Tuesday, November 29, 2005

கொல்கொத்தா, மும்பை ஆட்டங்கள்

கொல்கொத்தா ஆட்டம் முடிந்ததுமே அதைப்பற்றி எழுத நினைத்திருந்தேன். ஆனால் ஏதோ காரணங்களால் தள்ளிப்போனதால் மும்பை ஆட்டத்துடன் சேர்த்தே எழுதிவிடலாம் என்று தீர்மானித்தேன்.

கொல்கொத்தா ரசிகர்கள் மிகவும் பாரபட்சமானவர்கள். சென்னையில் நடக்கும் ஆட்டங்களில் தினேஷ் கார்த்திக் இல்லை என்பதால் மஹேந்திர சிங் தோனி சென்னை ரசிகர்கள் மீது கல்லெறிவார்களா? ஆனால் திராவிட், சாப்பல், இந்திய அணி என்று அனைவர் மீதும் கொல்கொத்தா வெறியர்களுக்குக் கோபம்.

ஆடுகளம் டர்பனைப் போல இருக்கிறது என்றார் கிரீம் ஸ்மித். தவறில்லை. ஆனால் டாஸில் ஸ்மித் ஜெயித்தது அவரது சொந்த அதிர்ஷ்டம். அதைத் தொடர்ந்து இந்தியா ஆடிய ஆட்டம் படு மோசம். இந்த ஆடுகளத்தில் தேர்ந்த ஆட்டக்காரரே தடுமாறுவார் என்ற நிலையில் பதானை ஏன் தொடக்க ஆட்டக்காரராக சாப்பல்/திராவிட் அனுப்பினர் என்று புரியவில்லை! முதல் ஓவரிலேயே பதான் அவுட்டானார். தொடர்ந்து போலாக் டெண்டுல்கர், கம்பீர் இருவரையும் அவுட்டாக்கினார். டெண்டுல்கர் இதுவரை ஆடிய மூன்று ஆட்டங்களிலுமே போலாக் பந்து வீச்சில் 2 ரன்கள் மட்டுமே பெற்று ஆட்டம் இழந்துள்ளார்.

சேவாக் வந்தது முதற்கொண்டே தடாலடி ஆட்டம்தான். ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் ஓர் ஆஃப் டிரைவ் செய்யப்போய் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். திராவிட் உள்ளே நுழைந்ததுமே ரசிகர்களிடமிருந்து எதிர்ப்பு. அவரும் சார்ல் லாங்கஃபெல்ட்டின் அற்புதமான அவுட்ஸ்விங்கிங் யார்க்கரில் க்ளீன் போல்ட் ஆனார். அதையடுத்து யுவராஜ் சிங்கும் காயிஃபும் இன்னிங்ஸைக் கட்டி நிறுத்த வேண்டியதாயிற்று. ஓவர்கள் கழிந்தன; ரன்கள் குறைவாகவே வந்தது. 81 ரன்கள் இருவரும் ஜோடி சேர்ந்து பெற்றபின்னர் யோஹான் போத்தாவின் பந்தில் யுவராஜ் எல்.பி.டபிள்யூ ஆனார். சாதாரணமான பந்து. உள்நோக்கி வந்த ஆர்ம் பால். அதையடுத்து காயிஃப் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து அவுட்டாக இந்திய அணி முற்றிலுமாக உருக்குலைந்தது. கடைசியில் 50 ஓவர்கள் கூட முழுதாக விளையாடாமல் 46வது ஓவரில் 188 ஆல் அவுட் என்றானது.

கிரீம் ஸ்மித் எந்தவித பயமுமின்றி விளையாடினார். மறுமுனையில் ஆண்டிரூ ஹால் மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால் தடுமாறினாலும் கடைசிவரை அவுட்டாகவில்லை. இந்தியப் பந்துவீச்சாளர்களும் உருப்படியாக எதையும் செய்யவில்லை. ஹர்பஜன் ஒருவர்தான் எப்பொழுதும்போல அற்புதமாக வீசினார். 10-0-37-0. மீதி அத்தனை பேரும் ரன்களைக் கொட்ட, எந்த விக்கெட்டும் இழக்காமல் தென் ஆப்பிரிக்கா ஆட்டத்தை வென்றது. ஸ்மித் 124 பந்துகளில் 134 ரன்கள் பெற்றார்.

பாதியிலேயே ரசிகர்கள் பலரும் அரங்கை விட்டு வெளியேறினர். இந்திய அணி வீரர்களைக் கற்களால் அடிக்காமல் விட்டதே பெரிய காரியம். இல்லாவிட்டால் உட்காரும் நாற்காலிகளை நெருப்பால் கொளுத்தாமல் விட்டார்களே!

