Sunday, October 30, 2005

ஜெய்ப்பூரில் தீபாவளி பட்டாசு

முதலிரண்டு ஆட்டங்களையும் பார்க்க முடியவில்லை, ஆனால் இந்த ஆட்டத்தில் இரண்டாவது பாதியையாவது தொலைக்காட்சியில் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். டெண்டுல்கர் திரும்பி வந்து விளையாடும் நேரம் அவரது க்ரிப் எப்படி இருக்கிறது, மட்டை கனம் குறைந்துள்ளதா, கால்கள் நகர்த்துவதில் ஏதாவது மாறுதல் உள்ளதா, ஷாட் தேர்ந்தெடுப்பதில் ஏதாவது புதுமை உள்ளதா - இதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

காலையில் அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது, எனவே காலையில் இலங்கை பேட்டிங் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அட்டப்பட்டு டாஸில் ஜெயிக்க நான் நினைத்தபடியே நடந்தது. இந்த ஆடுகளத்தில் 275 ரன்கள் நிச்சயம் உண்டு என்றுதான் ரேடியோ வர்ணனையாளர்களும் (ரவி சாஸ்திரியும்) சொன்னார்கள். ஆனால் முதல் முப்பது ஓவரில் இந்தியாவின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. விக்கெட்டுகளைப் பெறாவிட்டாலும் ரன்களை சிறிதும் கொடுக்கவில்லை. இலங்கை 10 ஓவரில் 51/1, 20 ஓவரில் 77/1, 30 ஓவரில் 117/2 என்ற கணக்கில் இருந்தது. 30வது ஓவரின் போது அணியின் ரன் ரேட் வெறும் 3.9!

பொதுவாக, அணிகள் தாம் முதல் 30 ஓவர்களில் எடுத்த எண்ணிக்கையையாவது அடுத்த 20 ஓவர்களில் எடுக்க முனைவார்கள். அப்படிப் பார்த்தால் இலங்கை 250ஐயே தொடாது. இன்றும் ஜெயசூரியா அதிக நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. அகர்கர் வீசிய அற்புதமான ஓவரில் அந்த விக்கெட் விழுந்தது. ஜெயசூரியா ஆக்ரோஷமான தனது ட்ரேட்மார்க் அடியின் மூலம் கவர் திசையில் நான்கு ரன்களைப் பெற்றார். அடுத்த இரண்டு பந்துகளும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்து உள்நோக்கி ஸ்விங் ஆகி கால் காப்பில் பட்டது. இரண்டு முறையும் எல்.பி.டபிள்யூ அப்பீல், ஆனால் அவுட் கொடுக்கப்படவில்லை. அடுத்த பந்தும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்தது, ஆனால் அதிகமாக எழும்பவில்லை. ஜெயசூரியா வெட்டி ஆடப் போனார், ஆனால் பந்து உள்விளிம்பில் பட்டு அவர் பவுல்ட் ஆனார். மோசமான ஃபார்மில் இருந்த அட்டபட்டு ஜெய் பிரகாஷ் யாதவின் பந்தில் விக்கெட் கீப்பர் தோனியிடம் பிடிகொடுத்து அவுட்டானார்.

அதன்பிறகு விக்கெட் விழ வெகு நேரம் ஆனது. மிகவும் மெதுவாக, ஆனால் கவனமாக சங்கக்கார-ஜெயவர்தனே ஜோடி ரன்களைச் சேர்த்தது. சில கேட்ச்கள் ஆளரவமற்ற பகுதிகளில் விழுந்தன. திராவிட் ஒரு கேட்ச் விட்டார். ஹர்பஜன் தன் பந்தில் தானே ஒரு கேட்ச் விட்டார் என்று நினைக்கிறேன்.

சரியாக 30 ஓவர்கள் தாண்டியதும் ஜெயவர்தனேதான் முதலில் ஆக்ஸிலரேட்டரை அழுத்தினார். அடுத்த பத்து ஓவர்களில் இலங்கை பெற்ற ரன்கள் 8, 8, 9, 3, 9, 4, 11, 8, 7, 10 = 77! முக்கியமாக அடி வாங்கியவர் முரளி கார்த்திக். கார்த்திக்குக்கு பத்து ஓவர்களையும் கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்த திராவிட், சேவாக், டெண்டுல்கர் இருவரையும் பந்து வீச அழைத்ததில் அவர்களும் எக்கச்சக்கமாக ரன்களைக் கொடுத்தனர். கடைசி பத்து ஓவர்களில் இலங்கை பெற்ற ரன்களோ 104! இர்ஃபான் பதான் இந்த நேரத்தில் வீசிய எல்லா ஓவர்களிலும் ரன் மழைதான். ஹர்பஜன் ஒருவருக்குத்தான் ஏற்றுக்கொள்ளக்கூடிய பவுலிங் புள்ளிவிவரம் - 10-0-30-0. ஜெயவர்தனே 71-ல் அவுட்டாக, சங்கக்கார கடைசிவரை அவுட்டாகாமல் இருந்து மஹரூஃபின் துணையுடன் அணியை 298க்குக் கொண்டு சென்றார்.

சங்கக்கார அற்புதமாக ஆடினார். ஆனால் பிரயோஜனமில்லாமல் போய்விட்டது.

இந்தியா மிகவும் மோசமான சேஸிங் அணி. 225 இலக்கு என்றால் கூட அதையும் சொதப்பும். அதுவும் டெண்டுல்கர் சேஸ் நேரத்தில் நின்றாடுவது கிடையாது. சேவாகும் அப்படியே. இன்று என்ன செய்யப்போகிறார்கள்? நான் வீட்டுக்குப் போய்ச்சேர்வதற்கு முன்னமேயே முதல் ஓவரிலேயே டெண்டுல்கர் ஆஃப் ஸ்டம்புக்கு வெகு வெளியே சென்ற - விட்டிருந்தால் வைட் - பந்தைத் துரத்திச் சென்று கிட்டத்தட்ட இரண்டாம் ஸ்லிப் முன்னால் கேட்ச் கொடுத்தார். சங்கக்கார அற்புதமான கேட்ச் பிடித்தார். திராவிட் ஒவ்வோர் ஆட்டத்திலும் ஒரு புது 3-ம் எண் ஆட்டக்காரரை அனுப்புகிறார். இம்முறை மஹேந்திர சிங் தோனியை அனுப்பினார்.

