Monday, December 26, 2005

பாக்ஸிங் டே டெஸ்ட் மாட்ச்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாளான டிசம்பர்-26ஆம் நாள் வருடா வருடம் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் நடக்கும் டெஸ்ட் போட்டிக்கு ஒரு மிகப் பாரம்பரிய வரலாறே உண்டு. அதே போல ஜனவரி 2ஆம் நாள் சிட்னியில் அடுத்த டெஸ்ட் துவங்கும். மெல்போர்ன் நகரில் நடக்கும் டெஸ்ட் போட்டி "பாக்ஸிங் டே டெஸ்ட் மாட்ச்" என காலாகாலமாக நடைபெறுகிறது.


Photo Courtesy: Cricinfo.com

கிறிஸ்துமஸ் விடுமுறை, புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பல மக்களும் கிரிக்கெட் ஆட்டத்தைக் காண ஏதுவாக இருக்கும் என இத்தகைய தேதிகள் வகுக்கப்பட்டாலும் அதை துளியும் மாற்றாமல் இத்தனையாண்டுகளாக நடத்தி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுக்கு ஒரு பெரிய "ஓ". இந்த கால கட்டங்களில் ஆஸ்திரேலிய அணி வேற எந்த நாட்டுக்கும் பயணம் செய்யாது. அதே போல எல்லா உள்நாட்டு சீசனிலும் பிரிஸ்பேன், அடிலெய்டு, ஹோபர்ட் (சமீபகாலமாக), பெர்த், மெல்போர்ன், சிட்னி என்ற ஆறு ஊர்களில் டெஸ்ட் போட்டிகள் நடக்கும்.

இதுபோலவே பொங்கலுக்கு முதல் நாள் அல்லது அதற்கு முதல்நாள் சென்னை சேப்பாக்கத்தில் டெஸ்ட் போட்டி துவங்கும். வருடா வருடம் பல வருடங்களாக நடந்த இந்த முறை டால்மியா கோலோச்சிய பிறகு சுழல் முறை, ஓட்டு போட்ட அசோசியஷனுக்கு போட்டி நடத்த பங்கு என அரசியலான பிறகு, சென்னையில் மழைநாட்களில் போட்டி வைத்து பொங்கல் நாள் டெஸ்டின் பாரம்பரியமே போய்விட்டது. இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. இந்தியா சென்னையில் பொங்கல் சமயத்தில் விளையாடிய பல டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான சில ஆட்டங்களை காணக் கிடைத்துள்ளது (இந்தியா மற்றும் எதிர் அணிகூட சில சமயங்களில்..)

இன்றைய ஆட்டத்திற்கு வருவோம். ரிக்கி பாண்டிங்கின் சதத்தைத் தவிர ஆண்ரே நெல்லின் பந்துவீச்சுக்கு 230க்கு 8 என சுருண்ட ஆஸி அணியில் மைக் ஹுஸ்ஸி மற்றும் மக்ராத்தின் (மற்றுமோர் முறை - இந்த வீரரின் பங்களிப்பு ஈடு இணையற்றது) சிறப்பான ஆட்டத்தால் ஆஸி அணி இன்று முதல் இன்னிங்க்ஸ் முடிக்கும் போது 355க்கு ஆல் அவுட். மைக் ஹுஸ்ஸி 122. பத்தாவது விக்கெட்டிற்கு மாத்திரம் 107 ரன்கள்!!!

மெல்போர்ன் ஸ்டேடியமும் மிக அழகாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சென்ற இரண்டு ஆண்டுகள் கான்கிரீட்டும், கம்பிகளுமாக காட்சி அளித்த அரங்கு இப்போது சூப்பராக உள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இணைப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக கிரவுண்டு அழகுக்காகவேனும் இந்த ஆட்டத்தைக் காணுமாறு கேட்டுக் கொள்கிறேன். (ஆஸி, தென்னாப்பிரிக்கா ஆட்டம் போனஸ் :-)) 150 ஆண்டுகள் பழைமையான இந்த ஸ்டேடியம் இப்போது ஆஸ்திரேலிய நாட்டின் ஒரு தேசிய அளவு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மெல்போர்ன் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது இந்தியா ஜெயித்த (முழங்காலில் வலியுடன் கபில்தேவ் 5 விக்கெட்டுகள் 28 ரன்களுக்கு எடுத்து) இந்த டெஸ்ட் போட்டிதான். ஸ்ரீகாந்த் - அசிம் ஹஃபீஸை ஸ்ட்ரேயிட் ட்ரைவில் சிக்ஸர் அடித்த உலக சாம்பியன்ஷிப் போட்டியும் நினைவுக்கு வரும். ((வாசிம் அக்ரம் அல்ல அது அசிம் ஹஃபீஸ் என ராஜ்குமார் கொடுத்த தகவலுக்கு நன்றி)


- அலெக்ஸ் பாண்டியன்
27-டிசம்பர்-2005

பி.கு: இன்று கிரிக்கெட் இவ்வளவு பரபரப்பாக, ஒரு நாள் போட்டி சூடுபிடிக்க, தொலைக்காட்சி ஒளிபரப்பில் ஒரு மைல்கல் என்றெல்லாம் ஆக முன்னோடியாக இருந்த கெர்ரி பாக்கர் மறைவு. அன்னாரது ஆத்மா சாந்தி அடைவதாக.

2 Comments:

Blogger rajkumar said...

Alex,

Nice article.

Please make a correction. Srikanth hit a six against Aseem Hafiz . Akram did not play in that match.

Anbudan

Rajkumar

10:50 PM  
Blogger Alex Pandian said...

Thanks Rajkumar. Corrected.

- Alex

11:38 PM  

Post a Comment

<< Home