Sunday, March 12, 2006

அதிரவைத்த ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா ஆட்டம்

இன்று ஓர் ஒருநாள் போட்டி. முதல் இரண்டு நிலைகளில் இருக்கும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா இரண்டும் விளையாடும் போட்டி. அவர்களுக்கிடையேயான ஒருநாள் போட்டித்தொடரில் ஐந்து ஆட்டங்களில் கடைசி ஆட்டம். இதுவரையில் 2-2 என்ற கணக்கில் இருந்தனர். யார் இன்றைய ஆட்டத்தை ஜெயித்தாலும் போட்டித்தொடரை வெல்வார்கள்.

முதலிரண்டு ஆட்டங்களையும் தென்னாப்பிரிக்கா வென்றிருந்தது. ஆஸ்திரேலியா அடுத்த இரண்டு ஆட்டங்களையும் ஜெயித்து சமத்தை எட்டியது.

இன்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா தொடக்கம் முதற்கொண்டே அதிரடியாக விளையாடியது. கில்கிறிஸ்ட், காடிச் இருவரும் எக்கச்சக்கமாக ரன்கள் சேர்த்தனர். ஆனால் கில்கிறிஸ்ட் அவுட்டானதும் உள்ளே வந்த பாண்டிங் ஆட்டத்தை ஐந்தாவது கியருக்கு எடுத்துச் சென்றார். உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவை அடித்துத் துவைத்தாரே, ஞாபகம் இருக்கிறதா? அதுமாதிரியான ஆட்டம். 105 பந்துகளில் 164 ரன்கள். 13x4, 9x6 !!! ஹஸ்ஸியும் பாண்டிங்கும் சேர்ந்து அணியை நானூறைத் தாண்ட வைத்தார்கள்! ஒருநாள் போட்டியில் 400க்கு அருகில் இதுவரை வந்தது இலங்கைதான் (398). அதுவும் 1996 உலகக்கோப்பை ஆட்டத்தில் கென்யாவுக்கு எதிராக. ஆனால் இன்று 400ஐத் தாண்டியும் ஆஸ்திரேலியா முன்னேறிச் சென்றது. சைமாண்ட்ஸ் உதவியுடன் அணியின் கடைசி எண்ணிக்கை 50 ஓவர்களில் 434/4.

இந்த நிலைக்குப் பிறகும் ஓரணியால் தோற்க முடியுமா? எதிரணியால் வெற்றி பெறத்தான் முடியுமா?

ஆனால் தென்னாப்பிரிக்காவின் விடாமுயற்சியில் அந்த அற்புதம் நிகழத்தான் செய்தது!

அணித்தலைவர் ஸ்மித், ஹெர்ஷல் கிப்ஸுடன் சேர்ந்து அபாரமாக விளையாடினார். 55 பந்துகளில் 90 ரன்கள் அடித்த நிலையில் ஸ்மித் இரண்டாவது விக்கெட்டாக அவுட்டானார். ஆனால் கிப்ஸ் தொடர்ந்து விளையாடினார். 111 பந்துகளில் 175 ரன்கள் பெற்றார். 21x4, 7x6 !

அப்படியும் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. விக்கெட் கீப்பர் பவுச்சர் ஒருவர்தான் பாக்கி. ஆனால் தென்னாப்பிரிக்காவின் ரன்ரேட் சரியான அளவிலேயே சென்று கொண்டிருந்தது. 47வது ஓவர் முடியும்போது மூன்று ஓவர்களில் 30 ரன்கள் தேவை. அடுத்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தன. இப்பொழுது தென்னாப்பிரிக்காவின் வெற்றி மிகவும் உறுதி என்றாயிற்று. அடுத்த ஓவரில் ஆறு ரன்களும் ஒரு விக்கெட்டும். இப்பொழுது கடைசி ஓவரில் 7 ரன்கள் அடித்தால் வெற்றி. ஆனால் கையில் இருப்பதோ 2 விக்கெட்டுகள்தான்.

பிரெட் லீ பந்துவீச வந்தார். முதல் பந்தை பவுச்சர் அற்புதமாக ஸ்டிரெயிட் டிரைவ் அடித்தார். நிச்சயம் நான்குதான்! ஆனால் இல்லை... லீ தன் காலால் பந்தைத் தடுத்தார், பந்து ஷூவில் பட்டு விக்கெட் கீப்பரை நோக்கிச் சென்றது. ஒரு ரன்தான். அடுத்தப் பந்தை ஆண்டிரூ ஹால் மிட் ஆன் திசையில் நின்ற ஃபீல்டரின் தலைமேல் அடித்தார். நான்கு ரன்கள்! லாங் ஆனில் யாருமே நிற்கவில்லை என்பவது திகைப்பை ஏற்படுத்தியது! இனி தென்னாப்பிரிக்காவின் வெற்றியை யாருமே தடுக்க்க முடியாது. தேவை இரண்டு ரன்கள். நான்கு பந்துகளில்.

ஆனால் ஹால் அடுத்த பந்திலேயே ஆட்டத்தை முடிக்க நினைத்து பந்தை அதே மிட் ஆனுக்கு மேல் அடித்தார். ஆனால் மட்டை சற்றே திரும்பியதால் பந்து நேராக மிட் ஆன் ஃபீல்டர் மைக்கேல் கிளார்க் கையில் கேட்சாக முடிந்தது! இப்பொழுதோ கையில் இருப்பது ஒரே விக்கெட்தான். அதுவும் மகாயா ந்டினி. ஆஸ்திரேலியா மீண்டும் வெற்றிவாய்ப்பை நுகர ஆரம்பித்தது.

