Thursday, February 16, 2006

முல்டானில் வெற்றி இந்தியாவுக்கு

முல்டான் ஒருநாள் போட்டியை ஜெயித்து இந்தியா போட்டித்தொடரை வென்றுள்ளது. இன்னமும் ஓர் ஒருநாள் போட்டி பாக்கி இருக்கையில் இந்தியா 3-1 என்ற கணக்கில் அசைக்கமுடியாத முன்னிலையில் உள்ளது.

கடந்த இரு ஆட்டங்களில் மட்டையாளர்கள் உதவியால் ஜெயித்த இந்தியாவை இன்று முழுக்க முழுக்க பந்துவீச்சாளர்களும் பந்துத் தடுப்பாளர்களும் இணைந்து வெற்றிப்பாதைக்குக் கொண்டுசென்றனர்.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா நான்கு கேட்ச்களை விட்டனர். ஆனால் இன்று சாதாரணமாகப் பிடிக்கக் கஷ்டப்படும் கேட்ச்களைக்கூட எளிதாகப் பிடித்தனர். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக அமைந்தது இந்தியாவின் வேலையைச் சுலபமாக்கியது. அதற்குமேல் அதிர்ஷ்டமும் திராவிட் பக்கம். டாஸில் வென்ற திராவிட் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார்.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் தடதடவென நான்கு விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் இன்று எக்காரணம் கொண்டும் ஒரு விக்கெட்டைக்கூட இழக்கக் கூடாது என்று தனக்குள்ளாகச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். அதனால் எந்தவிதமான அபாயம் தரக்கூடிய ஷாட்களையும் தவிர்த்து மிகவும் கவனமாக ஆட ஆரம்பித்தனர். ஆறாவது ஓவரில்தான் முதல் நான்கு ரன்கள் கிடைத்தன. ஆறு ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் 14/0 என்ற எண்ணிக்கையில் இருந்தது. இந்த அளவுக்கு மெதுவாக பாகிஸ்தான் விளையாடும் என்று இந்தியா நினைத்துப் பார்த்திருக்கவே முடியாது.

அதனால் விக்கெட்டுகள் விழாது என்று எந்த நிச்சயமும் இல்லை!

ஏழாவது ஓவரில் கம்ரான் அக்மல் அளவு குறைந்து வந்த பந்தை வெட்டி ஆடினார். நான்கு ரன்களுக்குப் பந்து சென்றிருக்கவேண்டும். ஆனால் ஷார்ட் பாயிண்டில் நின்றுகொண்டிருந்த சுரேஷ் ரெய்னா திடீரென பந்தின் பாதையில் வந்தார்; கேட்சைப் பிடித்தார். 15/1. 12வது ஓவரில் ஸ்ரீசாந்த் பந்துவீச்சில் இடதுகை ஆட்டக்காரரான சல்மான் பட் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்த பந்தை முதல் ஸ்லிப்பைத் தாண்டித் தட்டிவிட்டார். ஆனால் திராவிட் தனது இடதுகைப் பக்கமாகப் பாய்ந்து விழுந்து இரண்டாவது ஸ்லிப் இருக்கும் இடம் வரை சென்று மிக அழகாக இந்த கேட்சைப் பிடித்தார். 27/2.

ஆனால் இனி நடக்கப்போவது இதைவிடவும் மோசமாக இருக்கும் என்று யாருமே நினைத்துப் பார்த்திருக்க முடியாது. 13வது ஓவரை பதானுக்கு பதிலாக வீசவந்தவர் புதியவர் ஆர்.பி.சிங். இந்தப் போட்டித் தொடரில் இந்தியா மிகவும் திண்டாடியது ஷோயப் மாலிக்கின் விக்கெட்டைப் பெறுவதில்தான். ஆர்.பி.சிங் வீசிய அளவு குறைந்த பவுன்சரை சரியாக விளையாடாத மாலிக் ஃபார்வர்ட் ஷார்ட் லெக் அருகில் மேலெழும்புமாறு ஒரு கேட்சைக் கொடுத்தார். விக்கெட் கீப்பர் தோனியும் ஷார்ட் லெக்கில் நின்ற பதானும் கேட்சைப் பிடிக்கப் பாய்ந்தனர். இருவரும் பந்தை நெருங்கியிருக்க முடியாது என்றுதான் அனைவரும் நினைத்தோம். ஆனால் எப்படியோ ஓடிவந்து வழுக்கி விழுந்து தரைக்கு ஓர் இஞ்ச் மேலாக பதான் அந்தக் கேட்சைப் பிடித்துவிட்டார்! 29/3. அடுத்த பந்து மிடில் ஸ்டம்பில் விழுந்து நேராகி யூனுஸ் கான் கால்காப்பில் பட்டது. இதைவிட எளிதான எல்.பி.டபிள்யூ எதுவும் இருந்திருக்க முடியாது. 29/4! ஹாட்-ட்ரிக் கிடைக்கவில்லை.

