Tuesday, December 13, 2005

இந்தியா வெற்றிக்கு ஒருபடி அருகில்

நான்காம் நாள் ஆட்டம் முடியும்போது இலங்கை 436ஐத் துரத்தவேண்டிய நிலையில் 123/5 என்ற கணக்கில் உள்ளது. நாளின் கடைசிப்பந்தில் ஹர்பஜன் சிங் சமரவீரவை அவுட்டாக்கினார்.

இலங்கை தன் இன்னிங்ஸை நன்றாகவே தொடங்கியது. முதல் இன்னிங்ஸ் போலவே இப்பொழுதும் பதான் முதல் விக்கெட்டைப் பெற்றார். சொல்லப்போனால் இந்தியா, இலங்கை இரண்டிலுமே "G"யில் தொடங்கும் தொடக்க ஆட்டக்காரர்கள் இரண்டு இன்னிங்ஸிலும் எதிரணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரிடம் ஒரே மாதிரியாக எல்.பி.டபிள்யூ ஆகியுள்ளனர்!

அதையடுத்து அட்டபட்டுவும் சங்கக்காரவும் மிக நன்றாக விளையாடினார்கள். அணியில் எண்ணிக்கை 100ஐத் தாண்டியும் இரண்டாவது விக்கெட் விழாததால் எப்பொழுதும்போல இந்திய ரசிகர்கள் பொறுமை இழந்தனர். நம் பதிவிலேயே ஒரு நண்பர் கீழ்க்கண்ட பின்னூட்டத்தை விட்டுச்சென்றார்: "நம்மாளுங்க ஜெயிப்பாங்களா என்று நினைக்கிறீங்க?.... நம்பிக்கை இருக்கா அப்பு?"

நான்காவது இன்னிங்ஸில் 250 அடிப்பதே கஷ்டம் என்பது இந்திய ரசிகர்களுக்குப் புரியவேண்டும். பொறுமையும் வேண்டும்.

இந்த ஆட்டத்தில் விக்கெட்டே எடுக்காத அகர்கர் ஒரு ரிவர்ஸ் ஸ்விங் பந்தில் சங்கக்காரவை ஏமாற்றி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்கவைத்தார். அதன்பின் கும்ப்ளே ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளைப் பெற்றார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் நன்றாக விளையாடிய அணித்தலைவர் அட்டபட்டு கும்ப்ளே பந்துவீச்சில் அவருக்கே ஒரு கேட்சைக் கொடுத்தார். அதே ஓவரில் நைட்வாட்ச்மேன் மலிங்க பண்டாரா எல்.பி.டபிள்யூ ஆனார். குறையும் வெளிச்சத்தில் நாளின் கடைசி ஓவரில் ஹர்பஜன் சிங் பந்தில் சமரவீரா ஸ்லிப்பில் நிற்கும் திராவிடிடம் பிடிகொடுத்தார்.

இனி நாளை தில்ஷன், முபாரக் இருவரும் ஜெயவர்தனாவுடன் கூட்டுசேர்ந்து எவ்வளவு நேரம் இந்தியாவை அலைக்கழிப்பார்கள் என்று பார்க்கலாம்.

நாளைக் காலையிலேயே ஆட்டம் முடிந்துவிடும் என்று நினைக்கிறேன்.

1 Comments:

Blogger Movie Fan said...

நேற்று என் பதிவில்

இந்தியா 400 முதல் 450 ரன்கள் முன்னிலை.
இலங்கை 3 முதல் 5 விக்கெட்டுகள் இழப்பு


டெல்லி டெஸ்ட் இந்தியா வசமாக அவசியமாகிறது......

என்று சொல்லியிருந்தேன். அதிர்ஷ்டவசமாக நாம் எதிர்பார்த்தது நடந்திருக்கிறது.

நான்காம் நாளின் தேநீருக்கு பிந்தைய ஆட்டமும் இந்தியாவுக்கு உதவியதால் இந்தியா வெற்றியின் விளிம்பிலிருக்கிறது...ஆனால் இன்றைய ஆட்டத்தை பார்க்கும்போது கடைசி ஐந்து ஒவர்களை தவிர்த்து சுழற்பந்து வீச்சுக்கு எதிர்பார்த்ததை போல அவ்வளவாக உதவவில்லை என்றே தோன்றியது. ஆனாலும் இன்னும் 313 ரன்கள் தேவையிருப்பதால் இலங்கை வெற்றி பெறுவதற்கோ, 5 விக்கெட்டுகள் மட்டுமே மீதமிருப்பதால் ஆட்டம் டிராவாகும் வாய்ப்போ இல்லையென்றாலும் இந்தியாவின் வெற்றி நாளை காலையே நடந்துவிடும் என்று அவ்வளவு உறுதியாக தெரியவில்லை.

-- Vignesh

5:51 AM  

Post a Comment

<< Home