Saturday, December 03, 2005

இலங்கையின் சதாசிவம் பற்றி

கிரிக்கின்ஃபோவில் ஸ்ரீராம் என்பவர் சதாசிவம் பற்றி அற்புதமாக எழுதியிருக்கிறார்.

சதாசிவம் பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். கொழும்புவுக்குப் பலமுறை செல்லும்போது அங்கு நண்பர் ஒருவர் - கிரிக்கெட் மீது மோகம் கொண்ட சிவில் சர்வீஸில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிங்களவர் - சதாசிவம் பற்றி ஒருமுறை பேசினார். சதாசிவத்தின் மொடாக்குடிப் பழக்கத்தைப் பற்றி, ஆனால் அதே சமயம் 'ஸ்டெடி'யாக கையில் மட்டையைப் பிடித்து ஸ்கொயர் கட் அடிப்பதைப் பற்றி. அப்பொழுது சேப்பாக்கத்தில் சதாசிவத்தின் ஆட்டத்தைப் பற்றியும் அவர் எடுத்த இரட்டை சதத்தைப் பற்றியும் நிறையப் பேசினார்.

எம்.ஜே.கோபாலன் ட்ராபி பற்றி தனியாக எழுத வேண்டும். இப்பொழுது வேண்டாம். ஆனால் சதாசிவம் ஜெயிலுக்கு போனதைப் பற்றி எழுத வேண்டும். கிரிக்கின்ஃபோ கட்டுரையிலிருந்து...
சதாசிவம் தன் மனைவியை அம்மிக்கல்லால் மண்டையில் அடித்துக் கொன்றார் என்று குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஆனால் பிரபல வழக்கறிஞர் டாக்டர் கால்வின் டி சில்வா சதாசிவத்தின் சார்பில் வாதாடி, அந்தக் கொலையைச் செய்தது சதாசிவத்தின் வீட்டு வேலைக்காரர்தான் என்று நிரூபித்தார். விடுவிக்கப்பட்ட சதாசிவத்தை அவரது ரசிகர்கள் தோள்களில் சுமந்து அழைத்துக்கொண்டு போனார்கள்.

சதாசிவம் ஜெயிலில் இருந்தபோது இலங்கைக்கு வந்திருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியின் உறுப்பினர்கள் அவரை ஜெயிலில் சந்தித்தார்கள். அப்படிச் சந்தித்தவர்களில் கேரி சோபர்ஸும், பிராங்க் வொர்ரெலும் அடங்குவர். ஆனால் சதாவைச் சந்தித்த அவரது நண்பர் ஒருவர் ஞாபகத்திலிருந்து சொன்னது மிகவும் சுவாரசியமானது. சதாவைச் சந்திக்க அவரது நண்பர் ஆல்ஃபிரட் மொரகோடா சென்றிருந்தார். அவரிடம் சதா தன்னைப் பற்றி பிற நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தார். பின் ஆல்ஃபிரடின் மனைவி தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று விசாரித்தாராம்.

ஆல்ஃபிரட், தன் மனைவி சதா குற்றவாளி என்று நினைப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

இறுதியில் ஆல்ஃபிரட் வீட்டுக்குப் போகும்போது சதா ஆல்ஃபிரடின் மனைவியிடம் சொல்லுமாறு சொன்னாராம்: "என்னோட கணக்குல அடுத்து இருக்கறது உங்க மனைவிதான்!"

0 Comments:

Post a Comment

<< Home