Tuesday, August 22, 2006

டேரல் ஹேர் (vs) பாகிஸ்தான்

லோக்கல் கிரிக்கெட்டில் அடிக்கடி இப்படி நடக்கும். நன்றாக காஜி ஆடிவிட்டு ஏதேனும் சப்பை காரணங்களுக்காக பந்து வீச மறுப்பதும், விளையாடும் இரு அணிகளில் தனக்கு பிடிக்காத அணிக்கெதிரான தீர்ப்புகளை அம்பயர் வழங்குவதும் மிகச்சாதரண விஷயம். ஆனால் ஒரு சர்வதேச ஆட்டத்தில் இப்படி நடந்தால் ...

அப்படித்தான் பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான நான்காவது கிரிக்கெட் போட்டியில் நடந்தது. முதல் இன்னிங்சில் 173 ரன்களுக்குள் இங்கிலாந்தை சுருட்டிய பாகிஸ்தான் அணி பதிலுக்கு 504 ரன்கள் எடுத்து வலுவான நிலையெடுத்தது. இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்சின் போது பாகிஸ்தான் அணி பந்தை சேதப்படுத்தியதாக கூறி வேறொரு பந்தினை தேர்ந்தெடுக்க முடிவு செய்த நடுவர் டேரல் ஹேர் பாகிஸ்தானின் ஸ்கோரில் ஐந்து ரன்களை பெனால்டியாக குறைக்கவும் செய்தார் இங்கிலாந்திற்கு ஐந்து ரன்கள் வழங்கினார். தேநீர் இடைவேளையின் போது பெவிலியனுக்கு சென்ற பாகிஸ்தான் அணியினர் மீண்டும் மைதானத்துக்குள் வராமல் தங்கள் எதிர்ப்பை காட்டினர். சிறிது நேர குழப்பத்துக்கு பின்னர் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக எதிரணி ஆடுகளத்துக்கு வராததால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்து வெளியேறினர். இதற்குள் சமாதனமடைந்த பாகிஸ்தான் அணி ஆடுகளத்துக்கு திரும்பினால் நடுவர்கள் வரமறுத்தனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது என அறிவித்தது இறுதி முடிவு என அறிவிக்கப்பட்டது. கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் கேவலமான ஒரு நிகழ்வு அரங்கேறியது.

ஆடுகளத்தை பொறுத்தளவில் நடுவரின் தீர்ப்பு இறுதியானது என்பதும், அவ்வாறே அவர் முடிவில் ஏதேனும் வேறுபாடுகள் ஆட்டம் முடிந்தவுடன் முறைப்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடன் கொண்டு செல்வதுதான் முறையான நடவடிக்கையாக இருந்திருக்கும். இதனை விடுத்து சிறுபிள்ளைகள் போல அறையில் அமர்ந்து கொண்டு வரமறுப்பது, கிரிக்கெட்டை அவமதிப்பது மட்டுமன்றி, போட்டியைக்காண நேரில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களையும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பை பார்த்த இலட்சக்கணக்கான ரசிகர்களையும் அவமதிப்பதற்கு சமமாகும். இந்த வகையில் பாகிஸ்தான் அணி மீது எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கை ஒரு முக்கிய முன்னுதரணமாக திகழும்.