திராவிட் அவுட்டானபோது அதைக் கரகோஷத்தால் கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்கள், இந்திய அணி வெளியே செல்லும்போது கூச்சல் போட்டிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து கிரேக் சாப்பல் தன் கைவிரல்களால் அசிங்கமாகச் சைகை செய்ததாகத் தகவல். (நான் அந்த விடியோவினைப் பார்க்கவில்லை.)

ஆக அசிங்கமான ஓர் ஆட்டம் முடிந்தது. இதற்கு ஈடுகட்டும் வகையில் மும்பை ரசிகர்கள் இந்திய அணிக்கு பெருத்த ஆதரவைக் கொடுத்தனர்.

சொல்லிவைத்தாற்போல திராவிட் டாஸில் ஜெயித்து முதலில் பந்துவீச, இதுவரை நடந்த மூன்று ஆட்டங்களைப் போல இங்கு இர்ஃபான் பதான் எடுத்த எடுப்பிலேயே முதல் ஓவரிலேயே ஹாலின் விக்கெட்டைப் பெற்றார். அற்புதமான இன்ஸ்விங்கிங் பந்து - ஆஃப் ஸ்டம்பில் விழுந்து நடு ஸ்டம்பைத் தாக்கியது. பின்னர் மிக முக்கியமான இரண்டாவது விக்கெட்டாக ஸ்மித்தை அவுட்டாக்கினார். கால் திசையில் விழுந்த பந்தை - அதன் வேகத்தைச் சரியாகக் கணிக்காமல் - ஓவர் பேலன்ஸ் செய்து மிட்விக்கெட் திசையில் அடிக்க, அது ஹர்பஜன் சிங்கிடம் எளிதான கேட்சாகப் போனது. அகர்கர், ஆர்.பி.சிங் இருவரும் அவ்வளவு நன்றாக வீசாவிட்டாலும் பதான் அவர்கள் இருவரையும் ஈடுசெய்வது போல வீசியிருந்தார்.

தொடர்ந்து ஹர்பஜன், கார்த்திக் இருவருடன், சேவாக், யுவராஜ் என்று நான்கு ஸ்பின்னர்களும் ரன்களைக் கட்டிப்போட்டனர். கால்லிஸ் மிகவும் ஸ்லோவாக விளையாடினார். ஆட்டத்தின் நடுப்பகுதியில் பிரின்ஸ் ரன்களை அதிகமாகப் பெற முடியாததால் ஹர்பஜன் சிங்கை ஸ்வீப் செய்யப்போய் மேல் விளிம்பில் பட்டு ஷார்ட் ஃபைன் லெக்கில் நின்ற யுவராஜ் சிங்கிடம் எளிதான கேட்சைக் கொடுத்தார்.

பவுஷரும் கால்லிஸும் வெகு நேரம் நின்று விளையாடினர். ஆனால் ஸ்பின்னுக்கு எதிராக ரன்களை வேகமாகச் சேர்க்க முடியவில்லை. பின்னர் பவுஷர், சேவாகின் பந்தை டீப் மிட்விக்கெட்டில் அடிக்க, ஹர்பஜன் சிங் அற்புதமான ஒரு கேட்சைப் பிடித்தார். கெம்ப் ஹர்பஜனை ஸ்வீப் செய்து யுவராஜ் சிங்கிடம் ஷார்ட் ஃபைன் லெக்கில் கேட்ச் கொடுத்தார். கால்லிஸ் தன் சதத்தைப் பெறாமல் பதான் பந்தில் காயிஃபிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கடைசியில் போலாக் சில பவுண்டரிகளைப் பெறாதிருந்தால் தென்னாப்பிரிக்காவின் நிலைமை இன்னமுமே மோசமாக இருந்திருக்கும். 50 ஓவர்களில் 221 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழப்பு.

இந்தியாவால் நிச்சயமாக இந்த எண்ணிக்கையைப் பெற முடியும். அதுவும் இப்பொழுதெல்லாம் இரவுப்பனி ஏற்படுத்தும் பிரச்னையால் பந்துவீசும் அணிக்கு ஏற்படும் பின்னடைவு ஒரு காரணம். கம்பீர் ரன்கள் ஏதும் பெறாமல் அவுட்டானார். தன் டிரேட்மார்க் கட் ஷாட் அடிக்கப்போனார். ஆனால் பந்து மேல் விளிம்பில் பட்டு ஸ்லிப் திசையில் வானளாவச் சென்றது. கெம்ப்பினால் கேட்ச் பிடிக்கப்பட்டது.

