Tuesday, February 14, 2006

லாஹோர் ஒருநாள் போட்டி

பல நாள்களுக்குப் பிறகு ஒரு மயிர்க்கூச்செரியும் ஒருநாள் போட்டியைப் பார்க்க நேரிட்டது. பெஷாவர், ராவல்பிண்டிக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இரு அணிகளும் 1-1 என்ற நிலையில் இருந்தன. லாஹோரில் திராவிட் டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தார்.

காலை 11.00 மணிக்கு ஆட்டம் ஆரம்பிக்கும், ஆனால் மாலை வெளிச்சம் சீக்கிரம் போய்விடும் என்பதால் இரவு விளக்குகள் எரியும். அதே நேரம் இரவு வெகுநேரம் வரை பனியில் விளையாடாமல் இருக்கலாம். பனி வந்தால் பந்து கனமாகி, பந்துவீசுவது கடினமாகிவிடும்.

டாஸில் வென்றதும் திராவிட் சரியாக என்ன செய்வது என்று தெரியாமலே பிறகு முதலில் பந்துவீசுவது என்று தீர்மானித்ததாகப் பின்னர் சொன்னார். இரண்டாவது ஒருநாள் போட்டியைப் போலவே இங்கும் இர்ஃபான் பதான் முதல் இரண்டு விக்கெட்டுகளை சீக்கிரம் வீழ்த்தினார். பந்து அங்கும் இங்கும் பயங்கரமாக ஸ்விங் ஆனது. ஸ்ரீசாந்தும் மிக நன்றாகவே பந்தை ஸ்விங் செய்தார். ஆனால் அவரது பந்தில் வரிசையாகப் பல கேட்ச்கள் கோட்டைவிடப்பட்டன. திராவிட் முதல் ஸ்லிப்பில் ஒரு கேட்ச், கம்பீர் இரண்டாவது, மூன்றாவது ஸ்லிப்பில் இரண்டு கேட்ச்கள், காயிஃப் பாயிண்டில் ஒரு கேட்ச் விட்டனர். கடைசிவரையில் ஸ்ரீசாந்துக்கு விக்கெட்டே கிடைக்கவில்லை.

ஆனால் ஆர்.பி.சிங் வந்தார். ஸ்ரீசாந்த் அளவுக்குப் பந்து வீசவில்லை என்றாலும் விக்கெட்டுகளை மட்டும் பெற்றுக்கொண்டே இருந்தார். அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் அவருக்கு. டெண்டுல்கரும் இன்ஸமாம்-உல்-ஹக்கின் முக்கியமான விக்கெட்டைப் பெற பாகிஸ்தான் படு மோசமான நிலையில் இருந்தது. 158/6 - 33 ஓவர்களில். இந்த நிலையில் ஷோயப் மாலிக்கும் அப்துல் ரசாக்கும் ஜோடி சேர்ந்தனர். ஷோயப் மாலிக் எக்கச்சக்கமான ஃபார்மில் இருக்கிறார். 12 ரன்களில் இவருக்கு ஒரு கேட்சும் கோட்டை விடப்பட்டது. முதலிரண்டு மேட்ச்களில் 90, 95 ரன்கள். இந்த முறை சதத்தைப் பெற்றார். மிக நன்றாக விளையாடினார். அப்துல் ரசாக் ஆரம்பத்தில் மாலிக்குக்குத் துணையாக ஆடினாலும் மாலிக் அவுட்டானதும் கடைசி ஆட்டக்காரர்களுடன் ஜோடி சேர்ந்து அற்புதமாக ரன்களைச் சேர்த்தார். பதானை ஓர் ஓவரில் இரண்டு சிக்ஸ்கள் அடித்தார்.

