Tuesday, February 28, 2006

நொண்டிக்குதிரை இங்கிலாந்து

நாளை நாகபுரியில் நடக்கப்போகும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி வித்தியாசமானது.

இங்கிலாந்து 11 ஆட்டக்காரர்களை எப்படியாவது நிறுத்துமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வா(க்)ன் கால் முட்டியில் பிரச்னையுடனே இந்தியாவரை வந்துள்ளார். ஓர் ஆட்டத்துக்குப் பிறகே இனி தன்னால் விளையாட முடியாது என்ற நிலையை எட்டிவிட்டார். இப்பொழுது மீண்டும் இங்கிலாந்து சென்று உடம்பை கவனித்துக்கொள்ளவேண்டும்.

இங்கிலாந்து துணைத்தலைவர் மார்கஸ் டிரெஸ்கோத்திக் அடுத்து அணித்தலைவராக ஆகியிருக்கவேண்டும். இதே நிலைதான் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் போதும் ஏற்பட்டது. அப்போதே ஆச்சரியம் தரத்தக்கவகையில் தன் மனைவிக்குத் தொலைபேசியில் பேசி தான் இங்கிலாந்து கேப்டனாக இருக்கலாமா என்று கேட்டு கலந்தாலோசித்தாராம். அதற்குப் பிறகுதான் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டாராம். ஆனால் இங்கே போர்ட் பிரெசிடெண்ட் அணியுடன் விளையாடிக்கொண்டிருக்கும்போது டிரெஸ்ஸிங் ரூமில் உடைந்துபோய் அழுதிருக்கிறார். உடனே அடுத்த விமானத்தில் ஏறி அவரும் இங்கிலாந்து சென்றுவிட்டார். ஏதோ 'வீட்டில் பிரச்னை' போலிருக்கிறது. வெளியே சொல்லமுடியாத அளவுக்கு பெர்சனலான பிரச்னை.

சரி, யாரைப் பிடிக்கலாம் என்று பேசி ஆண்டிரூ ஃபிளிண்டாஃபை கேப்டனாக நியமித்திருக்கிறார்கள்.

மற்றொரு பக்கம், கெவின் பியட்டர்சன் - பாகிஸ்தானுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் எதிராக நன்றாக பேட்டிங் செய்த மிடில் ஆர்டர் வீரர் - போர்ட் அணிக்கு எதிராக விளையாடியபோது முதுகைப் பிடித்துக்கொண்டார். இவர் முதல் டெஸ்டில் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான்.

வேகப்பந்து வீச்சாளர் சைமன் ஜோன்ஸ் முழங்காலை சுளுக்கிக் கொண்டார். அவரும் இந்தத் தொடரில் இனி பங்குகொள்வது கடினம்.

வேகப்பந்து வீச்சாளர்கள் ஹார்மிசன், ஹோக்கார்ட் இருவரும் போர்ட் பிரெசிடெண்ட் அணிக்கு எதிராக உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. ஃபிளிண்டாஃபும் இன்னமும் ஃபார்முக்கு வரவில்லை.

அடுத்து சுழற்பந்து வீச்சாளர்கள். ஆஷ்லி கைல்ஸ் காயம் காரணமாக இந்தியாவுக்கு வரவில்லை. இவர்தான் அணியின் முன்னணிச் சுழற்பந்து வீச்சாளர். இயான் பிளாக்வெல், மாண்டி பனேசார், ஷான் உதால் ஆகியோர் எந்த அளவுக்கு இந்திய மட்டை வீரர்களைக் கஷ்டப்படுத்துவார்கள் என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

இந்த இங்கிலாந்து அணி போர்ட் பிரெசிடெண்ட் அணியிடம் படுதோல்வி அடைந்தது. அதைவிட மோசமான அடி நாளை காத்திருக்கிறது!

Thursday, February 23, 2006

பியூஸ் சாவ்லா- தேர்வு சரியா?

எல்லோருக்கும் ஜூஹி சாவ்லாவை தெரியும். யாருங்க இவரு பியூஸ் சாவ்லா?- இன்று பல கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு தெரியாத உத்திர பிரதேசத்து சிறுவர், அனைவராலும் பாராட்டப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. 16 வயதிலே இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள லெக் ஸ்பின்னர்- பியூச் சாவ்லா.

