Thursday, December 01, 2005

சச்சின் .... கிரிக்கெட்... இந்தியாடைம்ஸ்....

சச்சின் ஒருநாள் சர்வதேச போட்டிகளிலிருந்து விலக வேண்டும், டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற தலைப்பை ஆர்வமுடன் கிளிக்கினால் ஒரு நல்ல நகைச்சுவை கட்டுரை படித்த முழு திருப்தி கிடைத்ததென்னவோ உண்மை. பொதுவாக தனிநபர் குறித்த கட்டுரைகளில் புகழ் வேண்டுமென நினைத்து விட்டால் அளவுக்கு அதிகமாய் புகழ்வதும், குறை கூற வேண்டுமென தீர்மானித்து விட்டால் அந்த நபரின் சோதனையான காலகட்டங்களில் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளையும் பட்டியலிடுவதும் வழக்கமான பாணிதான் என்றாலும் , இந்த கட்டுரையில் அந்த நடைமுறை கூட முழுமையாக பின்பற்றபடவில்லை என்பது ஆச்சரியமான விஷயமே.

சச்சினின் சமீப கால ஆட்டங்களில் , அவரின் அணுகுமுறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருப்பதும் ,இலங்கை தொடரில் சில ஆட்டங்களை தவிர்த்து ஏனைய ஆட்டங்களில் ஒருவித தற்காப்பு ஆட்டமுறையில் ஆடமுற்பட்டு அதில் தோல்வியை கண்டதும் உண்மை. சச்சின் போன்ற குறிப்பிட்ட சில ஆட்டக்காரர்கள் எதிர் அணியை எளிதில் நிலைகொள்ள செய்யும் தன்மையுடயவர்கள் என்பதும், அவர்கள் களத்தில் இருந்து விரைவாக வெளியேறுவது என்பது அவர்கள் சார்ந்த அணியின் பலத்தை உடனே குறைத்துவிடும் என்பதும் சமீபத்தில் கூட தென்னாப்பிரிக்கா தொடருக்கு முன் ஸ்மித் அளித்த பேட்டியிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.


ஒரு பேட்ஸ்மேனின் பொற்காலமென்பது அவருக்கு எதிராக ஆடும் அணியினர் அவரின் ரன் விகிதத்தை கட்டுபடுத்துவதிலேயே கவனமாயிருப்பதும், அவருக்கு எதிரான புதிய பரிசோதனைகளை தவிர்க்க முற்படுவதிலிருந்தும், அது போல் ஒரு பந்து வீச்சாளரின் திறன் அவருக்கு எதிரான அணியினர் அவரிடம் விக்கெட்டை இழப்பதை தவிர்ப்பதில் கவனம் கொள்வதிலிருந்துமே தெரிந்துகொள்ளலாம். சச்சின் ஒருதின போட்டிகளிலும் டெஸ்ட் போட்டிகளிலும் இன்னும் எதிர் அணிக்கு சிம்ம சொப்பனமாய் இருக்கிறார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஆனால் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் இப்படி ஒரு கட்டுரை வந்தது எனக்கு ஆச்சரியத்தையே தந்தது. லாரவுடன் சச்சினை ஒப்பிட்டு ஆங்காங்கே தன் கட்டுரையில் குற்றசாட்டை நிகழ்த்தியிருக்கிறார் கட்டுரையாளர். இரண்டு வெவ்வேறு அணியின் ஆட்டக்காரர்களை ஒப்பிடுவதில்,ஏன் ஒரே அணியில் ஆடும் வெவ்வேறு ஆட்டக்காரர்களை ஒப்பிடுவதில் கூட எனக்கு உடன்பாடில்லை, என்றாலும் கட்டுரையாளருக்கே அதிக எண்ணிக்கையான இரட்டை சதங்களைத் தவிர லாரா சச்சினை விட சிறந்த வீரர் என்பதற்கு சான்றுகளில்லை. சராசரி எண்ணிக்கையில் ஒப்பிட நினைத்து பின்பு அதுவும் இயலாததால் ஏதேதோ கூறி சமாளித்திருக்கிறார்.

கட்டுரையில் கூறப்பட்டு நான் ஆமோதிக்கும் ஒரே முக்கிய குற்றச்சாட்டு இறுதி ஆட்டங்களில் சச்சின் சரியாக ஆடுவதில்லை. அதே போல் டெஸ்ட் மேட்ச்களிலும் இரண்டாவது இன்னிங்சில் சச்சினுடைய சராசரி முதல் இன்னிங்ஸை விட குறைவாகவே இருக்கிறது.

இறுதிவரையில் எனக்கு புலப்படாத விஷயம், என்ன காரணத்திற்காக, கட்டுரையாளர் சச்சினை ஒருதின போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவேன்டுமென தலைப்பிட்டார் என்பதே !!!

ஆனால் அவ்வப்போது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எழுவதும் சச்சின் ஏதேனும் சாதனை புரிந்தவுடன், பக்கம்பக்கமாய் புகழ்வதும் இங்கு வழக்கமாய் நடைபெறும் ஒன்று என்பதால் சச்சினின் அடுத்த சாதனையை எதிர் நோக்குவோம்.

மேலும் சென்னை சேப்பாக்கம் டெஸ்டை பொறுத்தளவில் சச்சினுக்கு எப்பொழுதுமே மிகவும் ராசியானதாகவே அமைந்துள்ளது. இதுவரையில் ஆறு போட்டிகளிலாடி 714 ரன்களை 102.00 என்ற சராசரியில் குவித்திருக்கிறார். இதில் 4 சதங்களும் 1 அரை சதமும் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அதிகபட்ச எண்ணிக்கையான 34 சதங்களை ஒரு சதமடித்து தாண்டுவரென நம்பலாம்.

0 Comments:

Post a Comment

<< Home