Monday, March 13, 2006

இந்தியா ஜெயித்தது

மிகவும் கஷ்டப்பட்டு விளையாடிக் கிடைத்த வெற்றி இது. ஏதோ 9 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று ஆகா ஓகோ என்று சொல்லிவிட முடியாது. இந்த ஆட்டத்தில் சேவாக், தோனி, டெண்டுல்கர் மூவரும் கஷ்டப்பட்டுத்தான் விளையாடினார்கள். இரண்டாம் இன்னிங்ஸில் சேவாக் 76 அடித்தாலும் தடுமாறித்தாண் விளையாடினார். நாம் எப்பொழுதும் நம்பிக்கை வைக்கும் திராவிட்கூட நிறையவே கஷ்டப்பட்டார்.

பந்துவீச்சைப் பொருத்தமட்டில் கும்ப்ளே இந்த ஆட்டத்தில் மிக அற்புதமாகப் பந்துவீசினார். முதல் இன்னிங்ஸில் எந்த நேரமும் எந்தப் பந்திலும் கும்ப்ளே விக்கெட்டைப் பெறுவார் என்று தோன்றியது. ஹர்பஜன் நன்றாகத்தான் வீசினார் என்றாலும் விக்கெட் பெறுவதில் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. பியுஷ் ஷாவ்லா சோதனை இந்த மேட்சுடன் முடிந்துபோகும் - இப்பொழுதைக்கு. அடுத்தமுறை இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் நடக்கும்வரை - அதற்குச் சில மாதங்கள் ஆகும் - அவர் விளையாடுவது சாத்தியமில்லை.

அடுத்த ஆட்டத்தில் காயிஃப் சாவ்லாவுக்கு பதில் உள்ளே வரவேண்டும். வேறு மாற்றங்கள் தேவையில்லை. அடுத்த ஆட்டம் மும்பையில் ஸ்பின்னுக்கு ஏதுவான ஆடுகளத்தில்தான் நடைபெறுகிறது. ஆனாலும் இரண்டு ஸ்பின்னர்கள் போதும்.

காலையில் எட்டு விக்கெட்டுகள் விழுந்ததும் ஹார்மிசன் ஃபிளிண்டாஃபுக்கு நல்ல ஜோடியாகக் கிடைத்தார். இருவரும் சேர்ந்து இந்தியாவின் வெற்றியைத் தடுத்துவிடுவார்கள் போலிருந்தது. ஆனால் அடுத்தடுத்த ஓவர்களில் இருவருமே அவுட்டாயினர். முதலில் தோனி கும்ப்ளே பந்தில் ஹார்மிசனை மிக அழகாக, கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்தார். அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஃபிளிண்டாஃப் ஸ்வீப் செய்து ஃபைன் லெக்கில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இந்தியா வெற்றிபெற 144 ரன்கள் தேவை என்று இருந்தது. உணவு இடைவேளையின்போது இந்தியா 28/0 என்று இருந்தது. இடைவேளைக்குப் பின்னர் ஜாஃபர் அவுட்டானார். திராவிட் உள்ளே வந்தார். திராவிட், சேவாக் இருவருமே நிறையத் தவறுகளைச் செய்தனர், ஆனால் அதிர்ஷ்டவசமாக அவுட்டாகவில்லை. திராவிட் கொடுத்த ஒரு ஸ்லிப் கேட்சை ஃபீல்டர் பிடிக்காது கோட்டை விட்டார்.