காரணம் புரிந்தது. முதல் ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. அதனால் இர்ஃபான் பதானை பிஞ்ச் ஹிட்டர் என்ற ரூபத்தில் அனுப்பினார்கள். இந்தியா மீது எந்த அழுத்தமும் இல்லை. அது ஒரு சர்ப்ரைஸ் மூவ். இரண்டாம் ஆட்டம் - யார் வேண்டுமானாலும் இறங்கியிருக்கலாம். ஜெய் பிரகாஷ் யாதவை அனுப்பினார்கள். அவர் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை, தேவையும் இருக்கவில்லை. இன்றோ மாபெரும் இலக்கை அடைய வேண்டுமானால் ரன்களும் வேகமாக வேண்டும், விக்கெட்டையும் இழக்கக் கூடாது. அதற்கு பதானை அனுப்புவதை விட தோனியை அனுப்புவது உசிதம். சேவாக், தோனி இருவருமே அடித்தாட வேண்டும் என்று எதிர்பார்த்தார்களோ என்னவோ...

ஆனால் தோனியின் ஆரம்பத்தைப் பார்த்த சேவாக் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். தோனியின் ஆட்டத் தொடக்கம் வித்தியாசமாக இருந்தது. ஒன்றிரண்டு பந்துகள் தடுத்தாடுவார், பின் ஒரு சிக்ஸர். சமிந்தா வாஸ் வீசிய இரண்டாவது, மூன்றாவது ஓவர்கள் ஒவ்வொன்றிலும் தோனி கவர் திசைக்கு மேல் சிக்ஸ் அடித்திருந்தார். மறு பக்கம் தில்ஹாரா ஃபெர்னாண்டோ நன்றாக வீசினார். அட்டபட்டு வாஸுக்கு பதில் மஹரூஃபைப் பந்து வீச அழைத்தார். தோனி அவரையும் பந்து வீச்சாளர் தலைக்கு மேலாக ஒரு சிக்ஸ் அடித்தார். அதே ஓவரில் சேவாகுக்கு ஒரு நான்கு, தோனிக்கு ஒரு நான்கு. அவ்வளவுதான். எட்டாவது ஓவரில் இந்தியாவின் 50. பத்தாவது ஓவரில் இந்தியா 75/1.

இந்த நிலையில் அட்டபட்டு பவர்பிளே-2ஐ எடுக்கவில்லை. பந்துத் தடுப்பு வியூகத்தைத் தளர்த்தி, முரளிதரனைப் பந்துவீச அழைத்தார். அவரது நோக்கம் என்னவென்றால் தோனி ஏதாவது தப்பு செய்து முரளியிடம் விக்கெட்டை இழப்பார், அப்பொழுது பவர்பிளே-2ஐக் கொண்டுவரலாம் என்பதே. ஆனால் தோனி, சேவாக் இருவருமே முரளிக்கு எதிராக எந்த ரிஸ்க்கையும் எடுக்கவில்லை. பந்துக்கு ஒரு ரன், இரண்டு ரன்கள் என்று தட்டித் தட்டி ரன்கள் பெற்றனர். ஆனால் நிகழ்வுக்கு மாறாக முரளியின் பந்துவீச்சில் சேவாக் எல்.பி.டபிள்யூ ஆனார். தொலைக்காட்சி ரீப்ளேயில் எனக்கு அவ்வளவு திருப்தியில்லை. சேவாகின் துரதிர்ஷ்டம். இந்தப் பந்து லெக் ஸ்டம்பில் விழுந்தது, ஒருவேளை அதற்கு வெளியே கூட விழுந்திருக்கலாம். 99/2, 14.5 ஓவரில். அப்பொழுது தோனி 50 பந்துகளில் 56 ரன்கள் பெற்றிருந்தார், 6x4, 3x6.

அடுத்து அணித்தலைவர் திராவிட் நடுவே வந்தார். தோனி தன் சிக்ஸ் தாகத்தை மறக்கவில்லை. உபுல் சந்தனாவின் அடுத்த ஓவரில் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸ் பறந்தது. என்ன செய்வதென்று தெரியாத நிலையில் அட்டபட்டு பவர்பிளே-2ஐத் தொடங்கினார். மீண்டும் தடுப்பு வியூகம் உள்வட்டத்துக்குள். இப்பொழுது தோனி இன்னமும் இலகுவாக ரன்கள் பெறத் தொடங்கினார். சந்தனாவைப் பின்னிப் பெடலெடுத்தார்... முரளியையும் விட்டுவைக்கவில்லை. சில டென்னிஸ் ஷாட்களும் உண்டு இதில். பல ஷாட்கள் பார்க்கக் கொடூரமாக, அசிங்கமாக இருந்தன. பல அற்புதமாக இருந்தன. ஒரு பந்தை கிட்டத்தட்ட புல் ஷாட் அடிப்பது போல அடித்து லாங் ஆஃப் திசையில் (ஆம்!) நான்கைப் பெற்றார்! பவர்பிளே-2 முடியும்போது - 21 ஓவரில் - இந்தியா 155/2 என்ற எண்ணிக்கையில் இருந்தது. ரன் ரேட் 7.38!

அட்டபட்டு இப்பொழுது பவர்பிளே-3ஐ எடுக்க விரும்பவில்லை. மீண்டும் வியூகத்தைத் தளர்த்தி எப்படியாவது தோனியை அவுட்டாக்கி விடலாம் என்று பார்த்தார். ஆனால் நடக்கவில்லை. 85 பந்துகளில் தனது சதத்தைப் பெற்றார் தோனி. (10x4, 5x6).

அட்டபட்டு, 28வது ஓவரில் மீண்டும் முரளியைப் பந்துவீச்சுக்குக் கொண்டுவந்தார். அத்துடன் பவர்பிளே-3ஐ எடுத்தார். இந்த ஓவரில் திராவிட் மிக மோசமான தவறைச் செய்தார். பந்தின் வேகத்தைக் கணிக்காமல் அதை ஃப்ளிக் செய்யப்போய், முரளிக்கே எளிதான கேட்சைக் கொடுத்தார். இந்தியா 185/3.

இது மோசமான கட்டம். தோனி சதம் அடித்துவிட்டதால் எந்நேரமும் அவுட்டாகி விடுவார் என்று நினைத்தேன். திராவிடும் அவுட்டானதால், இந்தியா நல்ல நிலைமையில் இருந்தாலும் இனிவரும் மாணிக்கங்கள் ஊத்தி மூடிவிடுவார்களோ என்று நினைத்தேன். யுவராஜ் வந்தது முதல் அவ்வளவு நன்றாக விளையாடவில்லை. ஆனால் தோனியோ தன் வேகத்தைக் குறைக்கவேயில்லை. மஹரூஃபை லாங் ஆன் மேல் அடித்து தன் ஆறாவது சிக்ஸரைப் பெற்றார். நான்குகள் எளிதாகவே கிடைத்தன. அடுத்து திலகரத்னே தில்ஷனை சைட் ஸ்க்ரீன் மேல் அடித்து தன் ஏழாவது சிக்ஸைப் பெற்றார். ஆனால் இந்த சிக்ஸ் அடிக்கும் முன்பாக தில்ஷனை இறங்கி வந்து அடிக்கப்போய் தன் கால்களை அதிகமாக அகட்டி வைத்தார். அதனால் கொஞ்சம் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. ஆனாலும் அடுத்த பந்தில் சிக்ஸ் அடிக்கத் தயங்கவில்லை. ஆனால் அதற்கடுத்து தனக்கு ரன்னர் தேவை என்று கேட்டுக்கொண்டார். சேவாக் ரன்னராக வந்தார். அந்த நிலையில் தோனி 130 ரன்கள் பெற்றிருந்தார். (13x4, 7x6). சரி, இவர் நிலைமை அவ்வளவுதான், சீக்கிரம் அவுட்டாகி விடுவார் என்று நினைத்தேன். இப்பொழுது அவ்வளவு மோசமான நிலைமை இல்லை. 86 ரன்கள்தான் தேவைப்பட்டது.