அகர்கர் தன் ஆறு ஓவர்களில் நன்றாகப் பந்துவீசியிருந்தார். ஆனால் ஏதோ பிரச்னை காரணமாக அதற்குமேல் பந்துவீசவில்லை. அதற்கு பதில் சூப்பர் சப்-ஆக வந்த ஜாகீர் கான் தான் வீசிய மிச்சம் நான்கு ஓவர்களிலும் அடித்துத் துவைக்கப்பட்டார். 50 ஓவர்களில் பாகிஸ்தான் 288 ரன்கள், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு. கடைசி 10 ஓவர்களில் 89 ரன்கள்!

இந்தியாவும் ஆரம்ப ஓவர்களில் மிகவும் கஷ்டப்பட்டது. மொஹம்மத் ஆசிஃப், உமர் குல் இருவரும் மிக அழகாக ஸ்விங், சீம் பந்து வீசினர். ரன்களும் கிடைக்கவில்லை, ஆசிஃப் வீசிய ஒரு ஓவரில் கம்பீர், பதான் இருவரும் அடுத்தடுத்து அவுட்டானார்கள். பதானை மூன்றாவது இடத்தில் அனுப்பியிருக்கக் கூடாது என்றே நினைக்கிறேன். பந்து எக்கச்சக்கமாக ஸ்விங் ஆகும் நேரத்தில் திராவிட் விளையாட வந்திருக்கவேண்டும். நல்லவேளையாக தோனியை அனுப்பாமல் நான்காவதாக ஆட வந்தார் திராவிட். அடுத்த பத்து ஓவர்கள் டெண்டுல்கர், திராவிட் இருவரும் மிகவும் கஷ்டப்பட்டே விளையாடினார். டெண்டுல்கர் இழந்த தன் டச்சை மீண்டும் பெற்றதுபோல விளையாடினார். பந்தை மிகச்சரியாகக் கணிப்பதில் திராவிடைவிடச் சிறப்பாக விளையாடினார் டெண்டுல்கர். இருவருமே திணறினாலும் விக்கெட்டை இழக்காமல் இருந்தனர். 15 ஓவர்கள் தாண்டிவிட்டால் பார்த்துக் கொள்ளலாம்தானே?

அதுதான் நடந்தது. டெண்டுல்கர் கொஞ்சம் கொஞ்சமாக அடித்தாட ஆரம்பித்தார். திராவிடும் தன் ஓட்டுக்குள் இருந்து வெளியே வர ஆரம்பித்தார். ஆசீஃப், குல் இருவரும் பந்துவீச்சிலிருந்து எடுக்கப்பட்டதும் ஒரு காரணம். நவீத்-உல்-ஹஸன், யாசிர் அரஃபாத் போன்றவர்கள் சுமாராகத்தான் வீசினர். பந்தும் ஸ்விங் ஆவது நின்றுவிட்டது. இந்த நேரத்தில் எதிர்பாராத ரன் அவுட் காரணமாக திராவிட் வெளியே வந்தார். 19வது ஓவரில் இந்தியா 84/3. யுவராஜ் உள்ளே வந்தது முதற்கொண்டே மிக அற்புதமாக விளையாடினார். ரன்கள் கிடுகிடுவென உயர்ந்தன. இந்தியாவின் ரன் ரேட் 4.5 என இருந்தது, வேகமாக 5.5ஐ நோக்கிச் சென்றது. டெண்டுல்கர் தன் சதத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தார். இப்படியே போனால் 45 ஓவர்களுக்குள் இந்தியா ஜெயித்துவிடும் என்ற நிலை.

ஆனால் ஆட்டம் மீண்டும் மாறியது. அடுத்தடுத்த ஓவர்களில் டெண்டுல்கர் 95-ல் அப்துல் ரசாக்கிடமும் காயிஃப் 0 ரன்களில் உமர் குல்லிடமும் ஆட்டத்தை இழந்தனர். திடீரென இந்தியா 189/3 -> 190/5 என்றானது. இப்பொழுது தோனியும் ரெய்னாவும்தான் பாக்கி முழுநேர மட்டையாளர்கள். இந்தியாவுக்கோ ஓவருக்கு 6.53 ரன்கள் தேவை. தோனி உள்ளே வந்ததும் இரண்டு ஓவர்கள் பொறுமையாக விளையாடினார். அதன்பின் கண்ணைப் பறிக்கும் தடாலடி விளையாட்டுதான். இதைக் கவனித்த யுவராஜ் தன் ஸ்டைலை மாற்றிக்கொண்டு தோனிக்கு ஆதரவாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ரன்களைப் பெற்றார்.

