்த நிலையில் தோனி 130 ரன்கள் பெற்றிருந்தார். (13x4, 7x6). சரி, இவர் நிலைமை அவ்வளவுதான், சீக்கிரம் அவுட்டாகி விடுவார் என்று நினைத்தேன். இப்பொழுது அவ்வளவு மோசமான நிலைமை இல்லை. 86 ரன்கள்தான் தேவைப்பட்டது.

ஆனால் தோனி அவுட்டாக விரும்பவில்லை! அப்படியும் இப்படியும் நொண்டிக்கொண்டே ஒரு ரன், இரண்டு ரன்கள் எளிதாகப் பெற்றார். கடைசியாக யுவராஜ் மூன்று பவுண்டரிகள் பெற்றார், அதில் இரண்டு வாஸ் வீசிய ஓர் ஓவரில். தோனி சந்தனாவை இரண்டு நான்குகள் அடித்து, சீக்கிரமாக தன் 150ஐ எட்டினார். விரைவில் யுவராஜ் சிங் தில்ஷன் பந்துவீச்சில் அவுட்டானார்.

ஆனால் இப்பொழுது நிலைமை இந்தியாவுக்கு சாதகம். வெறும் 49 ரன்கள் தேவைப்பட்டன. ஏகப்பட்ட ஓவர்கள் பாக்கி. வேணுகோபால ராவ் பேட்டிங் செய்ய வந்தார். நிறையத் தடுமாறினார். தோனியும் மிகவும் அலுப்புற்றிருந்தார். அதனால் அடுத்த சில ஓவர்களில் ரன்கள் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. கடைசியாக வேணுகோபால் தில்ஷன் பந்து வீச்சில் ஒரு சிக்ஸ் அடித்து தான் மாட்டிக்கொண்டிருந்த வலையிலிருந்து மீண்டார். அதன்பின்னர் ரன்கள் கிடைப்பது அவருக்கு எளிதானது.

சந்தனா வீசிய 45வது ஓவரில் தோனி இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். அத்துடன் 175ஐத் தாண்டினார். ஒன்பது சிக்ஸர்கள் இந்திய ரெகார்ட். ஓர் ஓவர் கழித்து மீண்டும் தில்ஷன் பந்து வீச்சில் தன் பத்தாவது சிக்ஸர் மூலம் தோனி ஆட்டத்தை ஜெயித்துக் கொடுத்தார். கடைசி 53 ரன்களை கால்களை நொண்டிக்கொண்டே அடித்தார் என்பது முக்கியம். மொத்தத்தில் 145 பந்துகளில் 183 ரன்கள், 15x4, 10x6.

ஓரிரு முறைகள் தோனி அடித்த பந்துகள் சந்தனா, முரளி ஆகியோரில் கையில் பட்டு - ஆனால் கேட்ச் பிடிக்க வாய்ப்பே இல்லை - எல்லைக்கோட்டைக் கடந்தன. பலமுறை லாங் ஆன், லாங் ஆஃபில் தடுப்பாளர்கள் இருந்தும், அவர்கள் நகர்வதற்கு முன் பந்து எல்லைக்கோட்டைக் கடந்தது. 'காட்டடி' என்று சொல்வார்களே அதுதான். சேவாக் போல விளையாடுகிறார், டெண்டுல்கர் போல அல்ல. அழகான ஷாட் என்று எதையுமே என்னால் சொல்லமுடியவில்லை. எல்லாமே மடார் மடார் என்று பந்து கதறி அழுவதைப் போல அடித்ததுதான். அதனால் ஒன்றும் மோசமில்லை...

எனக்குப் பிடித்தது, தோனி சிறிதும் அவுட்டாக விரும்பாதது. கஷ்டமாக இருக்கும்போதெல்லாம் பந்துக்கு ஒரு ரன் எடுத்து அடுத்தவரை பேட்டிங் செய்ய விட்டார்.

நிச்சயமாக ஒருநாள் போட்டிகளில் தோனி இந்தியாவுக்கு மிகவும் உபயோகமாக இருப்பார். டெஸ்ட் போட்டிகளில்... இப்பொழுதைக்குக் கருத்து ஏதும் சொல்ல முடியாது.

விருதுகள் வழங்கும்போது திடீரென்று ராஜஸ்தான் கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் லலித் மோடி தோனிக்கு ரூ. 10 லட்சம் சிறப்புப் பரிசு கொடுத்தார். தோனியின் இன்றைய இன்னிங்ஸுக்கு கோடி கொடுக்கலாம்.

ஸ்கோர்கார்ட்

0 Comments:

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home