Sunday, December 18, 2005

சறுக்கிய இந்தியா சுதாரிப்பு

மூன்றாவது டெஸ்ட் இன்று அஹமதாபாதில் தொடங்கும்போது இரு அணிகளுக்கும் சில தேக ஆரோக்கியப் பிரச்னைகள் இருந்தன.

இந்திய அணித்தலைவர் ராகுல் திராவிட் ஜுரம், வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இலங்கையில் சமிந்தா வாஸ், தில்ஹாரா ஃபெர்னாண்டோ, அவிஷ்கா குணவர்தனா மூவருமே ஜுரத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதைத்தவிர கேப்டன் அட்டபட்டுவும் நட்சத்திர பந்துவீச்சாளர் முரளிதரனும் முழுவதுமான ஆரோக்கியத்தில் இல்லை. அட்டபட்டு சென்ற ஆட்டத்திலேயே முதுகு வலி காரணமாக சில ஊசிகளைப் போட்டுக்கொண்டுதான் விளையாடினார்.

இந்தியா கங்குலியை அணியை விட்டு நீக்கியிருந்ததால் திராவிடுக்கு பதில் மொஹம்மத் காயிஃபை விளையாடக் கொண்டுவந்திருந்தது. சேவாக் அணித்தலைவர். இலங்கை அணியில் வேகப்பந்து வீச லசித் மலிங்கா, பெர்வீஸ் மஹரூஃப் ஆகியோரும், தொடக்க ஆட்டக்காரராக உபுல் தரங்காவும் வந்துள்ளனர். ஒருவேளை சங்கக்காரவும் அட்டபட்டுவும் ஆட்டத்தைத் தொடங்கலாம். தரங்கா பின்னால் வரலாம்.

இங்கும் அட்டபட்டு டாஸில் தோற்றார். சேவாக் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார்.

முதல்நால் பனியின் காரணமாக காலையில் ஒரு மணிநேரம் தாமதமாகவே ஆட்டம் தொடங்கியது. தொடக்கத்தில் கம்பீர் நன்றாகவே ஆடினாலும் லசித் மலிங்காவின் பந்தைப் பல தடவை சரியான இடத்தில் நிற்காமல் ஹூக் செய்து விளையாடினார். அதன் காரணமாகவே பின்னர் தன் ஆட்டத்தையும் இழந்தார். மலிங்காவை ஹூக் செய்யப்போய் பந்து மட்டையில் சரியாகப் படாமல் மிட்விக்கெட் திசையில் நின்றிருந்த உபுல் தரங்காவிடம் கேட்சாகப் போனது. 31/1. உணவு இடைவேளை வரை கிடைத்த ஒரு மணிநேரத்தில் 12 ஓவர்களே வீசப்பட்டிருந்தன. இந்தியா 51/1 என்ற எண்ணிக்கையில் இருந்தது.

உணவு இடைவேளைக்குப் பிறகு வீசிய முதல் ஓவரிலேயே லசித் மலிங்கா தன் அதிவேகப் பந்துவீச்சினால் சேவாகை பவுல்ட் ஆக்கினார். 52/2. மலிங்காவின் ஆக்ஷன் சைட்-ஆர்ம் ஆக்ஷன், அதாவது வீசும் கை பக்கவாட்டில் தோள்பட்டைக்கு சமமான உயரத்தில் இருக்குமாறு வீசுவது. வகார் யூனுஸ் போடுவதைக் காட்டிலும் மிக அதிகமாக இவரது கை பக்கவாட்டில் நீண்டு வீசுகிறது. நல்ல வேகத்தில் பந்து வீசுகிறார். ஆனால் துல்லியமாக வீசுவதில்லை. நிறைய நோபால்கள் வீசுகிறார். பந்துகள் பலவும் லெக் ஸ்டம்புக்கு வெளியே போனதால் கம்பீர், சேவாக் ஆகியோருக்கு ரன்கள் பெறுவது எளிதாக இருந்தது. மறுமுனையில் மஹரூஃப் மிகவும் துல்லியமாக ஆஃப் ஸ்டம்ப் திசையிலேயே ரன்கள் ஏதும் கொடுக்காத வகையில் வீசினார்.

லக்ஷ்மண், டெண்டுல்கர் இருவரும் சேர்ந்து விளையாடும்போது முரளிதரன் வீசவந்தார். சீக்கிரமாகவே டெண்டுல்கரைத் தவறுசெய்ய வைத்தார். சற்றே அளவு குறைந்து வந்த பந்தை புல் செய்யப்போன டெண்டுல்கர் பந்தின் உயரத்தைச் சரியாகக் கணிக்காததால் பந்து மட்டையில் முன்புறத்தில் ஓரத்தில் பட்டு எழும்பி அவரது கால்காப்பில் பட்டு முன்னால் விழுந்தது. ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் நிறிருந்த ஜெஹான் முபாரக் நன்றாக முன்னால் விழுந்து இந்த கேட்சைப் பிடித்தார். 88/3. அடுத்த இரண்டாவது பந்தில் யுவராஜ் சிங் முன்னால் சென்று தடுத்தாட, பந்து விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த சமரவீராவிடம் கேட்ச் ஆனது. 88/4.

