Saturday, December 24, 2005

காசு மேல காசு வந்து...

பிசிசிஐக்குக் கொட்டுகிற நேரம் இது...

சென்ற வாரம், ஏர் சஹாரா இந்திய அணியின் சட்டைகளை ஸ்பான்சர் செய்ய நான்கு வருடங்களுக்கு ரூ. 313.80 கோடி தர ஒப்புக்கொண்டது. அடுத்ததாக நைகி (Nike). சட்டைகளை உருவாக்கும் + கோடிக்கணக்கில் அடித்து விற்கும் நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து வருடங்களுக்கு இதற்காக நைகி கொடுக்கும் பணம் ரூ. 197 கோடி. நைகி (ரூ. 197 கோடி), அடிடாஸ் (ரூ. 128 கோடி) மற்றும் ரீபாக் (ரூ. 119 கோடி) போட்டியிட்டனர், அதில் நைகிக்கே வெற்றி.

இனி இந்திய அணியைப் பார்த்து "Just do it" என்று சொல்லலாம்!

வேறென்னென்ன ஸ்பான்சர்ஷிப், ஒலி/ஒளிபரப்பு வாய்ப்புகள் உள்ளன?

முதலில் ஒலி/ஒளிபரப்புகளை எடுத்துக்கொள்வோம்:

1. தொலைக்காட்சி - இது தரைவழித் தொலைக்காட்சி, செயற்கைக்கோள் தொலைக்காட்சி, DTH தொலைக்காட்சி என்று மூன்றாகப் பிரிக்கப்படப்போகிறது என்கிறார் லலித் மோடி. இதில் தரைவழி (terrestrial) வேலையைச் செய்யக்கூடிய நிறுவனம் தூரதர்ஷன் மட்டும்தான். செயற்கைக்கோள் வழியாகக் (கேபிள் & சாடிலைட்) காண்பிப்பதற்கு ESPN Star Sports, Zee Sports இரண்டும் கடுமையாகப் போட்டிபோடப் போகின்றன.

ஆனால் DTH என்பதைத் தனியாகப் பிரித்து விற்க முடிவு செய்தால் Zee இன்னமும் வலுவாகப் போட்டியிடும் என்றே நினைக்கிறேன். இந்த DTH உரிமத்தில் ஸ்பெஷலாக என்ன இருந்துவிடமுடியும்? அதுவும் செயற்கைக்கோள் தொலைக்காட்சிதானே என்று கேட்கிறீர்களா?

இல்லை, அதற்கும் மேலே. உதாரணத்துக்கு ஒரே நேரத்தில் அத்தனை கேமராக்களும் காண்பிக்கும் கோணம் உங்களுக்குக் காணக் கிடைக்கும். நீங்களாகவே வேண்டிய, விரும்பிய கோணத்தைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம். ஒவ்வொரு விக்கெட்டும் தனியாக மெனு வழியாகக் கிடைக்கும். நீங்கள் அவசரமாக டாய்லெட் போயிருக்கும்போது ஒரு விக்கெட்டோ, சிக்ஸோ நடந்தது என்றால் அதை நீங்கள் வெளியே வந்தவுடன் மெனுவிலிருந்து தேடிப்பிடித்துப் பார்க்கலாம். அதே நேரம் பிக்ச்சர்-இன்-பிக்ச்சரில் நடப்பு நிகழ்வு ஓடிக்கொண்டே இருக்கும். தனித்தனியாக சில ஹைலைட்டுகளைச் செய்து வைத்திருப்பார்கள். நீங்கள் வேண்டியதை வேண்டும்போது பார்க்கலாம்.

ரிமோட் கண்டிரோலைக் கையில் வைத்துக்கொண்டு தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்புக்கு ("கங்குலி பாகிஸ்தானுக்குப் போக வேண்டுமா, கூடாதா?") வாக்களிக்கலாம். அந்த வாக்குகள் உடனடியாகப் பதிவாகி திரையில் பலரும் பார்க்கக் கிடைக்கும். ஒரு பட்டனை அழுத்தினால் முழு ஸ்கோர்கார்ட் பார்க்கக் கிடைக்கும். எப்பொழுதுமே. இப்படி இன்னமும் பலதைச் சொல்லிக்கொண்டே போகலாம். அதாவது முழுமையான கிரிக்கெட் ஃபேன் இந்த DTH காட்சியைத்தான் விரும்புவார். அதனால் கொஞ்சம் அதிகம் பணம் கொடுத்தும் ஆட்டத்தைப் பார்க்க ஒப்புக்கொள்வார்.

இந்த வகையில் மொத்தமாக அடுத்த நான்கு வருடத்தில் பிசிசிஐக்குக் கிடைக்க உள்ள வருமானம் ரூ. 1,500 கோடிகள்.

