Thursday, December 15, 2005

சவுரவ் கங்குலியும் பாகிஸ்தான் பயணமும்

இப்பொழுதைக்கு இந்திய டெஸ்ட் அணியில் நிச்சயமாக இடம் இருக்கவேண்டும் என்று பார்த்தால் அது மூவர்தான் - திராவிட், சேவாக், டெண்டுல்கர். இதைத்தவிர ஒரு தொடக்க ஆட்டக்காரர், இரண்டு மிடில் ஆர்டர் மட்டையாளர்கள் தேவை. தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு வாசிம் ஜாஃபர், கவுதம் கம்பீர் இன்னமும் சிலர் போட்டியிடலாம். மிடில் ஆர்டர் இடத்துக்கு லக்ஷ்மண், யுவராஜ் சிங், கங்குலி, மொஹம்மத் காயிஃப் நால்வரும்தான் இப்பொழுதைய முதல் லிஸ்டில் இருப்பார்கள். அடுத்து வேணுகோபால ராவ், சுரேஷ் ரெய்னா, அம்பாடி ராயுடு என்று ஆரம்பித்து பல இளம் நட்சத்திரங்கள் இருக்கிறார்கள்.

இதில் எந்தவொரு டெஸ்டாக இருந்தாலும் அதில் லக்ஷ்மண், யுவராஜ், கங்குலி, காயிஃப் என்ற நால்வரில் எந்த இருவரை வைத்துக்கொள்வது என்பது திராவிட்/சாப்பலின் தீர்ப்பாக இருக்கவேண்டும்.

உள்ளூர் டெஸ்ட் போட்டிகளுக்கு 15 பேர் அடங்கிய குழுவைத் தீர்மானிக்க வேண்டியதில்லை. 13 பேர்கள் போதும். கடைசி 11 என்று தீர்மானித்திருப்பவர்கள், அதிகப்படியாக ஒரு பேட்ஸ்மன், ஒரு பவுலர். முதல் 11-ல் பிரச்னை என்றால் இந்த அதிகப்படியிலிருந்து வேண்டிய ஆளை எடுத்துக்கொள்ளலாம். அப்படிப்பட்ட 12, 13 யாராக இருக்கலாம். இப்பொழுதைய நிலையில் முரளி கார்த்திக் + மொஹம்மத் காயிஃப். ஏனெனில் ஓடியாடி தண்ணீர் கொண்டுகொடுக்க கங்குலி விரும்ப மாட்டார்.

ஆனால் பாகிஸ்தானுக்குச் செல்லும் இந்தியக் குழுவில் கங்குலி இடம்பெறுவாரா? இந்தியா இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களை அழைத்துச் செல்லவேண்டாம். ஏனெனில் இது அடுத்த ஊர்தான். இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் என்றால் மொத்தமாக மூன்று தொடக்க ஆட்டக்காரர்களை அழைத்துச் செல்லலாம். ஆனால் பாகிஸ்தானுக்கு இரண்டு தொடக்க ஆட்டக்காரர்கள் போதும். சேவாகுடன் யாரை அழைத்துச் செல்வது? ஜாஃபர் அல்லது கம்பீர். அடுத்து ஒரு விக்கெட் கீப்பர் போதும். ஏழு பந்து வீச்சாளர்களை அழைத்துச் செல்லவேண்டும். நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள். மூன்று ஸ்பின்னர்கள். வேகப்பந்து = பதான், ஜாகீர் கான், அகர்கர், பாலாஜி அல்லது ஆர்.பி.சிங். (பாலாஜிக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை). சுழல்பந்து = கும்ப்ளே, ஹர்பஜன், கார்த்திக். ஆக மொத்தம் 10.

மீதி ஐந்தும் பேட்ஸ்மன். திராவிட், டெண்டுல்கர் - இரண்டு. லக்ஷ்மண், காயிஃப், யுவராஜ், கங்குலி என்ற நால்வரில் மூன்று பேரைத்தான் அழைத்துச் செல்ல முடியும். அப்படியானால் கங்குலி அஹமதாபாத் டெஸ்டில் நடப்பதை வைத்து இதை முடிவுசெய்யமுடியுமா? அல்லது நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பதில் மூவரை எடுத்துக்கொண்டு ஒரு அதிகப்படி மட்டையாளரை அழைத்துக்கொண்டு செல்லலாம். அது மற்றுமொரு தொடக்க ஆட்டக்காரரையா அல்லது கங்குலியையா? கங்குலியைவிட மற்றுமொரு தொடக்க ஆட்டக்காரரை அழைத்துச் செல்வதே சிறந்தது.

அப்படியானால் அடுத்த சில மாதங்களுக்கு கங்குலி அணியில் இடம்பெறுவது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. யுவராஜ், லக்ஷ்மண் இவர்களுடைய ஃபார்ம் மோசமானால், கங்குலி அப்பொழுது மிக நன்றாக விளையாடிக்கொண்டிருந்தால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

0 Comments:

Post a Comment

<< Home