Thursday, November 10, 2005

ராஜ்கோட் கிரிக்கெட் ஆட்டம்

இந்தியா தொடர்ந்து அணியில் மாற்றங்களைச் செய்தது. இம்முறை திராவிட் விளையாடவில்லை. சேவாக் அணித்தலைவர். வேணுகோபால ராவுக்கு பதில் காயிஃப் உள்ளே வந்தார். சேவாக் டாஸில் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். ராஜ்கோட் ஆடுகளம் நிறைய ரன்கள் பெற வசதியானது, முதலில் ஆடும் அணி குறைந்தது 270-280 ரன்களாவது பெறும் என்று கருத்து நிலவியது.

இந்தியா பதான், ஸ்ரீசந்த், ஆர்.பி.சிங் ஆகியோருடன் பந்து வீச்சைத் தொடங்கியது. பதான், ஸ்ரீசந்த் இருவருமே பந்து வீச்சைக் கட்டுக்குள் கொண்டுவரத் தடுமாறினார்கள். இதனால் இலங்கை அணி ரன்கள் பெறுவது கடினமாக இல்லை. முதல் பத்து ஓவர்களில் இலங்கை 55/1 என்ற கணக்கில் இருந்தது. கிடைத்த ஒரு விக்கெட் ஜெயசூரியாவுடையது. வலது கைப் பந்து வீச்சாளர் வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வரப் பந்து வீசினால் ஜெயசூரியா தடுமாறுகிறார் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால் ஸ்ரீசந்த் தொடக்கம் முதற்கொண்டே இதனைச் செய்யவில்லை. கடைசியில் ரவுண்ட் தி விக்கெட் வந்து பந்து வீசிய உடனேயே விக்கெட் விழுந்தது. அகலம் குறைவான பந்தை வெட்டியாட முயற்சி செய்து, முடியாமல் உள்விளிம்பில் பட்டு தோனியின் வலது புறத்தில் கேட்ச் சென்றது. அதை அழகாகக் கீழே விழுந்து பிடித்தார் தோனி. 11வது ஓவரில் பதான் வீசிய பந்தை புல் செய்ய முயற்சி செய்த சங்கக்கார அதன் உயரத்தைக் கணிக்காமல் தூக்கி அடித்தார். மிட் ஆனிலிருந்து ஓடி வந்த டெண்டுல்கர் மிட் விக்கெட்டில் கேட்ச் பிடித்தார். அடுத்த ஓவரிலேயே - ஆர்.பி.சிங்கின் முதல் ஓவர் - நல்ல அளவில் சட்டென்று எழும்பி வந்த ஒரு பந்தில் உபுல் தரங்கா தோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 57/3.

அதன்பிறகு இலங்கை ஆட்டத்திலிருந்து முற்றிலுமாக விலக வேண்டி வந்தது. கார்த்திக் வீசிய முதல் பந்திலேயே (17வது ஓவர்) ஜெயவர்தனே முன்காலில் வந்து தடுத்தாட முயன்றார். ஆனால் பந்து ஸ்பின் ஆகி அவரை ஏமாற்றியது. தோனி அழகான ஸ்டம்பிங்கைச் செய்தார். அதற்கடுத்த ஓவரில் ஆர்.பி.சிங் கேப்டன் அட்டபட்டுவை மிட் ஆனில் நின்றிருந்த சேவாகிடம் பிடி கொடுக்க வைத்து ஆட்டமிழக்கச் செய்தார். 83/5.

அஹமதாபாதில் இலங்கை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற தில்ஷன் - ஆர்னால்ட் ஜோடி இங்கும் ரன்களைப் பெற்றன. இந்த நேரத்தில்தான் இந்தியாவின் தடுப்பு வீரர்கள் அற்புதமாக இரண்டு விக்கெட்டுகளைப் பெற்றனர். காயிஃபிடம் தட்டிவிட்டு தில்ஷன் ஒரு ரன் வேகமாக எடுக்கப் போனார். காயிஃப் கவர் திசையில் வேகமாக ஓடிவந்து பந்தை எடுத்து தோனியிடம் எறிய, அவர் ஆர்னால்டை ரன் அவுட் ஆக்கினார். வாஸ் கார்த்திக்கிடம் பவுல்ட் ஆனார். அடுத்து யுவராஜ் சிங் நேரடியாக ஸ்டம்பை எறிந்து தில்ஷனை ரன் அவுட்டாக்கினார். தில்ஷன் ஒருவர்தான் 50க்கு மேல் ரன்களைப் பெற்றிருந்தார்.

