Wednesday, October 18, 2006

Welldone WestIndies :)

இந்திய கிரிக்கெட் அணி ஒரு தொடரில் ஆடுவதை வைத்து அடுத்த தொடரில் எப்படி ஆடும் என கணிக்க இயலாது என்ற குற்றச்சாட்டு பலகாலமாக உண்டு. அந்தளவுக்கு Inconsistency team. வெகுசிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் அணி, திடீரென கென்யாவுடனான தொடரில் மண்ணைக்கவ்வும். அடுத்த ஆஸ்திரேலியா தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் (நமக்கும் சேர்த்துதான்) கொடுக்கும். ஆனால் இந்திய அணியை விட அதிகமான Inconsistency உள்ள அணி ஒன்று உண்டென்றால் அது மேற்கிந்திய தீவுகள் அணிதான். ஒவ்வொரு ஆட்டத்திற்கும் ஏதோ வித்தியாசமான அணியாய் தோன்றும். பெரும்பாலும் இந்த அணி ஒன்று விசுவரூபம் எடுக்கும் அல்லது படுகுழியில் புதைந்திருக்கும். சாம்பியன்ஸ் டிராபியில் இன்றைய ஆஸ்திரேலியாவுடனான ஆட்டம் விசுவரூப வகை. இதற்கு முந்தைய ஆட்டத்தில் இலங்கையுடன் 80 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடைந்திருந்தது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங், சிறப்பான பௌலிங் என உலக சாம்பியனுக்கே அதிர்ச்சியளித்திருக்கிறது.

ஒரு கட்டத்தில் 30 பந்துகளுக்கு 32 ரன்கள் தேவை, கையில் ஐந்து விக்கெட்டுகள், ஹுஸ்ஸேவும், கிளார்க்கும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் மூன்று ஓவர்களில் ஆட்டம் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்தால் கெய்ல் அருமையாக பந்துவீசி 46வது ஓவரில் 3 ரன்களே கொடுத்து பரபரப்புக்கு பிள்ளையார் சுழி போட்டார். அடுத்த ஓவரில் Bravoவின் முதல் பந்தில் கிளார்க் அவுட்டாக எதிரிக்கு எதிரி நண்பன் முறையில், மேற்கு இந்திய தீவுகள் வெற்றி பெற வேண்டத்தொடங்கினேன். அந்த ஓவரில் ஹுஸ்ஸே அடித்த நான்கு ரன்கள் மட்டுமே கிடைத்தன. 18 பந்துகளில் 25 ரன்கள், ஆஸ்திரேலேயாவுக்கு டென்சன் ஆரம்பமாகியது. டெய்லரின் மிக முக்கிய ஓவர் அது. ஐந்தாவது பந்தில் ஹுஸ்ஸே கிளின் போல்டு. ஆறாவது பந்தில் லீ LBW முறையில் அவுட். 12 பந்துகளில் 21 ரன், 2 விக்கெட்டுக்கள் கையில்…. 6 பந்துகளில் 16 ரன், 2 விக்கெட்டுக்கள் கையில். மீண்டும் டெய்லர். முதல் பந்திலேயே கிளீன் போல்ட். மேற்கிந்திய தீவுகளின் ஒரு நாள் கிரிக்கெட்டின் முதல் ஹாட்ரிக். அதன்பின் வந்த மெக்ராத் சம்பிரதாயத்துக்கு 5 ரன்களை எடுத்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.

பத்து ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு முக்கிய வெற்றி. ஆஸ்திரேலியா கொஞ்சம் முழுத்திறனையும் காட்டியிருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கலாம் என்று தோன்றினாலும், கடைசி கட்டத்தில் அவ்வளவு சிறப்பாய் பந்துவீசிய வையும் வையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நேற்று இதே போன்ற ஒரு சூழலில் இலங்கையின் Vassம், Malingaம் சொதப்ப Abdul Razaak அடித்து விளாசி பாகிஸ்தானை வெற்றி பெற செய்தார். இந்திய சூழலில் பகலிரவு ஆட்டங்களில் அதிகமாய் இருக்க வாய்ப்புள்ள சூழலில் இரண்டாவது இன்னிங்சில் அதுவும் இது போன்ற பரபரப்பான சூழலில் வேகப்பந்து வீசுவது உண்மையிலே கடினமான விஷயம். அதை சிறப்பாக செய்த மே.தீ. வீரர்களை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஆனால் அடுத்த போட்டியிலே மீண்டும் சொதப்பவும் செய்வார்கள்.

படு அசமந்தமாயிருந்த சாம்பியன்ஸ் டிராபி நேற்றும் இன்றும் சுவாரசியமாயிருந்தது. ஆஸ்திரேலியாவும் , தென் ஆப்பிரிக்காவும் தங்கள் முதல் ஆட்டங்களில் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் மிச்சமுள்ள இரண்டு ஆட்டங்களிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழல். முழுத்திறனுடன் ஆடுவார்கள். பாகிஸ்தான் கடும் அதிர்ச்சியிலிருந்து மீண்டிருக்கிறது. இலங்கை முழுபலத்துடன் ஆடிவருகிறது. வழக்கமாய் எந்தத்தொடரிலும் ஆரம்பத்தில் தோல்வியடைந்து, கட்டாயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆடும் நம்மவர்கள் அதிசயமாய் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ( உண்மையில் இங்கிலாந்து தோற்றது என்றே சொல்லவேண்டும்). மீதமிருக்கும் ஆட்டங்களும் சுவாரசியாமாயிருக்க வேண்டியிருக்கிறேன். பார்க்கலாம் :)

Cross Posted in http://vicky.in/dhandora

Wednesday, October 11, 2006

சோம்பியன்ஸ் டிராபி???