அதேவேளையில் ஆடுகள் நடுவர்களின் தீர்ப்புகள் குறித்தும் அதிகாரங்கள் குறித்தும் சமீப காலங்களாகவே பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. ஆட்டத்தின் போது தவறாய் அளிக்கப்படும் ஒரு சிறு தீர்ப்பும் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும் சூழலில் நடுவர்களின் செயல்பாடுகள் குறித்த கண்காணிப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமுறை எழும்பியிருக்கிறது. குறிப்பாய் இந்த ஆட்டத்தில் அரங்கினுள் வைக்கப்பட்டிருந்த 26 கேமாரக்களிலும் பந்தை சேதப்படுத்திய காட்சி எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்த சூழலில் நடுவர் அனுமானத்தின் அடிப்படையிலே இந்த தீர்ப்பை வழங்கியிருந்தால் அது நிச்சயம் கண்டனத்துக்குரியது. ஏற்கனவே பரபரப்புக்கு பேர் போன நடுவர் டேரல் ஹேர், ஆசிய நாடுகளுக்கு எதிராய் கடுமையான தீர்ப்புக்களை வழங்குகிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. (முரளிதரனின் பந்து வீசும் முறையை குறையிருப்பதாக கூறி தொடர்ந்து நோபால்களை இவர் வழங்க, இலங்கை அணி ஆடுகளத்திலேயே கடும் எதிர்ப்பை முன்பொரு முறை கிளப்பியது). சேதமடைந்த பந்து மாற்றப்படும் போது அணித்தலைவர் என்ற முறையில் தன்னிடம் தெரிவிக்கப்ப்டவில்லை என்று இன்சமாம் குற்றம்சாட்டுகிறார். இது விதிக்கெதிரானது என்றபோதில் நடுவர்(கள்) மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படபோகிறது என்பதும் மிக முக்கியமான கவனிக்கப்படவேண்டிய விஷயம்

இப்போதைக்கு நடுவரின் தீர்ப்புதான் இறுதியானது, அதனால் பாகிஸ்தான் அணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி அறிவித்தாலும் மற்ற ஆசிய நாடுகளின் உதவியோடு கடுமையான நடவடிக்கைகளிலிருந்து பாகிஸ்தான் அணி தப்பிவிடும். அதிகபட்சமாக இன்சமாம் ஒரு டெஸ்ட் தொடர் அல்லது வருகின்ற ஒரு நாள் தொடர் முழுவதும் ஆட தடை செய்யப்படுவார். சுய சார்பற்ற எந்த அமைப்பும் எந்த வித கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்பதற்கு ஐசிசி ஒரு உதாரணமாயிருக்கிறது (மற்றொரு உதா: ஐக்கிய நாடுகள் சபை).

இதெல்லாம் ஒருபுறமிருக்க ஆட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு நான்காம் நாள் கட்டணத்தில் 40% சதவீகிதத்தையும், ஐந்தாம் நாள் கட்டணம் முழுவதையும் ரசிகர்களுக்கு திருப்பியளிப்பதாக அறிவித்திருக்கிறது. மழை வரும் எனத்தெரிந்தும் டிக்கெட்களை விற்ற (மழை வரும் எனத்தெரிந்தும் டிக்கெட்டுகளை போராடி வாங்கிய நம்மை ...) ஒரு பந்து கூட வீசப்படாத நிலையிலும் விதிமுறைகளின்படி கட்டணத்தை திருப்பித் தர இயலாது என அறிவித்த இந்திய கிரிக்கெட் சங்கங்கள், குறிப்பாய் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், இங்கிலாந்து போர்டிடம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது

Cross Posted in http://vicky.in/dhandora

Related Posts:

A lot of questions and no answers

பதிவு எண்:50. இப்படியும் ஜெயிக்கிறது இங்கிலாந்து...

Inzamam vs Darel Hair

4 Comments:

Blogger பழூர் கார்த்தி said...

சிறப்பான அலசல் விக்னேஷ், நன்றாக எழுதியிருக்கிறீர்கள் !!

***

// நடுவர் டேரல் ஹேர் பாகிஸ்தானின் ஸ்கோரில் ஐந்து ரன்களை பெனால்டியாக குறைக்கவும் செய்தார். //

இங்கிலாந்து அணிக்கு ஐந்து ரன்கள் கூடுதலாக வழங்கப்பட்டன (உதிரிகள் கணக்கில்), பாகிஸ்தானுக்கு குறைக்கப் படவில்லை என நினைக்கிறேன், செய்தித் தாளில் படித்த ஞாபகம்..

***

// முறைப்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடன் கொண்டு செல்வதுதான் முறையான நடவடிக்கையாக இருந்திருக்கும். //

ஆட்ட நாள் முடிவில் ரெப்ரியிடம் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கலாம்..