ஆனால் தோனி அவுட்டாக விரும்பவில்லை! அப்படியும் இப்படியும் நொண்டிக்கொண்டே ஒரு ரன், இரண்டு ரன்கள் எளிதாகப் பெற்றார். கடைசியாக யுவராஜ் மூன்று பவுண்டரிகள் பெற்றார், அதில் இரண்டு வாஸ் வீசிய ஓர் ஓவரில். தோனி சந்தனாவை இரண்டு நான்குகள் அடித்து, சீக்கிரமாக தன் 150ஐ எட்டினார். விரைவில் யுவராஜ் சிங் தில்ஷன் பந்துவீச்சில் அவுட்டானார்.

ஆனால் இப்பொழுது நிலைமை இந்தியாவுக்கு சாதகம். வெறும் 49 ரன்கள் தேவைப்பட்டன. ஏகப்பட்ட ஓவர்கள் பாக்கி. வேணுகோபால ராவ் பேட்டிங் செய்ய வந்தார். நிறையத் தடுமாறினார். தோனியும் மிகவும் அலுப்புற்றிருந்தார். அதனால் அடுத்த சில ஓவர்களில் ரன்கள் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. கடைசியாக வேணுகோபால் தில்ஷன் பந்து வீச்சில் ஒரு சிக்ஸ் அடித்து தான் மாட்டிக்கொண்டிருந்த வலையிலிருந்து மீண்டார். அதன்பின்னர் ரன்கள் கிடைப்பது அவருக்கு எளிதானது.

சந்தனா வீசிய 45வது ஓவரில் தோனி இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். அத்துடன் 175ஐத் தாண்டினார். ஒன்பது சிக்ஸர்கள் இந்திய ரெகார்ட். ஓர் ஓவர் கழித்து மீண்டும் தில்ஷன் பந்து வீச்சில் தன் பத்தாவது சிக்ஸர் மூலம் தோனி ஆட்டத்தை ஜெயித்துக் கொடுத்தார். கடைசி 53 ரன்களை கால்களை நொண்டிக்கொண்டே அடித்தார் என்பது முக்கியம். மொத்தத்தில் 145 பந்துகளில் 183 ரன்கள், 15x4, 10x6.

ஓரிரு முறைகள் தோனி அடித்த பந்துகள் சந்தனா, முரளி ஆகியோரில் கையில் பட்டு - ஆனால் கேட்ச் பிடிக்க வாய்ப்பே இல்லை - எல்லைக்கோட்டைக் கடந்தன. பலமுறை லாங் ஆன், லாங் ஆஃபில் தடுப்பாளர்கள் இருந்தும், அவர்கள் நகர்வதற்கு முன் பந்து எல்லைக்கோட்டைக் கடந்தது. 'காட்டடி' என்று சொல்வார்களே அதுதான். சேவாக் போல விளையாடுகிறார், டெண்டுல்கர் போல அல்ல. அழகான ஷாட் என்று எதையுமே என்னால் சொல்லமுடியவில்லை. எல்லாமே மடார் மடார் என்று பந்து கதறி அழுவதைப் போல அடித்ததுதான். அதனால் ஒன்றும் மோசமில்லை...

எனக்குப் பிடித்தது, தோனி சிறிதும் அவுட்டாக விரும்பாதது. கஷ்டமாக இருக்கும்போதெல்லாம் பந்துக்கு ஒரு ரன் எடுத்து அடுத்தவரை பேட்டிங் செய்ய விட்டார்.

நிச்சயமாக ஒருநாள் போட்டிகளில் தோனி இந்தியாவுக்கு மிகவும் உபயோகமாக இருப்பார். டெஸ்ட் போட்டிகளில்... இப்பொழுதைக்குக் கருத்து ஏதும் சொல்ல முடியாது.

விருதுகள் வழங்கும்போது திடீரென்று ராஜஸ்தான் கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் லலித் மோடி தோனிக்கு ரூ. 10 லட்சம் சிறப்புப் பரிசு கொடுத்தார். தோனியின் இன்றைய இன்னிங்ஸுக்கு கோடி கொடுக்கலாம்.

ஸ்கோர்கார்ட்

Friday, October 28, 2005

ஷோயப் "Show Pony" அக்தர்

கடந்த நான்கைந்து நாள்களாக நடந்து வரும் விஷயம் இது. 'பொசுக்'கென்று போய்விடும் என்பதால் எழுதவில்லை. ஆனால் பெரிதாவது போலத்தான் தெரிகிறது.

ESPN-Star Sports சானலில் Sportscentre என்னும் விளையாட்டுச் செய்தி மடல் வருகிறது. அதில் ஷோயப் அக்தரைப் பற்றிக் குறிப்பிடும்போது "நாய் வாலை நிமிர்த்த முடியாது, அதைப்போல ஷோயப் அக்தரும் திருந்த மாட்டார்" என்பதாகச் செய்தி வாசிப்பவர் குறிப்பிட்டாராம்.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் ஒழுங்கீனம் உலகறிந்தது. அவர், தான் ஓர் அணிக்கு ஆடுவதே, அந்த அணிக்குப் பெருமை சேர்ப்பது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். பாகிஸ்தான் அணி ஏற்பாடு செய்திருக்கும் பயிற்சி முகாம்களுக்கு சரியான நேரத்தில் வருவதில்லை. சர்வதெச ஆட்டங்கள் நடக்கும்போதும் கூட சரியாக ஈடுபடமாட்டார். மனதிருந்தால் வந்து பந்துவீசி விக்கெட்டுகளை எடுப்பார். சில சமயம் கோபித்துக்கொண்டு காலில் நரம்பு இழுத்துக்கொண்டது என்று சொல்லிவிட்டு டிரெஸ்ஸிங் ரூம் போய் உட்கார்ந்து கொள்வார். இவர் இதுவரை போட்டிருக்கும் சண்டைகள் உலகறிந்தது. பிடிவாதமும் முரட்டுத்தனமும் நிரம்பிய இவர் ஓர் அணிக்கு லாபம் அல்ல, நஷ்டம். பாகிஸ்தான் அணி ஏன் இன்னமும் இவரைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.

