Tuesday, December 20, 2005

வாலு போயி வாலு வந்தது டும் டும் டும்

அடுத்தடுத்த நாள்களில் இந்தியாவின் வால் இரண்டாவது முறையாக ஆடியது. இன்று ரொம்பவே ஆடியது!

இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் ஹீரோ லக்ஷ்மண். தனது ஒன்பதாவது சதத்தை அடித்தார். ஆனால் தோனியும் பதானும் அவருக்கு நல்ல ஆதரவை அளித்தனர். இரண்டாவது ஹீரோ ஹர்பஜன் சிங். முதலிரண்டு டெஸ்ட்களில் சொல்லிக்கொள்ளக்கூடிய அளவுக்கு ஒன்றும் செய்யாவிட்டாலும் நேற்று மாலை அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை எடுத்து இலங்கை அணியை நிலைகுலையச் செய்தார்.

ஆனால் இன்று காலையில் முதல் விக்கெட்டைப் பெற்றது கும்ப்ளேதான். ஜெஹான் முபாரக்கை பவுல்ட் ஆக்கினார். 144/6. இலங்கை ஃபாலோ-ஆனிலிருந்து விடுபடாதோ என்ற நிலை. (ஆனாலும் இந்தியா ஃபாலோ-ஆனை விதித்திருக்காது.) அடுத்து மஹரூஃப் ஹர்பஜன் சிங் பந்தில் அவருக்கே கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹர்பஜனின் ஐந்தாவது விக்கெட் அது. 155/7.

இந்நிலையில் தில்ஷனும் மலிங்க பண்டாராவும் சேர்ந்து அழகாக விளையாடினர். பண்டாரா கும்ப்ளே, ஹர்பஜன் இருவரையுமே இறங்கி வந்து அடித்தாடினார். இருவருமாகச் சேர்ந்து ஃபாலோ-ஆனைத் தவிர்த்தனர். தில்ஷன் 65 ரன்கள் பெற்ற நிலையில் ஹர்பஜனின் பந்தில் பார்வர்ட் ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 198/8. முரளிதரன் கும்ப்ளே பந்தில் தோனியால் ஸ்டம்ப் செய்யப்பட்டு அவுட்டானார். 201/9. லசித் மலிங்கா லெக் ஸ்லிப்பில் நின்றிருந்த சேவாகிடம், ஹர்பஜன் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹர்பஜன் 22.2-3-62-7 என்னும் அற்புதமான பந்துவீச்சைச் செய்திருந்தார். இலங்கை 206க்கு ஆல் அவுட். இலங்கையின் வால் அவ்வளவாக ஆடவில்லை! இந்தியா 192 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

உணவு இடைவேளைக்குப் பிறகு இந்தியா தன் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. முதல் பந்து அளவு குறைவாக, ஆஃப் ஸ்டம்புக்கு வெகு வெளியே சென்ற பந்து. சேவாக் தர்ட்மேனுக்கு மேலாக அந்தப் பந்தைத் தூக்கி அடித்தார். ஆனால் மஹரூஃப் அங்கு நின்று கொண்டிருந்தார். முதல் பந்திலேயே சேவாக் அவுட்! லக்ஷ்மண் உள்ளே வந்தார். வந்து மூன்று ஓவர்கள் கழித்து மஹரூஃப் பந்தில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். 9/2. டெண்டுல்கர் வந்தது முதற்கொண்டு மிக எளிதாகப் பந்துகளை அடித்தார். முரளியை நன்றாகவே எதிர்கொண்டார். ஆனால் பார்ட்-டைம் ஆஃப் ஸ்பின்னர் தில்ஷனின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். 34/3. இந்தியாவின் சீனியர் மட்டையாளர்கள் மூவரும் பெவிலியனுக்குத் திருப்பிவிட்டனர்.

நிலைமை மோசமாகாமல் கம்பீரும் யுவராஜ் சிங்கும் அமைதியாக விளையாடினர். இருவரும் ஸ்பின்னை எதிர்கொள்ள சற்றே தடுமாறினாலும் தயங்காமல் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அடித்து பவுண்டரிகளைப் பெற்றனர். முரளியில் பந்தை கட் செய்யப்போய் கம்பீர் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். கம்பீர் 30, இந்தியா 81/4. காயிஃப் உள்ளே வந்தார். முதல் இன்னிங்ஸைவிட நன்றாக விளையாட நினைத்தார்தான். ஆனால் ஸ்பின்னுக்கு எதிரான இவரது உத்தி சரியானதில்லை. கிரீஸில் நின்றுகொண்டே பந்து குத்தி எந்தத் திசையில் செல்கிறது என்பதைப் பார்த்தபிறகு அதை விளையாடுகிறார். இது நல்ல ஸ்பின்னர்களுக்கு எதிராகப் பயன்படாத உத்தி. அதுவும் கூக்ளி, தூஸ்ரா என்று வித்தை காட்டுபவர்களுக்கு முன் எடுபடாத உத்தி.