எனக்கு ICCயின் (BCCIயையும் சேர்த்துதான்) நடவடிக்கைகளை பார்த்தால் பொன்முட்டையிடும் வாத்து கதைதான் ஞாபகம் வருகிறது. பணம்காய்ச்சி மரம் என்பதற்காக அளவுக்கு அதிகமாய் அதனிடமிருந்து பறிக்க நினைத்தால் மரத்திற்கே ஆபத்தாகத்தான் முடியும். உலகக்கோப்பைக்கு அடுத்து, கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளும் பங்கு பெறும் மினி உலகக்கோப்பை தொடங்கியது கூட பலருக்கு தெரியாமல் போய்விட்ட நிலைமை.

உள்ளூரில் மேட்ச் என்றால் எந்த அணி ஆடினாலும் ஆஜராகி ஹ‌வுஸ்புல்லாக்கும் நமது ரசிகர்கள் கூட வெறுத்துப்போகுமளவுக்கு ஒரு போட்டி அட்டவணை. மினி உலகக்கோப்பை என ஒன்று தொடங்கப்பட்டபோது, உலகக்கோப்பையில் ரவுண்ட் ராபின், சூப்பர் சிக்ஸ் என்ற வளவள போட்டி முறைகளுக்கு மாறாக "நாக் அவுட்" முறையில் ஆடி எதிர்பாராத அணி வென்ற/தோற்ற சுவாரசியங்கள் அதிகமாய் இருந்தது. ஆட்டங்களை (வருமானத்தை) அதிகரிக்கிறேன் பேர்வழி என மெல்ல மெல்ல போட்டி முறைகளை மாற்றி இந்த முறை ஒரேயடியாக சொதப்பியிருக்கிறார்கள்.

போட்டி துவங்கி முதல் பத்து நாளைக்கு ஜிம்பாப்வே, பங்களாதேஷ் அணிகளுடன் இலங்கையும் மேற்கிந்திய தீவுகளும் விளையாடி இதில் வெற்றி பெறும் முதலிரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுகிறதாம். சாம்பியன்ஸ் டிராபிக்கு எட்டு அணிகள்தான் வேண்டுமென்றால் தரவரிசையில் ஆறு அணிகளை தேர்ந்தெடுத்ததற்கு பதிலாக முதல் எட்டு அணிகளை தேர்ந்தெடுத்து நேரடியாக அனைத்து அணிகளையும் முதல் சுற்றில் ஆடவிட்டிருக்கலாம். பங்களாதேஷும் ஜிம்பாப்வேயும் வெகுகாலமாய் முதல் எட்டு இடங்களுக்குள் இடம்பெறாத நிலையில் இந்த ஒரு சுற்று ஆட்டங்களால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை. (எதிர்பாராமல் ஏதேனும் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் பெரிய மாறுதல் ஏதும் ஏற்படபோவதில்லை). வருவாய்க்காக இப்படி ஆட்டங்களை அதிகரிப்பதால் கிரிக்கெட் மீதான ஆர்வம் குறையத்தான் செய்யும்.

ஆனால் ICCயை சொல்லியும் குறையில்லை. இந்தியாவுக்கு எப்படியும் தரவரிசையில் முதல் ஆறு இடங்களுக்குள் கிடைக்காது, அதேவேளையில் இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் இந்தியா சலாமியாவுடன் ஆடினாலும் நிச்சயம் நல்ல வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் சிறப்பாய் ஆடி தகர்த்து விட்ட இந்திய அணியினரைத்தான் குறை சொல்லவேண்டும்.

Cross Posted in http://vicky.in/dhandora

Friday, October 06, 2006

மினி உலகக் கோப்பை கிரிக்கெட் - முன்னோட்டம்

கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் மீண்டும் நாளையிலிருந்து(அக்-7)ஆரம்பமாகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகள் நாளையிலிருந்து இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் தொடங்குகின்றன. இதற்கான முன்னோட்டமே இந்த இடுகை.

இலங்கை, மேற்கிந்திய தீவுகள், கென்யா & வங்காளதேச அணிகள் தகுதிச் சுற்றில் மோதுகின்றன. இதில் இலங்கை & மேற்கிந்திய தீவுகள் அணிகள் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து பாகிஸ்தான், தென்னாப்ரிக்க அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது. இந்தியாவிற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. 2005ல் இந்தியா பிரகாசிக்க காரணமான பதான், தோனி போன்றோரின் ஃபார்ம் கவலை தரும் அம்சம். பந்துவீச்சில் அணி மிகப் பலவீனமாக உள்ளது.

