Wednesday, December 28, 2005

கெர்ரி பேக்கர் மறைவு

ஆஸ்திரேலியாவின் PBL நிறுவனத்தின் தலைவரும், சானல் 9 தொலைக்காட்சி மூலம் கிரிக்கெட் ஒளிபரப்பில் பெருத்த மாற்றத்தைக் கொண்டுவந்தவருமான கெர்ரி பேக்கர் திங்கள், 26 டிசம்பர் 2005 அன்று காலமானார்.

கெர்ரி பேக்கர் இரண்டு விஷயங்களுக்காக முக்கியமானவர். இன்று கிரிக்கெட் வணிகபூர்வமாக மாறியதன் முதல் காரணம் பேக்கர். கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் சண்டை போட்ட பேக்கர், அதிகாரபூர்வ கிரிக்கெட்டுக்கு எதிராக, இணையாக தான் ஒரு கிரிக்கெட் லீகை உருவாக்குவேன் என்று சபதம் பூண்டார். அதையடுத்து உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வீரர்களை எக்கச்சக்கமான சம்பளத்தில் தன் லீகில் விளையாட அழைத்தார். இது நடந்தது 1977-ல்.

பேக்கரின் தரகர்களாக இந்த விவகாரத்தில் ஈடுபட்டது இயான் சாப்பல் (ஆஸ்திரேலியா), டோனி கிரேக் (இங்கிலாந்து) மற்றும் ரிச்சி பெனாட் (ஆஸ்திரேலியா). அண்ணன் சாப்பல் தலைமையில் அவரது தம்பியும் தற்போதைய இந்திய அணிப் பயிற்சியாளருமான கிரேக் சாப்பல் உண்டு. இயான் சாப்பல் தலைமையில் ஓர் ஆஸ்திரேலிய அணியும் டோனி கிரேக் தலைமையில் உலக அணியும் ஒருவரை ஒருவர் எதிர்த்து விளையாடுவதாகவும், ரிச்சி பெனாட், அவரது நிறுவனம் மூலம் இந்தப் போட்டிகளை நடத்துவார் என்றும், இந்தப் போட்டிகள் சானல் 9 தொலைக்காட்சி மூலம் ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்பப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

உலகெங்கிலுமாகச் சேர்த்து 50க்கும் மேற்பட்ட முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பேக்கர் சர்கஸில் இணைந்தனர். இது உலக கிரிக்கெட் வாரியங்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது. ஐசிசி (அப்பொழுது எந்த அதிகாரமும் இல்லாத வெத்துவேட்டு) தலைமையில், இந்த ஆட்டங்களில் ஈடுபடும் கிரிக்கெட் வீரர்கள் அவரவர் நாடுகளுக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தகுதியற்றவர்களாவார்கள் என்று அறிவித்தனர். இதை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மூவர் - டோனி கிரேக், ஜான் ஸ்னோ, மைக் பிராக்டர் - எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

கிரேக் அண்ட் கோவின் வாதம் என்னவென்றால் "அவர்களுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் எந்த ஒப்பந்தமும் இல்லை. (அந்தக் காலத்தில் விளையாட்டு வீரர்களுக்கு ஒப்பந்தம் ஏதும் கிடையாது.) அவர்களுக்கு மாதச்சம்பளம் என்று ஏதும் கிடையாது. அதுவும் அவர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் விளையாடாத குளிர்கால மாதங்களில்தான் ஆஸ்திரேலியாவில் விளையாடுகின்றனர். எனவே இந்த விளையாட்டில் இவர்கள் ஈடுபடுவது கூடாது என்றால் அது "restraint of trade" என்னும் வகையைச் சார்ந்தது, அநியாயமானது; தனி மனிதன் பணம் சம்பாதிக்கும் வழியை நியாயமற்ற முறையில் தடுக்கக் கூடியது."

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த மூவரையும் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை செய்யக்கூடாது என்றும் நீதிமன்றத்தின் செலவுகளுக்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஐசிசி ஆகியவை மொத்தமாக 200,000 பவுண்டுகள் கட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

தொடர்ந்து உலகெங்கிலும் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்கள் தரத்தில் குறைவுபட்டன. இந்திய வீரர்களைத் தவிர பிற நாடுகளில் கிரிக்கெட் வீரர்கள் பேக்கர் சர்கஸில் விளையாடினர். காவஸ்கருக்கு வாய்ப்பு வந்ததாகவும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சொல்வர். (ஆனாலும் ஒரு வலுவான இந்திய அணி, ஆஸ்திரேலியா சென்று வலுவற்ற ஆஸ்திரேலிய அணியிடம் மோதி மண்ணைக் கவ்வியது என்பது சரித்திர நிகழ்வு!)