நிலைமையை இன்னமும் மோசமாக்குமாறு உள்ளே வந்த காயிஃப் மிகவும் தடுமாறினார். லக்ஷ்மணும் மிகவும் சுதாரித்து ஆடவேண்டியதாக இருந்தது. இந்நிலையில் மலிங்க பண்டாரா வீசிய அளவு குறைந்த பந்தை மிட்விக்கெட்டில் புல் செய்தார் காயிஃப். ஆனால் பந்து நேராக அங்கு நின்றிருந்த அட்டபட்டுவிடம் கேட்ச் ஆகப் போனது. இந்தியா 97/5.

மிக மிக மோசமான நிலை. உள்ளே வந்தவர் தோனி. அவருக்கு முன் பதானைக் கூட அனுப்பியிருக்கலாம் என்று நினைத்தேன். தோனி வந்ததுமே ஆட்டக்காரர்கள் மீதுள்ள அழுத்தத்தைப் போக்கும்வண்ணம் சில பவுண்டரிகளை அடித்தார். அதனால் லக்ஷ்மணுக்கு சற்றே மூச்சுவிட முடிந்தது. தோனி முரளிதரனை மிக நன்றாக விளையாடினார். ஆறாவது விக்கெட்டுக்கு இருவருமாக ஜோடி சேர்ந்து மிக அற்புதமான 86 ரன்களைப் பெற்றனர். அதில் தோனியின் பங்கு 49. தன் இரண்டாவது அரை சதத்தைப் பெறுவதற்குமுன் முரளியின் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். ஆனால் இந்தப் பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்வது போல எனக்குத் தோன்றியது. இந்தியா 183/6. லக்ஷ்மண் இதற்கிடையே தன் அரை சதத்தைப் பெற்று 53-ல் நாட் அவுட்டாக இருந்தார்.

இப்பொழுதும்கூட இலங்கை சில விக்கெட்டுகளை வேகமாகப் பெற்று இந்தியாவைத் திணற அடித்திருக்கலாம். ஆனால் உள்ளே வந்த பதான் மிக நன்றாக விளையாடினார். முரளியை லாங் ஆஃபுக்கு அடித்து தன் எண்ணிக்கையைத் தொடங்கியவர், அடுத்த பந்திலேயே ஸ்லிப் வழியாக மற்றுமொரு நான்கைப் பெற்றார். பின் படிப்படியாக, வேகமாக அவர் ரன்களைப் பெறத்தொடங்கியதும் அட்டபட்டு தடுப்பு வியூகத்தைத் தளர்த்தவேண்டியதாயிற்று. இதற்கிடையில் முரளியும் ஆடுகளத்தைவிட்டு வெளியே செல்லவேண்டி வந்தது. இது இந்திய வீரர்களுக்கு மிகவும் வசதியாகப் போயிற்று.

பன்ண்டாராவின் பந்தில் லக்ஷ்மன் மட்டை, கால் காப்பு என்று சில்லி பாயிண்டில் கேட்ச் பிடிக்கப்பட்டார். ஆனால் நடுவர் நதீம் கவுரி இதைச் சரியாகக் கவனிக்காததால் அவுட் தரவில்லை. கடைசிவரையில் இருவரும் ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர். லக்ஷ்மண் 71* (194 பந்துகளில்). பதான் 39* (64 பந்துகளில்). பதான் தன் 27 ரன்களை வெறும் 26 பந்துகளில் பெற்றார். அதன்பின்னர்தான் சற்றே சுதாரித்து ரன்கள் பெறுவதைவிட நின்றாடுவது முக்கியம் என்று தீர்மானித்தார்.

இன்று 78 ஓவர்கள்தான் போடமுடிந்தது. கடைசி பத்து ஓவர்கள் வீசும்போது அரங்கில் விளக்குகள் எரிந்தன. அப்படியும் சிவப்புப் பந்தை வைத்துக்கொண்டு விளையாட முடியாததால் நடுவர்கள் வெளிச்சம் போதவில்லை என்று அறிவிக்க, லக்ஷ்மண், பதான் அதனை ஏற்றுக்கொண்டு வெளியே வந்தனர்.

ஆக 78 ஓவர்களில் இந்தியா 247/6 என்ற நிலையில் உள்ளது. 97/5 என்ற இடத்திலிருந்து 150 ரன்களைப் பெற்றுள்ளனர், ஒரே விக்கெட்டை அதிகப்படியாக இழந்து. இந்த ஆடுகளத்தில் வரும் நாள்களில் ஸ்பின் அதிகமாக எடுக்கும். இந்தியா 320-350 எடுத்தால் மிக நல்ல நிலையில் இருக்கும்.

0 Comments:

Post a Comment

<< Home