Tuesday, November 29, 2005

தென்னாப்பிரிக்காவுடனான போட்டிகள்- ஒரு அலசல்

நடைபெற்ற ஒருநாள் போட்டித்தொடர் 2-2 என்ற கணக்கில் யாருக்கும் வெற்றி, தோல்வி இல்லாமல் முடிந்து இருக்கிறது. இந்தியா மிகவும் போராடி சமன் செய்த தொடர் இது. ஸ்ரீலங்கா தொடரை போலில்லாது மிகவும் போராடி பெற்ற வெற்றிகள் இவை.

உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு மீண்டும் நிமிர்ந்து எழுந்து விட்டது தென்னாப்பிரிக்கா அணி. வேகம் குறைந்தவராக கருதப்பட்ட போலாக் மீண்டும் துல்லியமான பந்து வீச்சின் மூலம் கலக்குகிறார். "கற்பழிப்பு புகழ்" நிட்டினி விக்கெட்டுக்களையும், இல்லாவிட்டால் கை,கால்களையும் உடைப்பதில் கவனமாக இருக்கிறார்.

உளறு வாய் நெல்லின் பந்து வீச்சும் காட்டத்துடன் இருக்கிறது. லாங்கர்வெட்,ஹால் என அனைவருமே ஒழுக்கத்துடன் பந்து வீசுகிறார்கள். நேற்றைய மும்பை ஆட்டத்தில் முதல் முப்பது ஓவர்களுள் ஒரே ஒரு நோபால்தான். நேர்த்தியான ஸ்பின்னர் இல்லாததுதான் குறை. ஆனாலும் போஜே,யையும், போத்தாவையும் வைத்து தேற்றி விடுவார்கள்.

1992ம் ஆண்டு ஜாண்டி ரோட்ஸ், உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானின் இன்சமாமை அவுட் செய்தபோது நான் அனைவருமே வாய் பிளந்து நின்றோம். அப்போது இந்திய அணியில் அஜார் மட்டுமே சிறந்த பீல்டர். ஜடேஜா புதிதாக அணியில் சேர்ந்திருந்தார். இன்று ஆப்பிரிக்க அணியில் பல ஜாண்டி கள் இருக்கிறார்கள். பீட்டர்சன், ஆண்டாங், பிரின்ஸ் போன்ற பல தடுப்பாளர்களை தாண்டி பந்தை அனுப்புவது இயலாத காரியமாகிவிட்டது. பீட்டர்சன் வலது கை, இடது கை என இரு கைகளிலும் லாங் த்ரோ எறியக் கூடிய வல்லமை படைத்தவராம். மும்பை ஆட்டத்தில் டெண்டுல்கர் அவுட்டான சாட் வேறு எந்த நாட்டு அணிக்கு எதிராகவும் நான்கு ரன்களை சுலபமாக பெற்றுத் தந்திருக்கும்.

பேட்டிங்கில், சுமித்தின் விளாசல் அதிரடியாக இருந்தது. கிரீஸ்ஸில் அதிகமாக நகர்ந்து ஆடினாலும் நம்முடைய பந்து வீச்சாளர்களின் வேகம் அவரை சிரமப்படுத்தவில்லை. ஆஸ்திரேலியாவில் மெக்ராத்திற்கு எதிராக இதே போல் shuffle செய்து ஆடுகிறாரா என்பதை பார்க்க வேண்டும். காலிஸ்ஸின் ஆட்டம் வழக்கம் போல் நிலையான ஆட்டம். ஜஸ்டின் கெம்பின் அதிரடி ஆட்டம் காண வாய்ப்பில்லாமல் போய்விட்டது. முன்பு நம்பர் 10 இடத்தில் குளூஸ்னரை வைத்து அதிரடி ஆட்டம் ஆடியது தென்னாப்பிரிக்கா அணி. 1999 ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் அவர்கள் பின்பற்றிய கலக்கல் உத்தி -குளூஸ்னரை 10 வது ஆட்டக்காரராக அனுப்பியது. தற்போதைய அணியில் குளூஸ்னர் போன்ற ஆட்டக்காரர் இல்லாத்து ஒரு குறையே.

சூப்பர் சப் விதி அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஆல்ரவுண்டருக்கான அவசியம் முன்பளவு இல்லாமல் போய்விட்டது. இந்தியாவிலும் டெண்டுல்கரை பந்து வீசச் சொல்லும் கட்டாயம் குறைந்து விட்டது என்றே நினைக்கிறேன்.

இந்திய அணியை பொறுத்தவரை நிவர்த்திய செய்ய வேண்டிய குறைகள் சில இருக்கின்றன. என்னதான் பேட்டிங் ஜாம்பவான்கள் என்றாலும் பந்து ஆடுகளத்தில் எழும்பினாலே, அல்லது ஸ்விங் ஆனாலே மூன்று விக்கெட்டுக்கள் சட சடவென சரிந்து விடுகின்றன. அதிரடி தோனி இந்தத் தொடரில் பாம்பாய் சுருண்டு விட்டார். இன்னும் தரம் வாய்ந்த வேகப்பந்தை எதிர்கொள்வதில் தோனி தேற வேண்டும். இல்லாவிடில் டெஸ்ட் போட்டிகளில் சோபிப்பது கடினம்.

