Tuesday, December 13, 2005

கிரிக்கெட் நீரோக்கள்-'அப்துல் ஜப்பார்'

‘வித்தகக் கவிஞர்’ விஜய்யின் ‘உடைந்த நிலாக்கள்’ கவிதைத் தொகுதியின் ஒலிப்பதிவில் நீரோ மன்னன் பாத்திரம் எனக்கு. எனக்கு அப்போது ஒன்று தெரிய வந்தது. ரோம் நகர் தானாகப் பற்றி யெரியவில்லை. பற்ற வைத்ததே நீரோதான் என்பது!. தீயைப் பாட விரும்பிய அவன் அதை நேரிடையாக உணர வேண்டும் எனகிற வக்கிர மனம் படைத்திருந்தான். விளைவு ரோம் பற்றியெரிந்தது. அவன் பிடில் வாசித்தான்

சென்னை கிரிக்கெட்டை மழை பாதித்து ஏமாற்றவில்லை. மழை பாதிக்கும் என்று தெரிந்திருந்தும் ஏமாற்றினார்கள் அதுதான் உண்மை. மழை வருமா வராதா என்பது தெரியாத நிலையில் முன்கூட்டியே நுழைவுச்சீட்டை விற்றதை வேண்டுமானால் அறியாமை என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் மழை வரும் என்று தெரிந்திருந்தும் விற்றது கொடுமையிலும் கொடுமை. அது மட்டுமல்ல. காப்பீடு என்கிற வகையிலும் சுளையாக ஒரு தொகையைப் பெற்றிருக்கிறார்கள். காப்பீடை எப்படி ஏற்றார்கள் பிறகு எப்படி இழப்பீடு தர சம்மதித்தார்கள் என்பது ஒரு விளங்காத - விளக்கமளிக்கப்படாத புதிர்.

‘வாலிபனுக்கு வாழ்க்கைப்பட்டு வாழ்விழந்த பெண்ணை கிழவனுக்குக் கட்டிக்கொடுத்த கதையாக’ ஒருநாள் போட்டி ஆட்டமே ஒன்றுமில்லாமல் போய் விட்ட நிலையில் அடுத்த சின்னாட்களிலேயே டெஸ்ட் போட்டி ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்தது என்ன நியாயம்? வருடக்கணக்கில் சென்னையை காயப் போட்ட காலம் உண்டு. அப்படி இருக்க, இந்த அடைமழை காலத்தில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளை ஏற்பாடு செய்து அடம் பிடித்து சென்னையின் தலையில் அடித்து ஏற்பித்தது ஏன்?

இரண்டாவது ஆட்டத்துக்கு காப்பீடு வழங்க எந்த நிறுவனமும் முன் வராத நிலையில் முதல் ஆட்டத்திற்கே ‘நடந்தது தவறு இந்தா பிடியுங்கள் நீங்கள் செலுத்திய் காப்பீடு கட்டணம் இழப்பீடு தரமுடியாது’ என்று அவர்கள் மறுத்திருக்க வேண்டும். மறுத்திருந்தால், அதிலுள்ள நியாயத்தை எதிர்த்து எதுவும் செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. ‘சலம்பாமல்’ இழப்பீடை வழங்கி விட்டார்கள். அதுபோல் ரசிகர்கள் செலுத்திய நுழைவுக் கட்டணத்தையும் இழப்பீடாகக் கிடைத்த தொகையை தாங்களுக்கு ஏற்பட்ட செலவுகளுக்கும் இழப்புகளுக்கும் காப்பாக வைத்துக் கொண்டு திருப்பி கொடுத்திருக்க வேண்டும்.

அதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பது உண்மை. எனவே தார்மீக ரீதியாக இந்தத் தொகையை அப்படியே டாக்டர் ராமதாஸ் சொல்வது போல் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கி விடுவதுதான் நியாயமாக இருக்கும். அது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும் பெருமை சேர்க்கும். ரசிகர்களுக்கும் ஏதோ ஒரு நல்ல காரியத்துக்கு உதவினோம் என்கிற ஆறுதலையும் தரும். செய்வார்களா? நல்ல மனிதர்கள் செய்வார்கள். நீரோக்கள் செய்ய மாட்டார்கள்.

தமிழகமே தண்ணீரில் தத்தளீத்தபோது அந்த அவலத்தின் மத்தியிலும் ‘மூன்று நாட்கள் ஆட்டமில்லையே’ என்று புலம்பி தீர்த்து நான்காம் நாள் மதியத்துக்கு மேல் விடாப்பிடியாக ஆட்டத்தைத் துவங்கி, இந்த ‘நீரோக்கள்’ எதை சாதித்துக் கிழித்தார்கள்? அதை விட ஆட்டத்தையே ரத்து செய்திருந்தால் எவ்வளவு கௌரவமாக இருந்திருக்கும்?

