Wednesday, February 22, 2006

கராச்சி கடைசி ஒருநாள் போட்டி

ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ஜெயிப்பது மிகச்சிறந்த அணிகளுக்கு மட்டுமே சாத்தியமானது. 1980களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நினைத்த மாத்திரத்தில் ஜெயித்தது. கடந்த சில வருடங்களில் ஆஸ்திரேலிய அணி எப்பொழுதோ அரிதாகத்தான் தோற்கிறது. இலங்கை அணி உலகக்கோப்பை வெற்றியைத் தொடர்ந்து பல ஆட்டங்களில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது வெற்றிபெறும் சூத்திரத்தை சரியாகப் புரிந்து கொண்டிருந்தது.

இப்பொழுது இந்திய அணியும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வகையில் தொடர்ச்சியாக இரண்டாவது முறை பேட்டிங் செய்யும்போது வெற்றி பெற்று வருகிறது. இதுவரையில் chase செய்யும்போது கடந்த 13 முறைகள் தொடர்ச்சியாக இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி நியூசிலாந்து, ஜிம்பாப்வே, இலங்கை, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராகக் கிடைத்துள்ளது. இதுபோன்ற தொடர் வெற்றி இதற்குமுன்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு மட்டும்தான் கிடைத்துள்ளது.

அது மட்டுமல்ல; கடந்த மூன்று ஒரு நாள் போட்டித் தொடரில் இந்தியா தன்னைவிட ஐசிசி ரேட்டிங்கில் அதிகப் புள்ளிகளை உடைய மூன்று அணிகளுடன்தான் விளையாடியது. இலங்கைக்கு எதிராக 6-1; தென்னாப்பிரிக்காவுடன் 2-2; பாகிஸ்தானுடன் 4-1 என்ற கணக்கில் வெற்றி அல்லது டிரா செய்திருக்கிறது. இதனால் இன்று இந்தியா ஐசிசி ரேட்டிங்கில் நான்காவது இடத்தில் உள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன்னர் இந்தியா ஏழாவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது! இப்பொழுதைக்கு இந்தியாவுக்கு மேல் இருக்கும் நாடுகள் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா.

கராச்சி ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்னரே இந்தியா 3-1 என்ற நிலையில் தொடரை வென்றுவிட்டது. டெண்டுல்கர், பதான் இருவரும் ஓய்வெடுத்துக்கொண்டனர். சேவாக் ஏற்கெனவே இந்தியா திரும்பியிருந்தார். ஹர்பஜன் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. கடைசி ஆட்டத்தில் ரமேஷ் பவாருக்கு விளையாட வாய்ப்பளிக்கப்பட்டது.

இந்தியா டாஸில் வென்றதும் முதலில் பவுலிங் செய்யத் தீர்மானித்தது. இதுவரையில் பதானும் ஸ்ரீசாந்தும் பந்துவீச்சைத் தொடங்கினார்கள். ஆனால் அன்று பதான் விளையாடவில்லை; ஜாகீர் கானும் அகர்கரும் பந்துவீச்சைத் தொடங்கினார்கள். இருவருமே எதிர்பார்த்த அளவு சரியாக வீசவில்லை. இருவருமே பொதுவாக பழைய பந்துடன்தான் பந்துவீசுபவர்கள். புதுப்பந்தின் ஸ்விங்கை சரியாகக் கட்டுபடுத்தத் தெரியாதவர்கள். ஆனால் ஏன் இவர்களை திராவிட் முதலில் பந்துவீச அழைக்கிறார் என்று வர்ணனையாளர்கள் சந்தேகப்பட்டனர். ஆனால் திராவிட் இவர்களை அழைத்ததன் காரணம் இவர்களைப் பரிசோதிக்கத்தான்.