***

அம்பயரும் ஆதாரமின்றி பாகிஸ்தான் அணியை தண்டித்ததும் தவறே..

***

// சுய சார்பற்ற எந்த அமைப்பும் எந்த வித கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்பதற்கு ஐசிசி ஒரு உதாரணமாயிருக்கிறது (மற்றொரு உதா: ஐக்கிய நாடுகள் சபை). //

மிகவும் ரசித்த வரிகள் :-)

***

இவ்வுளவு பணம் சம்பாதிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம், மேட்ச் கேன்சலானால் பணத்தை திரும்பி கொடுக்காமல் அழும்பு பண்ணுவது ரொம்ப ஓவர்..

2:39 AM  
Blogger Vajra said...

விக்னேஷ் அவர்களே,

ஒரு ஐந்து ரன் களுக்காக ஏதோ சுய மரியாதை, மானப்பிரச்சனை ஆக்கியது பாகிஸ்தான் தவறு...தொடர்ந்து ஆடியிருந்தால் ஆட்டத்தில் ஜெயித்திருக்கலாம்...பின்பு அந்த அம்பயர் தீர்ப்பை சாதகமாக ICC ல் முறையிட்டு திருப்பியிருக்கலாம்...

ஹேர் ஒரு ரேசிஸ்ட் என்றால் பாகின் சரித்திரமும் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லையே...ரிவர்ஸ் ஸ்விங் ஆகும் பந்தை பல ஆட்டங்களில் எதிர் அணியினர் மாற்றியுள்ளனர்...இம்ரான் கான் இருந்த சமயத்திலிருந்து அது நடந்து தான் வந்துள்ளது...

//
இதெல்லாம் ஒருபுறமிருக்க ஆட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு நான்காம் நாள் கட்டணத்தில் 40% சதவீகிதத்தையும், ஐந்தாம் நாள் கட்டணம் முழுவதையும் ரசிகர்களுக்கு திருப்பியளிப்பதாக அறிவித்திருக்கிறது. மழை வரும் எனத்தெரிந்தும் டிக்கெட்களை விற்ற (மழை வரும் எனத்தெரிந்தும் டிக்கெட்டுகளை போராடி வாங்கிய நம்மை ...) ஒரு பந்து கூட வீசப்படாத நிலையிலும் விதிமுறைகளின்படி கட்டணத்தை திருப்பித் தர இயலாது என அறிவித்த இந்திய கிரிக்கெட் சங்கங்கள், குறிப்பாய் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், இங்கிலாந்து போர்டிடம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது
//

அது சரி, நம்மாளுகளுக்கு புத்தியில்ல...அத்த கொஞ்சம் நல்லாவே அடிக் கோடு போட்டுச் சொல்லுங்க...!! திருப்பித் தருவேன் என்று உறுதி மொழியுடன் டிக்கட் வாங்கவேண்டும்...

3:02 AM  
Blogger Vignesh said...

// இங்கிலாந்து அணிக்கு ஐந்து ரன்கள் கூடுதலாக வழங்கப்பட்டன (உதிரிகள் கணக்கில்), பாகிஸ்தானுக்கு குறைக்கப் படவில்லை என நினைக்கிறேன், செய்தித் தாளில் படித்த ஞாபகம்..

ஆம் இங்கிலாந்துக்கு ஐந்து ரன்கள் அதிகமாக வழங்கப்பட்டது என்பதே சரி. தவறான தகவலுக்கு Sorry.

6:35 AM  
Blogger வைசா said...

முதல் நாளன்று இங்கிலாந்தின் முதலாவது இன்னிங்ஸ் முடிவடைந்த பிறகு, பந்தை நடுவர்கள் பார்த்த போது அது ஊனப்படுத்தப் பட்டுள்ளதாக தீர்மானித்தார்களாம். அதனால்தான் இரண்டாவது இன்னிங்ஸில் அப்படி கவனித்துக் கொண்டு வந்தார்களென்றும், பந்து ஊனப்படுத்தப்பட்டு விட்டதாகக் கருதினார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

வைசா

8:10 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home