பண்டாராவின் பந்தில் காயிஃப் எல்.பி.டபிள்யூ என்று தீர்மானிக்கப்பட்டார். நன்கு முன்னால் வந்து கால்காப்பில் வாங்கினார் என்றாலும் நடுவர் இதை அவுட் என்று தீர்மானித்தார். காயிஃப் 9, இந்தியா 100/5. எப்படியோ கிட்டத்தட்ட முதல் இன்னிங்ஸ் நிலைமைக்கு இந்தியா வந்துவிட்டது. அப்பொழுது 97/5, இப்பொழுது 100/5. ஆனால் இப்பொழுது லக்ஷ்மணுக்கு பதில் யுவராஜ்.

தோனி முதல் இன்னிங்ஸ் அளவுக்கு நின்று விளையாடவில்லை. முரளியின் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். தோனி 14, இந்தியா 134/6. பதான் சில ஓவர்கள் நின்று யுவராஜுக்கு ஆதரவளித்தார். யுவராஜ் அற்புதமாக விளையாடினார். அவ்வப்போது சிரமப்பட்டாலும் ஸ்பின்னர்களைத் தொடர்ந்து ஸ்வீப் செய்துகொண்டிருந்தார். வேகப்பந்து வீச்சாளர்களை புல், கட், ஹூக் என்று அடித்து விளையாடினார். 70ஐத் தாண்டியதும் பதான் உதவியால் சதத்தைப் பெறுவாரா என்று நினைக்கையில், பண்டாராவின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். யுவராஜ் 75, இந்தியா 174/7. நல்ல வேளையாக இந்தியாவுக்கு முதல் இன்னிங்ஸில் 192 ரன்கள் லீட் இருந்தது.

பதான், அகர்கருடன் ஜோடி சேர்ந்து கொத்து கொத்தாக விக்கெட்டுகளை எடுக்காவிட்டாலும் ரன்களைப் பெற்றார். பதான் 27 ரன்கள் இருக்கும்போது முரளியின் பந்தில் பவுல்ட் ஆனார். இந்தியா 198/8. இந்தியா டிக்ளேர் செய்யுமா அல்லது ஆல் அவுட் ஆகுமா என்ற கேள்வி.

அகர்கர்-கும்ப்ளே ஜோடி வேறு நினைப்பில் இருந்தனர். அகர்கர் இதற்குமுன் இங்கிலாந்தில் டெஸ்டில் சதம் அடித்துள்ளார். இங்கு வலுவாக முன்னேறி 48 ரன்களைப் பெற்றார். அரை சதம் கைக்கருகில் இருக்கும்போது பண்டாரா பந்துவீச்சில் அவருக்கே கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்தியா 247/9. அதற்குப் பின்னும்கூட இந்தியா ஆல் அவுட் ஆகவில்லை. மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுறும்போது ஹர்பஜனும் கும்ப்ளேயும் பத்தாவது விக்கெட்டுக்காக 40 ரன்களைச் சேர்த்திருந்தனர்! ஆளுக்கு ஒரு சிக்ஸ் வேறு. கடைசி ஐந்து விக்கெட்டுகளுக்காக இதுவரையில் 187 ரன்களைச் சேர்த்திருக்கின்றனர். முதல் இன்னிங்ஸையும் சேர்த்தால் இந்தியாவின் வால் இதுவரையில் 488 ரன்களைப் பெற்றுள்ளனர்!

நாளைக் காலை ஹெவி ரோலரைப் பயன்படுத்தியபின்னர் ஒரு பந்தைக்கூடச் சந்திக்காமல் இந்தியா டிக்ளேர் செய்யும். அதனால்தான் இன்று மாலையே டிக்ளேர் செய்யவில்லை. ஹெவி ரோலர் ஆடுகளத்தின் மேல்பரப்பை உடைத்துவிடும். ஏற்கெனவே ஸ்பின்னாகும் ஆடுகளம் நாளைக் காலை இன்னும் என்னென்ன செய்யப்போகிறதோ!

நாளை கடும் போட்டி நிலவும். கும்ப்ளே - ஹர்பஜன் இடையில்.

0 Comments:

Post a Comment

<< Home