Wednesday, December 14, 2005

அணி அறிவிப்பு- மீண்டும் சர்ச்சை

மூன்றாவது டெஸ்டிற்கான அணியிலிருந்து கங்குலியை நீக்கி விட்டார்கள். இந்திய அணியின் அசைக்க முடியாத சக்தியாக சில மாதங்கள் முன்பு கூட கருதப்பட்ட கங்குலி தற்போது இளரத்தங்களுக்கு வழி விடும் விதமாக நீக்கப்பட்டிருப்பது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. கங்குலி 40 மற்றும் 39 ரன்கள் இரு இன்னிங்ஸில் எடுத்தார் என்றாலும், பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து ஆடிய கங்குலியின் பழைய ஆட்டங்களுடன் ஒப்பிடுகையில் , டில்லியில் ஆடிய ஆட்டம் மிகவும் சுமார் ரகம். 75 ரன்களுக்கு மேலாக குவிக்காத பட்சத்தில் தன்னை நீக்கி விடுவார்கள் என்பது கங்குலிக்கே தெரிந்திருக்கும். கல்கத்தாவில் மூன்றாவது டெஸ்ட் நடந்திருந்தால் கங்குலியை நீக்கி இருக்க மாட்டார்கள். அகமதாபாத் என்றவுடன் தைரியமாக நீக்கி விட்டார்கள்.

யுவராஜ் 77 ரன்கள் எடுத்தாலும் கூட ஸ்பின்னர்களை தைரியமாக இன்னும் எதிர்கொள்ளவில்லை. ஆனாலும் இவருக்கு மீண்டும் வாய்ப்பு தருவதை யாரும் குறை சொல்ல முடியாது.மீண்டும் வாஸிம் ஜாபரை அணியில் சேர்த்திருப்பதுதான் எரிச்சல் தரும் சங்கதி. பவார் வந்தவுடன் மேற்கு மண்டலத்திலிருந்து கூடுதலாக ஒரு ஆட்டக்காரர் அணியில் இடம் பெறுகிறார்.

வாஸிம் ஜாபரை எதற்கு எடுத்தார்கள் என்பதை அலசிப் பார்ப்போம். கவுதம் காம்பீர் மூன்று இன்னிங்ஸில் ரன்கள் குவிக்கவில்லை. சற்று நாட்கள் முன்புதான் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டிகளிலும், அதற்கு முந்தைய டெஸ்ட் போட்டிகளிலும் குறிப்பிடத்தக்க அளவு ரன்களைக் குவித்தார் காம்பீர். தற்போது அவரை பயமுறுத்தும் விதமாக இன்னொரு துவக்க ஆட்டக்காரரை சேர்த்திருக்கிறார்கள்.

ஜாபர் ஏற்கனவே 7 டெஸ்ட்களில் விளையாடி மூன்று அரை சதங்கள் பெற்று, 20.7 என்ற சராசரியில் ரன்கள் குவித்த ஆட்டக்காரர். 2002 ல் அணியை விட்டு நீக்கிய பின் மீண்டும் மறுவாழ்வு தந்துள்ளார்கள். இவரை அணியில் மீண்டும் சேர்த்தது ரஞ்சியில் அவருடைய ஆட்டத்தை வைத்துத்தான். மற்றபடி சமீபகாலமாக இந்திய A அணிகளிலோ, அல்லது போர்ட் பிரஸிடண்ட் அணிகளிலோ அவர் ஆடவேயில்லை. ஆனாலும் திடீரென, ஒரு அதி ஆர்வமுள்ள கிரிக்கெட் விசிறியும் எதிர்பாராத வண்ணம், ஜாபர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜாபருக்கு அகமதாபாத்தில் வாய்ப்பு தரப்படுமா? இல்லாத பட்சத்தில் பாகிஸ்தான் செல்லும் அணிக்கு அவருடைய பெயரை பரிசீலனை செய்வார்களா?ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆகாச் சோப்ரா நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார். சில சொற்ப ஸ்கோர்களுக்கு பின்னால் அவரையும் ஒதுக்கி விட்டார்கள்.

எதிர்காலத்தை குறித்த பார்வை இருக்க வேண்டும் என்று கூறும் பட்சத்தில், ஒரு புதிய துவக்க ஆட்டக்காரரை முயற்சிக்காமல் மீண்டும் ஏன் ஜாபரை எடுத்தார்கள் என்று தெரியவில்லை.

ஜாகிர்கானிற்காக பலர் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் ஜாகிர் ஒதுக்கப்பட்டிருப்பது அவரது ஒழுங்கின்மைக்காக என்றே படுகிறது. பயிற்சி முறைகளை சரியாக பின்பற்றாமல் கிரிக்கெட் ஆடலாமென்பது சாப்பல் சாம்ராஜ்யத்தில் சரிப்பட்டு வராது. பாலாஜிக்கு ஏதோ அடி. ரஞ்சி மேட்சில் கூட ஆடவில்லை.

டால்மியா காலத்தில் டீப்தாஸ் குப்தா, லஸ்மி ரட்டன் சுக்லா என்று பல கிழக்கு பிராந்திய ஆட்டக்காரர்கள் போதிய திறமையின்றியும் அணியில் இடம் பிடித்தார்கள். இம்முறை மேற்கு பிராந்தியத்திலிருந்து பல ஆட்டக்காரர்கள் சேர்க்கப்படலாம்.

தமிழ்நாட்டு ஆட்டக்காரர்களுக்கு விமோசனமே இல்லை. பதானி, வித்யூத் சிவா போன்றவர்கள் நிரந்தரமாக போர்ட் பிரஸிடெண்ட் அல்லது ரெஸ்ட் ஆப் இந்தியாவிற்கு மட்டும் ஆடி பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

1 Comments:

Blogger Doctor Bruno said...

கல்கத்தாவில் மூன்றாவது டெஸ்ட் நடந்திருந்தால் கங்குலியை நீக்கி இருக்க மாட்டார்கள். அகமதாபாத் என்றவுடன் தைரியமாக நீக்கி விட்டார்கள்.

Well Said... Though the above lines appear humorous, it reflects a deep malady brewing in cricket

9:00 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home