இலங்கைக்கெதிரான மகத்தான வெற்றியின் மதமதப்பில், மகிழ்ச்சியில் மூழ்கித் திளைத்திருந்த நிலையிலேயே தென்னாப்பிரிக்காவிடம் முதலில் அடிவாங்கி, பிறகு எழுந்து அதன் பிறகு விழுந்து, மீண்டும் நிமிர்ந்து என்கிற அளவில் தொடர் சமநிலையில் முடிந்தது. இரண்டு ஆட்டங்களில் அணிகளின் திறமையை விட ஆடுகளத்தின் நிலை காரணமாகவும் பின்னேரப் பனியின் ஈரப்பதம் காரணமாகவும் ‘டாஸ்’தான் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்தது. இதில் ஒன்று இந்தியாவுக்கெதிராகவும் மற்றது அனுகூலமாகவும் அமைந்தது.

சச்சின் எடுத்த எடுப்பில் எழுந்தார்.பிறகு விழுந்தார். விழுந்து கிடந்த யுவராஜ் சிங் விஸ்வரூபம் எடுத்தார். பரிட்சார்த்தம் அளவோடு நிற்காமல் எல்லையைக் கடந்தது. பலன்? இர்•பான் பதான் ஒன்றில் துவக்க ஆட்டக்காரராக அனுப்பபட்டு பலிகடாவாக்கப்பட்டார். நான்கு பந்துகளைக் கோட்டை விட்டு ஐந்தாவதில் ஒரு நான்கை அடிப்பது அல்லது ஐந்து பந்துகளைத் தவறவிட்டு ஆறாவதில் ஒரு சிக்ஸரை அடிப்பதென்பது ஒருவகை. அது நடைபெறாவிட்டால் அத்தனையும் பூஜ்யம் - கன்னி ஓவர்! அதை விட ஒவ்வொரு பந்திலும் ஒன்றைத் தட்டி விட்டு ஒரு ஓவரில் ஆறு ரன்களைச் சேர்த்து விடுவது என்கிற ஜாவேத் மியான்தாதின் வித்தையை முகமது கை•ப் கனகச்சிதமாகக் கற்று வைத்திருக்கிறார். இதன் மூலம் பந்து வீச்சாளர்களின் சீரான போக்கைச் சிதறடிப்பது களப்பணியாளர்களைக் கால் விரல்களின் நுனியில் நிற்க வைப்பது என்கிற கலையில் இன்று கை•பை விட்டால் ஆளில்லை என்று துணிந்து சொல்லலாம்.

ஆடுகளத்தின் ஆதரவு இருக்குமாயின் எடுத்த எடுப்பிலேயே எதிரிகளின் இடுப்பை ஒடிக்கும் கலை இர்•பான் பதானுக்கு நன்றாகக் கை வந்திருக்கிறது. ஆனால் ரன்களை வாரி வழங்கும் அஜித் அகர்கரை இன்னும் கட்டிக்கொண்டு அழுவதுதான் ஏனென்று புரியவில்லை. பத்தில் சோபித்தார் என்பதற்காக நூறு சந்தர்ப்பம் கொடுப்பது எதில் சேர்த்தி? இருபதில் சோபித்து இருபத்தொன்றில் தோற்றார் என்பதற்காக ஸஹீர் கான், லக்ஷ்மிபதி பாலாஜி ஆகியோரைக் கழற்றி விட்டது என்ன நியாயம்? அகர்கருக்குத் திரும்பத் திரும்ப வழங்கப்படும் சந்தர்ப்பம் இவர்களுக்கு வழங்காதது ஓரவஞ்சனையின் உச்சமல்லவா?

மட்டையாட்சியில் தொடர்ந்து குட்டு வாங்கிய கங்குலியை ‘பந்து வீச்சில் கில்லாடி எனவே பன்முகத்திறமைசாலி(allrounder)’ என்கிற சொத்தைக் காரணத்தைச் சொல்லி பயிற்சியாளர் கிரேக் சேப்பலின் பரிந்துரையை மீறி தேர்வாளர்கள் யஷ்பால் ஷர்மாவும், பிரணாப் ராயும் இன்னொரு தேர்வாளரும் கூட்டு சேர்ந்து கொண்டு தேர்வாளர்கள் கிரன் மோரேயையும் சந்திரசேகரையும் எண்ணிக்கை அடிப்படையில் தோற்கடித்து கங்குலியை உள்ளே கொண்டு வந்தார் பாருங்கள். அதற்கு கைமேல் பலன். வாரியத்தலைமை பீடத்தின் ஆட்சி மாறியதும் முதலில் வெளியே தூக்கி எறியப்பட்டவர்கள் இந்த மூன்று தேர்வாளர்கள்தான். அந்த வாசல் இன்னும் திறந்தேயிருக்கிறது. அது கங்குலிக்காக இருக்கலாம்.

