Wednesday, October 18, 2006

Welldone WestIndies :)

இந்திய கிரிக்கெட் அணி ஒரு தொடரில் ஆடுவதை வைத்து அடுத்த தொடரில் எப்படி ஆடும் என கணிக்க இயலாது என்ற குற்றச்சாட்டு பலகாலமாக உண்டு. அந்தளவுக்கு Inconsistency team. வெகுசிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் அணி, திடீரென கென்யாவுடனான தொடரில் மண்ணைக்கவ்வும். அடுத்த ஆஸ்திரேலியா தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் (நமக்கும் சேர்த்துதான்) கொடுக்கும். ஆனால் இந்திய அணியை விட அதிகமான Inconsistency உள்ள அணி ஒன்று உண்டென்றால் அது மேற்கிந்திய தீவுகள் அணிதான். ஒவ்வொரு ஆட்டத்திற்கும் ஏதோ வித்தியாசமான அணியாய் தோன்றும். பெரும்பாலும் இந்த அணி ஒன்று விசுவரூபம் எடுக்கும் அல்லது படுகுழியில் புதைந்திருக்கும். சாம்பியன்ஸ் டிராபியில் இன்றைய ஆஸ்திரேலியாவுடனான ஆட்டம் விசுவரூப வகை. இதற்கு முந்தைய ஆட்டத்தில் இலங்கையுடன் 80 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடைந்திருந்தது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங், சிறப்பான பௌலிங் என உலக சாம்பியனுக்கே அதிர்ச்சியளித்திருக்கிறது.

ஒரு கட்டத்தில் 30 பந்துகளுக்கு 32 ரன்கள் தேவை, கையில் ஐந்து விக்கெட்டுகள், ஹுஸ்ஸேவும், கிளார்க்கும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் மூன்று ஓவர்களில் ஆட்டம் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்தால் கெய்ல் அருமையாக பந்துவீசி 46வது ஓவரில் 3 ரன்களே கொடுத்து பரபரப்புக்கு பிள்ளையார் சுழி போட்டார். அடுத்த ஓவரில் Bravoவின் முதல் பந்தில் கிளார்க் அவுட்டாக எதிரிக்கு எதிரி நண்பன் முறையில், மேற்கு இந்திய தீவுகள் வெற்றி பெற வேண்டத்தொடங்கினேன். அந்த ஓவரில் ஹுஸ்ஸே அடித்த நான்கு ரன்கள் மட்டுமே கிடைத்தன. 18 பந்துகளில் 25 ரன்கள், ஆஸ்திரேலேயாவுக்கு டென்சன் ஆரம்பமாகியது. டெய்லரின் மிக முக்கிய ஓவர் அது. ஐந்தாவது பந்தில் ஹுஸ்ஸே கிளின் போல்டு. ஆறாவது பந்தில் லீ LBW முறையில் அவுட். 12 பந்துகளில் 21 ரன், 2 விக்கெட்டுக்கள் கையில்…. 6 பந்துகளில் 16 ரன், 2 விக்கெட்டுக்கள் கையில். மீண்டும் டெய்லர். முதல் பந்திலேயே கிளீன் போல்ட். மேற்கிந்திய தீவுகளின் ஒரு நாள் கிரிக்கெட்டின் முதல் ஹாட்ரிக். அதன்பின் வந்த மெக்ராத் சம்பிரதாயத்துக்கு 5 ரன்களை எடுத்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.

பத்து ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு முக்கிய வெற்றி. ஆஸ்திரேலியா கொஞ்சம் முழுத்திறனையும் காட்டியிருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கலாம் என்று தோன்றினாலும், கடைசி கட்டத்தில் அவ்வளவு சிறப்பாய் பந்துவீசிய வையும் வையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நேற்று இதே போன்ற ஒரு சூழலில் இலங்கையின் Vassம், Malingaம் சொதப்ப Abdul Razaak அடித்து விளாசி பாகிஸ்தானை வெற்றி பெற செய்தார். இந்திய சூழலில் பகலிரவு ஆட்டங்களில் அதிகமாய் இருக்க வாய்ப்புள்ள சூழலில் இரண்டாவது இன்னிங்சில் அதுவும் இது போன்ற பரபரப்பான சூழலில் வேகப்பந்து வீசுவது உண்மையிலே கடினமான விஷயம். அதை சிறப்பாக செய்த மே.தீ. வீரர்களை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஆனால் அடுத்த போட்டியிலே மீண்டும் சொதப்பவும் செய்வார்கள்.

படு அசமந்தமாயிருந்த சாம்பியன்ஸ் டிராபி நேற்றும் இன்றும் சுவாரசியமாயிருந்தது. ஆஸ்திரேலியாவும் , தென் ஆப்பிரிக்காவும் தங்கள் முதல் ஆட்டங்களில் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் மிச்சமுள்ள இரண்டு ஆட்டங்களிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழல். முழுத்திறனுடன் ஆடுவார்கள். பாகிஸ்தான் கடும் அதிர்ச்சியிலிருந்து மீண்டிருக்கிறது. இலங்கை முழுபலத்துடன் ஆடிவருகிறது. வழக்கமாய் எந்தத்தொடரிலும் ஆரம்பத்தில் தோல்வியடைந்து, கட்டாயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆடும் நம்மவர்கள் அதிசயமாய் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ( உண்மையில் இங்கிலாந்து தோற்றது என்றே சொல்லவேண்டும்). மீதமிருக்கும் ஆட்டங்களும் சுவாரசியாமாயிருக்க வேண்டியிருக்கிறேன். பார்க்கலாம் :)

Cross Posted in http://vicky.in/dhandora

Wednesday, October 11, 2006

சோம்பியன்ஸ் டிராபி???

