Wednesday, December 21, 2005

வதம் ! வதம்!

மிகவும் துரிதமாக வெற்றி பெற்றுவிட்டது இந்தியா. சென்னையில் இந்தியா சொதப்பியதை பார்த்த போது, இலங்கை அணி மிச்சமுள்ள போட்டியில் ஒரு "காட்டு" காட்டும் என பயம் வந்தது. அதற்கேற்றாற் போல், முரளியும் முதல் இன்னிங்ஸில் இந்தியாவை தடவ வைத்தார். ஆனால் அதோடு சரி. அதன் பின்னால் இந்தியாவின் அதிரடி வியூகங்களுக்கு பதிலளிக்க இயலாமல் சரிந்தது இலங்கை அணி.

இப்போட்டிகள் ஒருசாரார் மட்டும் ஆக்கிரமித்து நடந்த போட்டிகள் அல்ல. வெற்றியின் அளவை வைத்து போட்டிகள் எந்த அளவு ஆக்ரோசத்துடன் விளையாடப்பட்டன என்பதை முடிவு செய்ய முடியாது. இரு அணிகளும் ஆட்டத்தின் சில பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தன. ஆனால் இறுதியாக இந்தியாவில் சில உத்திகள் இலங்கையை சுருட்ட ஏதுவாயின.

தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வது என்பது ஒரு கலை. முன்பெல்லாம் இந்திய அணியின் அணுகுமுறையில் அது வெளிப்படாது.செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்து கொண்டேயிருப்பார்கள். தற்போது இந்நிலை வெகுவாக மாறியிருக்கிறது. அணியின் ஒவ்வொரு ஆட்டக்காரரிடமும் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொறுப்பான ஆட்டம் ஆட ஒரு ஆட்டக்காரருக்கு தன்னுடைய பொறுப்பு என்ன? என்ற உணர்தல் அவசியம். அதற்கான ஆற்றல் தன்னிடம் உள்ளதா? என்ற சுய சந்தேகங்களும் சமயத்தில் ஆட்டக்காரர்கள் மனதில் எழும். கோச் மற்றும் கேப்டனின் வேலை இத்தகைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து ஆட்டக்காரர்களை ஊக்கப்படுத்துவது.

தற்போதைய இந்திய அணியில் திரைக்குப் பின்னால் ஒவ்வொரு ஆட்டக்காரரும் தொடர்ச்சியாக உழைக்க வேண்டியதற்கான திட்டங்களும், பயிற்சி முறைகளும் வகுக்கப்படுகின்றன. அதன் விளைவுகள் ஆடும் ஆட்டத்தில் தெரிகிறது. இதற்காக பயிற்சியாளரை நாம் பாராட்டத்தான் வேண்டும்.

இந்தியாவின் வெற்றிகள், குழுவின் கூட்டு முயற்சியால் அமைவது வரவேற்கத்தக்க அம்சம். முன்பெல்லாம் சில தனிப்பட்ட ஆட்டக்காரர்களின் திறமையைச் சார்ந்தே வெற்றிகள் ஈட்டப்பட்டன.

இலங்கை அணியின் பிரச்சனைகள் அணிதேர்விலிருந்தே தொடங்கி விட்டது. ஜெயசூர்யாவை டெஸ்ட் போட்டிகளிலிருந்து நீக்கியது தவறான முடிவு. ஜெயசூர்யாவை சேர்த்திருந்தால் உளவியல் ரீதியாக கலக்கத்தை இந்திய அணிக்கு ஏற்படுத்தியிருக்க முடியும். தாரங்கா போன்ற இளம் ஆட்டக்காரர்களுக்கு முதலிலே வாய்ப்பு தராமல் குணவர்த்தெனே போன்ற ஆட்டக்காரர்களுக்கு வாய்ப்பு தந்தது , ஆர்னால்ட்டை விட்டு விட்டு அதிகம் பிரகாசிக்காத முபாரக்கை எடுத்தது போன்ற பல குளறுபடிகள் நிகழ்ந்தன.

இன்று தில்சன் இலங்கை அணியின் தடுமாற்றத்திற்கு எஸ்ஜி பந்துகள் பயன்படுத்தப்பட்டதை காரணமாக கூறியிருக்கிறார். குக்கூபாரா பந்துகளில் பந்துவீசி பழகிய இலங்கை அணியினர், எஸ்ஜி பந்துகளை சரியாக கையாளத் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். இது விவாதிக்கப்பட வேண்டிய அம்சம். முன்பு ஹர்பஜன் வெளிநாட்டுக் களங்களில் சரியாக பந்து வீச இயாலததற்கு இதே போன்ற காரணங்கள்தான் கூறப்பட்டது.

உபயோகிக்கப்படும் பந்தின் வகைகளை ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்ய முடியாதா? அல்லது எந்த பந்தை உபயோகப்படுத்துவது என்பது குறிப்பிட்ட நாட்டின்/போர்டின் முடிவா? இதைப் பற்றிய விவரங்கள் சரியாக தெரியவில்லை.

இக்கட்டுரையை முடிப்பதற்குள்,ஜெயசூர்யா மீண்டும் அணியில் நியூசிலாந்து பயணத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளார் என செய்தி கிடைத்துள்ளது. ஜெயசூர்யா நன்றாக விளையாடும் பட்சத்தில், இலங்கை அணியின் திறன் பலமடங்கு அதிகரிக்கும்.

இந்தியா இத்தொடர் வெற்றியின் மூலம் ஐசிசி தர வரிசையில் இரண்டாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. வரவிருக்கும் பாகிஸ்தான் தொடர் இந்தியாவிற்கு மிகப்பெரிய சவாலாக அமையும். இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது மிகவும் சுவாரஸ்யமாக அமையும் என நம்புகிறேன்.

வாழ்த்துக்கள்! அணி இந்தியாவிற்கு.

0 Comments:

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home