மேற்படி ESPN சம்பவம் நடக்கக் காரணம் ஷோயப், பாகிஸ்தான் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமுக்கு சரியான நேரத்துக்கு வராமல் போனதே.

ஆனால், ஷோயப் இப்பொழுது திடீரென்று ESPN மீது வழக்கு தொடுப்பேன் என்கிறார். தன்னை 'நாய்' என்று அந்த சானல் சொன்னதாகவும், அது தன்னை அவமானப்படுத்தியது போலாகும் என்றும், இதனால் தான் மான நஷ்ட வழக்கு போடப்போவதாகவும் சொல்கிறார்.

மேலும் இதில் குட்டையைக் குழப்ப, இதனால் இந்தியா-பாகிஸ்தான் உறவுக்குக் குந்தகம் வரும் என்று வேறு முழக்கம். 'நாய்வாலை நிமிர்த்த முடியாது' என்னும் சொலவடை இந்தியா பகுதிகளில் பிரசித்தம். இதன்மூலம் எதிராளி 'நாய்' என்று யாரும் சொல்வதில்லை. எதிராளியின் குணத்தைப் பற்றி மட்டும்தான் கருத்து சொல்லப்படுகிறது. ஆங்கிலத்தில் 'incorrigible' என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம். "இந்தாளு திருந்தவே மாட்டான்யா" என்று சொல்வோம் அல்லவா, அதுதான்.

ஒரு நியாயமான வக்கீல், அக்தரை பணத்தை வீணடிக்காமல் இருக்கச் சொல்வார்.

மொஹாலி ஆட்டம்

மொஹாலியில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெகு சுலபமாக வெற்றி பெற்றுள்ளது.

திடீரென இலங்கையின் ஆட்டத்தில் ஒரு சுணக்கம். பேட்டிங், பவுலிங் இரண்டுமே சரியில்லை. அத்துடன் அதிர்ஷ்டமும் இல்லை. திராவிட் மீண்டும் டாஸில் ஜெயித்து, இம்முறை பந்து வீசத் தீர்மானித்தார். இது பகல்-இரவு ஆட்டம். மொஹாலி ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சற்றே ஆதரவானது. ஆனாலும் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாகப் பந்து வீசினால்தான் பிரயோஜனம். ஆனால் இந்திய அணித் தேர்வில் சிறிது குழப்பம். கேரளாவின் ஸ்ரீசந்த் இந்த ஆட்டத்தில் விளையாடுவார் என்றே எதிர்பார்த்தேன். அவர் சூப்பர்-சப் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஹர்பஜன், முரளி கார்த்திக் இருவரும் அணியில் இருந்தனர்.

ஸ்ரீசந்துக்கான தேவை ஏதும் இருக்கவில்லை. இர்ஃபான் பதான் அற்புதமாகப் பந்து வீசினார். முதல் ஓவரிலேயே ஆபத்தான ஜெயசூரியா ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்த பந்தை வெட்டி ஆட, பந்து வானில் பறந்து டீப் தர்ட்மேனில் நின்றுகொண்டிருந்த சேவாகிடம் கேட்ச் ஆனது. ஜெயசூரியா ரன்கள் ஏதும் பெறவில்லை. கேப்டன் அட்டபட்டு சிறிது தடுமாற்றத்துடன் விளையாடி, அகர்கரின் அவுட்ஸ்விங் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். ஜயவர்தனே-சங்கக்கார ஜோடி நிலைமையைச் சரி செய்திருக்கலாம். ஆனால் ஜயவர்தனே கால் திசையில் வந்த ஒரு பந்தை ஃப்ளிக் செய்யப் போய், ஸ்கொயர் லெக்கில் நின்ற வேணுகோபால ராவிடம் எளிதான கேட்ச் கொடுத்து அவுட்டானார். பதானுக்கு இரண்டாவது விக்கெட்.

சங்கக்கார தடையேதும் இன்றி சில நல்ல ஷாட்களை அடித்தார். ஆனால் பதானை அரங்கை விட்டுத் தூக்கி அடிக்கப் போய், மிட் ஆனுக்கு எளிமையான கேட்சைக் கொடுத்தார். டெண்டுல்கர் பிடித்தார். அடுத்த பந்திலேயே ஓர் இன்ஸ்விங்கிங் யார்க்கர் - புதிதாக உள்ளே வந்த திலகரத்னே தில்ஷனுக்கு ஒன்றும் புரியவில்லை. இப்படியாக 13வது ஓவரில் 54/5 என்ற நிலையில் இருந்தது இலங்கை.

பதான் நன்றாகவே பந்து வீசினார். முக்கியமாக அவர் எடுத்த நான்காவது விக்கெட். அவருக்குக் கிடைத்த மன்ற மூன்று விக்கெட்டுகளுமே ஓசி விக்கெட்டுகள் வகையைச் சார்ந்தவை. அகர்கர் எடுத்தது ஒரு நல்ல விக்கெட். ஆக ஐந்தில் இரண்டுதான் நல்ல பந்து வீச்சினால் கிடைத்தது. எனவே அணியின் மோசமான நிலைக்கு முன்னணி மட்டையாளர்களின் பொறுப்பற்ற ஆட்டமே காரணம். இந்நிலையிலிருந்து மீள்வது கடினம், வெகு சில அணிகளால் மட்டுமே அது முடியும்.

திராவிட் ஐந்தாவது பவுலரான ஜெய் பிரகாஷ் யாதவையும் ஹர்பஜன் சிங்கையும் பந்துவீச்சுக்குக் கொண்டுவந்தார். யாதவ் ரன்கள் ஏதும் தராமல் பந்து வீசினார். ஹர்பஜன் தன் இரண்டாவது ஓவரிலேயே ஆர்னால்டை அவுட் செய்தார். மிட்விக்கெட் திசையை நோக்கி பந்தின் ஸ்பின்னுக்கு எதிராக ஷாட் விளையாடினார் ஆர்னால்ட். பந்து விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப் திராவிட் கையில் கேட்ச் ஆனது. 71/6. தேவையே இல்லாத ஒரு ரன் அவுட் மூலம் வாஸ் ஆட்டத்தை இழந்தார். 80/7.

மிகவும் மெதுவாக ஊர்ந்து ரன்கள் பெற்ற இலங்கை யாதவின் ஓர் ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை - மஹரூஃப், சோய்ஸா - இழந்தனர். முரளிதரன் வந்து கொஞ்சம் பேட்டைச் சுழற்றி மூன்று பவுண்டரிகள் அடித்தார். பின் அவரும் ஹர்பஜன் சிங்கின் ஓர் ஆஃப் பிரேக்கில் ஏமாந்து அவுட்டானார். 122 ஆல் அவுட்.

