Saturday, December 03, 2005

டெஸ்ட் தரவரிசை -- ஒரு பார்வை ...

இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் இரண்டாவது நாளாக இன்றும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இனி மழை பெய்யாமல் இருந்தால் நாளை ஆட்டம் நடக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருக்கின்றனர். ஆனால் பெய்த மழையையும் தேங்கிய தண்ணீரையும் பார்க்கும் போது ஆட்டத்திற்கான வாய்ப்பு மிக குறைவாகவே இருப்பதாக கருதுகிறேன். ஆனால் மீதமுள்ள மூன்று நாள் ஆட்டமும் தடையில்லாமல் நடந்தால் முடிவு தெரிவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

இதற்கிடையே இன்று பாகிஸ்தான் இங்கிலாந்துக்கெதிரான ஆட்டத்தில் இன்னிங்க்ஸ் வெற்றி பெற்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. பத்ரி சொன்னது போல உணவு இடைவேளை வரை டிரா செய்யும் வகையில் ஆடிய இங்கிலாந்து அணியினர் அக்தர், கனேரியாவின் பந்து வீச்சில் தாக்கு பிடிக்க இயலாமல் கடைசி 7 விக்கெட்களை 43 ரன்களுக்கு பரிதாபமாக பறிகொடுத்து தோல்வியை தழுவியுள்ளனர். தொடரையும் 2-0 என்ற ரீதியில் பறிகொடுத்துள்ளனர்.

ஆனால் இங்கிலாந்தின் இந்த தோல்வி ஒரு வகையில் இந்திய அணிக்கு நல்லதாகவே அமைந்துள்ளது. ஏற்கனவே ஒருதின ஆட்டத்தின் தரவரிசையில் பரிதாபமான நிலையிலிருந்து தொடர் வெற்றிகளால் நான்காவது நிலைக்கு முன்னேறிய இந்திய அணி, டெஸ்ட் ஆட்டத்தின் தரவரிசையிலும் இரண்டாமிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகமாயுள்ளது. இந்த தொடரின் தோல்விக்கு பின் இங்கிலாந்து தரவரிசையில் 113 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்திலுள்ளது. இந்தியா தற்போது 112 புள்ளிகளுடன் மூன்றாவதிடத்திலுள்ளது. இலங்கைக்கெதிரான தொடரில் இலங்கை பெறும் வெற்றியை விட குறைந்தது ஒரு வெற்றியை அதிகமாய் பெற்றால் கூட இந்தியா இரண்டாமிடம் பெற்று விடும். மாறாக தொடர் டிரா ஆனாலோ இல்லை இந்திய தொடரை இழந்தலோ இந்திய அணியின் தரவரிசையில் எந்த மாற்றமுமிருக்காது. இந்தியா இரண்டாமிடம் பெற்றால் டெஸ்ட் தரவரிசை அறிமுகம் செய்த பின் இந்திய அணி பெறும் அதிகபட்ச புள்ளிகளாக அது இருக்குமென தெரிகிறது. அதேவேளையில் தற்போது ஏழாம் நிலையிலிருக்கும் இலங்கை அணிக்கு தொடர் வெற்றி நான்காமிடத்தையும் , தொடர் டிரா ஐந்தாமிடத்தையும் பெற்றுத்தரும்.

காத்திருப்போம்....

மேலும் டெஸ்ட் தரவரிசை குறித்த முழு விவரங்களுக்கு இங்கே கிளிக்கவும்.

0 Comments:

Post a Comment

<< Home