எப்படி பேட்டிங்கில் வெவ்வேறு இடத்தில் ஒரே ஆட்டக்காரர் விளையாடுகிறார் என்று பரிசோதிப்பதைப் போல ஒவ்வொரு வேகப்பந்து வீச்சாளரும் எவ்வாறு பந்தின் நிலையைப் பொருத்து தங்களது ஆட்டத்தை மாற்றியமைக்கிறார்கள் என்று கணிப்பது குறிக்கோள். அப்படியானால் சோதனையில் ஜாகீர் கான், அகர்கர் தோல்வியுற்றார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஸ்ரீசாந்த் முதல் மாறுதலாகப் பந்துவீச வந்தார். பொதுவாக புதுப்பந்தில் நன்றாக ஸ்விங் செய்பவர், எப்படி சற்றே பழைய - 10 ஓவர்கள் வீசப்பட்ட - பந்தைக் கையாள்வார் என்ற சந்தேகம் இருந்தது. பந்தை அவரால் அதிகம் ஸ்விங் செய்ய முடியாவிட்டாலும்கூட நீளத்தை மாற்றுவதன்மூலம் பாகிஸ்தான் மட்டையாளர்களை அதிகம் திணறச் செய்தார்.

அதுவரையில் விக்கெட் இழக்காமல் இருந்தது பாகிஸ்தான். ஆனால் ஸ்ரீசாந்த் திடீரென வீசிய அளவு குறைந்த பந்து தோள்பட்டை அளவுக்கு எகிறி வந்தது. அதனைச் சரியாகக் கணிக்காத இம்ரான் ஃபார்ஹத் பந்தை புல் செய்தார். பந்து மட்டையின் மேல்பக்கம் பட்டு எளிதானதொரு கேட்சாக மாறியது. அதை தானே பிடித்தார் ஸ்ரீசாந்த். தனது அடுத்த ஓவரிலேயே மற்றுமொரு எகிறும் பந்தை வீச, அதை கம்ரான் அக்மல் மேலெழும்பி அடிக்க ஃபைன் லெக்கில் ஆர்.பி.சிங் பிடித்தார். தன் மூன்றாவது ஓவரில் ஸ்ரீசாந்த் மிக அற்புதமான பந்து ஒன்றை வீசினார். கிரீஸின் முனையிலிருந்து வீசிய பந்து உள்நோக்கி வந்து தரையில் பட்டதும் நன்கு எழும்பி சற்றே வெளியே சென்றது. இதனைச் சரியாக எதிர்பார்க்காத ஷோயப் மாலிக் மட்டையை முன்னோக்கி நகர்த்த பந்து விளிம்பில் பட்டு கல்லி திசையில் சென்றது. அங்கு சுரேஷ் ரெய்னா நல்ல கேட்சைப் பிடித்தார். இப்படியாக ஸ்ரீசாந்த் தனது முதல் மூன்று ஓவர்களிலேயே பாகிஸ்தான் அணியை நிலைகுலையச் செய்துவிட்டார்.

இன்ஸமாம்-உல்-ஹக், மொஹம்மத் யூசுஃப் ஜோடி அணியின் எண்ணிக்கையை பலப்படுத்த வேண்டிய கட்டாயம். யூசுஃப் பொறுமையாக விளையாடினார். இன்ஸமாம் தனக்கே உரிய லாகவத்துடன் விளையாடினார். ஆனால் ஒரு நெடிய இன்னிங்ஸை விளையாடக்கூடிய நிலையில் இருவருமே இல்லை. ரமேஷ் பவார் பந்தில் லாங் ஆன் மேல் ஒரு சிக்ஸை அடித்த இன்ஸமாம் அடுத்த பந்தை ஸ்வீப் செய்யப்போனார். பந்து கால்காப்பில் பட, அவர் எல்.பி.டபிள்யூ என்று தீர்ப்பானது. யூசுஃபும் யூனிஸ் கானும் சேர்ந்து அணிக்கு மிக முக்கியமான ரன்களைப் பெற்றனர். ஓவருக்கு ஐந்து ரன்கள் என்ற கணக்கில் ரன்கள் வந்துகொண்டிருந்தது.