எனக்கு ICCயின் (BCCIயையும் சேர்த்துதான்) நடவடிக்கைகளை பார்த்தால் பொன்முட்டையிடும் வாத்து கதைதான் ஞாபகம் வருகிறது. பணம்காய்ச்சி மரம் என்பதற்காக அளவுக்கு அதிகமாய் அதனிடமிருந்து பறிக்க நினைத்தால் மரத்திற்கே ஆபத்தாகத்தான் முடியும். உலகக்கோப்பைக்கு அடுத்து, கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளும் பங்கு பெறும் மினி உலகக்கோப்பை தொடங்கியது கூட பலருக்கு தெரியாமல் போய்விட்ட நிலைமை.

உள்ளூரில் மேட்ச் என்றால் எந்த அணி ஆடினாலும் ஆஜராகி ஹ‌வுஸ்புல்லாக்கும் நமது ரசிகர்கள் கூட வெறுத்துப்போகுமளவுக்கு ஒரு போட்டி அட்டவணை. மினி உலகக்கோப்பை என ஒன்று தொடங்கப்பட்டபோது, உலகக்கோப்பையில் ரவுண்ட் ராபின், சூப்பர் சிக்ஸ் என்ற வளவள போட்டி முறைகளுக்கு மாறாக "நாக் அவுட்" முறையில் ஆடி எதிர்பாராத அணி வென்ற/தோற்ற சுவாரசியங்கள் அதிகமாய் இருந்தது. ஆட்டங்களை (வருமானத்தை) அதிகரிக்கிறேன் பேர்வழி என மெல்ல மெல்ல போட்டி முறைகளை மாற்றி இந்த முறை ஒரேயடியாக சொதப்பியிருக்கிறார்கள்.

போட்டி துவங்கி முதல் பத்து நாளைக்கு ஜிம்பாப்வே, பங்களாதேஷ் அணிகளுடன் இலங்கையும் மேற்கிந்திய தீவுகளும் விளையாடி இதில் வெற்றி பெறும் முதலிரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுகிறதாம். சாம்பியன்ஸ் டிராபிக்கு எட்டு அணிகள்தான் வேண்டுமென்றால் தரவரிசையில் ஆறு அணிகளை தேர்ந்தெடுத்ததற்கு பதிலாக முதல் எட்டு அணிகளை தேர்ந்தெடுத்து நேரடியாக அனைத்து அணிகளையும் முதல் சுற்றில் ஆடவிட்டிருக்கலாம். பங்களாதேஷும் ஜிம்பாப்வேயும் வெகுகாலமாய் முதல் எட்டு இடங்களுக்குள் இடம்பெறாத நிலையில் இந்த ஒரு சுற்று ஆட்டங்களால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை. (எதிர்பாராமல் ஏதேனும் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் பெரிய மாறுதல் ஏதும் ஏற்படபோவதில்லை). வருவாய்க்காக இப்படி ஆட்டங்களை அதிகரிப்பதால் கிரிக்கெட் மீதான ஆர்வம் குறையத்தான் செய்யும்.

ஆனால் ICCயை சொல்லியும் குறையில்லை. இந்தியாவுக்கு எப்படியும் தரவரிசையில் முதல் ஆறு இடங்களுக்குள் கிடைக்காது, அதேவேளையில் இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் இந்தியா சலாமியாவுடன் ஆடினாலும் நிச்சயம் நல்ல வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் சிறப்பாய் ஆடி தகர்த்து விட்ட இந்திய அணியினரைத்தான் குறை சொல்லவேண்டும்.

Cross Posted in http://vicky.in/dhandora

Friday, October 06, 2006

மினி உலகக் கோப்பை கிரிக்கெட் - முன்னோட்டம்

கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் மீண்டும் நாளையிலிருந்து(அக்-7)ஆரம்பமாகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகள் நாளையிலிருந்து இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் தொடங்குகின்றன. இதற்கான முன்னோட்டமே இந்த இடுகை.

இலங்கை, மேற்கிந்திய தீவுகள், கென்யா & வங்காளதேச அணிகள் தகுதிச் சுற்றில் மோதுகின்றன. இதில் இலங்கை & மேற்கிந்திய தீவுகள் அணிகள் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து பாகிஸ்தான், தென்னாப்ரிக்க அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது. இந்தியாவிற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. 2005ல் இந்தியா பிரகாசிக்க காரணமான பதான், தோனி போன்றோரின் ஃபார்ம் கவலை தரும் அம்சம். பந்துவீச்சில் அணி மிகப் பலவீனமாக உள்ளது.

இங்கிலாந்து அணி ப்ளிண்டாப், வான், ஜோன்ஸ் போன்றோர் இல்லாமல் தடுமாறி வருகிறது. நியுசிலாந்து அச்சுறுத்தும் அளவுக்கு இல்லை. இலங்கை முரளி, வாஸ், ஜெயசூர்யா போன்றோரின் ஆட்டத்தைப் பொறுத்து போட்டி தரும்.

போட்டிகள் அனைத்தும் சோனி-மேக்ஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகின்றன. திருவிழாவுக்கு தயாராகுங்கள்.

கோப்பையை வெல்ல என்னோட சாய்ஸ் ஆஸ்திரேலியாதான், உங்களோட சாய்ஸ் என்னன்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க !!!

***

இந்த இடுகை சோம்பேறி பையனின் வலைத்தளத்திலும், கிரிக்கெட் கூட்டுப் பதிவிலும் பதிவிடப்படுகிறது.