Sunday, December 11, 2005

தில்லி டெஸ்ட் டிராமா

இன்றுதான் ஹைதராபாதிலிருந்து வந்தேன். ஹைதராபாத்-சென்னை சார்மினார் அதிவிரைவு வண்டியை வேறு ஏதாவது பெயரால் அழைக்கலாம். நேற்று இரவு 8.10க்குக் கிளம்பிய வண்டி இன்று காலை 12.40க்கு சென்னை வந்து சேர்ந்தது!

கடந்த இரண்டு நாள்களில் தில்லி டெஸ்டில் என்னென்னவோ நடந்துவிட்டன. என் சக வலைப்பதிவர்கள் இவற்றைப் பற்றி இங்கு நிறைய எழுதியிருப்பார்கள் என்று பார்த்தால் ஒன்றும் காணோம்!

நிறைய வேலைகள் தலைக்கு மேல் இருப்பதால் கொஞ்சம் மட்டும் இப்போது...

டெண்டுல்கரின் 35வது டெஸ்ட் சதம். ஆதிக்கம் செலுத்தி அடித்த சதம் அல்ல. அவரது மிக அழகான சதமும் அல்ல. ஆனால் ரெகார்ட் என்ற விதத்திலும் இரண்டாம் நாள் ஆட்டம் சென்றதைப் பார்க்கும்போதும் அவருக்கும் இந்தியாவுக்கும் மிக முக்கியமான சதம். சதத்துக்கான ஒரு ரன்னைப் பெற்றதும் அவர் அதைக் கொண்டாடிய விதமே அவர் எவ்வளவு தூரம் இந்தச் சதத்தை எதிர்பார்த்தார் என்று காண்பித்தது.

முரளியின் பந்துவீச்சு. டெண்டுல்கர், கங்குலி இருவரும் விளையாடியதைப் பார்க்கும்போது இந்தியா 400ஐப் பெறுவது கடினமில்லை என்று தோன்றிய நிலையில் சடசடவென்று இரண்டாம் நாள் காலை முரளிதரன் பெற்ற விக்கெட்டுகள் இந்தியாவைத் தடுமாற வைத்தன. முரளியின் தூஸ்ராக்கள் திராவிட், டெண்டுல்கர் போன்றவர்களையே தடுமாற வைக்கும்போது தோனி, ஹர்பஜன் சிங் ஆகியோர் எம்மாத்திரம்? முரளி லெக் ஸ்பின் பந்து வீசுகிறாரோ என்று பயமுறுத்த வைக்கும் விதத்தில் அவரது தூஸ்ராக்கள் சுழலுகின்றன. 7-100 என்ற கணக்கில் இந்தியாவை அசர வைத்தார் முரளி.

கும்ப்ளேயின் பதிலடி. இந்தியா 254/3 என்ற கணக்கிலிருந்து 290 ஆல் அவுட் ஆனதைத் தொடர்ந்து இலங்கை தொடக்க ஆட்டக்காரர்கள் விக்கெட் ஏதும் இழக்காமல் 50ஐத் தாண்டினர். அவ்வளவுதான்... இனி இந்தியா திண்டாட்டம்தான் என்று நினைக்கும்போது இர்ஃபான் பதான் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார். முரளி மாதிரி நம் அணியில் ஏன் ஸ்பின்னர்கள் யாரும் விக்கெட்டுகளைப் பெறவில்லை என்று நினைக்க வைத்த அட்டபட்டு, ஜெயவர்தனா விளையாட்டு. அப்பொழுது கும்ப்ளே வீசிய அற்புதமான பந்துவீச்சு. முதலில் ஜெயவர்தனா ஸ்வீப் செய்யப்போய் எல்.பி.டபிள்யூ ஆனார். அடுத்து சமரவீரா அற்புதமான லெக் பிரேக்கில் க்ளீன் பவுல்ட். அடுத்த பந்திலேயே - ஃபிளிப்பர் - தில்ஷன் எல்.பி.டபிள்யூ. இந்தப் பந்து கொஞ்சம் லெக் ஸ்டம்புக்கு வெளியே போயிருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் டெண்டுல்கருக்கும் கூட அப்படித்தான். கடைசியாக நாளின் கடைசிப்பந்தில் அட்டபட்டுவை ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் கேட்ச் பிடிக்க வைத்தது. இப்படியாக கும்ப்ளேயின் 4-54, ஆட்டத்தை நிச்சயமாக இந்தியா பக்கம் சாய்த்துள்ளது!

மூன்று சாம்பியன்கள், இரண்டே நாள்களில்! இனி அடுத்த மூன்று நாள்களில் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ!

4 Comments:

Blogger Jsri said...