2. வானொலி: தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடுங்கிப் பார்ப்பது மட்டுமல்ல, தானம் கொடுத்தவரை நாலு அடி கொடுப்பதும் நம்மூரில் வாடிக்கை. போனால் போகட்டும் என்று ஆல் இந்தியா ரேடியோவுக்கு பிசிசிஐ வானொலி உரிமத்தை இலவசமாக - காசு ஏதும் வாங்கிக் கொள்ளாமலேயே - கொடுத்துள்ளது. பிரசார் பாரதி வாங்கிக்கொண்டு சந்தோஷப்படக்கூடாதா?

இல்லை.

பிசிசிஐ, இந்த உரிமத்தை non-exclusive என்ற முறையில் கொடுத்துள்ளது. அதே நேரம் ஒவ்வோர் ஊரிலும் உள்ள பண்பலை (தனியார்) வானொலிகளுக்கும் இதே non-exclusive முறையில் வானொலி உரிமத்தை விற்க முடியுமா என்று பிசிசிஐ பார்க்கிறது. இதை ஏற்றுக்கொள்ளாத பிரசார் பாரதி தலைவர் ஷர்மா பிசிசிஐக்கு காட்டமாக ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் இந்தியாவில் எந்த FM வானொலிக்கும் கிரிக்கெட் வர்ணனை அளிக்க்கும் உரிமை கிடையாது என்று சொல்லியுள்ளார். அதை பிசிசிஐ ஏற்க மறுக்கிறது. இதில் அடிப்படைப் பிரச்னை "கிரிக்கெட் வர்ணனை என்பது செய்தி வகையைச் சார்ந்ததா அல்லது கேளிக்கை வகையைச் சார்ந்ததா" என்பதைப் பற்றியது. தனியார் பண்பலை வானொலிகள் செய்தி, செய்தி சார்ந்த current affairs நிகழ்ச்சிகளைத் தயாரிக்க முடியாது. ஆனால் கேளிக்கை (entertainment) நிகழ்ச்சிகளைக் கொடுக்கலாம். பிசிசிஐ கிரிக்கெட் வர்ணனைகள் கேளிக்கை வகையைச் சார்ந்தது என்கிறது.

நமக்கும் அதுவே உடன்பாடு.

அதனால் சில பிரச்னைகளுக்குக் பிறகு இந்த உரிமம் விற்கப்படலாம்.

இதன்மூலம் பிசிசிஐ குறைந்தது ரூ. 100 கோடி பார்க்கும்.

3. இணையம்: வில்லோ டிவி என்னும் இணையத் தொலைக்காட்சி நிறுவனம் 44 மில்லியன் டாலர்கள் தருவதாகச் சொல்லியிருப்பதாக சில செய்திகள் கசியவிடப்பட்டுள்ளன. ஆனால் பிசிசிஐ ஆசாமிகளுக்கு இணைய ஒளிப்படங்களுக்கும் இணையத்தளங்களுக்குமான வித்தியாசங்கள் தெரியவில்லை. எது எப்படியோ, இம்முறை இணைய உரிமம் தனியாக விற்கப்படும்.

இதன்மூலம் பிசிசிஐ குறைந்தது ரூ. 100 கோடி பார்க்கும். 44 மில்லியன் டாலர்கள் என்பது மிக அதிகமாகத் தோன்றுகிறது. அவ்வளவு கொடுத்தால் அந்த நிறுவனத்தின் கதை கந்தலாகலாம்!

4. மொபைல் உரிமம்: இது ஸ்பான்சர்ஷிப் + ஒலி/ஒளிபரப்பு வகையைச் சார்ந்தது.

இதன்படி மொபைல் போன்களில் வீடியோ விக்கெட் அலர்ட், நேரடி ஒளிபரப்பு ஆகியவற்றைச் செய்யலாம்.

இதில் நிறையப் பணம் புரள வாய்ப்பு உள்ளது. நான்கு வருடங்களுக்கு நிச்சயமாக ரூ. 200 கோடிக்கு மேல் பெறலாம்.

5. இதைத்தவிர பல சில்லறை விஷயங்களில் பிசிசிஐ 200 கோடிகளுக்கு மேல் புரட்டும்.

மொத்தத்தில் ரூ. 2100 கோடிக்கு மேல் வருகிறது. கொஞ்சம் இங்கும் அங்குமாக இழுத்துப் பார்த்தால் ரூ. 2500 கோடிகள். இதில் சஹாரா, நைகி சேர்த்தால் மொத்தமாக ரூ. 3000 கோடி.

இதற்கு மேல் ஆட்டத்தொடர் ஸ்பான்சர்ஷிப். அப்புறம் in-stadia advertisement. டிக்கெட் கலெக்ஷன். ம்ம்ம்ம்ம்.....

0 Comments:

Post a Comment

<< Home