இங்கிலாந்து அணி ப்ளிண்டாப், வான், ஜோன்ஸ் போன்றோர் இல்லாமல் தடுமாறி வருகிறது. நியுசிலாந்து அச்சுறுத்தும் அளவுக்கு இல்லை. இலங்கை முரளி, வாஸ், ஜெயசூர்யா போன்றோரின் ஆட்டத்தைப் பொறுத்து போட்டி தரும்.

போட்டிகள் அனைத்தும் சோனி-மேக்ஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகின்றன. திருவிழாவுக்கு தயாராகுங்கள்.

கோப்பையை வெல்ல என்னோட சாய்ஸ் ஆஸ்திரேலியாதான், உங்களோட சாய்ஸ் என்னன்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க !!!

***

இந்த இடுகை சோம்பேறி பையனின் வலைத்தளத்திலும், கிரிக்கெட் கூட்டுப் பதிவிலும் பதிவிடப்படுகிறது.

Monday, September 11, 2006

DLF கிரிக்கெட் தொடர் - முன்னோட்டம்

இந்தியா, ஆஸ்த்ரேலியா, மேற்கிந்திய தீவுகள் கலந்து கொள்ளும் கலக்கலான கிரிக்கெட் தொடர் நாளையிலிருந்து மலேசியாவில் ஆரம்பமாகிறது. அத்தொடருக்கான முன்னோட்டம் இது.


வழக்கம்போல நான் என்ன எழுதினாலும், படிச்சிட்டு ஆல்ட் f4 போட்டுட்டு போயிருவீங்க, ஒரு பின்னூட்டம் கூட இதுக்கும் வரப்போரதில்லைன்னு நல்லா தெரிஞ்சாலும், நம்ம கடமையை நம்மதான செஞ்சாகனும் !!


வழக்கமாக முன்னோட்டம் எதுவும் எழுதாத நான், இலங்கையில் நடக்கவிருந்த கிரிக்கெட் தொடருக்காக முன்னோட்டம் (இதே பதிவில்தான்)எழுதினேன். நான் எழுதிய ராசி, தொடரே நிறுத்தப் பட்டு விட்டது !

இப்போ இது எழுதலாம்னு நினைக்கறப்ப, க்ரிக் இன்போவுல போட்ருக்கான், கோலாலம்பூர்ல மழை பெய்ஞ்சுகிட்டு இருக்காம், விளங்கிரும் போங்க..


செப்டம்பர் 14, இந்தியாவுக்கு முதல் மேட்ச் வெஸ்ட் இண்டீஸ் கூட. யுவராஜ் இந்த ஆட்டத்தில விளையாட மாட்டாராம், ஜூரமாம் (fever). அவர் விளையாண்டா மட்டும் வின் பண்ணவா போறோம்ன்னு சொல்றீங்களா..

கென்யாகிட்டல்லாம் தோத்திக்கினு இருந்த வெஸ்ட் இண்டீஸ், போன சீரிஸ்ல இந்தியாவ 4-1 கணக்குல வின் பண்ணி, வேர்ல்ட் சாம்பியன் மாதிரி போஸ் கொடுத்திக்கினு இருக்கு. இர்பான் பதான், எந்த கவலையுமில்லாம ஒரு நாளைக்கு ஒன்னு கணக்குல டூத்பேஸ்ட் விளம்பரம் நடிச்சிக்கினு கீறார்.


எது எப்படியோ, சீரிஸ் ஆரம்பிச்சா, ப்ரண்ட்ஸ்கிட்ட பெட் கட்டி விளையாடலாம், ஏதோ கொஞ்சம் காசு பாக்கலாம்...


கடசி கடசியா, ஒரு மேட்டர கேட்டுக்கினு கிளம்புங்க, இந்தியா ஐசிசி ரேங்கிங்ல, டெஸ்ட்டுல 4 வது இடம், ஒன் டேயில 3 வது இடத்தில இருக்காம். இந்த சீரிஸ்ல வாங்கபோற அடில, ஒன் டே இடம் கடசிக்கு இஸ்துக்கினு பூடும்னு நினைக்கிறன், நீங்க இன்னா நினைக்கறீங்க ???


***

Tuesday, August 22, 2006

டேரல் ஹேர் (vs) பாகிஸ்தான்

லோக்கல் கிரிக்கெட்டில் அடிக்கடி இப்படி நடக்கும். நன்றாக காஜி ஆடிவிட்டு ஏதேனும் சப்பை காரணங்களுக்காக பந்து வீச மறுப்பதும், விளையாடும் இரு அணிகளில் தனக்கு பிடிக்காத அணிக்கெதிரான தீர்ப்புகளை அம்பயர் வழங்குவதும் மிகச்சாதரண விஷயம். ஆனால் ஒரு சர்வதேச ஆட்டத்தில் இப்படி நடந்தால் ...