பொதுவாக கூட்டு வலைப்பதிவுகளில் பொறுப்பு ஒருவருக்கு மட்டும் இல்லாததுபோல் ஒரு அசிரத்தை வலைப்பதிவர்களிடம் வந்துவிடுகிறதோ என்று எப்போதும் நினைத்திருக்கிறேன். ('கோயிந்த்சாமி' வலைப்பதிவெல்லாம் கோயிந்தா ஆனது அப்படித்தான்.) ஆனால் கிரிக்கெட் பற்றிய இந்தக் கூட்டுப்பதிவில் நண்பர்கள் ஆர்வமுடன் எழுதுவார்கள்- தமிழில் கிரிக்கெட்டிற்கான முழுமையான் வலைப்பதிவாக இது வரவேண்டும் என்று நினைத்தேன். ஏறிக்கொண்டே வந்த உறுப்பினர் எண்ணிக்கையும் அதற்கு ஒரு காரணம்.

ஆனால்... :(

சச்சின் சாதனை புரிந்த 5வது நிமிடம் இங்கு 10,000 வாலா கொளுத்திக் கொண்டாடுவார்கள் என்று நினைத்தால் ஒரு ஒத்தை குஜிலி வெடி, ஓலைவெடி
கூட வைக்காமல் அப்படி ஒரு அமைதி காத்தார்கள்.

Lazeee Boys!! :((

1:16 AM  
Blogger Vignesh said...

@JSRI

//ஒரு ஒத்தை குஜிலி வெடி, ஓலைவெடி
கூட வைக்காமல் அப்படி ஒரு அமைதி காத்தார்கள்.

தவறுக்கு வருந்துகிறோம்.

கிண்டலுக்கு சொல்லவில்லை. நிஜமாகவே நானும் உணர்ந்த உண்மை இது. பத்ரி எப்படியும் இது குறித்து விரிவாய் எழுதிவிடுவார் என்ற எண்ணத்தில் நான் ( நாங்கள் !!!) இருந்துவிட, பத்ரி அலுவல் காரணமாக வெளியூர் சென்றுவிட, உலக சாதனை எல்லாம் தமிழ் வலைப்பதிவில் அவ்வளவாய் கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டது. இனி இது போன்று ...

// Lazeee Boys!! :((

எனினும் நன்றி வாழ்த்துதலுக்கு,

-- விக்னேஷ்

9:12 AM  
Blogger மாயவரத்தான்... said...

//சச்சின் சாதனை புரிந்த 5வது நிமிடம் இங்கு 10,000 வாலா கொளுத்திக் கொண்டாடுவார்கள் என்று நினைத்தால் ஒரு ஒத்தை குஜிலி வெடி, ஓலைவெடி
கூட வைக்காமல் அப்படி ஒரு அமைதி காத்தார்கள்.

Lazeee Boys!! :((//

I made a post in my blog within the next 5 minutes when Sachin made his 35th Century. But No Comments from u JSri. You dont want to write comments on Cricket other than this blog?!

3:55 AM  
Blogger Jsri said...

ஐயோ மாயவரத்தான், என்ன அப்படி சொல்லிட்டீங்க. உங்க பதிவு உடனே படிச்சேன். பொதுவா இப்பல்லாம் எங்கயும் அதிகம் பின்னூட்டமிடறதில்லை. (ஏன் வம்பு?)

ஆனா தியாகையர் உற்சவம் திருவையாறுல நடக்கறதுக்கும் உள்ளூர்ல அந்த நாள்கள்ல வேற சபால அதைக் கொண்டாடறதுக்கும் வித்யாசம் இருக்கில்ல, அந்த மாதிரிதான் இது. இவங்களும் ஏதாவது எழுதியிருந்தாங்கன்னா பின்னூட்டம் எதுவும் எழுதாமலேதான் போயிருப்பேன். ;-)

(அப்புறம் ஒரு முக்கியமான ரகசியம் உங்களுக்கு மட்டும்.. யாராவது சகவலைப்பதிவாளர்கள் வந்து வீட்டுக்காரர் ஊருக்குப் போகும்போது சாவியை எங்கயோ வெச்சுட்டுப் போயிட்டார் மாதிரி ஏதாவது 'போட்டுக்கொடுக்கற' பின்னூட்டம் வருமான்னு எதிர்பார்த்தேன். அப்படி எதுவும் இல்லாம நெஜமாவே lazeee boysஆ இருந்திருக்காங்க.)

உங்க பின்னூட்டம் இன்னிக்கிதான் பார்த்தேன் மாயவரத்தான்; அதனால தாமதமா பதில்சொல்றேன். அட்ஜிஸ்.
===

இந்த வலைப்பதிவோட பின்னூட்டங்கள் தமிழ்மணத்துல திரட்டப்படறதில்லை. தனிப்பட்ட காரணங்கள் ஏதுமில்லைன்னா அதுக்கும் ஏற்பாடு செஞ்சாங்கன்னா நல்லா இருக்கும்.

9:40 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home