"ரோடு சரியில்ல, என்னோட கார் நாலு தடவ பம்ப்பர் மாத்த வேண்டியிருந்துச்சு, எங்கப் பாத்தாலும் ஏழைங்க, கரண்டு இல்ல, தண்ணிப் பிரச்னை... ஏன் இந்த அரசாங்கம் ஒண்ணுமே செய்ய மாட்டேங்கறாங்க..."

"அடச்சீ வாய மூடு, நீ ஒன்னோட வருமான வரிய ஒழுங்கா கட்டினியா?"

(பயப்படாதீங்க, ரேடியோல நடு நடுவுல வந்த விளம்பரம்... அதனால இன்னிங்ஸ் மாறரப்ப நம்ம பதிவுலயும் அந்த விளம்பரத்தப் போட்டேன்.)

123 ரன்கள் அடிப்பது மிகச்சாதாரண விஷயம். சேவாகும் டெண்டுல்கரும் ஒரு மார்க்கமாகத்தான் வந்தனர். சேவாக் நான்காவது ஓவரில், சோய்ஸாவின் பந்துவீச்சில் அடுத்தடுத்து 4 (புல், மிட்விக்கெட்), 6 (ஹூக், ஃபைன் லெக்), 4 (கட், பேக்வர்ட் பாயிண்ட்) என்று அடித்தார். அடுத்த வாஸ் ஓவரில் டெண்டுல்கர் 4 (ஆன் டிரைவ், மிட்விக்கெட்), 4 (கவர் டிரைவ்), 4 (பேடில் ஸ்வீப், ஃபைன் லெக்) என்று தன் திறமையைக் காட்டினார். முரளிதரன் பந்துவீச வந்ததும் முதலிரண்டு பந்துகளில் டெண்டுல்கர் அனாயாசமாக நான்குகளை அடித்தார். முதல் பந்து தூக்கி எறியப்பட்டது, இறங்கி வந்து மிட் ஆன் தலைக்கு மேலாக லாஃப்ட் செய்தார். அடுத்த பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்து தூஸ்ரா - ஸ்பின் ஆகாமல் - நேராகச் சென்றது, அதை கவர் திசையில் அடித்தாடினார். மறு பக்கம் சேவாக் சோய்ஸாவைத் துவம்சம் செய்ய ஓவருக்கு 8 ரன்களுக்கு மேல் குவிந்தன. பத்தாவது ஓவரில் இந்தியா 80 ரன்கள் இருக்கும் நிலையில் சேவாக் மஹரூஃப் பந்தில் பந்து வீச்சாளரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். அத்துடன் உணவு இடைவேளை.

இடைவேளைக்குப் பிறகு இந்தியா ஜெய் பிரகாஷ் யாதவை அனுப்பியது. அவர் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. ஆனால் டெண்டுல்கர் - பழைய டெண்டுல்கர் - முரளி, மஹரூஃப் இருவரையும் நான்குகள் அடித்து தன் அரை சதத்தைப் பெற்றார். அதற்குப் பின்னும் தொடர்ந்து ரன்களைச் சேர்த்தார். யாதவ் முரளியின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனதும் திராவிட் பேட்டிங் செய்ய வந்தார். நான்கைந்து ஓவர்கள் அதிகமாயின, ஆனாலும் 21வது ஓவரில் இந்தியா வெற்றி இலக்கை அடைந்தது. உணவு இடைவேளைக்கு முந்தைய வேகத்தில் சென்றிருந்தால் 16 ஓவர்களில் முடித்திருக்க வேண்டியது.

டெண்டுல்கர் ஆட்டம் ஒன்றுதான் பார்வையாளர்களுக்கு காசுக்குத் தீனி போட்டது.

மூன்றாவது ஆட்டத்திலிருந்தாவது இலங்கை அணியின் தரம் உயரும் என்று எதிர்பார்ப்போம்.

மற்ற செய்தியில் அடுத்த மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் கங்குலி கிடையாது என்று முடிவாகி உள்ளது. நல்ல செய்தி.

ஸ்கோர்கார்ட்

Tuesday, October 25, 2005

நாகபுரி ஆட்டம்

தினமணி நாக்பூரை விடாமல் நாகபுரி என்றுதான் குறிப்பிடும். இனி நானும் அப்படியே.

வெகு நாள்களுக்குப் பிறகு உருப்படியான கிரிக்கெட் இந்தியாவிடமிருந்து. கங்குலியை அணியை விட்டுத் தூக்கியதுமே அணிக்கு சந்தோஷம் வந்தது போல. டெண்டுல்கர் மீண்டும் முழுமையாகத் திரும்பி வந்திருக்கிறார் என்று தெரிந்ததனாலா? இல்லை, திராவிட்/சாப்பல் கூட்டணியில் அணிக்கு ஏறுமுகம்தான் என்று தோன்றிய காரணமா? தெரியவில்லை.

அத்துடன் ஆடுகளம் முதலில் பேட்டிங்குக்கு சாதகமாகவும், பின் சுழல்பந்துக்கு சாதகமாக இருந்ததும், திராவிட் டாஸில் ஜெயித்ததும் ஒரு காரணம்.

டெண்டுல்கரை சேவாகுடன் பேட்டிங்கைத் தொடங்க அனுப்பியது ஒரு காரணம் (கங்குலி இதைச் செய்திருக்க மாட்டார்?). இர்ஃபான் பதானை மூன்றாவதாக அனுப்பியது ஒரு காரணம் என்று பலரும் சொல்கிறார்கள். அது அவ்வளவு பெரிய விஷயமா என்று தெரியவில்லை. சேலஞ்சர் கோப்பையின்போது பதானை தொடக்க ஆட்டக்காரராக அனுப்பினார் சாப்பல் என்கிறார்கள். பிஞ்ச் ஹிட்டர் என்று யாராவது ஒருவரை அனுப்புவது வழமையான விஷயம்தான். ஆனால் இப்பொழுது பவர்பிளே 1, 2, 3 என்று இருக்கும்போது இரண்டு பிஞ்ச் ஹிட்டர்களைக் கூட அனுப்பலாம்.