அப்படித்தான் பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான நான்காவது கிரிக்கெட் போட்டியில் நடந்தது. முதல் இன்னிங்சில் 173 ரன்களுக்குள் இங்கிலாந்தை சுருட்டிய பாகிஸ்தான் அணி பதிலுக்கு 504 ரன்கள் எடுத்து வலுவான நிலையெடுத்தது. இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்சின் போது பாகிஸ்தான் அணி பந்தை சேதப்படுத்தியதாக கூறி வேறொரு பந்தினை தேர்ந்தெடுக்க முடிவு செய்த நடுவர் டேரல் ஹேர் பாகிஸ்தானின் ஸ்கோரில் ஐந்து ரன்களை பெனால்டியாக குறைக்கவும் செய்தார் இங்கிலாந்திற்கு ஐந்து ரன்கள் வழங்கினார். தேநீர் இடைவேளையின் போது பெவிலியனுக்கு சென்ற பாகிஸ்தான் அணியினர் மீண்டும் மைதானத்துக்குள் வராமல் தங்கள் எதிர்ப்பை காட்டினர். சிறிது நேர குழப்பத்துக்கு பின்னர் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக எதிரணி ஆடுகளத்துக்கு வராததால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்து வெளியேறினர். இதற்குள் சமாதனமடைந்த பாகிஸ்தான் அணி ஆடுகளத்துக்கு திரும்பினால் நடுவர்கள் வரமறுத்தனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது என அறிவித்தது இறுதி முடிவு என அறிவிக்கப்பட்டது. கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் கேவலமான ஒரு நிகழ்வு அரங்கேறியது.

ஆடுகளத்தை பொறுத்தளவில் நடுவரின் தீர்ப்பு இறுதியானது என்பதும், அவ்வாறே அவர் முடிவில் ஏதேனும் வேறுபாடுகள் ஆட்டம் முடிந்தவுடன் முறைப்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடன் கொண்டு செல்வதுதான் முறையான நடவடிக்கையாக இருந்திருக்கும். இதனை விடுத்து சிறுபிள்ளைகள் போல அறையில் அமர்ந்து கொண்டு வரமறுப்பது, கிரிக்கெட்டை அவமதிப்பது மட்டுமன்றி, போட்டியைக்காண நேரில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களையும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பை பார்த்த இலட்சக்கணக்கான ரசிகர்களையும் அவமதிப்பதற்கு சமமாகும். இந்த வகையில் பாகிஸ்தான் அணி மீது எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கை ஒரு முக்கிய முன்னுதரணமாக திகழும்.

அதேவேளையில் ஆடுகள் நடுவர்களின் தீர்ப்புகள் குறித்தும் அதிகாரங்கள் குறித்தும் சமீப காலங்களாகவே பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. ஆட்டத்தின் போது தவறாய் அளிக்கப்படும் ஒரு சிறு தீர்ப்பும் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும் சூழலில் நடுவர்களின் செயல்பாடுகள் குறித்த கண்காணிப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமுறை எழும்பியிருக்கிறது. குறிப்பாய் இந்த ஆட்டத்தில் அரங்கினுள் வைக்கப்பட்டிருந்த 26 கேமாரக்களிலும் பந்தை சேதப்படுத்திய காட்சி எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்த சூழலில் நடுவர் அனுமானத்தின் அடிப்படையிலே இந்த தீர்ப்பை வழங்கியிருந்தால் அது நிச்சயம் கண்டனத்துக்குரியது. ஏற்கனவே பரபரப்புக்கு பேர் போன நடுவர் டேரல் ஹேர், ஆசிய நாடுகளுக்கு எதிராய் கடுமையான தீர்ப்புக்களை வழங்குகிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. (முரளிதரனின் பந்து வீசும் முறையை குறையிருப்பதாக கூறி தொடர்ந்து நோபால்களை இவர் வழங்க, இலங்கை அணி ஆடுகளத்திலேயே கடும் எதிர்ப்பை முன்பொரு முறை கிளப்பியது). சேதமடைந்த பந்து மாற்றப்படும் போது அணித்தலைவர் என்ற முறையில் தன்னிடம் தெரிவிக்கப்ப்டவில்லை என்று இன்சமாம் குற்றம்சாட்டுகிறார். இது விதிக்கெதிரானது என்றபோதில் நடுவர்(கள்) மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படபோகிறது என்பதும் மிக முக்கியமான கவனிக்கப்படவேண்டிய விஷயம்

இப்போதைக்கு நடுவரின் தீர்ப்புதான் இறுதியானது, அதனால் பாகிஸ்தான் அணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி அறிவித்தாலும் மற்ற ஆசிய நாடுகளின் உதவியோடு கடுமையான நடவடிக்கைகளிலிருந்து பாகிஸ்தான் அணி தப்பிவிடும். அதிகபட்சமாக இன்சமாம் ஒரு டெஸ்ட் தொடர் அல்லது வருகின்ற ஒரு நாள் தொடர் முழுவதும் ஆட தடை செய்யப்படுவார். சுய சார்பற்ற எந்த அமைப்பும் எந்த வித கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்பதற்கு ஐசிசி ஒரு உதாரணமாயிருக்கிறது (மற்றொரு உதா: ஐக்கிய நாடுகள் சபை).