அடுத்த நடந்த ஆட்டத்தை இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் முன்னிலைக்கு வந்தனர். அகர்கர் வீசிய அருமையான அவுட்ஸ்விங்கரில் யூசுஃப் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்துல் ரசாக் அதிரடியாகச் சில ரன்களைப் பெற்றார் ஆனால் தொடர்ந்து நிலைக்காமல் ஆர்.பி.சிங்கின் பந்தை புல் செய்யப்போய் மிட்விக்கெட்டில் நின்ற திராவிடிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். யாசிர் அரஃபாத் ஜாகீர் கானின் பந்தில் பவுல்ட் ஆனார். உடனேயே மொஹம்மத் சாமியும் ஸ்ரீசாந்தின் ஃபுல் டாஸ் பந்தை கவர் திசையில் நின்ற காயிஃப் கையில் அடித்து அவுட்டானார்.

கடைசிக் கட்டம் யூனிஸ் கான். கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடியாக ரன்கள் பெற்று அணியின் எண்ணிக்கையை 286க்குக் கொண்டு சென்றார் யூனுஸ் கான். அதில் இரண்டு சிக்ஸ்கள் அடக்கம். கடைசிவரை ஆட்டமிழக்காமல் 79 பந்துகளில் 74 ரன்கள் பெற்றிருந்தார்.

286 நல்ல ஸ்கோர்தான். இந்தியா எப்படி இந்த எண்ணிக்கையைத் துரத்தும் என்பது முக்கியம். இந்தியாவுக்காக கவுதம் கம்பீர், ராகுல் திராவிட் இருவரும் களமிறங்கினர். கம்பீர் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து ரன் சேர்த்தாலும் திராவிட் மிகவும் சிரமப்பட்டார். முதல் பத்து ஓவர்களில் இந்தியா 42/0 என்ற எண்ணிக்கையில் இருந்தது. முதலில் பந்துவீசிய மொஹம்மத் ஆசீஃப் மிகவும் நன்றாகவே வீசினார். மொஹம்மத் சாமிதான் கொஞ்சம் ரன்களைக் கொடுத்தார். ஆனால் மாற்றுப் பந்துவீச்சாளர்களாக வந்த இஃப்திகார் அஞ்சும், யாசிர் அரஃபாத் இருவருமே மிக நன்றாக வீச ஆரம்பித்தனர். கம்பீர் அஞ்சுமின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். அடுத்து உள்ளே வந்தவர் யுவராஜ் சிங்.

திராவிட் மூன்று நான்கு வருடங்களுக்கு முன் ஒருநாள் போட்டிகளில் விளையாடியதுபோல விளையாடினார். இந்த அளவுக்கு அவர் கடைசி வருடத்தில் கஷ்டப்பட்டதில்லை. அடிக்கும் பந்துகள் நேராக தடுப்பாளர்களிடம் சென்றன. இடைவெளியைப் பயன்படுத்த முடியாமல் இருந்தார். விரும்பிய மாதிரியான ஷாட்களையும் அடிக்க முடியவில்லை. 23வது ஓவரில்தான் இந்தியா 100 ரன்களைத் தொட்டது. ஷோயப் மாலிக், அப்துல் ரசாக் இருவரும் பந்துவீச வந்ததும் ஓரளவுக்கு ரன்கள் கிடைக்க ஆரம்பித்தன. 30 ஓவர்களில் இந்தியா 141/1 என்ற ஸ்கோரில் இருந்தது. ஆனால் அடுத்த ஓவரிலேயே திராவிட் மொஹம்மத் சாமியின் மெதுவான பந்தில் மிட் ஆனில் பிடிகொடுத்து அவுட்டானார்.