இந்த ஆட்டத்தைப் பார்க்கவில்லை. கேட்டேன். ஆல் இந்தியா ரேடியோ கமெண்டரிதான் என்றாலும் அவ்வளவு மோசமில்லை. 'ये बी.एस.एन.एल चौका ... Connecting India!' என்று கத்திக் கத்தி கழுத்தறுத்தார்கள். "The ball is in the air and a fielder is running towards it...." என்று கத்தி, இதயத் துடிப்பை சற்றே நிறுத்தி, பின் "And that's a six" என்றார்கள். காலையில் நிறையவே சிக்சர்கள் இருந்தன. டெண்டுல்கர் தில்ஹாரா ஃபெர்னாண்டோ பந்துவீச்சில் அனாயாசமாக அடித்து ஆரம்பித்து வைக்க, அடுத்து பதான் நான்கு சிக்சர்கள் அடித்தார். பதான் அடித்த முதல் ரன்களே வாஸ் பந்தில் ஒரு சிக்சர். பின் தில்ஷன் போட்ட ஆஃப் ஸ்பின் பந்தில் ஒன்று, உபுல் சந்தனாவின் லெக் ஸ்பின்னில் இரண்டு. டெண்டுல்கரும் சந்தனா பந்தில் இன்னுமொரு சிக்ஸ் அடித்தார். மஹேந்திர சிங் தோனி இரண்டு சிக்சர்கள். எப்பொழுதும் சாதுவாக விளையாடும் திராவிட் கூட வாஸ் பந்துவீச்சில் ஓர் இன்ஸைட் அவுட் ஷாட் சிக்சர் அடித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஆக ஒன்பது முறை ஆல் இந்தியா ரேடியோ பயமுறுத்தியது.

டெண்டுல்கரும் பதானும் மிகச் சுலபமாகவே ரன்கள் சேர்த்தனர். முதலில் ஓவருக்கு ஆறு ரன்களுக்கு மேல் வந்தாலும் ரன் ரேட் ஆறுக்குக் கீழே போகத்தொடங்கியது. ஆனால் ஸ்பின்னர்கள் வந்ததும் ரன் ரேட் எகிறி - பதான் முழுப்பொறுப்பு - 6.5 என்ற அளவிலேயே இருந்தது. முரளிதரன் லேசுப்பட்ட ஆசாமி அல்ல என்றாலும் நேற்றைய ஆட்டத்தில் டெண்டுல்கர் அவரை நன்றாகவே கவனித்துக்கொண்டார். 'பேடில் ஸ்வீப்' வசமாகக் கிடைத்தது. பதான் தில்ஷன், சந்தனா போன்றவர்களை அடித்து நிமிர்த்தி விட்டார். சந்தனாவின் முதலிரண்டு பந்துகள் 4, 6. இதுநாள் வரையில் முரளியும் கூட்டாளி ஸ்பின்னர்களும் எதிராளிகளை ரன்கள் எடுக்கவிடாமல் நெருக்குவதில் சமர்த்தர்களாக இருந்தார்கள். நேற்று கூட்டாளிகள் தடுமாறியதால் முரளியால் நெருக்க முடியவில்லை. ஜயசூரியா பந்து வீசவில்லை. அவர் பேட்டிங் பிடிப்பதே சந்தேகமாக இருந்து இந்த ஆட்டத்தை ஆட வந்திருந்தார்.

ஆனாலும் பதான்-டெண்டுல்கர் ஜோடி அவசரகதியில் ஆளுக்கொரு சதம் அடிக்க வாய்ப்பிருந்தும் விட்டுவிட்டனர். இரண்டுமே எளிதான, தேவையற்ற இழப்புகள். டெண்டுல்கரின் ஆட்டத்தில் பழைய துள்ளல், ஸ்டைல் எல்லாமே வந்துவிட்டதாக வர்ணனையாளர்கள் நினைத்தனர். உண்மையாகத்தான் இருக்கவேண்டும். கவர் திசையிலும் மிட்விக்கெட் திசையிலும் பந்துகள் பறக்கின்றன என்றால், உண்மையாகத்தான் இருக்கவேண்டும்.

யுவராஜ் சிங் ரன்கள் எடுக்கத் தடுமாறினார். ஆனால் திராவிட் வந்தது முதலே ரன்களை எளிதாகச் சேர்த்தார். மஹேந்திர சிங் தோனியின் காட்டடி, திராவிடின் நுட்பமான விளையாட்டு இரண்டும் சேர்ந்து 350 என்ற இலட்சியத்தை அடைய வைத்தது.

351ஐப் பெறுவது எளிதான விஷயமல்ல. அத்துடன் ஆடுகளம் கொஞ்சம் ஸ்லோவாக விளையாடத் தொடங்கியது. பின் ஸ்பின்னும் சேர்ந்தது. இலங்கை அணித்தலைவர் அட்டபட்டு சீக்கிரமாகவே பதானிடம் அவுட்டானார். ஆனால் சங்கக்கார, ஜயசூரியாவுடன் சேர்ந்து விளாசத் தொடங்கினார். கேரளாவின் புதுப்பையன் ஸ்ரீசந்த் தன் முதல் ஆட்டத்தில் கொஞ்சம் தடுமாற ரன்கள் இங்கும் அங்கும் பறந்தன. ஆனால் ஜெயசூரியா அளவுக்கு அதிகமாகவே ரிஸ்க் எடுத்து விளையாடினார். இரண்டு பந்துகள் ஃபீல்டர்களுக்கு வெகு அருகில் கேட்சாகப் பறந்தன. ஸ்ரீசந்த்துக்கு பதில் வந்த அகர்கரும் ரன்களை எளிதாகக் கொடுத்தார். பத்து ஓவர்கள் முடிந்தபோது இலங்கையின் எண்ணிக்கை 74/1 !