கிரிக்கெட் வாரியத்தின் தலைமைப் பீடத்துக்கான தேர்தல் இழுபறி என்றாகி நீதிமன்றம் தலையிட்டு அதன் பிறகும் இழுத்தடிக்கப்பட்டு முன்னால் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் தேர்தலை நடத்தும் பொறுப்பை உச்ச நீதி மன்றம் ஒப்படைத்தபோதும், அவர் விதித்த சில நடைமுறைகளுக்கு எதிராக சிலர் உச்ச நீதி மன்றத்தை அணுகிய போதும் அதில் ‘நாங்கள் தலையிட விரும்பவில்லை’ என்று உச்ச நீதிமன்றம் திரும்ப ஓங்கி தலையில் அடித்தபோதும் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமென்பது ஓரளவு தெளிவாக விளங்கி விட்டது.

சென்ற தேர்தலில் ‘ஜெகஜ்ஜால கில்லாடி’ ஜெகன்மோகன் டால்மியா வங்காளம் சார்பாகவும் வாக்களித்தார். பிறகு சமம் என்கிற நிலை வந்தபோது தன்னுடைய நிர்ணாயக வாக்கையும் (casting vote) செலுத்தினார். ஆனால் இம்முறை ‘ஒருவர் ஒரு வாக்கு மட்டுமே அளிக்கலாம் தலைவர் தேவைப்பட்டால் மட்டுமே தன்னுடைய நிர்ணாயக வாக்கை அளிக்க முடியும்’ என்று கிருஷ்ணமூர்த்தி வைத்தார் பாருங்கள் ஒரு ஆப்பு. டால்மியாவால் ஆடவும் முடியவில்லை. அசையவும் முடியவில்லை ஏன் மூச்சு விடக்கூட முடியவில்லை. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் சரத்பவார் ‘தொட்டுக்கோ தொடைச்சிக்கோ’ என்கிற அளவில்தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது போக, முப்பதில் இருபது வாக்குகள் பெற்று அவர் பெற்ற வெற்றி டால்மியாவின் எதேச்சதிகரப் போக்கில் எவ்வளவு பேர் கடுப்புடன் இருந்தார்கள் என்பதைத் தெளிவாக்கியது.

சரி ஆட்சி மாற்றம் வந்தாயிற்று. எல்லாம் சரியாய் விடுமென்று நம்புகிறீர்களா? நடக்காது! கங்கு கரையற்று பணம் கரைபுரண்டு ஓடும் ஒரு ஸ்தாபனத்தில் பொறுப்புக்கு வருபவர்கள் கரையில் நின்று கை,கால், முகம் மட்டுமே கழுவிக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. முங்கிக் குளிக்கவே ஆசைப்படுவார்கள் அது தவிர்க்க முடியாது. போனது போக இருப்பது லாபம் என்பதுதான் இனி எந்தக் காலத்திலும் கிரிக்கெட் வாரியத்தின் தலைவிதியாக இருக்கப் போகிறது.

எழுபதுகளில் ஆரம்பிகப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த தமிழ் நேர்முக வர்ணனை 2004 அக்டோபரிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. தனியாக அலைவரிசை இல்லையென்பது சரியான காரணமாக இருக்க முடியாது ஏனெனில் அது, ‘கடந்த 25 வருடங்களாக இருந்தது இப்போது எங்கே காணாமல் போயிற்று?’ என்கிற கேள்வியை எழுப்பும். இதன் வர்த்தக சாத்தியக் கூறுகள் பற்றி சரியாக் எடுத்துச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டியவர்கள் சொல்லாமல் விட்டு விட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

தொலைக்காட்சி இந்தளவுக்கு வீச்சு பெறாத காலத்தில் தமிழ் வர்ணனைததன் கிரிகெட்டை தமிழகத்தின் மூலை முடுக்கு களுக்கெல்லாம் எடுத்து சென்றது என்பது ஒரு நிர்வாண உண்மை. கிரிக்கெட் மட்டுமல்ல. ஏனைய எல்லா விளையாட்டுக்களும் கிராம மக்களைச் சென்றடைய தமிழ் வர்ணனை அவசியம். சென்னையில் நடந்த சர்வதேச ஹாக்கி போட்டி, டென்னிஸ் போட்டி ஆகியவற்றுக்குக் கூட தமிழ் வர்ணனை இல்லையென்பது ஒரு பெரிய சோகம். விளையாட்டில் தமிழ் ஒலிபரப்புக்காக ஒரு தனி அலைவரிசையே துவங்கப்பட்டாலும் அதன் நீண்ட கால நன்மைகள் தற்கால நட்டங்களை பெரிய அளவில் ஈடு செய்யும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