தேநீர் இடைவேளையை நெருங்கும்போது திடீரென சேவாக் அதிரடியாக ரன்களைப் பெற ஆரம்பித்தார். அதுவும் ஒருவகையில் நல்லதற்குத்தான். ஜெயிக்க ஆறு ரன்கள் தேவை என்றபோது சிறிய மழைத்தூறல்கள் விழுந்தன. இங்கிலாந்து ஃபீல்டர்கள் இதுதான் சாக்கு என்று நடுவர்களைப் பார்த்தனர். ஆனால் நடுவர்கள் தொடர்ந்து ஆட்டத்தை நடத்தினார்கள். திராவிடும் ஃபிளிண்டாஃபும் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். அடுத்த ஓவரில் இரண்டாவது பந்தில் திராவிட் அதிரடியாக ஒரு நான்கை அடித்தார். அடுத்த இரண்டு பந்துகளிலும் ரன்கள் கிடைக்கவில்லை. ஆனால் ஐந்தாவது பந்தில் தட்டிவிட்டு ஒரு ரன் பெற்றார். அரங்கமே அதிர்ந்தது. கடைசிப் பந்தை சேவாக் அரங்கை விட்டு வெளியே கிளப்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சேவாக் பந்தை மிட் ஆஃபுக்குத் தட்டிவிட்டு வேகமாக ஒரு ரன் பெற்றார்.

தொடர்ந்து மழை ஏதும் பெய்யவில்லை. ஆனாலும் இந்தியா ஓவருக்கு 4.36 ரன்கள் என்ற வீதத்தில் அடிக்காதிருந்திருந்தால் ஒருவேளை மழை பெய்து ஆட்டம் டிரா ஆனாலும் ஆயிருக்கும்.

-*-

ஃபிளிண்டாஃப் இந்த ஆட்டத்தில் செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்துவிட்டார். இரண்டு இன்னிங்ஸிலும் அரை சதங்கள். முதல் இன்னிங்ஸில் அதிகமாக 4 விக்கெட்டுகள். ஆனாலும் சரியான துணை இல்லாமல் இங்கிலாந்து தடுமாறியது. ஹோக்கார்டுக்கு விக்கெட்டுகள் அவ்வளவாகக் கிடைக்கவில்லை. சரியான ஸ்பின் பந்துவீச்சாளர்கள் இல்லை.

முனாஃப் படேல் பற்றித் தனியாகக் குறிப்பிடவேண்டும். இந்த ஆட்டத்தை வெல்ல அவரது ஏழு விக்கெட்டுகளும் மிகவும் துணைபுரிந்தன. ரிவர்ஸ் இன்ஸ்விங்கிங் யார்க்கர்கள் இவரது மிக முக்கியமான ஆயுதங்கள். அவற்றை மிக நன்றாகப் பயன்படுத்தினார்.

பதானின் பேட்டிங், திராவிடின் பேட்டிங், ஹர்பஜன் - கும்ப்ளே பேட்டிங் ஆகிய இவை மூன்றும் இந்தியாவுக்குப் பெரிதும் துணைபுரிந்தன. இந்தியா லீட் எடுத்திருக்காவிட்டால் இந்த டெஸ்டை ஜெயித்திருக்காது. சைக்கலாஜிகலாக அப்பொழுது கிடைத்த பலம்தான் இந்திய வெற்றிக்குத் வழிகாட்டியது.

சாம்பியன் கும்ப்ளே ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டது நியாயமான தேர்வு.

2 Comments:

Anonymous Anonymous said...

தெள்ளிய நடை. அருமையான வர்ணனை.
கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பத்ரி ஒரு வலையுலக அப்துல்ஜப்பார்.

இரண்டாம் இன்னிங்ஸில் பயமுறுத்திய ஃபிளிண்டாஃபை பிடித்ததும் இங்கிலாந்தின் வாலை சுருட்டியதிலும் புதியவர் முனாஃப் படேலின் பணி பாராட்டத்தக்கது.
A.J

3:59 AM  
Blogger பழூர் கார்த்தி said...

// முனாஃப் படேல் பற்றித் தனியாகக் குறிப்பிடவேண்டும். இந்த ஆட்டத்தை வெல்ல அவரது ஏழு விக்கெட்டுகளும் மிகவும் துணைபுரிந்தன. //

மிகவும் உண்மை.. முனாஃப் முன்னனி பந்துவீச்சாளராக வர வாய்ப்புகள் நிறையவே உள்ளன.. அடுத்த டெஸ்ட்டில் ஆர்.பி.சிங் சாவ்லாவுக்கு பதிலாக வரலாம்....

5:03 AM  

Post a Comment

<< Home