இந்த நிலையில் திராவிட் அவசரமாக ஏதாவது செய்தாக வேண்டியிருந்தது. ஆட்ட விதிமுறைகளில் சில மாற்றங்கள் வந்திருக்கின்றன. அந்த மாற்றங்கள் என்னைக் கவரவில்லை. ஆனால் அந்த மாற்றங்கள்தாம் திராவிடுக்கு உதவின என்று சொல்லவேண்டும். முந்தைய விதிமுறைகள்படி முதல் பதினைந்து ஓவர்கள் தடுப்பு வியூகம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும். ஆனால் இப்பொழுது 10, 5, 5 என்று மூன்று கட்டங்களாகப் பிரித்து பந்துவீசும் அணியின் தலைவர் எப்பொழுது கட்டுப்பாடுகள் இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கலாம். திராவிட் உடனடியாக பவர்பிளேயை - தடுப்பு வியூகக் கட்டுப்பாடுகளை - விலக்கிக்கொண்டு ஹர்பஜன் சிங்கைக் கொண்டுவந்தார். 11வது ஓவரில் முன்னெல்லாம் இப்படிச் செய்திருக்க முடியாது. ஹர்பஜன் வந்த கணத்திலேயே பந்தின் வேகத்தைச் சரியாகக் கணிக்காமல் ஜயசூரியா ஷார்ட் கவரில் நின்ற திராவிடுக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அட்டப்பட்டுவும் சந்தனாவை பிஞ்ச் ஹிட்டராக அனுப்பினார். ஆனால் அவருமே ரன்கள் ஏதும் எடுக்காமல் ஹர்பஜன் பந்தில் அவுட்டாயிருக்க வேண்டியது - ஸ்டம்பிங்காக. மூன்றாவது நடுவருக்குப் போய், சந்தேகத்தின் காரணமாக, அவுட் இல்லை என்று தீர்மானிக்கப்பட்டார். திராவிட் உடனடியாக பவர்பிளே-2ஐ எடுக்கவில்லை. அடுத்த ஓவர் சேவாகுக்குக் கொடுத்தார். சங்கக்கார தூக்கி வீசப்பட்ட பந்தை பந்து வீச்சாளருக்கே கேட்சாகக் கொடுத்து ஆட்டமிழந்தார். இரண்டே ஓவர்களில் இரண்டு முக்கிய விக்கெட்டுகள் விழுந்த உடனேயே திராவிட் இரண்டு விஷயங்களை வேகமாகச் செய்தார். பவர்பிளே-2ஐக் கொண்டுவந்தார். இரண்டு புது மட்டையாளர்கள் தடுமாறுவார்கள், இந்நேரத்தில் ஓவர்களை வேகமாக வீசி மிச்சமுள்ள பவர்பிளே ஓவர்களை ஒழித்துவிடலாம்.

அத்துடன் சூப்பர் சப் முரளி கார்த்திக்கை உள்ளே கொண்டுவந்தார். சேவாக் பந்துக்கே விக்கெட் விழுகிறது, கார்த்திக் இன்னமும் நன்றாக வீசுவார் அல்லவா? ஒருமுனையில் ஹர்பஜன் அற்புதமாக வீசினார். மறுமுனையில் சேவாகுக்கு பதில் - விக்கெட் எடுத்த ஓவராக இருந்தாலும் சரி - கார்த்திக். ஹர்பஜன் சிங் பந்து வீச்சில் சந்தனா ரன்கள் அதிகம் எடுக்காமல் ஸ்டம்பிங் ஆக, உள்ளே வந்த ரஸ்ஸல் ஆர்னால்ட் மூன்றே பந்துகளில் பூஜ்யத்தில் அவுட்டாக, இந்திய அணியின் வெற்றி அப்பொழுதே நிச்சயமானது.

முதலில் கார்த்திக் நிறைய ரன்கள் கொடுத்தாலும் பின்னர் மிக அருமையாக வீசினார். அப்பொழுது ஆடுகளம் உடைய ஆரம்பித்திருந்தது. கார்த்திக் அடுத்தடுத்து ஜயவர்தனே, தில்ஷன், மஹரூஃப் ஆகியோரை அவுட்டாக்க, ஒன்பதாவது விக்கெட்டுக்காக சமிந்தா வாஸ் - லோகுஹெட்டிகே தில்ஹாரா (சூப்பர் சப்) ஆகியோர் நிறைய ரன்கள் பெற்றனர். அவர்கள் எத்தனை ரன்கள் பெற்றாலும் ஜெயிப்பது கடினம்தான். அந்த நேரத்தில் தேவையான ரன்ரேட் பத்துக்கும் மேல். திராவிட் புதுப்பையன் ஸ்ரீசந்தைக் கொண்டுவர அவரும் கடைசி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டத்தை முடித்து வைத்தார்.

ஆட்ட நாயகனாக பதான், டெண்டுல்கர், திராவிட், ஹர்பஜன் ஆகியோரில் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்திருக்கலாம். திராவிட்... அவரது அணித்தலைமைக்காகவுமாகச் சேர்த்து தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றே நினைக்கிறேன்.

இந்தியா டாஸில் ஜெயிக்காமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று சொல்வது கடினம். ஆனால் ஒரு குழுவாக விளையாடுவதே பெரிய விஷயம். மொஹம்மத் காயிஃப் மூன்றாவது ஆட்டத்துக்கு அணிக்குள் வர வாய்ப்பு உள்ளது. கங்குலி நடுவில் புகுந்து குட்டையைக் குழப்பாமல் இருக்கவேண்டும். கங்குலி, காயிஃப் இருவருக்கும் இடையில் - கங்குலி கேப்டன் இல்லை எனும்போது - யாரை உள்ளே எடுக்கவேண்டும் என்பதில் சந்தேகம் இருக்காது என்று நினைக்கிறேன். இரண்டாவது மேட்ச் சுவாரசியமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

ஸ்கோர்கார்ட்

Saturday, October 22, 2005

கங்குலியின் - இந்தியாவின் - எதிர்காலம்

இதுவரை நடந்த விஷயங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இல்லாவிட்டால், இங்கே சுருக்கமாக...

இந்திய அணித்தலைவராக இருந்த சவுரவ் கங்குலி சில மாதங்களாக மோசமாக விளையாடி வந்தார். அதையொட்டி அவர் அணியில் தொடர்வாரா என்ற கேள்வி இருந்துவந்தது. ஜான் ரைட் அணியின் பயிற்சியாளராக ஓய்வுபெற்ற பிறகு அணிப்பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆஸ்திரேலியாவின் கிரேக் சாப்பல். ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின்போது சாப்பலுக்கும் கங்குலிக்கும் இடையில் கருத்துமோதல். சாப்பல் கங்குலியின் மோசமான விளையாட்டை மனத்தில் வைத்து முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து தன்னிச்சையாக விலகி மொஹம்மத் காயிஃப், யுவ்ராஜ் சிங் ஆகிய இருவருக்கும் விளையாட வாய்ப்புகளைக் கொடுக்கலாமே என்று கங்குலியிடம் சொன்னதாகக் கேள்வி. இதை ஏற்க மறுத்த கங்குலி தான் விளையாடியதோடு மட்டுமில்லாமல், காயிஃபை விளையாடும் குழுவில் சேர்த்துக்கொள்ளவில்லை. பின் தான் ஒரு சதம் அடித்ததும், வெளிப்படையாக தனக்கும் சாப்பலுக்கும் இடையே உள்ள பிரச்னையைப் பற்றி இதழாளர்களிடம் பேசினார் கங்குலி.

தொடர்ந்து கங்குலிக்கும் சாப்பலுக்கும் இடையேயான பிளவு ஓரளவுக்கு ஒட்டு போடப்பட்டது. ஆனால் சாப்பல் கங்குலியிடம் உள்ள குறைகளை பக்கம் பக்கமாக எழுதி பிசிசிஐக்கு மின்னஞ்சல் செய்துள்ளார்! பிசிசிஐ ஒரு கூறுகெட்ட நிர்வாகம். அங்கு புரொஃபஷனல் என்று யாரும் கிடையாது. இப்பொழுதைய அலுவலகம் கொல்கொத்தாவில் உள்ளது. அங்கு வேலை செய்பவர்களுக்கு இந்திய கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தை விட தாதா கங்குலி மீதுதான் ஆர்வம். எனவே ஒரு கான்பிடென்ஷியல் மின்னஞ்சல் பகிரங்கப்படுத்தப்படுகிறது. புகைச்சல் பெரு நெருப்பாகிறது.

