Thursday, December 15, 2005

கங்குலியின் வெளியேற்றம்.

இன்றைய ஆங்கிலப் பத்திரிகைகளின் விளையாட்டு பக்கங்களில் காணப்பட்ட சூடான செய்தி இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து கங்குலியின் வெளியேற்றம்தான்.

அவருடைய வெளியேற்றத்தை விட அவர் வெளியேற்றப்பட்ட விதம்தான் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் கருத்தும் அதுதான். கங்குலி இதற்கு முன்னாலிருந்த பயிற்சியாளரின் ஒத்துழைப்புடன் இந்திய கிரிக்கெட் அணியின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்தியதில் பெரும் பங்கு ஆற்றியவர் என்பதை அவர்களுடைய எதிரிகளாலும் (அவர் அளவுக்கதிகமான எதிரிகளை உருவாக்கியுள்ளார் என்பதை மறுக்க முடியாது. அதில் முக்கியமானவர் க்ரெக் சாப்பல்) மறுக்க முடியாது.

இன்றைய சூழ்நிலையில் அணியில் தொடர்ந்து இடம் பெறுவது சந்தேகம் என்று அவருக்கே இன்னும் தெரியவில்லை என்பதுதான் பரிதாபம். அவர் கடந்த முறை அணியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்குப் பிறகு ரஞ்சி மற்றும் துலீப் கோப்பைகளில் சிரத்தையெடுத்து விளையாட ஆரம்பித்ததலிருந்து அவருக்கு மீண்டும் நாம் அணியில் சேர்க்கப் படுவோம் என்று நினைப்பு இருந்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.

பாவம் கங்குலி. ஓராண்டுகாலம் முன்பு வரை மிகவும் வலிமை வாய்ந்தவராக கருதப்பட்டவருக்கு இப்படியொரு நிலைமை.

இதில் என்ன பரிதாபம் என்றால் கடந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு இண்ணிங்சிலும் ஓரளவுக்கு நிதானித்து ஆடி அணியை சரிவிலிருந்து காப்பாற்றியவர் அவர் என்று அணியின் தலைவரே ஒத்துக்கொண்டதுதான். டிராவிட் ஒரு பக்கா ஜெண்டில்மேன் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அவரும் சாப்பல்-பாவர் பவர் விளையாட்டில் ஒரு கைப்பாவையாகிவிட்டாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

சரி, இன்றைய சூழலில் கங்குலிக்கு அணியில் நிரந்தர இடம் அளிக்க வாய்ப்பில்லை என்றே வைத்துக் கொள்வோம். அதை தேர்வுக்குழுவினரோ அல்லது BCCI தலைவரோ அவரிடம் நேரடியாக தொடர்புக் கொண்டு நிலைமையை விளக்கியிருக்கலாமே. அத்துடன் அகமதாபாத்தில் அவரை விளையாட அனுமதித்து அவருக்கு ஒரு முறையான வழியனுப்பு விழாவை நடத்தி கொடுத்திருந்தால் அவருடைய வங்காள ரசிகர்களுக்கும் அது நிச்சயம் திருப்தியளித்திருக்கும்.

அப்படியல்லாமல், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இத்தனைக் குரூரமாக அவரை அணியிலிருந்து வெளியேற்றியதற்குக் அவருடைய திறமையின்மை மட்டும் காரணம் அல்லவோ என்றுதான் தோன்றுகிறது.

கங்குலி, அவருடைய காலத்தில் அன்றைய BCCI தலைவரின் பாதுகாப்பில் இருந்துக்கொண்டு விளையாடிய விளையாட்டுகளையே இன்று யாரோ அவருக்கெதிராக விளையாடுகிறார்களோ என்றுதான் தோன்றுகிறது.

அது க்ரெக் சாப்பலாக இருந்தால் வெட்கக்கேடு. அவரை சமீபத்தில் எதிர்த்துப் பேசிய வீரர்களுக்கும் இதுபோன்ற நிலை ஏற்படுமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

5 Comments:

Blogger பூனைக்குட்டி said...

//அத்துடன் அகமதாபாத்தில் அவரை விளையாட அனுமதித்து அவருக்கு ஒரு முறையான வழியனுப்பு விழாவை நடத்தி கொடுத்திருந்தால் அவருடைய வங்காள ரசிகர்களுக்கும் அது நிச்சயம் திருப்தியளித்திருக்கும்.//

ரொம்ப ஜோக்கெல்லாம் அடிக்காதீங்கங்க, கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து பார்த்துவருகிறவன் என்ற முறையில் சொல்கிறேன். இன்னும் கங்குலியிடம் கிரிக்கெட் நிறைய இருக்கிறது(தற்பொழுது விளையாண்டு வருபவர்களையும் விட.)

கங்குலி மீண்டும் விளையாட வரப்போவதை பார்க்கத்தான் போகிறீர்கள்.

1:17 AM  
Blogger Raja said...

//இந்திய கிரிக்கெட் அணியின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்தியதில் பெரும் பங்கு ஆற்றியவர்

//எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இத்தனைக் குரூரமாக அவரை அணியிலிருந்து வெளியேற்றியத


இதுவரை சேப்பல் கேப்டனாக தான் இருந்து வந்தார். ஆனால் செலக்சன் மெம்பராகவும் ஆகி விட்டார். இதே நிலமை நீடித்தால் அவர் BCCI Chairman ஆகவும் ஆகி விடுவார்.

இதே போல் செலக்சன் இருந்தால் கங்குலி வந்து டீமை காப்பாற்றும் நிலமை வர தான் போகிறது

கங்குலி இந்த அரசியல் விளையாட்டில் இருந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட்டுகு வரும் காலம் வெகு விரைவில் இல்லை

//அவருடைய வங்காள ரசிகர்களுக்கும் அது நிச்சயம் திருப்தியளித்திருக்கும்

இது இந்திய ரசிகர்களுக்கே கசப்பான் ஒன்று.

2:57 AM  
Blogger Machi said...

////கங்குலி, அவருடைய காலத்தில் அன்றைய BCCI தலைவரின் பாதுகாப்பில் இருந்துக்கொண்டு விளையாடிய விளையாட்டுகளையே இன்று யாரோ அவருக்கெதிராக விளையாடுகிறார்களோ என்றுதான் தோன்றுகிறது.
///
முற்பகல் செய்யின் பிற்பகல் .....

8:42 AM  
Blogger Doctor Bruno said...

Vinai vithaipavar vinai aruppar.... It is so simple.. What Ganguly did to Laxman and Kumble in the One day squad is now happening to him,...

9:15 AM  
Blogger டிபிஆர்.ஜோசப் said...

இப்பதிவுக்கு பின்னூட்டமிட்ட

புதுவை, மோகன்தாஸ் (நீங்க சொன்னதுக்கு மாற்று கருத்து எனக்கு உண்டு என்றாலும் இதை ஊதி பெரிதாக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.), ராஜா, குறும்பன் மற்றும் புருனோ அவர்களுக்கு நன்றி.

11:00 PM  

Post a Comment

<< Home