ஆர்.பி.சிங் தனது இரண்டாவது ஸ்பெல்லில் மஹரூஃபையும் சந்தனாவையும் அவுட்டாக்கினார். 42.5 ஓவர்களில் இலங்கை 196க்கு ஆல் அவுட் ஆனது. இதற்கு இந்தியாவின் பந்து வீச்சு, குறிப்பாக ஆர்.பி.சிங்கின் பந்துவீச்சு, ஹர்பஜனின் ரன்கள் கொடுக்காத கிடுக்கிப்பிடி, இந்தியாவின் அற்புதமான ஃபீல்டிங் அத்தனையும் துணைபுரிந்தது. இலங்கை அணியின் மோசமான ஃபார்மும் ஒரு காரணம்தான்.

டெண்டுல்கரும் கம்பீரும் ஆட்டத்தைத் தொடங்கினர். கம்பீர்தான் மனதைக் கவர்ந்தார். வேகமாக ரன்கள் சேர்த்தார். ஆனால் பெர்னாண்டோவின் மெதுவான பந்தைச் சரியாகக் கணிக்காமல் உள்விளிம்பில் பட்டு பவுல்ட் ஆனார். அதே போன்ற ஒரு மெதுவான பந்தால்தான் டெண்டுல்கரும் மிட் ஆனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆடுகளம் எந்த விதத்திலும் பந்து வீச்சாளர்களுக்கு ஆதரவாக இல்லை. சந்தனா நல்ல லெக் ஸ்பின்னர் ஒன்றின் மூலம் சேவாகை ஏமாற்றி கவரில் நின்ற தில்ஷன் மூலமாக அவுட்டாக்கினார்.

அதைத் தொடர்ந்து உள்ளே வந்த யுவராஜ் சிங் காயிஃபுடன் ஜோடி சேர்ந்து அற்புதமாக விளையாடினார். சுழல்பந்து, வேகப்பந்து என்று எதையும் பொருட்படுத்தாமல் ரன்கள் பெற்றார். இறுதியில் நிறைய சிக்ஸ் மழையும் இருந்தது. காயிஃப் ஒரு பக்கம் நின்று விக்கெட்டுகள் விழாமல் கவனித்துக்கொள்ள, யுவராஜ் தடையின்றி ஆடினார். தனது அரை சதத்தை 48வது பந்தில் பெற்றார். (6x4, 2x6). 67 பந்துகளில் 79 ரன்களைப் பெற்று இந்தியாவுக்கு எளிதான ஒரு வெற்றியைத் தேடித்தந்தார் யுவராஜ் சிங். காயிஃப் 71 பந்துகளில் 38 ரன்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆர்.பி.சிங் ஆட்ட நாயகன் என்று அறிவிக்கப்பட்டார். எனக்கு இவரது பந்து வீச்சு மிகவும் பிடித்திருக்கிறது. பதானைப் போல side-on-action அல்ல இவருடையது. Front-on-action. இதனால் ஸ்விங் குறைவுதான் என்றாலும் இவரால் பந்தை நன்கு எழும்ப வைக்க முடிகிறது. ஸ்ரீசந்தை விட வேகம் குறைவாக இருந்தாலும் பந்து அதிகமாக எழும்புவதாலும், நல்ல control இருப்பதாலும் இவருக்கே விக்கெட்டுகளும் அதிகம் கிடைக்கும், ரன்களும் குறைவாகக் கொடுப்பார். இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட இவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஸ்ரீசந்துக்கு டெஸ்ட் வாய்ப்புகள் இப்பொழுதைக்குக் கிடைக்காது.

யுவராஜ் பேட்டிங் ஃபார்முக்குத் திரும்ப வந்திருப்பது நல்ல விஷயம். சேவாக்தான் இந்தத் தொடரிலேயே அதிகமாக ஒன்றும் செய்யாதவர். டெண்டுல்கரும் எனக்கு ஏமாற்றத்தையே தந்தார். நாளைய ஆட்டத்தில் யாரை இந்தியா நிறுத்தி வைக்கப்போகிறது என்பது கஷ்டமான விஷயம்தான். திராவிட் விளையாடுவார் என்று நினைக்கிறேன். சேவாக், டெண்டுல்கர் இருவரும் விளையாட வேண்டும். காயிஃப், யுவராஜ் இருவருக்கும் வாய்ப்புகள் தரவேண்டும். தோனி விக்கெட் கீப்பிங் செய்வதால் தேவைப்படுவார். ஹர்பஜன், பதான், ஆர்.பி.சிங், அகர்கார், கார்த்திக் ஐவரும் + சுரேஷ் ரெய்னா சூப்பர் சப்.

பார்க்கலாம்.

ஸ்கோர்கார்ட்

வீடியோ ஸ்கோர்கார்ட்

0 Comments:

Post a Comment

<< Home