டெண்டுல்கரும் சேவாகும் வேகமாக ரன்கள் பெற ஆரம்பித்தனர். டெண்டுல்கர் மிட்விக்கெட் திசையில் ஒரு நான்கை அடித்து ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றார். ஆனால் சேவாக்தான் அடுத்த சில நிமிடங்களில் மும்பை ரசிகர்களை ஆனந்தப் பெருங்கடலில் ஆழ்த்தினார். போலாக்கின் ஓர் ஓவரில் அடுத்தடுத்து 4, 6, 4. முதலில் ஒரு கவர் டிரைவ். அடுத்த பவுன்சரை மட்டையை நேர் மேலாகப் பிடித்து மிட் விக்கெட் மேலாக சிக்ஸ் அடித்தார். அடுத்த பந்தில் நெருப்பு பறக்குமாறு பாயிண்டில் ஒரு ஸ்கொயர் கட். ஆனால் அதே ஓவரிலேயே போலாக்கின் பந்தில் எல்.பி.டபிள்யூ என்று நடுவர் ஹார்ப்பரால் தீர்மானிக்கப்பட்டார். பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்றிருக்கும்.

டெண்டுல்கரும் திராவிடும் இணைந்து ரன்கள் பெற்றனர். திராவிட் வந்தது முதற்கொண்டே மூன்று அருமையான ஷாட்களை அடித்தார். ஒன்று மிட்விக்கெட் திசையில் மணிக்கட்டைத் திருப்பி அடித்த ஃபிளிக். அடுத்தது மிட் ஆனை ஏமாற்றிய ஓர் ஆன் டிரைவ். மற்றொன்று ஆஃப் டிரைவ். ஆனால் மறுபக்கம் சற்றே அமைதியான டெண்டுல்கர் நெல்லின் பந்தில் உயரத் தூக்கி அடித்த ஸ்கொயர் கட்டை பாயிண்டில் நின்றிருந்த பிரின்ஸ் பக்கவாட்டில் குறுக்காகப் பாய்ந்து அற்புதமாகப் பிடித்தார். இந்தியா 83/3.

இந்த நேரத்தில் இந்தியாவுக்கு ஓர் அமைதியான ஜோடி தேவைப்பட்டது. இந்தத் தொடரில் நல்ல முறையில் விளையாடி வந்திருக்கும் யுவராஜ் சிங் திராவிடுடன் ஜோடி சேர்ந்தார். மறுபக்கம் திராவிட் தன் விக்கெட்டைப் பத்திரமாகப் பாதுகாத்தார். நெல், லாங்கெஃபெல்ட் இருவரும் ரன்கள் ஏதும் கொடுக்காமல் பந்து வீசினர். ஆனால் இந்தியாவுக்குத் தேவை ஓவருக்கு 4.2 ரன்கள் என்ற விகிதம்தான். அது எளிதாகவே கிடைத்து வந்தது.

திராவிட் தன் அரை சதத்தைத் தாண்டினார். யுவராஜும் தன் அரை சதத்தைப் பெறுவார் என்ற நிலையில் தர்ட்மேன் பகுதியில் ஒரு ரன் பெற நினைத்தவர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

தோனி சிறிது நேரம் திராவிடுக்கு ஜோடியாக ரன்கள் பெற்றார். ஆனால் தன் அதிரடி ஆட்டத்தைக் காண்பிக்காமல் ஏமாற்றத்தையே தந்தார். ஆனால் மிக ஆழமான இந்திய பேட்டிங் இது. அடுத்து வந்த காயிஃப் கடைசிவரை அணித்தலைவருக்கு ஜோடியாக இருந்து ஜெயிக்கும் ரன்களைப் பெற்றுத்தந்தார். திராவிட் 78 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

தான் விருதைப் பெறும்போது கொல்கொத்தாவில் ரசிகர்கள் நடந்துகொண்டதைப் பற்றி ஒரு வார்த்தை பேசினார். ஸ்பெஷலாக மும்பை ரசிகர்கள் அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

தொடரின் நாயகர்களாக யுவராஜ் சிங்கும் ஸ்மித்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தத் தொடரில் இந்திய அணியின் + யுவராஜ் சிங்கின் பேட்டிங், ஹர்பஜன் சிங்கின் ரன் கொடுக்காத அற்புதமான பந்துவீச்சு, பதானின் விக்கெட் எடுக்கும் திறமை ஆகியவை. திராவிட் கடைசி ஆட்டத்தில்தான் நன்றாக விளையாடினார். டெண்டுல்கர் இன்னமும் முழுமையான ஃபார்மில் இல்லை. சேவாக் அதிரடியாக விளையாடினாலும் இன்னமும் அதிகம் செய்யலாம். ஆர்.பி.சிங் கொஞ்சம் ஏமாற்றம்தான். கார்த்திக்கும் அப்படியே.

இனி அடுத்த சில ஆட்டங்கள் டெஸ்ட் போட்டிகள்தான்.

நான்காவது ஆட்டம்
ஐந்தாவது ஆட்டம்

0 Comments:

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home