ஆனால் அது நடக்கவில்லை. அடுத்த பந்தை ந்டினி தர்ட்மேனுக்குத் தட்டிவிட்டு ஒரு ரன் பெற்றார். இனி தென்னாப்பிரிக்கா தோற்க முடியாது. மேட்ச் டை ஆகுமா?

அடுத்த பந்தை பவுச்சர் லாங் ஆன் மேல் தூக்கி அடித்து நான்கைப் பெற்றார். தனது அரை சதத்தையும் தொட்டார். 43 பந்துகளில் பெற்ற மிக முக்கியமான அரை சதம் அது. ஒருவகையில் கிப்ஸின் 175 ரன்களுக்கு ஈடானது இந்த 50 ரன்கள்!

ஆக தென்னாப்பிரிக்கா யாருமே எதிர்பாராத வகையில் 434ஐத் தாண்டி மகா சாதனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. காலையில் ஆஸ்திரேலியா உருவாக்கிய சாதனை ஸ்கோர் அன்றே முடியடிக்கப்பட்டது!

11 Comments:

Blogger Srikanth Meenakshi said...

நம்பவே முடியவில்லை! பிரமிப்பாக இருக்கிறது...என்ன ஒரு மட்டையடி!! இரண்டு அணிகளின் பந்து வீச்சிற்கும் என்ன ஆயிற்று?

ஆட்டத்தை முழுமையாகப் பார்த்தவர்கள் வாழ்க்கையில் மறக்க மாட்டார்கள்...ஆஸ்திரேலியா ஆட்டத்தை மட்டும் பார்த்து விட்டுத் தொலைக்காட்சியை அணைத்த தென்னாப்பிரிக்க ரசிகர்கள் பாவம்!

8:57 AM  
Blogger பரஞ்சோதி said...

நம்பமுடியாத அற்புதமான ஆட்டம்.

என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியவில்லை. கிப்ஸ், ஸ்மித், பவுச்சர் ஆட்டம் மிக மிக அருமை.

இச்சாதனையை முறியடிக்க முடியாத சாதனை பட்டியலில் நிச்சயம் வைக்க வேண்டியது தான்.

9:09 AM  
Blogger நிலா said...

It was truly a magnificient match. South Africa deserves the win.

கடைசி பந்து வரையிலும் முடிவு எப்படியும் இருக்கலாம் என்ற நிலையில்தான் ஆட்டம் இருந்தது. கிரிக்கெட் வரலாற்றிலேயே பெஸ்ட் மேட்ச் இது என்றார்கள் வர்ணனையாளர்கள். உண்மைதான் - நான் பார்த்த வரையிலும்

9:17 AM  
Blogger தமிழ் சசி | Tamil SASI said...

ah....

this is amazing..

9:18 AM  
Blogger ஸ்ருசல் said...

what a match it was! fantastic one. i could not believe my eyes when i read the scoreboard as 400+/7. SA needed 34 runs from 19 balls. i was totally stunned. is this friendship match or a real ODI, i thought.

i almost fell from my seat in the 48th over. i can never forget in my life time. i wanted aus to lose the match - and finally it happened.

But ricky showed his generosity by declining the MoM that was supposed to be shared with Gibbs.

sorry no e-kalapai here.

9:28 AM  
Blogger rajkumar said...

இவ்வகையான அதிக ரன்குவிப்பு இந்திய துணைக்கண்ட ஆடுகளங்களில் மட்டும்தான் சாத்தியம் என நினைத்திருந்தேன். அந்த எண்ணம் தவிடுபொடியாகி விட்டது.

கிரிக்கெட்டின் புதிய சிகரங்கள் நேற்று எட்டப்பட்டன.

7:59 PM  
Blogger நந்தன் | Nandhan said...

That was a great match. One that will remembered for a long long time

8:19 PM  
Blogger சீனு said...

Unfortunately, I missed the match.

2:46 AM  
Blogger பழூர் கார்த்தி said...

சாதனைகள் முறியடிக்கப் படுவதற்காகவே... ஆனால் ஆஸ்த்ரேலியா நான்கே மணிநேரத்தில் தனது சாதனை (434 ரன்கள்) முறியடிக்கப்படும் என்று சத்தியமாக எதிர்பார்த்திருக்காது... தென்னாப்ரிக்காவுக்கு வாழ்த்துக்கள் !!!
அனேகமாக 2007 உலகக்கோப்பை தென்னாப்ரிக்காவுக்குதான் (இந்தியாவுக்கும் வாய்ப்புள்ளது :-)..
மெக்ராத், கில்லஸ்பி, பாண்டிங் இல்லாத ஆஸ்த்ரேலிய அணி பலத்தில் பாதியே...

5:24 AM  
Blogger VSK said...

Congrats Aus&SA!!

I read it only in the news.

I hope a DVD of this match will be out soon and when it does, pl. post the info. in these columns.

BTW, yesterday I wanted to post a reply here immediately after you had posted but I got an 'error' message. This is for your info.

5:52 AM  
Blogger பினாத்தல் சுரேஷ் said...

சொத்தை பிட்சோ, டென்னிஸ் பால் கிரிக்கெட்டோ.. கடைசி ஆறு ஓவர்கள், ஒவருக்கு ஒரு விக்கெட்டும், 12 ரன்னும் பார்ப்பவர் அழுத்தத்தை ஏற்றி.. நிச்சயம் மறக்க முடியாத மேட்ச்!

7:27 AM  

Post a Comment

<< Home