இந்தச் சண்டை மூன்று வருடங்கள் நீடித்தது. பேக்கரும் நிறையப் பணத்தைத் தொலைத்தார். ஆனால் ஆஸ்திரேலியா Vs உலக அணிப் போட்டிகள் பலவும் மிக சுவாரசியமாக இருந்தன. பிற நாடுகளிலும் சூப்பர் ஸ்டார்கள் இல்லாததால் கிரிக்கெட் சுவாரசியம் இன்றி இருந்ததோடு மட்டுமல்லாமல், பண வரவும் வெகுவாகக் குறைந்தது.

இதையடுத்து பேக்கரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் சண்டைகளை மறந்து கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆஸ்திரேலிய வாரியம் அடுத்த சில வருடங்களுக்கான கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை பேக்கரின் நிறுவனத்துக்கே கொடுக்க ஒப்புக்கொண்டது. அத்துடன் பேக்கர் தொடரில் பரிசோதிக்கப்பட்ட சில விஷயங்களும் ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஒருநாள் போட்டிகளில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அவை:
* 30 யார்ட் வட்டம்; பந்துத் தடுப்புக் கட்டுப்பாடு
* விளையாட்டு வீரர்களுக்கு வண்ண உடை
* பகல்-இரவு ஆட்டம்; விளக்கு ஒளியில்

இந்த மாற்றங்கள் சிறிது சிறிதாக உலகெங்கிலும் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்களுக்குள் புகுந்தன. இப்பொழுது வெள்ளை உடையில் ஒருநாள் போட்டி நடப்பது அரிதாகிவிட்டது!

பேக்கர் மற்றொரு விஷயத்துக்காகவும் நினைவில் கொள்ளத்தக்கவர். உலகெங்கிலும் தொலைக்காட்சித் துறையில் தன் முத்திரையைப் பதித்த ஆஸ்திரேலியரான ரூப்பர்ட் மர்டாக்கை தன் கொல்லைப்புறத்தில் இரண்டாம் இடத்தில் வைத்திருக்கும் சாமர்த்தியம் கெர்ரி பேக்கருக்கு இருந்தது! ஆனால் பேக்கரையும் மீறி உயிர்வாழும் மர்டாக் நாளை ஆஸ்திரேலியாவை விழுங்கினாலும் விழுங்கி விடலாம். பேக்கர் இருந்தவரையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தொலைக்காட்சி உரிமத்தை அவருக்கே கொடுத்துவந்தது. இனி என்ன ஆகும் என்று பார்ப்போம்!

பேக்கர் 2000வது வருடத்தில் இந்தியாவிலும் கால் பதிக்கலாம் என்று நினைத்தார். இந்தியாவில் இரண்டு தவறுகளைச் செய்தார். தூரதர்ஷனுடன் சேர்ந்து கிரிக்கெட் ஆட்டங்களின் ஒளிபரப்பைத் தயாரிப்பது; தூரதர்ஷனின் ஆள்களுக்கு ஒளிபரப்பு பற்றி சொல்லித் தருவது. இது படுதோல்வியில் முடிந்தது. நம் தூரதர்ஷனின் கேமராமேன்களுக்கு இதிலெல்லாம் ஆர்வம் இல்லை! இரண்டாவதாக ஹிமாச்சல் ஃப்யூச்சரிஸ்டிக் நிறுவனத்தில் பேக்கர் 1040 கோடி ரூபாய்கள் முதலீடு செய்து 10% பங்குகளைப் பெற்றார். இந்த நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபடுவதாக முடிவு செய்தார். ஆனால் அவர் தேர்ந்தெடுத்த ஆசாமிகள்.... என்ன சொல்ல, அவ்வளவு தரமானவர்கள் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம் (அதற்கு மேல் சொன்னால் அது slander, libel என்று ஆகும்).

இந்தக் கல்யாணம் கருமாதியில்தான் முடிந்தது. ஒரிரு வருடங்களில் போனது போகட்டும் என்று 'துண்டைக் காணோம், துணியைக் காணோம்' என்று ஓடியே போனார் பேக்கர்.

பேக்கர் சொர்க்கத்துக்குப் போனாலும் நரகத்துக்குப் போனாலும் அங்கு எல்லோரையும் கலர் பைஜாமாவில் கிரிக்கெட் ஆடவைத்து கலகத்தை ஏற்படுத்தி தன் அதிகாரத்தை நிலைநாட்டுவார் என்றே நினைக்கிறேன்.

1 Comments:

Blogger Narain Rajagopalan said...

//பேக்கர் சொர்க்கத்துக்குப் போனாலும் நரகத்துக்குப் போனாலும் அங்கு எல்லோரையும் கலர் பைஜாமாவில் கிரிக்கெட் ஆடவைத்து கலகத்தை ஏற்படுத்தி தன் அதிகாரத்தை நிலைநாட்டுவார் என்றே நினைக்கிறேன்.//

:)))))))))))))))

பேக்க்ர் ஹிமாச்சல் ப்யுரிஸ்டிக்கில் முதலீடு செய்திருந்தார் என்பது தெரியாத சேதி. நன்றி

10:51 AM  

Post a Comment

<< Home