Tuesday, March 21, 2006

பரபரப்பான இறுதிநாள் ஆட்டம்...

மும்பை மைதானத்துக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இருக்காது போல இருக்கிறது. கடந்த முறை நடந்த ஆட்டத்தில் தொடர்ந்து டெஸ்ட் ஆட்டங்களில் வெற்றி பெற்று முழுபலத்துடன் வந்த ஆஸ்திரேலியாவிடம் ஏற்கனவே இரண்டு ஆட்டங்களில் தோல்வியுற்று, வெற்றி பெற்றிருக்க வேண்டிய சென்னை டெஸ்டின் இறுதி நாள் மழை குறுக்கிட்டதால் டிராவில் முடிய, இறுதி டெஸ்டில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றி பெறலாம் என்ற நிலையில் மும்பை ஆட்டத்தை எதிர் கொண்டது. மழையினால் முற்றிலுமாய் பாதிக்கப்பட்ட முதல் மூன்று நாள் ஆட்டத்திற்கு பிறகு நான்காம் நாள் ஆட்டத்தில் மொத்தம் 22 விக்கெட்டுகள் விழ இறுதி நாளில் 107 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் ஆட்டத்தை வெல்லலாம் என்ற மிக கடினமான இலக்குடன் இந்திய அணி கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொண்டது. அவ்வப்போது ஆச்சரியங்களை நிகழ்த்தும் இந்திய அணியினர் அன்றைய ஆட்டத்திலும் மிக அபாரமாக பந்து வீசி பேட்டிங்கில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை 93 ரன்களில் சுருட்டி சாதனை வெற்றி கொண்ட மைதானம் இது. இந்த முறை மிக எளிதாக இந்திய அணியின் சுழற் பந்து வீச்சில் சுருண்டு போகுமென எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி இதுவரை இரண்டாம் டெஸ்டின் சில செஷன்களை தவிர மிக அனைத்து நேரங்களிலும் மிகச்சிறப்பாக ஆடி வரும் நிலையில், இந்த டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யலாம் என்ற இறுதி நாளில் வெற்றி பெற 295 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

295 ரன்கள் , 9 விக்கெட்டுகள் கையில் , அணியின் மிக முக்கிய ஆட்டக்காரர்களான டெண்டுல்கரும், சேவாகும் பார்மில் இல்லாத சூழலில் காயம் வேறு, நிச்சயம் இந்தியாவுக்கு மிகவும் சோதனையான தருணம்தான். ஆனால் இந்திய அணிக்கு ஆறுதலளிக்க கூடிய ஒரே விஷயம் மைதானம் கடந்த முறை போல் பந்து வீச்சுக்கு மட்டுமே மிக சாதகமாய் இல்லாமல் பேட்டிங்கிற்கும் வாய்ப்பாக இருப்பது. நேற்றைய ஆட்டத்தை பொறுத்தமட்டில் இந்திய அணியின் மிக நேர்த்தியான பந்து வீச்சே இங்கிலாந்தை 191 ரன்களுக்கு இரண்டாம் இன்னிங்ஸில் ஆட்டமிழக்க செய்ய காரணமாக இருந்தது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்களும் இதுவரை நடந்த ஆட்டங்களில் இந்தியாவின் பேட்டிங்கின் மீது ஆதிக்கம் செலுத்தி வரும் சூழலில் நிச்சயம் இன்றைய ஆட்டம் ஒரு நாள் ஆட்டத்தை போல பரபரப்பாக இருக்கப்போவது நிஜம். பரபரப்பான முதல் செஷனை அதிக பட்ச சேதமில்லாமல் கடந்து மதிய உணவு இடைவேளை வரை அதிகபட்சம் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமிழந்து 80 முதல் 100 ரன்களை இந்தியா கடந்திருந்தால் டெண்டுல்கர், தோனி, சேவாக் துணையுடன் தொடரையும் கைப்பற்றலாம். தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறலாம்.

எனது கணிப்புபடி இந்தியாவுக்கும் இங்கிலாந்திற்கும் வெற்றி வாய்ப்பு 30 சதவிகிதம். டிராவாகும் வாய்ப்பு 40 சதவிகிதம் ( உபயம் : முதல் டெஸ்ட் டிராவிட் + வாசிம் ஜாபர் இன்னிங்க்ஸ்)

Cross posted in தண்டோரா

0 Comments:

Post a Comment

<< Home