Tuesday, December 20, 2005

பாகிஸ்தான் உபசரிப்பு

சென்ற முறை நாம் பாகிஸ்தான் சென்றபோது அங்குள்ள ஆடுகளங்களெல்லாம் இந்தியர்களுக்குச் சாதகமாக இருந்தது என்று இன்ஸமாம் குறைபட்டுக்கொண்டார். அதாவது எல்லா ஆடுகளங்களும் ஓரளவுக்கு மிதவேகப்பந்து வீச்சுக்கு - சீம் & ஸ்விங் பந்துவீச்சுக்கு ஆதரவானதாக - இருந்ததாம்.

இம்முறை எல்லா ஆடுகளங்களும் நல்ல வேகப்பந்து வீச்சுக்கு ஆதரவாகச் செய்யப்பட வேண்டும் என்று இன்ஸமாம் கேட்டிருப்பதாகக் கேள்வி. ஏனெனில் சென்ற முறையை விட இப்பொழுது ஷோயப் அக்தர், நவீத்-உல்-ஹசன் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பதாக பாகிஸ்தான் நினைப்பதே காரணம்.

ஆனால் உண்மை என்ன?

ஷோயப் அக்தர் இங்கிலாந்துக்கு எதிராக நிறைய விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனால் லெக் ஸ்பின்னர் தனீஷ் கனேரியாவும் கூடத்தான். ஷப்பீர் அஹமதை ஐசிசி ஒரு வருடத்துக்கு விளையாடத் தடை செய்துள்ளது. நவீத்-உல்-ஹசன் சுமார்தான். மொஹம்மத் சாமி தடுமாறுகிறார்.

சென்ற முறையும் ஷோயப் அக்தர் பாகிஸ்தானுக்காக விளையாடினார். ஆனால் படுமோசமாகப் பந்துவீசினார். சேவாக் எடுத்த எடுப்பிலேயே அக்தரை தாக்கத் தொடங்கினார். இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் உமர் குல் என்ற புதியவர் எடுத்த சில விக்கெட்டுகள் அந்த டெஸ்டின் திசையை மாற்றியது. முல்டான், லாஹூர், ராவல்பிண்டி என அனைத்து டெஸ்ட்களிலுமே இரண்டு பக்கத்திலிருந்தும் பல சதங்கள் பெறப்பட்டன. எதுவுமே பந்துவீச்சுக்கு வெகுவாக ஆதரவுடையது என்று சொல்லமுடியாது. பாகிஸ்தானின் பேட்டிங் உடைந்து சிதறக்கூடியது என்பது மட்டும்தான் அப்பொழுது முடிவாகத் தெரிந்தது.

இந்தியப் பந்துவீச்சாளர்கள் யாரும் தனித்து சோபிக்கவில்லை. பாலாஜி சில விக்கெட்டுகள் பெற்றார். பதான் சில விக்கெட்டுகள். ஆஷீஸ் நேஹ்ரா சுமார்தான். கும்ப்ளே முக்கியமாக இந்தியா வெற்றிபெற்ற இரண்டு டெஸ்ட்களிலும் நன்றாக விளையாடினார்.

இம்முறை இந்திய அணி எதுவாக இருக்கும்?

பாகிஸ்தான் இவ்வளவு சொன்னபிறகு இந்தியா மூன்று ஸ்பின் பந்துவீச்சாளர்களை அழைத்துச் செல்வதே அதிகம்.

ஸ்பின்: கும்ப்ளே, ஹர்பஜன், கார்த்திக்.
தொடக்க ஆட்டக்காரர்கள்: சேவாக், ஜாஃபர், கம்பீர்
மிடில் ஆர்டர்: திராவிட், டெண்டுல்கர், லக்ஷ்மன், யுவராஜ்
விக்கெட் கீப்பர்: தோனி
வேகப்பந்து வீச்சுக்கு: பதான், ஜாகீர் கான், ஆர்.பி.சிங், இன்னுமொருவர்

ஜாஃபர், கம்பீர் என்று இருவரும் செல்வார்களா? இலங்கை தொடரில் நிகழ்ந்தது போல சேவாக் அல்லது திராவிடுக்கு, அல்லது பிற மிடில் ஆர்டர் மட்டையாளர்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் யார் விளையாடுவது? காயிஃப் டெஸ்ட் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் செல்லவேண்டுமா? கங்குலி தேவையா? கங்குலி இருந்தால் யுவராஜுக்கு முன்னதாக அவர் அணி-11 ல் இருப்பாரா? அல்லது தொடக்க ஆட்டக்காரர் இடம் பலியாக்கப்படுமா? முரளி கார்த்திக் தேவையா? அதற்கு பதில் இன்னொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் போவாரா? நான்காவது வேகப்பந்து வீச்சாளர் யாராக இருக்கக்கூடும்?

ஆடுகளம் வேகப்பந்துக்குச் சாதகமானது என்று முன்னதாகவே தெரிந்தாலும் இந்தியா 2+2 என்று பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுக்குமா அல்லது 3+1 ஆ? ஒரே ஸ்பின்னர்தான் என்றால் அது கும்ப்ளேயா அல்லது ஹரபஜனா? ஆஸ்திரேலியா சென்றபோது முதல் டெஸ்டில் விளையாடியது ஹர்பஜன். இரண்டாவது டெஸ்டில் ஹர்பஜனுக்குக் கையில் ஏதோ காயம் என்பதால் கும்ப்ளே உள்ளே வந்தார். கொத்து கொத்தாக விக்கெட்டுகள் பெற்றார். ஆனால் இப்பொழுதைய நிலைமையில் கும்ப்ளேதான் முன்னணி ஸ்பின்னர்.

ஆர்.பி.சிங் 15-ல் இருந்தால் நிச்சயம் ஒரு டெஸ்டிலாவது விளையாடுவார். அகர்கர் அணியுடன் செல்லவேண்டுமா? டெஸ்ட் பந்துவீச்சில் அவர் எதையும் சாதிக்கப்போவதைப்போலவே தெரியவில்லையே?

இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை இன்னும் வெகு சீக்கிரமே தெரிந்துவிடும்.

0 Comments:

Post a Comment

<< Home