Wednesday, December 21, 2005

தோல்வியைத் தள்ளிப்போட்டது இலங்கை

நான்காம் நாள் வெகு விரைவாக ஆட்டம் முடிந்துவிடும் என்ற நினைப்பில் மண்ணள்ளிப்போட்டது ஜெயவர்தனே - தில்ஷன் ஜோடி.

காலையில் கும்ப்ளே-ஹர்பஜன் ஜோடி ஆறு ஓவர்கள் அதிகமாக விளையாடி விக்கெட் இழக்காமல் 29 ரன்கள் பெற்றனர். அதையடுத்து இந்தியா டிக்ளேர் செய்ய, இலங்கை 509 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்படி எடுத்தால் அது உலக சாதனை என்று அனைவருக்கும் தெரியும்.

அட்டபட்டு-தரங்கா ஜோடி நன்றாகவே தொடங்கியது என்றாலும் உணவு இடைவேளை நெருங்கும்போது அட்டபட்டு ஹர்பஜன் பந்தில் ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 39/1.

உணவு இடைவேளைக்குப் பின்னர் சங்க்கார-தரங்கா ஜோடி அமைதியாகத் தொடர்ந்தது. ஆனால் கும்ப்ளே அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளைப் பெற்றார். முதலில் சங்கக்கார நேராகும் ஒரு பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். 84/2. அடுத்து தரங்கா தன் அரை சதத்தைப் பெறுவதற்கு முன்னால் லெக் ஸ்லிப்பில் நின்ற கம்பீரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 89/3. சமரவீரா முதல் இன்னிங்ஸிலும் ஒன்றும் செய்யவில்லை. இப்பொழுதும் அப்படியே. ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் நின்ற காயிஃபிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 96/4.

ஆனால் இலங்கை அணி அத்துடன் சுருண்டுவிடவில்லை. ஜெயவர்தனே, முதல் இன்னிங்ஸ் டாப் ஸ்கோரர் தில்ஷனுடன் சேர்ந்து மிக நன்றாக விளையாடினார். கும்ப்ளே, ஹர்பஜன் இருவரும் என்னென்னவோ செய்தும் இந்த ஜோடியைப் பிரிக்க முடியவில்லை. டெண்டுல்கர் அழைக்கப்பட்டார். சேவாக் சில ஓவர்களை வீசினார். பலன் இல்லை. மட்டையாளர்கள் இருவருமே அரை சதத்தைப் பெற்றனர். கடைசியாக சேவாக் தன் வேகப்பந்து வீச்சாளர்களைக் கூப்பிட வேண்டியிருந்தது.

அகர்கர் வீசிய யார்க்கர் ஒன்றை ஜெயவர்தனே தடுத்தாட அது அகர்கருக்குக் கேட்சாக அமைந்தது. மூன்றாவது நடுவர் அது நிஜமாகவே கேட்சா அல்லது தரையில் பட்டு வந்ததா என்று சோதிக்க வேண்டியிருந்தது. ஜெயவர்தனே 57, இலங்கை 201/5. முதல் இன்னிங்ஸைப் போலவே இப்பொழுதும் 65 ரன்களை எடுத்த நிலையில் தில்ஷன் பதானின் பந்தை விக்கெட் கீப்பரிடம் தட்டி அவுட்டானார். இலங்கை 229/6.

அதன்பிறகு ஜெஹான் முபாரக்கும் ஃபெர்வீஸ் மஹரூஃபும் கடைசி ஐந்து ஓவர்களைத் தட்டிக் கழித்தனர்.

ஆனால் நாளை மூன்று வேளைகளையும் இப்படித் தட்டிக்கழிக்க முடியாது.

காலை ஒன்றரை மணி நேரத்துக்குள்ளாகவே ஆட்டம் முடிந்துவிடும்!

0 Comments:

Post a Comment

<< Home