Monday, January 16, 2006

வேண்டாம் இது போன்ற போட்டி

இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட்டை பற்றி அலசிய போது, இவ்வகையான ஒரு தட்டை ஆட்டம் ஆடப்படும் என யாரும் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை. பந்து எழும்பும் மைதானங்கள், சுழலும் பந்துகள் என அனைவரும் அலசிக் கொண்டிருந்த வேளையில் கான்கிரீட்டால் போட்டது போல் பந்து வீச்சாளர்களுக்கு சிறிதளவும் உதவாத ஒரு பிட்சை உருவாக்கி, அதில் கிரிக்கெட் மேட்சை விளையாடிவிட்டார்கள்.

1997 ல் இலங்கையில் இதைப்போன்ற ஆடுகளத்தை அமைத்து, இலங்கை 952 ரன்கள் குவித்தது சிலருக்கு நினைவிருக்கலாம். இவ்வகையான ஆட்டங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டின் மேல் ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துபவை. ஒரு நாள் போட்டிகளின் மேலான ஈடுபாடு ரசிகர்களிடம் ஏற்பட்ட காரணங்கள் ,அதன் விறுவிறுப்பு மற்றும் முடிவு கிடைக்கும் தன்மை மட்டுமல்ல. 80 களில் டெஸ்ட் போட்டிகளில் பல அணிகளும் பின்பற்றிய சவசவ தன்மையும், பல டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்ததும் காரணமாகும். குறிப்பாக துணைக்கண்டங்களில் நடைபெறும் போட்டிகளில், அணி கேப்டன்களிடம் வெற்றி பெற வேண்டும் என்ற மனப்பான்மையை காட்டிலும், தோல்வி அடையக் கூடாது என்ற தற்காப்பு எண்ணமே மேலோங்கி நிற்கும். 1982 ம் ஆண்டு நடந்த இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் மேட்சுகள் , 83ல் நடந்த பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் மற்றும் 86ல் நடந்த இந்திய பாகிஸ்தான் தொடர் ஆகியவை மிகவும் தற்காப்பாக ஆடப்பட்ட விறுவிறுப்பற்ற தொடர்கள்.

டெஸ்ட் போட்டிகளை அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த அணிகள் மேற்கிந்திய தீவுகள் அணியும், ஆஸ்திரேலிய அணியும் மட்டும்தான். 95ம் ஆண்டிற்கு பிறகுதான் அதுவும் ஒருநாள் போட்டிகள் அதிகம் ஆடத்தொடங்கிய பின், அதிரடி யுத்திகள் டெஸ்ட் போட்டிகளிலும் பின்பற்றப்பட்டன.

இப்போட்டியின் ஆடுகள பண்பிற்கு சீதோஷ்ண நிலையை காரணமாக சொல்கிறார்கள். இது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. இதே சீதோஷ்ண நிலை தொடரும் சூழலில் மற்ற மைதானங்களும் இதே போன்று ரன்கள் குவிக்கும் களமாகவே அமையுமா? அவ்வாறிருந்தால் இத்தொடரை தற்போதே கேன்சல் செய்யலாம்.

இப்போட்டியை பொறுத்தவரை இந்திய அணியின் ரன்குவிப்பு ,அதுவும் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் ரன்கள் குவித்தது உளவியல் ரீதியான முன்னிலையை தந்திருக்கிறது. "நாங்கள் 7 விக்கெட்டுக்கள் எடுத்த களத்தில் பாக். ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை" என்று கூறி வெகுவாக சீண்டியிருக்கிறார் சேவாக்.

அடுத்த போட்டியாவது, உருப்படியான ஆடுகளத்தில் விறுவிறுப்பாக அமைய வேண்டும். இவ்வகையான ஆடுகளத்தை அமைத்ததன் மூலம் இந்திய அணியின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்திருக்கிறார்கள் பாக்.நாட்டினர்.

இப்போட்டியைப் பற்றி அதிகப்படியாக விவாதிக்க ஏதுமில்லை.

1 Comments:

Blogger பழூர் கார்த்தி said...

தரமான ஆடுகளத்தை தயாரிக்க தேவையான சீதோஷ்ண நிலை நிலவாததால், பாகிஸ்தான் ஆடுகளத்தை சரியாக தயாரிக்க முடியவில்லை என்று பிசிபி கூறியுள்ளது.

*****

ஐந்தாம் நாள் ஆட்டம் இன்னும் தொடங்க வில்லை.. ஆட்டம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்றால்
சேவக் அதிக ரன்கள் எடுத்து உலக சாதனை படைக்க வாய்ப்புள்ளது !

*****

இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு உளவியல் ரீதியாக வெற்றி கிடைத்துள்ளது !

10:29 PM  

Post a Comment

<< Home