இதெல்லாம் ஒருபுறமிருக்க ஆட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு நான்காம் நாள் கட்டணத்தில் 40% சதவீகிதத்தையும், ஐந்தாம் நாள் கட்டணம் முழுவதையும் ரசிகர்களுக்கு திருப்பியளிப்பதாக அறிவித்திருக்கிறது. மழை வரும் எனத்தெரிந்தும் டிக்கெட்களை விற்ற (மழை வரும் எனத்தெரிந்தும் டிக்கெட்டுகளை போராடி வாங்கிய நம்மை ...) ஒரு பந்து கூட வீசப்படாத நிலையிலும் விதிமுறைகளின்படி கட்டணத்தை திருப்பித் தர இயலாது என அறிவித்த இந்திய கிரிக்கெட் சங்கங்கள், குறிப்பாய் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், இங்கிலாந்து போர்டிடம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது

Cross Posted in http://vicky.in/dhandora

Related Posts:

A lot of questions and no answers

பதிவு எண்:50. இப்படியும் ஜெயிக்கிறது இங்கிலாந்து...

Inzamam vs Darel Hair

Thursday, August 17, 2006

கைகொடுக்குமா SSC மைதானம்??

மிகவும் பரபரப்பான தொடராயிருக்கும் என எதிர்பார்த்த இலங்கை முத்தரப்பு தொடரை மழையும், குண்டுவெடிப்பு நிகழ்வுகளும் பாதித்து விட்டன. இலங்கை - தென் ஆப்பிரிக்கா இடையிலேயான முதல் ஆட்டம் மழையால் தடைப்பட்டிருந்த சூழலில் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அருகே குண்டுவெடித்ததையடுத்து தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் வீரர்களை நாடு திரும்ப அழைத்தது. மேலும் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தொடரில் விளையாடக்கூடாது என்று தமிழ் புலிகள் என்ற இளைஞர் அமைப்பு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு குறித்த இலங்கை கிரிக்கெட் போர்டின் விளக்கம் திருப்தியளித்ததையடுத்து இந்தியா தொடரில் விளையாட தயக்கம் ஏதுமில்லை என்று அறிவித்த நிலையில் முத்தரப்பு தொடர் இந்திய - இலங்கை அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடராக மாற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், மழையினால் தேங்கும் தண்ணீரை விரைந்து வெளியேற்றும் வசதிக்காகவும் மூன்று ஆட்டங்களும் இலங்கை சிங்கள மைதானத்திலேயே நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்களின் பாதுகாப்பு என்பதற்கு முன்னுரிமை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து எதுவும் கிடையாது. உள்நாட்டு மோதல்கள் மீண்டும் பழைய உச்சகட்ட நிலையை அடைந்து கொண்டிருக்கும் சூழலில் விளையாட்டு போட்டிகள் தேவையா என்ற கேள்வியும் எழாமலில்லை. அதேவேளையில் தென் ஆப்பிரிக்காவின் திடீர் விலகல் கொஞ்சம் அதிகப்படியான நடவடிக்கையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆசிய நாடுகளில் ஆடும் போது மற்ற நாடுகள் கொஞ்சம் அதிகப்படியான பந்தா நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்ற சந்தேகம் வலுக்கிறது. இங்கிலாந்தில் குண்டுவெடிப்பு நடந்த பின்னரும் பாகிஸ்தான் அணி தொடர்ந்து ஆடி தொடரை நிறைவு செய்தது. உள்நாட்டு யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளையிலே தொடங்கிய டெஸ்ட் தொடரில் எந்த வித பாதுகாப்பு குறைபாடுமில்லாமல் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி குண்டுவெடிப்பையடுத்து ஒவர் ரியாக்ட் செய்திருக்கிறது. வீரர்களின் பாதுகாப்பு பிரச்சனை எனும்போது அதை இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் பேசி பாதுகாப்பை உறுதிப்படுத்த முயன்றிருக்கலாம். மாறாக இவ்வாறான அவசர நடவடிக்கையிலிறங்கி இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியதோடு அல்லாமல் மற்ற நாடுகளுக்கு தவறான தவறான சமிஞையையும் காட்டியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் போர்டு இந்த விவகாரத்தை பெருத்த நிதானத்துடன் சமாளித்திருக்கிறது ( இலங்கை கிரிக்கெட் போர்டின் ஆதரவு வேறு பல நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தேவைப்படுவதும் ஒரு காரணம் என்றாலும்)

நாளை மழை மட்டும் குறிக்கிடாமல் இருந்தால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாய் அமையும். இந்தியாவிற்கு எதிரான கடைசித்தொடரில் 6-0 6 - 1 என்ற ரீதியில் செம உதை வாங்கிய இலங்கை, கடைசியாக ஆடிய இங்கிலாந்து தொடரில் அபார வெற்றி பெற்றது. மாறாக தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த இந்தியா பலம் குறைந்த மேற்கிந்திய தீவுகளிடம் 4 - 1 என்ற ரீதியில் உதைவாங்கியது. பழி வாங்க துடிக்கும் உள்நாட்டுப்புலி இலங்கை, மீண்டும் வெற்றியை தொடர் தொடர நினைக்கும் இந்தியா என போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. மேலும் SSC மைதானம் இந்தியாவுக்கு இதுவரை மிகவும் சாதகமாயிருந்து வந்திருக்கிறது. (4/7) ஆறு மாதம் கழித்து மீண்டும் தலைவர் களத்திலிறங்குகிறார். சச்சினுக்கும் இதுவரை இந்த மைதானம் ராசியாகவே இருந்து வந்திருக்கிறது.(5 ஆட்டங்களில் 203 ரன்கள் (40.60)) கைகொடுக்குமா SSC மைதானம்??