அணியிலும் பிளவு. ஹர்பஜன் கங்குலிக்கு ஆதரவாகப் பேசுகிறார். யுவ்ராஜ் சாப்பலுக்கு ஆதரவாக. கங்குலி, சாப்பல் இருவரையும் பிசிசிஐ வரவழைத்து, பேசி, ஒத்துப்போகச் சொல்கிறது. ஆனால் பிசிசிஐ - கூறுகெட்ட நிர்வாகம் - தனக்குள்ளே பெரும் பிரச்னையில் உள்ளது. சென்ற முறை தால்மியா இல்லாத தகிடுதத்தங்களைச் செய்து நிர்வாகத் தேர்தலில் ஷரத் பவாரைத் தோற்கடித்து தன் ஆசாமி ரன்பீர் சிங் மஹேந்திராவைக் கொண்டுவந்தார். இம்முறையும் ஏகப்பட்ட நீதிமன்றங்களில் வழக்குகள், சச்சரவுகள். இதைத்தவிர நடக்க இருக்கும் இந்தியா-இலங்கை ஆட்டங்களுக்கான தொலைக்காட்சி உரிமத்தை விற்றாகவில்லை. (பின் பிரசார் பாரதிக்கு விற்கப்பட்டது.)

திடீரென கங்குலி தனக்கும் டெண்டுல்கருக்கு நேர்ந்ததுபோல முட்டிக்கையில் வலி என்கிறார் ("டென்னிஸ் எல்போ"). தொடர்ந்து அடுத்த இரண்டு போட்டித்தொடர்களுக்கு திராவிட் அணித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். முதலிரண்டு ஆட்டங்களுக்கு கங்குலி தேர்ந்தெடுக்கப்படவில்லை. அணித்தேர்வு முடிந்ததும், கங்குலியின் டென்னிஸ் எல்போ காற்றில் கரைந்து மறைகிறது. துலீப் கோப்பை ஆட்டத்தில் கிழக்குப் பிராந்திய அணிக்காக விளையாடும் கங்குலி வடக்குப் பிராந்தியத்துக்கு எதிரான ஆட்டத்தில் நல்ல சதம் ஒன்றை அடிக்கிறார்.

----

இதுவே முன்கதைச் சுருக்கம். இனி? மூன்றாவது ஒருநாள் போட்டி முதல் கங்குலி தேர்ந்தெடுக்கப்படலாம். அதில் ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் இலங்கை, தென்ன்னாப்பிரிக்கா இரண்டுடனுமான போட்டித்தொடர்கள் முடிந்ததும் மீண்டும் அணித்தலைவர் தேர்வுக்கு போட்டி வரும். கங்குலியைப் பற்றி நாம் அறிந்த வகையில் அவர் வெற்றுக்காக்கவேனும் போராடும் குணமுடையவர். பிளிண்டாஃப் சட்டையைக் கழற்றினார் என்பதற்காக லண்டனில் சட்டையைக் கழற்றிக் கொண்டாடியவர். சாப்பல் தன்னை விலகச் சொன்னார் என்பதற்காக இதழாளர்களுக்குப் பேட்டி கொடுத்தவர். இப்பொழுது தன்னை அணித்தலைவர் பதவியிலிருந்து விலக்கியிருப்பதைக் கண்டு கொதித்துப் போயிருப்பவர். எனவே அணித்தலைமைக்குப் போட்டியிடுவார். அதற்காகக் காய் நகர்த்துவார். அதற்கு தால்மியாவின் துணையிருக்கும். சாப்பலின் துணையிருக்காது. திராவிடின் நிலைமை கஷ்டமானது. கங்குலி திராவிடைத் தன் எதிரியாகப் பார்ப்பார். வேறு வழியில்லை.

இதனால் திராவிடின் ஆட்டமும் பாதிக்கப்படும். கங்குலியை விட திராவிட் இந்தியாவுக்கு முக்கியமானவர்.

என்ன செய்யலாம்?

1. திராவிடை அடுத்த மூன்று வருடங்களுக்கு அணித்தலைவராக இப்பொழுதே அறிவிக்கலாம். அதற்குத் தகுதியானவர். அணிக்கு அதிக உபயோகமானவர்.

2. டெண்டுல்கர்! இவரை மீண்டும் அணித்தலைவராக்கலாம். இத்தனை நாள்கள் கழித்து மீண்டும் உள்ளே வரும் டெண்டுல்கர் முதிர்ச்சியடைந்திருப்பார். தன்னை விட நன்றாக ஆடும் சிலர் அணியில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்திருப்பார். இவரது முந்தைய அணித்தலைமையின்போது அணி முழுவதுமாக இவரது முதுகில் இருந்தது. ஒவ்வொரு முறை அணி தோற்கும்போதும் அதனால் டெண்டுல்கர் மீதான அழுத்தம் அதிகமானது. இப்பொழுது அப்படியல்ல. டெண்டுல்கர் அணித்தலைவராக ஆனால் கங்குலி முதல் திராவிட் வரை அனைவரும் அவர் சொல் கேட்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கங்குலி மீண்டும் அணித்தலைவராக வருவது இந்தியாவுக்கு நல்லதல்ல. அவரது கேப்டன்சி புள்ளிவிவரங்களை தயவுசெய்து யாரும் முன்வைக்க வேண்டாம். எனக்கு இந்தப் புள்ளிவிவரங்கள் நன்றாகவே தெரியும்.

கங்குலி இந்தியாவின் ஒருநாள் அணியில் பங்கேற்கலாம். இன்னமும் இரண்டு வருடங்கள் அவர் விளையாடலாம். அவரை டெஸ்ட் அணியில் சேர்க்கவேண்டிய அவசியமில்லை என்று தோன்றுகிறது. யுவ்ராஜ், காயிஃப் என்று தொடங்கி இன்னமும் பலர் உள்ளனர்.

இதையெல்லாம் மீறி கங்குலி அணித்தலைவர் பதவிக்காகப் புகுந்து விளையாடினால் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் மோசமாக இருக்கும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அணி மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும்.

முக்கியமான ஒன்று பாக்கி இருக்கிறது. ஆனால் அது இப்பொழுதைக்கு நடக்காது. பிசிசிஐ நிர்வாகத்தை முற்றிலுமாகச் சீரமைக்க வேண்டும்.