ஒருவகையில் நல்லதுதான். அடுத்து காயிஃப், ரெய்னா ஆகியோருக்கு முன்னதாக தோனி விளையாட வந்தார். இந்தியாவின் பேட்டிங் அன்று மிகவும் பலவீனமாக இருந்தது. கொஞ்சம் நல்ல பவுலிங் இருந்திருந்தால் இந்தியாவின் நிலைமை மோசமாக ஆகியிருக்கும். தோனி உள்ளே வரும்போது இந்தியாவுக்கு 6 ரன்களுக்கு மேல் தேவைப்பட்டது.

தோனி ஏதோ நேர்முகத்தில் சொல்லியிருந்தாராம், "முதல் 15 பந்துகள் நான் அடித்து ஆடமாட்டேன். ஆனால் அதற்குப் பின்னர் அடிதடிதான்", என்று. அன்று அதைச் சரியாகவே செய்தார். முதல் 15 பந்துகள் அங்கும் இங்குமாகத் தட்டி ஓரிரு ரன்கள் பெற்றார். சரியாக 16வது பந்தில் ஒரு நான்கு. ஆனால் அதற்குப் பின்னரும்கூட இஷ்டத்துக்கு அடிக்கவில்லை. ஓவருக்கு 5 அல்லது 6 ரன்கள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால் தேவைப்படும் ரன்ரேட்டோ எகிறிக்கொண்டே சென்றது. 38வது ஓவர் முடியும்போது இந்தியாவின் ஸ்கோர் 190/2. Required Run Rate 8.08.

சாதாரணமாக இந்நிலையில் பழைய இந்திய அணியாக இருந்தால் நடுங்கிப்போயிருக்கும். யாராவது ஏதாவது தவறு செய்து பிரச்னையில் மாட்டியிருப்பார்கள். ஆனால் யுவராஜ் பயப்படவில்லை, அதிகமாக ரன்கள் பெற முயற்சி செய்யவும் இல்லை. எந்த நிலையிலும் தோனி அதிரடியாக ரன்கள் பெற்று ஆட்டத்தை ஜெயிப்பார் என்று யுவராஜுக்கு நம்பிக்கை. தான் ஏதாவது தவறு செய்து அவுட்டானால் யுவராஜ் எப்படியும் ஆட்டத்தை முடித்துக் கொடுப்பார் என்று தோனிக்கு நம்பிக்கை. மேலும் 44 ஓவர்கள் வரை அதிகப் பிரசங்கித் தனமாக எதையும் செய்யவேண்டாம் என்று கிரேக் சாப்பல் தோனியிடம் சொல்லியிருந்தாராம். எனவே பொறுமையாக இருவரும் ரன்களைச் சேர்த்தனர். ஆனால் 41வது ஓவரின் கடைசிப் பந்தை லாங் ஆஃபுகுக்கு அடித்து யுவராஜ் நான்கு ரன்களைப் பெற்றார். அதே சமயம் ஓடிவரும்போது கால் தொடையில் தசை இழுத்துப் பிடித்துக் கொண்டது. பிற்பாடு ஸ்கேன் செய்து பார்க்கும்போது அங்கு தசை கிழிந்தது தெரியவந்தது. இதனால் யுவராஜுக்கு ரன்னர் (கவுதம் கம்பீர்) தேவைப்பட்டது.

இதுவும்கூட தோனியை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. யுவராஜ் அப்பொழுது 82*, தோனி 30*. 40வது ஓவருக்குப் பிறகு இந்தியா ரன்கள் பெறும் வேகம் அதிகமானது. 40வது ஓவரில் 9, அடுத்த ஓவர்களில் முறையாக 8, 8, 12, 12, 14, 14 என்பதுடன் ஆட்டம் முடிவடைந்தது!