Cross Posted in http://vicky.in/dhandora

Thursday, August 03, 2006

இலங்கை கிரிக்கெட் முத்தரப்பு தொடர் முன்னோட்டம்

இலங்கை, தென்னாப்ரிக்கா, இந்திய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் இலங்கையில் துவங்க உள்ளது. இத்தொடருக்கான, முன்னோட்டமே இந்த பதிவு.


இலங்கையில் உள்நாட்டு போர் தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் அணி வீரர்களுக்கான பாதுகாப்புகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிகரித்திருக்கும் என நம்பலாம். தொடரின் அனைத்து போட்டிகளுமே கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற இருக்கின்றன. இங்குதான் மாவீரர் மட்டையாளர் சேவக் 69 பந்துகளில் சதமடித்தார், நியுசிலாந்து அணிக்கு எதிராக.


இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில், இந்தியா கடந்த காலங்களில் அவ்வளவாக சோபிக்க வில்லை. அக்குறையை இந்தியா இத்தொடரில் நிவர்த்தி செய்ய வேண்டுமென்பதே என் போன்ற ரசிகர்களின்
எதிர்பார்ப்பு.


இலங்கை, இழந்த சக்தியை கொஞ்சம் மீட்டிருக்கிறது போல் தெரிகிறது. இங்கிலாந்தில், நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்தை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி புது வேகம் பெற்றிருக்கிறது. தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும், முதல் போட்டியில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.


பொதுவாகமே, உள்நாட்டில், சுழலுக்கு சாதகமான மெதுவான ஆடுகளங்களில், இலங்கை சிறப்பாக விளையாடும். இம்முறையும் பெயரைத் தக்கவைத்துக் கொள்ள, இலங்கை கடுமையாக போராடும்.


அட்டப்பட்டு, வாஸ் இருவருமே முத்தரப்பு தொடருக்கு சந்தேகம்தான். இருப்பினும் ஜெயவர்த்தனே, சங்ககரா, முரளிதரன் போன்றோர் சிறந்த பார்மில் உள்ளனர். ஜெயசூர்யா, இந்திய அணிக்கு எப்போதுமே சிம்ம சொப்பனம்தான். இந்தியாவில் நடந்த சென்றைய தொடரில் சோபிக்காததற்கு பழிவாங்க, இப்போது காத்துக் கொண்டிருக்கிறார்.


சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரை, இந்தியா 6-1 என்ற கணக்கில் அபாரமாக வென்றது. ஆனால், சென்ற மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் அந்நாட்டுக்கெதிராக நடந்த தொடரை 1-4 என்று பரிதாபமாக தோற்று திரும்பியுள்ளது இந்திய அணி. ஆதலால், இத்தொடரை வென்று வெற்றிப் பாதையில் மீண்டும் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியா.


டெண்டுல்கர் அணிக்கு திரும்பியிருப்பது நன்மையளிக்கும். சேவக், இழந்த பார்மை, மேற்கிந்திய தீவுகளில் ஓரளவு மீட்டுள்ளார். பதானின் பங்களிப்பு இந்தியாவின் வெற்றிக்கு அவசியம். மேற்கிந்திய தீவுகளில் தொடரை தோற்றதற்கு பதான், யுவராஜ் மற்றும் இளம்புயல் தோனியும் சோபிக்காததே காரணம். இந்த கூட்டணி இலங்கையில் பிரகாசித்தால் இந்தியா இலங்கைக்கு கடுமையான போட்டியை கொடுக்கும்.


சுழலில் ஹர்பஜன், முரளி கார்த்திக், ரமேஷ் பவார் போன்றோருடன், சேவக்கும், யுவராஜ் சிங்கும், டெண்டுல்கரும் கூட பங்களிப்பார்கள். வேகப்பந்து வீச்சில் பதான், ஸ்ரீசாந்த், முனாப் படேல் கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

அணியில் கங்குலி இடம் பெறுவாரா என்று ஒவ்வொரு தொடருக்கு முன்பும் விவாதங்கள் கிளம்புகின்றன. கங்குலி ஓய்வு பெற்று விட்டு, வர்ணணையாளராக வந்து விடலாம். டெண்டுலகரும், டிராவிட்ட்டும் 50 ரன்களுக்கு கீழ் ஆட்டமிழந்தால், கமெண்ட்டரியில் கிழி, கிழியென்று கிழிக்கலாம். யோசியுங்கள் வங்காள இளவரசரே, கொழும்பு உங்களுக்காக காத்திருக்கிறது !!