டெண்டுல்கர் இன்னும் முழுமையான பார்மிற்கு திரும்பவில்லை. நேற்றைய மும்பை ஆட்டத்திலும் பல பந்துகள் முழுமையாக பேட்டில் படவில்லை. திராவிட் மிகவும் அற்புதமாக ஆடினார். அவர் அடித்த பல அடிகள் உண்மையான கிரிக்கெட் அடிகள். நல்ல பேட்டிங் விக்கெட்டில் பவர் பிளே நடைமுறையில் இருக்கும் போது திராவிட் ஆட நேரிட்டால் சுலபமாக ரிஸ்க் இல்லாமல் பல ரன்களை குவிப்பார் என்பது என் கணிப்பு. நேற்று முதல் 22 ரன்களை 24 பந்துகளில் அதிக சிரமமின்றி குவித்தார் திராவிட்.

யுவராஜ் மீண்டும் சிறப்பாக ஆடிகிறார். கால்கள் ஒழுங்காக நகர்கின்றன. ஆப் ஸ்டம்பிற்கு வெளியே பீட் ஆகவில்லை. இந்த தொடரில் அவர் ஆட வந்தபோதெல்லாம் இக்கட்டான சூழ்நிலையே நிலவியது. ஆனாலும் சமாளித்து ஆடினார். பத்தானின் பந்து வீச்சு வெற்றி பெற்ற போட்டிகளில் சிறப்பாக இருந்தது. மீண்டும் இன்ஸ்விங்கர் அவருக்கு வேலைபார்க்க ஆரம்பித்து விட்டது. பாகிஸ்தானிற்கு எதிரான தொடரில் அவர் அதை முற்றிலும் இழந்திருந்தார்.

ஹர்பஜனின் சுழற்பந்து இந்திய பந்துவீச்சின் ஆதார அம்சமாக இருக்கிறது. கல்கத்தாவில் கூட இவருடைய பந்து வீச்சு சிறப்பாகவே இருந்தது. இவருடைய பந்து வீச்சில் ஸ்மித் கொடுத்த கேட்சை டிராவிட் நழுவ விட்டார்.

இந்தியாவின் பீல்டிங் வெகுவாக முன்னேறி இருக்கிறது. நேற்று 20 முதல் 25 ரன்களை இந்திய வீரர்கள் தடுத்தனர். சேப்பலின் வரவிற்கு பிறகு இந்திய அணியில் ஏற்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க மாற்றம் இது.முன்பெல்லாம் கபில்தேவ் குனிந்து பந்தை எடுக்க மாட்டார். இப்போது யாரென்றாலும் டைவ் அடிக்க வேண்டிய கட்டாயம்.

இந்த தொடரில் பெரிதாக நடந்த விவாதம் பகலிரவு ஆட்டங்களை பற்றி- இந்தியாவில் பனிப் பொழிவு இரண்டாவதாக பந்து வீசும் அணியை வெகுவாக பாதிக்கிறது. முன்பிருந்தே இதே பிரச்சனைதான். இந்தியாவில் பகலிரவு ஆட்டம் வைப்பதால் தனியாக அதிக கூட்டம் வருகிறதா? கண்டிப்பாக இல்லை. பகல் ஆட்டத்திற்கு வரும் அதே கூட்டம்தான். டெலிவிசன் பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் பகலிரவு ஆட்டம் வசதியாயிருக்கிறது.எனவே பனிப்பொழிவு குறைவான இடங்களில் மட்டும் பகலிரவு ஆட்டங்களை நடத்துவது உசிதம்.

கடந்த இரு தொடர்களை அலசிப்பார்க்கும் போது, , யார் சூப்பர் சப், யார் ஓப்பனிங் என்ற ரீதியில் பல புதிய உத்திகள் கையாளப்பட்டு மூளையை உபயோகப் படுத்துவதற்கான தேவை அதிகரித்து விட்டதோ எனப்படுகிறது.இது உண்மையா என்பது போகப் போக தெரியும்.

-ராஜ்குமார்

3 Comments:

Blogger பரி (Pari) said...

align="justify" problem in this post.

6:28 AM  
Blogger Badri said...

பரி: இது வேறு பிரச்னை. stylesheet-ல் என்னென்னவோ விஷயங்கள் உள்ளன. அதையெல்லாம் தொட இப்பொழுது நேரமில்லை.

நான் ஃபயர்ஃபாக்ஸில் MozTxtAlignFix உபயோகிக்கிறேன்.

6:40 AM  
Blogger Badri said...

பரி: உண்மைதான். ராஜ்குமார் செட்டிங்கில் ஏதோ பிரச்னை போல. சரி செய்துள்ளேன்.

6:50 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home