Thursday, December 01, 2005

லாகூர் டெஸ்ட்- தடுமாறும் இங்கிலாந்து

சென்னையில் பலத்த மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. பத்ரியின் பட்சி நாரயண் சொன்னது போல் "சூப்" ஆகப் போகிறது . மழை நாளை வரும் தொடரும் பட்சத்தில் உருப்படியான மேட்சிற்கு வாய்ப்பேயில்லை. லாகூரில் முகமது யூசுப் பழைய ஜாகிர் அப்பாஸ் போல இரட்டை சதம் எடுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார். கூடவே விக்கெட் கீப்பர் அக்மாலும் அடித்து நொறுக்குகிறார்.

நேற்றைய ஹிந்துவில் "pakistan in trouble" என்று தலைப்பிட்டு டெட் கார்பெட் எழுதியிருந்தார். ஏதோ நாலு விக்கெட்டுக்கள் விழுந்து இன்சமாமிற்கு அடிபட்டவுடனேயே இங்கிலாந்திற்கு ஏறுமுகம் போல உருவகப்படுத்தி ஒரு ரிப்போர்ட். முதல் டெஸ்டில் கடைசி நாள் ஆட்டம் முன்பாகவும் இங்கிலாந்து சுலபமாக ஜெயிக்கும், மற்றவர்கள் ஆட்டமிழந்தாலும் பிளிண்டாப் காப்பாற்றி விடுவார் என்று நம்பிக்கையுடன் கார்பெட் எழுதியிருந்தார். ஆசஸ் வெற்றிக்கு பின்னால் மிகவும் ஆப்டிமிஸ்ட்டாக இங்கிலாந்து விமர்சகர்கள் மாறிவிட்டார்கள். வைச்ச குடுமி, அடிச்சா மொட்டை மனப்பான்மை இவர்களிடமும் உண்டு.

பாகிஸ்தான் தொடரை இங்கிலாந்து தோற்று விட்டது என்பதை உறுதியுடன் கூறலாம். லாகூரில் நடைபெறும் டெஸ்டை டிரா செய்யவே அவர்கள் பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டும். இந்திய துணைக்கண்டத்தில் வெற்றிகளை பெற ஆசஸ் உத்திகள் மட்டும் இங்கிலாந்திறகு போதவில்லை.

இங்கிலாந்தின் முக்கிய பிரச்சனைகளாக பின் வருபவற்றை குறிப்பிடுவேன்.
  1. வெறும் அதிரடி ஆட்டம் மட்டும் இங்கு உதவாது. நின்று நிலைத்து ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் கண்டிப்பாக தேவை. ( யூசுப், திராவிட், லஸ்மன் போல் இரண்டு நாட்கள் விளையாட வேண்டும்).
  2. தரையில் செல்லுமாறு பந்துகளை அடிக்கும் திறன் வேண்டும், இங்கிலாந்து அதிகப்படியான புல் சாட், ஹூக் சாட் உபயோகப்படுத்தி பல விக்கெட்டுக்களை இழந்து உள்ளது.
  3. முக்கியமான பிரச்சனை- உருப்படியான ஸ்பின்னர்கள் இல்லாதது. 1985 ம் ஆண்டு கோவர் தலைமையில் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வந்தது. டூர் மேட்ச் ஒன்றில் அண்டர் -25 அணியிடம் தோற்றது.பம்பாயில் டெஸ்ட் போட்டியில் தோற்றது. ஆனாலும் டில்லி, சென்னை ஆகிய இரு டெஸ்டுக்களில் வெற்றி பெற்று தொடரை வென்றது. அதற்குக் காரணம் அந்த அனியில் போகாக், எட்மண்ட்ஸ் என்ற இரு சுழற்பந்து வீச்சாளர்கள். அண்டர்வுட், எம்பூரி, ஹெம்மிங்ஸ் போன்ற பல நல்ல ஸ்பின்னர்கள் இங்கிலாந்து அணையில் இருந்துள்ளனர். தற்போது ஒருவரும் தேறவில்லை.

இந்தியா வருவதற்குள் புதிதாக சில உத்திகளை இங்கிலாந்து வகுக்க வேண்டியது அவசியம். இல்லாவிடில் இந்திய துணைக்கண்டத்தில் வெற்றி பெற இயலாது.

0 Comments:

Post a Comment

<< Home