தென்னாப்ரிக்காவை பொறுத்த வரை கேப்டன் ஸ்மித், கிப்ஸ், காலிஸ் போன்றவர்கள் இல்லாமல் அணி பாதி பலத்துடன் காணப்படுகிறது. நிடினி, போயே பந்துவீச்சில் இந்திய, இலங்கை அணிகளை சந்திக்க சற்று கஷ்டப்படத்தான் வேண்டும்.


இறுதிப் போட்டியில் இலங்கை, இந்திய அணிகளை எதிர் பார்க்கலாம் !

Wednesday, March 22, 2006

வநதாரை வாழவைத்த திராவிட்

எப்போது சந்திரமுகி அறை திறக்கப்பட்டதோ... சாரி. எப்போது திராவிட் டாஸில் ஜெயித்து இங்கிலாந்தை பேட் செய்யச் சொன்னாரோ, அப்போதே இந்தியாவின் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது.இதே போன்ற தவறை அஜார் 1990ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் செய்தார். 1999 உலகக் கோப்பையில் கல்கத்தாவில் செய்தார். இந்திய துணைக் கண்டத்தில் நான்காவது இன்னிங்ஸ் ஆடுவது சுலபமான செயல் அல்ல. இந்திய பந்து வீச்சாளர்களின் மீதான அபரீத்மான நம்பிக்கையில் திராவிட் இம்முடிவை எடுத்திருக்கக் கூடும். ஆனால் நடந்தது முற்றிலும் வேறு.

இந்த டெஸ்டில் கேட்சை எவ்வாறெல்லாம் கோட்டை விடலாம் என பலவிதமாக செய்து காட்டினார்கள் இந்திய வீரர்கள். இத்தகைய மோசமான பீல்டிங்கிற்கு பின்னாலும் இந்தியா வெற்றி பெற்றால்,அது இங்கிலாந்தின் போதாத நேரமாகத்தான் இருக்க முடியும்.

இந்திய அணியின் பேட்டிங் திறமை கணிசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. சச்சினுக்கு ஒரு அளவுகோல், லஸ்மணுக்கு ஒரு அளவுகோள் என்றெல்லாம் வைத்து அணியை தேர்வு செய்தால் இவ்வாறான தோல்விகளை பெற் நேரிடும். சேவாக் பலமிழந்தது இந்தியாவிற்கு மிகப் பெரிய பின்னடைவு. சேவாக்கை நீக்குங்கள் என்று சுலபமாக கூறலாம்.ஆனால் அவரிடத்தை நிரப்ப, அவரைப் போலவே துரிதமாக ரன்குவிக்கும் அதிரடி ஆட்டக்காரர்கள் இல்லை. எனவே சேவாக்கின் ஆட்டம் தரும் பலனை, பிற ஆட்டக்காரர்களால் தர இயலாது.சேவாக் எழும்பும் பந்துகளை ஆடக் கற்றுக் கொண்டால்தான், இச்சிக்கல் தீரும். இல்லாவிடில் சேவாக்கை அணியில் சேர்த்தும் பிரயோசனப்படாது.

இர்பான் பதான் இம் மேட்சில் மிக மோசமாக பந்து வீசினார். அவருக்கு காயம் பட்டிருக்கிறதா என சந்தேகம் வருகிறது. பிட்னஸ் இல்லாத ஆட்டக்காரர்களை போட்டியில் சேர்க்கக் கூடாது. இங்கிலாந்தின் முதல் நாள் ரன் குவிப்பிற்கு பதானின் மோசமான பந்து வீச்சும் காரணம்.

ஜான் ரைட் கோச்சாக இருந்த போது இந்தியா சிறப்பான டெஸ்ட் அணியாக மாறியது. சாப்பலின் உத்திகள் ஒருநாள் போட்டிகளில்தான் பரிமளிக்கிறதே தவிர டெஸ்ட் போட்டிகளில் சொதப்புகிறது. சாப்பல் லஸ்மன் மேல் இன்னும் நம்பிக்கை வைக்க வேண்டும்.லஸ்மண் மற்றும் கங்குலியை முழுவதுமாக நீக்குமளவிற்கு மாற்று ஆட்டக்காரர்களை இந்தியா இன்னும் கண்டுபிடிக்கவில்லை

இந்தியா தோல்வி; தொடர் சமன்

யாரேனும் ஒரு ஆட்டக்காரராவது சதமடிக்க வேண்டும் என்றிருந்த நிலையில் ஒட்டுமொத்த இந்திய அணியே 100 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்திருக்கிறது. இன்று காலையில் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே கும்ளேவும் ஜாபரும் ஆட்டமிழக்க சச்சின் - டிராவிட் ஜோடி கொஞ்சம் நம்பிக்கையையளித்தது. உணவு இடைவேளையின் போது 75 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் என்ற நிலையில் கொஞ்சம் வாய்ப்பிருப்பதாக தோன்றியது, ஆனால் அடுத்தடுத்து டிராவிடும், சச்சினும் அவுட்டாகி இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தனர். காயம் காரணமாக நேற்று ஆடாததால் இன்று ஐந்து விக்கெட்டுகள் விழுந்த பின்னரே களமிறங்க வேண்டிய சூழலில் இறங்கிய சேவாக் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகியது நிலைமையை மேலும் மோசமாக்கியது. இறுதியில் 100 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தொடரும் சமன் ஆனாது.