கொஞ்சம் அளவு குறைந்தாலும் தோனி பந்தை புல், ஹூக் செய்தார். ஸ்கொயர் லெக் பகுதியில் மட்டும் தோனிக்கு ஐந்து பவுண்டரிகள் கிடைத்தன. அதில் ஒரே ஓவரில் அடுத்தடுத்து அடித்த இரண்டு புல் ஷாட்கள். அளவுக்கு அதிகமாக வந்தால் கவர் திசையில் பறந்தன பவுண்டரிகள். எல்லைக்கோட்டுக்கு அருகே நிற்கும் தடுப்பாளரால்கூடப் பந்தை நெருங்கமுடியாத அளவுக்கு பவர்ஃபுல் அடிகள்.

46 பந்துகளில் 72 ரன்கள், 13 நான்குகள். ரிஸ்க் எடுத்து விளையாடினார் என்றாலும் எல்லாமே அற்புதமான கிரிக்கெட் ஷாட்கள். யுவராஜ் தன் விக்கெட்டை இழக்காமல் பார்த்துக்கொண்டார். அவ்வளவே.

இந்தியாவின் வெற்றிக்கு நான்கு பேருடைய பேட்டிங் காரணம். டெண்டுல்கர் மிகவும் கடினமான சூழ்நிலையில் அடித்த 95 ரன்கள் மிக முக்கியமானவை. திராவிடின் இன்னிங்ஸும் முக்கியமானது. யுவராஜின் இன்னிங்ஸ் மிகச்சரியான கலவை விகிதத்தில் இருந்தது. ஆனால் தோனியின் இன்னிங்ஸ் வேறோர் உலகத்தைச் சார்ந்தது.

யுவராஜின் மிகச்சிறந்த ஃபார்ம், டெண்டுல்கர் தன்னை மீட்டெடுத்திருப்பது, தோனி/பதானின் பிரமாதமான பேட்டிங் - இவைதான் இந்தியாவுக்குப் புதிதாகக் கிடைத்திருக்கும் பலங்கள். காயிஃப் இப்படி வழிதெரியாமல் திண்டாடுவது இந்தியாவின் பலவீனங்களில் ஒன்று. பந்துவீச்சைப் பொருத்தவரை இந்தியாவுக்கு மிக நல்ல எதிர்காலம் உள்ளது. ஆர்.பி.சிங், ஸ்ரீசாந்த் ஆகியோர் நன்றாக வீசுகின்றனர். இன்னமும் சிறிது அனுபவம் தேவை.

இந்தியா ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது சிறந்த அணியாக வருவதற்கு மிக நல்ல வாய்ப்புகள் உள்ளன.

(சேவாக் இந்தத் தொடரில் இனி விளையாட மாட்டார். தோளில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு குணமாக இன்னமும் இரண்டு வாரங்கள் ஆகுமாம்.)

ஸ்கோர்கார்ட்

1 Comments:

Blogger Unknown said...

மனதுக்கு நிறைவு தந்த வெற்றி.

என்ன தான் தோனியின் ஆட்டம் சிறப்பாக இருந்தாலும் அவருக்கு ஆட்ட நாயகன் விருது அளித்தது சரியா? யுவராஜ் அல்லது சச்சினின் ஆட்டத்தை விடவா அவரது ஆட்டம் இந்திய வெற்றிக்கு வழி வகுத்தது? ஒரு வியப்புக்குரிய விஷயம்.

ஒருவேளை, முஷ்ரப் தோனியின் 'முடி'யைப்பார்த்து மயங்கி அவருக்கே கொடுக்க வலியுறுத்தினாரா? ;)

2:20 AM  

Post a Comment

<< Home