அடுத்த சில ஓவர்களில் மொஹம்மத் யூசுஃபும் இன்ஸமாம்-உல்-ஹக்கும் ஜோடி சேர்ந்து மிக முக்கியமான சில ரன்களைச் சேர்த்தனர். மிகவும் மோசமான நிலையில் பாகிஸ்தான் இருந்தாலும் கிட்டத்தட்ட பந்துக்கு ஒரு ரன் வீதம் வந்தவண்ணம் இருந்தது. ஆர்.பி.சிங் எக்கச்சக்கமான வைட் பந்துகளை வீசினார். ஸ்ரீசாந்துக்கு பதில் பந்துவீச்சுக்கு வந்த அகர்கர் அவ்வளவு நன்றாக வீசவில்லை. நிறைய ரன்களைக் கொடுத்தார். டெண்டுல்கர் பந்துவீச்சுக்குக் கொண்டுவரப்பட்டார். இதற்குள்ளாக இந்த ஜோடி 68 ரன்களைச் சேர்த்திருந்தது. அப்பொழுது அகர்கர் வீசிய ஓர் அவுட்ஸ்விங்கரில் யூசுஃப் மட்டையின் விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப்பை நோக்கிப் பந்து பறந்தது. முதல் ஸ்லிப் வரை சென்றிருக்காது. கீழே விழுந்துவிடும். அப்பொழுது தோனி தன் வலதுபக்கம் தாவி, பந்தை சற்றே மேல்நோக்கித் தட்டிவிட்டு, அதனை தன் இரண்டாம் முயற்சியில் பிடித்தார். இதுவும் எளிதில் கையில் மாட்டாத கேட்ச். இன்று இந்தியா எந்தத் தவறுமே செய்யாது என்பதுபோலத் தோன்றியது. 97/5.

பாகிஸ்தான் சூப்பர் சப் இம்ரான் ஃபர்ஹத்தை பந்துவீச்சாளர் யாசிர் அரஃபாத்துக்குப் பதில் கொண்டுவந்தனர். ஆனால் அவரும் நிறைய நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. ஆர்.பி.சிங் வீசிய பந்தை சரியான இடத்தில் நிற்காமல் புல் செய்தார். பந்து மிட் ஆனில் நின்ற ரெய்னாவின் கையில் எளிதான கேட்சாக விழுந்தது. 124/6. நான்கு பந்துகள் கழித்து ஆர்.பி.சிங் அப்துல் ரசாக்கைத் தவறு செய்ய வைத்து தோனி மூலம் கேட்ச் பிடித்தார். 126/7.

இனி பாகிஸ்தான் 50 ஓவர்கள் வரை இருந்து கிடைக்கும் ரன்களைப் பெற்று இந்தியாவை ஆல் அவுட் செய்தாக வேண்டும் என்ற நிலை. ஆனால் அதற்கு இன்ஸமாம் கடைசி வரையில் நின்றாக வேண்டும். ஆனால் இன்ஸமாமின் நம்பர் டெண்டுல்கர் கையில். டெண்டுல்கர் கையில் இன்று பந்து விளையாடியது. அவுட்ஸ்விங்கர், இன்ஸ்விங்கர், கட்டர்கள் என்று எதையும் வீசினார். நடுவில் திடீரென ஒரு டாப் ஸ்பின்னர். தடுமாறினர் பாகிஸ்தான் மட்டையாளர்கள். ஆஃப் ஸ்டம்பில் விழுந்து சற்றே உள்ளே வந்த சாதாரணமான பந்தில் இன்ஸமாம் எல்.பி.டபிள்யூ ஆனார். 131/8.

