Monday, December 12, 2005

இந்தியா மிக வலுவான நிலையில்

மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடைந்துள்ள நேரத்தில் இந்தியா மிக வலுவான நிலையில் உள்ளது.

இர்ஃபான் பதான் தொடக்க ஆட்டக்காரராக வந்து இலங்கை அணியை நிலைகுலையச் செய்தார். முதல் இன்னிங்ஸிலேயே பதான் தொடக்க ஆட்டக்காரராக வருவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். எனக்கு பதானைத் தொடக்க ஆட்டக்காரராக அனுப்புவது பிடிக்கவில்லை.

இரண்டாவது இன்னிங்ஸிலும் கூட தோனியை முதலில் அனுப்பியிருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். ஆனால் சாப்பல், திராவிடின் முடிவு நன்மையாக முடியும்போது நான் என்ன நடுவில் சொல்ல? பதானின் விளையாட்டைக் கொஞ்சம் மட்டும்தான் தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது. முழுதாக ஆல் இந்தியா ரேடியோவில்தான் கேட்டுக்கொண்டிருந்தேன்.

பார்த்த அந்தக் கொஞ்ச நேரத்தில், பதான் மிக அற்புதமாக விளையாடினார். ஒரு மேல்வரிசை ஆட்டக்காரர் எவ்வாறு விளையாட வேண்டுமோ அந்த ஒழுக்கத்துடனும் அமைதியுடனும் தன்னம்பிக்கையுடனும், எந்தவிதமான பயமும் இன்றி, தயக்கமும் இன்றி விளையாடினார்.

இடதுகை மட்டையாளர்கள் வலது கை ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர்களிடம் தடுமாறுவார்கள் என்பது பொது அறிவு. ஆனால் முரளிதரனை பதான் நன்றாகவே எதிர்கொண்டார். புதுப்பந்தை இயக்க வந்த முரளியை முதல் ஓவரிலேயே சிக்ஸ் அடித்ததில் - 'நீ முதல் இன்னிங்ஸில் என்ன செய்திருந்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை' - என்ற த்வனி இருந்தது.

ஆனாலும் பதான் சதம் அடிக்காததில் எனக்கு மிகுந்த வருத்தம். பதான் முதன்முறையாக இந்தியாவுக்காக ஒரு நல்ல இன்னிங்ஸ் ஆடியபோது நான் லாஹூரில் மைதானத்தில் இருந்தேன். பதானின் பெற்றோர்களும் அங்கு இருந்தனர். பதான் நிச்சயமாக அரை சதத்தைத் தாண்டுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அரை சதத்தின் வாயிலில் அவுட்டானார். யுவராஜும் பதானும் அந்த ஆட்டத்தில் மிக நன்றாக விளையாடினார்கள். ஆனாலும் அந்த டெஸ்டில் இந்தியா தோற்றது. இந்த டெஸ்டிலும் பதான் 90ஐத் தாண்டியதும் சதம் நிச்சயம் என்றே நினைத்தேன். ஆனால் கிடைக்கவில்லை.

பதான் - இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை.

இன்று திராவிட் விளையாடியதும் நன்றாக இருந்தது. அந்தத் தேவையற்ற ரன் அவுட் தவிர்த்து, அவர் வேகமாக ரன்கள் சேர்க்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து விளையாடினார். பதானும் திராவிடும் பலமுறை தடுப்பாளர்களைத் தடுமாற வைக்கும் விதமாக வேகமாக 1, 2 ரன்களைப் பெற்றனர்.

பதான், திராவிட் அடுத்தடுத்து அவுட்டானதும் இந்தியா நிலைகுலையும் என்று இலங்கை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் யுவராஜும் கங்குலியும் வேறு நினைப்பில் இருக்கிறார்கள். நாளைக் காலையில் முரளியை நன்றாக எதிர்கொண்டால் இந்தியா 350க்கு மேல் முன்னிலையை எட்டலாம். அந்த நிலையில் இந்தியாவுக்குத்தான் வெற்றி நிச்சயம் என்று சொல்லிவிடலாம்.

அடுத்த ஆட்டத்துக்கு சேவாக் வந்துவிடுவார். எனவே யுவராஜ் வெளியேற வேண்டும். கவுதம் கம்பீரை இன்னமும் ஓர் ஆட்டத்துக்கு வைத்துக்கொள்ள வேண்டும். பதான் இருக்கிறார் என்ற கணக்கில் கம்பீரைத் தூக்கிவிட்டு பதானை முழுநேர தொடக்க ஆட்டக்காரராக விளையாட வைப்பது எனக்கு ஏற்புடையதல்ல.

அகர்கருக்கு பதில் ஜாகீர் கான் - நிச்சயம் இந்த மாற்றமாவது இருக்க வேண்டும்.

0 Comments:

Post a Comment

<< Home