‘அப்படிப்பட்ட ஒலிபரப்பை யார் கேட்பது?’ என்று அதிகாரத்திலிருக்கும் நண்பர் ஒருவர் இளக்காரமாகக் கேட்டார். ‘பண்பலை ஒலிபரப்பில் கூட 90க்கும் அதிகப்பட்ட சதவிகிதத்தை ‘சூரியனு’க்கும், ‘மிர்ச்சி’க்கும் தாரை வார்த்து விட்ட நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கக் கூடாது’ என்று பதிலிறுத்தேன். தமிழ் தலைவர்கள் சிலரை கண்டு முறையிடலாமென்று நினைத்தபோது கூட வர வேண்டிய நண்பர், ‘மாலைக்கும் சால்வைக்கும் என்னிடம் காசு இருக்கிறது. ஆனால் நடையாய் நடப்பதற்கும் சென்று காத்துக் கிடப்பதற்கும் என்னிடம் நேரமில்லை’ என்றார். That says it all!!!

சச்சின் சாதனைக்கா(ர)ர் என்பதில் சந்தேகமில்லை. காவஸ்கரின் 34 சதங்கள் என்கிற உலக சாதனையை முறியடித்து 35 சதங்கள் என்கிற சாதனையை அடைந்துள்ளார். இருவரும் எடுத்துக் கொண்ட தூரம் 125 போட்டிகள். ஒருநாள் போட்டி ஆட்டத்தில் அதிகமான போட்டிகளில் கலந்து கொண்டது, அதிகமான ரன்களைக் (13909) குவித்தது, அதிகமான சதங்கள் (38), அதிகமான அரைச்சதஙக்ள் (71) என்கிற அத்தனை சாதனைகளுக்கும் சொந்தக்காரர் டெண்டுல்கர்.

டெஸ்ட் போட்டி ஆட்டங்களில் 10,000 என்கிற இலக்கை முதலில் கடந்தவர் கவாஸ்கர். பிறகு ஆலன் பார்டர் அந்த எல்லையைக் கடந்தார். சச்சின் தொடர்ந்தார். இப்போது அந்த சாதனை மேற்கிந்தியத் தீவுகளின் பிரையன் லாராவின் கையில். அதையும் சச்சின் எட்டுவார் - கடப்பார் என்பது உறுதி

1989-இல் 16 வயதில் டெஸ்ட் ஆடத் துவங்கிய உலகிலேயே மிக இள ஆட்டக்காரர் 17வது வயதில் இங்கிலாந்துக்கெதிராக இங்கிலாந்திலேயே கன்னிச்சதம். சச்சின் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் 50 சதங்களை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 34க்கும் 35க்கும் இடையிலான இடைவெளி ஏறக்குறைய ஒரு வருடம் என்பதை வைத்துப் பார்க்கும்போது 40 சதங்கள் வரை சாதிப்பார் என்று நம்பலாம்.. என்றாலும் அதை அடையும் அளவில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமில்லை என்பது டெண்டுல்கரின் சாதனைக்கு மேலும் மகிமை சேர்க்கிறது. அவர் 10,000 ரன்களைப் பூர்த்தி செய்தபோதுஒரு கட்டுரையில் டென்(தவுசண்ட்)டுல்கர் என்று குறிப்பிட்டிருந்தேன். இப்போது ‘நூறாண்டு வாழ்க! நூறு சதத்தையும் எட்டுக!!’ என்று வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

'சாத்தான்குளம்' அப்துல் ஜப்பார் துபாயிலிருந்து

4 Comments:

Blogger Badri Seshadri said...

அசத்தல்! நேர்முக வர்ணனையில் இருக்கும் அதே ஒலிநயம் கட்டுரையிலும்!

5:11 AM  
Blogger Jayaprakash Sampath said...

என்னதிது? எல்லா வலைப்பதிவுகளிலேயும் இப்ப கலக்கலா பதிவுகள் வர ஆரம்பிச்சுட்டுதே!

படிக்கவே சொகமாக இருக்கு... ஆட்டம் நடக்கிற போதெல்லாம் இந்த மாதிரி guest appearance கொடுக்க வேணும் என்று ஜப்பார் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

6:47 AM  
Blogger Doctor Bruno said...

This blog is becoming better day by day

8:12 AM  
Blogger rajkumar said...

ஜப்பார் சார்,

உங்கள் குரலை கேட்க இயலாவிட்டாலும், எழுத்தை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நிறைய எழுதுங்கள்.

அன்புடன்

ராஜ்குமார்

8:02 PM  

Post a Comment

<< Home