வால் சற்றே ஆடியது. ரன்கள் நிறைய வருவதுபோல இருந்ததால் திராவிட் பதானைக் கொண்டுவந்தார். பதான் தன் அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளைப் பெற்றார். முதலில் மொஹம்மத் சாமி பதானின் பவுன்சர் ஒன்றை லாங் லெக் திசையில் ஹூக் செய்து அகர்கர் கையில் எளிதான கேட்ச் ஒன்றைக் கொடுத்தார். 147/9. அடுத்து மொஹம்மத் ஆசிஃப் தோனியிடம் ஒரு கேட்சைக் கொடுத்தார். 41.5 ஓவர்களில் பாகிஸ்தான் 161 ஆல் அவுட்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தியா பேட்டிங் செய்ய வந்தது. நின்று ஆடினால் ரன்களை எளிதாகப் பெறலாம். ஆனால் மிக நன்றாகப் பந்துவீசிய காரணத்தால் டெண்டுல்கர் ரன்கள் ஏதும் பெறாமலேயே மொஹம்மத் சாமியின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். 5/1. கம்பீர் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். மிகவும் ஆக்ரோஷமாக ஐந்து பவுண்டரிகளைப் பெற்றார். அதில் மூன்று ஒரே ஒவரில் மொஹம்மத் சாமியின் பந்துவீச்சில். ஆனால் அதே ஓவரில் தொடர்ந்து மற்றுமொரு புல் ஷாட் ஆடப்போய் பந்தை மேல்நோக்கி புஸ்வானம் போல் அடிக்க, சாமியே ஓடிச்சென்று கேட்ச் பிடித்தார். இந்தியா 29/2.

இந்தியாவின் கதையும் கந்தலாகியிருக்கும். ஆனால் திராவிடும் யுவராஜும் மிகப் பொறுமையாக அதே சமயம் ஓவருக்கு கிட்டத்தட்ட ஐந்து ரன்கள் வீதமும் ரன்கள் பெற்றனர். வெற்றிக்கு அருகில் வரும்போது மீண்டும் தடங்கள். முதலில் யுவராஜ் (37) நவீத்-உல்-ஹசன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். 114/3. அடுத்த ஓவரிலேயே காயிஃப் ரன்கள் ஏதும் பெறாமல் ஸ்லிப்பில் அப்துல் ரசாக் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 115/4. ஆக இந்தப் போட்டித் தொடரில் காயிஃப் இதுவரை உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை. இப்படியே போனால் காயிஃப் இடம் கேள்விக்குள்ளாகும்.

திராவிட் கடைசிவரை நின்றிருக்க வேண்டும். ஆனால் ஒரு ஃபுல் டாஸ் பந்தை ஃப்ளிக் செய்யப்போய் எல்.பி.டபிள்யூ ஆனார். அவர் எடுத்த 59 ரன்கள் மிக முக்கியமானவை. உள்ளே வந்தவர் தோனி. இவர் சுரேஷ் ரெய்னாவுடன் சேர்ந்து மிச்சம் மீதி ரன்களைப் பெற வேண்டும். ஆனால் அவற்றைப் பெற்றவர் ரெய்னா! ஆறு நான்குகளுடன் ரெய்னா 34 பந்துகளில் 35* ரன்களைப் பெற்றார். தோனி 2 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்தியாவுக்கு ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

ஆர்.பி.சிங் ஆட்ட நாயகர். ஆனால் அவரது பந்துவீச்சில் இன்னமும் நிறைய முன்னேற்றம் ஏற்படவேண்டும்.

பதான், ஸ்ரீசந்த் இருவரும் ஆங்காங்கே நன்றாக வீசினாலும் பல இடங்களில் மோசமாக வீசினர். அகர்கரும் அப்படியே.

இந்த வெற்றி முழுக்க முழுக்க பந்துவீச்சாளர்கள் மூலம் கிடைத்தது என்றாலும் பயிற்சியாளர் சாப்பல் நம் பந்துவீச்சாளர்களை இன்னமும் அதிகம் வேலை வாங்க வேண்டும்.

1 Comments:

Anonymous Anonymous said...

தினம் வந்து பார்க்கிறேன்.
பாகிஸ்தான் தொடர் பற்றி ஒரு சுவாரசிய இடுகை - Extract-தருவீர்களென்று.
A.J

2:01 AM  

Post a Comment

<< Home