44வது ஓவரில் தனது மோசமான நிலையிலும் யுவராஜ் விடாது நின்று சதமடித்தார். 45வது ஓவரில் தொடங்கி அடுத்த இரண்டு ஓவர்களில் தோனலாட்டத்தை முடித்துவைத்தார். இந்த மூன்று ஓவர்களில் தோனி சந்தித்த பந்துகள்: 14; பெற்ற ரன்கள்: 35. இதில் நான்கு சிக்ஸ்கள், இரண்டு நான்குகள் அடங்கும். மொத்தத்தில் தோனி 56 பந்துகளில் 77 ரன்கள் பெற்றிருந்தார். யுவராஜ் 93 பந்துகளில் 107 ரன்கள் பெற்றிருந்தார்.

இந்த ஆட்டத்தில் தோனியின் அப்ரோச் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வெறும் தடாலடி அடிப்பவராக மட்டும் அவர் நடந்துகொள்ளவில்லை. சரியாகக் கணித்து எப்பொழுது எந்த மாதிரி விளையாடவேண்டும் என்று தீர்மானித்து அதற்கேற்றவாறு விளையாடினார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக இதுவரை தோனி மிகவும் நன்றாக விளையாடியுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நான்கு ஆட்டங்களில் அந்த அளவுக்கு சோபிக்கவில்லை. தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு, மார்பளவுக்கு எகிறிவரும் பந்துகள் ஆகியவை அவருக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்தது. அதனால் பிற நாடுகளுக்கு எதிராக இனிவரும் நாள்களில் தோனி எப்படி விளையாடுவார் என்று கவனிக்கவேண்டும். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தவிர பிற நாடுகளுக்கு எதிராக மிக எளிதாகவே ரன்கள் பெறுவார் என்று தோன்றுகிறது.

மற்றொருபுறம் யுவராஜ். இவரும் காயிஃபும் கிட்டத்தட்ட ஒரே நிலையில் இருந்தார்கள். ஆனால் கடந்த சில மாதங்களில் யுவராஜ், காயிஃபை விட்டு வெகுதூரம் முன்னேறிவிட்டார். இப்பொழுது விவிஎஸ் லக்ஷ்மணைவிட முன்னிலையில் இருக்கிறார் (டெஸ்ட் போட்டிகளையும் சேர்த்து) என்று சொல்லலாம். நிச்சயமாக இன்றைய நிலையில் இந்தியாவின் நான்காவது சிறந்த பேட்ஸ்மன் (திராவிட் - 1, சேவாக் - 2, டெண்டுல்கர் - 3) என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

பந்துவீச்சில் ஸ்ரீசாந்த், ஆர்.பி.சிங் இருவருமே மனத்துக்கு நிறைவாக விளையாடினார்கள். ஜாகீர் கான், அகர்கர் இருவருமே ஏமாற்றத்தைத் தந்தார்கள். அடுத்த டெஸ்ட் போட்டியில் பதானுக்கு ஜோடியாக இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் வேண்டும் என்றால் நான் ஆர்.பி.சிங்கைத் தேர்ந்தெடுப்பேன். ஆனால் திராவிட் ஸ்ரீசாந்தை விரும்புவார் என்று தோன்றுகிறது. மொத்தம் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை என்றால் பதான், ஆர்.பி.சிங், ஸ்ரீசாந்த். நிச்சயமாக அகர்கர் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டியவர் - டெஸ்ட் போட்டிகளைப் பொருத்தவரை. ஜாகீர் கான் நிறைய உழைக்க வேண்டும்.

ஸ்கோர்கார்ட்

2 Comments:

Blogger rajkumar said...

//அகர்கர் வீசிய அருமையான அவுட்ஸ்விங்கரில் யூசுஃப் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.//

தொடர்ச்சியாக மேட்ச் பார்த்தால் சிக்கல்தான். யூசுப் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானது முல்டானில். கராச்சியில் அல்ல.

அன்புடன்

ராஜ்குமார்.

3:32 AM  
Blogger Badri Seshadri said...

அட, ஆமாம்!

இது மிட்விக்கெட்டில் பிடிக்கப்பட்ட கேட்ச் அல்லவா?

5:32 AM  

Post a Comment

<< Home