முக்கிய ஆட்டக்காரர்கள் யாரும் இல்லாத சூழ்நிலையில் இந்திய சூழற்பந்துவீச்சில் படு தோல்வி அடையும் என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு இந்த வெற்றியும், தொடர் சமநிலையும் நிச்சயம் மிகப்பெரிய சாதனையே. இந்த வெற்றியின் மூலம் ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்து தன் இரண்டாமிடத்தை தக்கவைத்துக்கொள்ளும். இந்தியாவும் மூன்றாமிடத்திலேயே நீடிக்கும்

ஆட்டத்தில் இந்தியா படு தோல்வியடைந்த நிலையில், டாஸில் வென்று பந்து வீச தீர்மானித்த முடிவு மீண்டும் விவாதத்திற்குள்ளாகும்.

Tuesday, March 21, 2006

பரபரப்பான இறுதிநாள் ஆட்டம்...

மும்பை மைதானத்துக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இருக்காது போல இருக்கிறது. கடந்த முறை நடந்த ஆட்டத்தில் தொடர்ந்து டெஸ்ட் ஆட்டங்களில் வெற்றி பெற்று முழுபலத்துடன் வந்த ஆஸ்திரேலியாவிடம் ஏற்கனவே இரண்டு ஆட்டங்களில் தோல்வியுற்று, வெற்றி பெற்றிருக்க வேண்டிய சென்னை டெஸ்டின் இறுதி நாள் மழை குறுக்கிட்டதால் டிராவில் முடிய, இறுதி டெஸ்டில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றி பெறலாம் என்ற நிலையில் மும்பை ஆட்டத்தை எதிர் கொண்டது. மழையினால் முற்றிலுமாய் பாதிக்கப்பட்ட முதல் மூன்று நாள் ஆட்டத்திற்கு பிறகு நான்காம் நாள் ஆட்டத்தில் மொத்தம் 22 விக்கெட்டுகள் விழ இறுதி நாளில் 107 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் ஆட்டத்தை வெல்லலாம் என்ற மிக கடினமான இலக்குடன் இந்திய அணி கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொண்டது. அவ்வப்போது ஆச்சரியங்களை நிகழ்த்தும் இந்திய அணியினர் அன்றைய ஆட்டத்திலும் மிக அபாரமாக பந்து வீசி பேட்டிங்கில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை 93 ரன்களில் சுருட்டி சாதனை வெற்றி கொண்ட மைதானம் இது. இந்த முறை மிக எளிதாக இந்திய அணியின் சுழற் பந்து வீச்சில் சுருண்டு போகுமென எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி இதுவரை இரண்டாம் டெஸ்டின் சில செஷன்களை தவிர மிக அனைத்து நேரங்களிலும் மிகச்சிறப்பாக ஆடி வரும் நிலையில், இந்த டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யலாம் என்ற இறுதி நாளில் வெற்றி பெற 295 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

295 ரன்கள் , 9 விக்கெட்டுகள் கையில் , அணியின் மிக முக்கிய ஆட்டக்காரர்களான டெண்டுல்கரும், சேவாகும் பார்மில் இல்லாத சூழலில் காயம் வேறு, நிச்சயம் இந்தியாவுக்கு மிகவும் சோதனையான தருணம்தான். ஆனால் இந்திய அணிக்கு ஆறுதலளிக்க கூடிய ஒரே விஷயம் மைதானம் கடந்த முறை போல் பந்து வீச்சுக்கு மட்டுமே மிக சாதகமாய் இல்லாமல் பேட்டிங்கிற்கும் வாய்ப்பாக இருப்பது. நேற்றைய ஆட்டத்தை பொறுத்தமட்டில் இந்திய அணியின் மிக நேர்த்தியான பந்து வீச்சே இங்கிலாந்தை 191 ரன்களுக்கு இரண்டாம் இன்னிங்ஸில் ஆட்டமிழக்க செய்ய காரணமாக இருந்தது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்களும் இதுவரை நடந்த ஆட்டங்களில் இந்தியாவின் பேட்டிங்கின் மீது ஆதிக்கம் செலுத்தி வரும் சூழலில் நிச்சயம் இன்றைய ஆட்டம் ஒரு நாள் ஆட்டத்தை போல பரபரப்பாக இருக்கப்போவது நிஜம். பரபரப்பான முதல் செஷனை அதிக பட்ச சேதமில்லாமல் கடந்து மதிய உணவு இடைவேளை வரை அதிகபட்சம் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமிழந்து 80 முதல் 100 ரன்களை இந்தியா கடந்திருந்தால் டெண்டுல்கர், தோனி, சேவாக் துணையுடன் தொடரையும் கைப்பற்றலாம். தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறலாம்.

எனது கணிப்புபடி இந்தியாவுக்கும் இங்கிலாந்திற்கும் வெற்றி வாய்ப்பு 30 சதவிகிதம். டிராவாகும் வாய்ப்பு 40 சதவிகிதம் ( உபயம் : முதல் டெஸ்ட் டிராவிட் + வாசிம் ஜாபர் இன்னிங்க்ஸ்)

Cross posted in தண்டோரா