இந்த ஆண்டு ரஞ்சிக் கோப்பையை முதன்முறையாக உத்திரப் பிரதேசம் வென்றுள்ளது. இறுதி ஆட்டத்தில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார் சாவ்லா. அப்போது முதல் இவரது பந்து வீச்சை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்திய சீனியர்கள் கராச்சியில் பாகிஸ்தானிடம் மோதிய அதே தினத்தில், அண்டர் 19 உலகக் கோப்பை போட்டியில் இந்திய சிறுவர்களும் பாகிஸ்தானுடன் மோதினார்கள். பியூஸ் சாவ்லா இவ்வணியில் இடம் பெற்றிருந்தார். இவரது பந்து வீச்சை பார்ப்பதற்க்காகவே சீனியர்கள் ஆட்டத்தை பார்க்காமால் சோனி மேக்ஸிற்கு மாறினேன்.

சாவ்லாவின் பந்து வீச்சு அண்றைய தினம் அதிரடியாக இருந்தது. லெக்ஸ்பின்னர்களிடம் துல்லியமாக பந்து வீசுவதை ( accuracy) நாம் எதிர்பார்க்க முடியாது. கும்ப்ளே ஒரு விதிவிலக்கு. சாவ்லா முதல் பந்திலிருந்து குறிதவறாமல் வீசினார். பந்து நன்றாக திரும்புகிறது. குறிப்பாக அழகான கூக்ளிகள் வீசுகிறார். லாங் ஹாப் என சொல்லப்படும் அரைக்குழிப் பந்துகள் வீசவில்லை. பர்த்தவரை பிளிப்பர் வீசவில்லை. ஆனாலும் வீசும் ஆற்றல் உண்டு என நம்புகிறேன்.அன்றைய போட்டியில் எட்டு ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார் சாவ்லா. தொடர்ந்து பேட்டிங்கிலும் இந்தியாவின் மொத்த எண்ணிக்கையான 71ல் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

16 வயதில் லெக்ஸ்பின் வீசுவதற்கு அபார ஆற்றல் வேண்டும். முன்பு சிவராமகிருஷ்ணன் 16 வயதில் சிறப்பாக பந்து வீசி இந்திய அணியில் இடம் பெற்றார். ஆனால் அதன் பின்பு அவரது கவனம் சிதறி அணியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் இந்திய கிரிக்கெட்டில் சிவாவிற்கு தரப்பட்ட வாய்ப்புக்கள் வேறு யாருக்கும் கிடைத்திருக்காது. அதற்கான காரணம் ஒரு நல்ல லெக்ஸ்பின்னர் அணிக்கு சேர்க்கும் வலிமையே.

இந்தியாவின் கடந்த கால வெற்றிகளுக்கு சந்திரசேகர் மற்றும் கும்ப்ளே ஆகியோரின் பங்களிப்பு மற்ற எல்லாவகை பந்து வீச்சாளர்களை காட்டிலும் அதிகம். உலக அளவிலும் ஆஸி அணி கடந்த பத்து ஆண்டுகளில் பெற்ற வெற்றிகளை , வார்னே இல்லாமல் பெற்றிருக்குமா என்பது சந்தேகமே.

இந்தியாவில் கும்ப்ளே யின் வெற்றிடத்தை நிரப்ப ஒரு ஆட்டக்காரரை தயார் செய்யவேண்டியது இன்றியமையாதது. சிறுவன் பியூஸ் கும்ப்ளேயின் இடத்தை நிரப்பக் கூடிய ஆற்றல் இருக்கிறது. அதை அவர் எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பது கவனிக்க வேண்டிய விசயம்.

சிவாவைப் போல கவனத்தை சிதற விடாமல் , சிறப்பாக ஆடி இந்தியாவிற்கு பெருமை சேர்க்க பியூஸிற்கு வாழ்த்துக்கள்.

இங்கிலாந்து தொடர் - இந்திய அணித்தேர்வு ...

நாக்பூரில் (நாகபுரியில் - தினமணி ஸ்டைல்??) நடைபெறும் இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் நிகழ்ந்த சில சுவாரசிய (இந்திய தேர்வுக்குழுவிற்குரிய வினோத??) நிகழ்வுகள் இதோ ..

* காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் போன யுவராஜிற்கு பதிலாக (வாவது) கங்குலி அணியில் இடம் பெறுவார் என நம்பப்பட்டது. வழக்கம் போல வருங்காலத்தை (!!!) மனதில் கொண்டு கைப்பிற்கும், ரெய்னாவிற்கும் அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் கங்குலியின் ஆட்டத்தின் மீது எனக்கு பெரியளவில் ஈர்ப்பெதுவும் கிடையாதெனினும், ஒரு வலுவான அணி உருவாவதற்கு அடித்தளம் அமைத்தவர், பேட்டிங்கில் இவருடைய மறுக்க முடியாத சாதனையயும், வாய்ப்பு வழங்கப்பட்ட கடைசி ஐந்து ஆட்டங்களில் நன்றாகவே ஆடினார் என்பதையும் மனதில் கொண்டு இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் எனவே கருதுகிறேன். டெஸ்ட் தொடருக்கென உறுதி செய்யப்பட்டு விட்ட கும்ப்ளே, லக்ஷ்மணன் வரிசையில் கங்குலிக்கும் இடம் கொடுத்து நல்ல மாதிரியான ரிடையர்மெண்ட்டுக்கும் வழிவகுப்பதே சரி என நினைக்கிறேன்.

* வேகப்பந்து வீச்சாளர்களை பொறுத்தளவில் பாகிஸ்தான் தொடரில் ஜொலிக்காத ஜாகிரும், அகார்கரும் நீக்கப்பட்டுள்ளார்கள். பாகிஸ்தான் தொடரில் அவ்வப்போது ஆச்சரியங்களை கொடுத்த ஆர்.பி.சிங்கும், ஸ்ரீசாந்தும் தங்கள் இடங்களை தக்க வைத்துக்கொண்டுள்ளனர். புதிதாக வி.ஆர்.வி சிங் சேர்க்கப்பட்டுள்ளார், இவர் இந்தியாவின் அதி வேகப்பந்து விச்சாளர் என நினைக்கிறேன். 2007 உலகக்கோப்பைக்கு முன்னர் சில வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்கி, பரிசோதித்து, வேகப்பந்து வீச்சை பலமாக மாற்ற இது போன்ற தேர்வுகள் அவசியமெனவே கருதுகிறேன்.

* ஆனால் சுழற்பந்து வீச்சில் பியூஸ் சாவ்லாவின் தேர்வுக்கான காரணம் எனக்கு புரியவில்லை. இந்தியாவில் ஆடும் டெஸ்ட் ஆட்டங்களில் கும்ப்ளே இல்லாமல் ஆடுவது மகா ரிஸ்க்கான விஷயமென்பதும், அத்தகு பரிட்சாத்த முறையில் ஈடுபட தற்போதைய நிலையில் இந்திய அணி ஈடுபடுவது நல்லதல்ல என்பதும், ஹர்பஜனை பொறுத்தளவில் பாகிஸ்தான் தொடரில் சொதப்பினாலும், இந்தியாவின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லாத சூழலில், சாவ்லாவை அணியில் சேர்த்து கொண்டு வாய்ப்பு வழங்காமல் வழக்கமான முறையில் கழட்டி விடும் வாய்ப்புதான் அதிகமுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் டெஸ்ட்டுக்கான அணியிலும் சேர்த்துக்கொண்டு மூன்று சுழற்பந்து வீச்சாளர்களையும் சுழற்சி முறையில் பரிசோதித்தால் நல்லது.

முழு அணி விவரத்திற்கு இங்கே கிளிக்கவும்....

கங்குலி காலி

இன்று அறிவித்த டெஸ்ட் போட்டி அணியில் கங்குலி இல்லை. அணி கீழே:

1. வாசிம் ஜாஃபர்
2. விரேந்தர் சேவாக்
3. ராகுல் திராவிட் (அ.த)
4. சச்சின் டெண்டுல்கர்
5. வெங்கட லக்ஷ்மண்
6. மொஹம்மத் காயிஃப்
7. சுரேஷ் ரெய்னா
8. மஹேந்திர சிங் தோனி (வி.கீ)
9. இர்ஃபான் பதான்
10. ஸ்ரீசாந்த்
11. ஆர்.பி.சிங்
12. வி.ஆர்.வி.சிங்
13. அனில் கும்ப்ளே
14. ஹர்பஜன் சிங்
15. பியுஷ் சாவ்லா

Wednesday, February 22, 2006

கராச்சி கடைசி ஒருநாள் போட்டி

ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ஜெயிப்பது மிகச்சிறந்த அணிகளுக்கு மட்டுமே சாத்தியமானது. 1980களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நினைத்த மாத்திரத்தில் ஜெயித்தது. கடந்த சில வருடங்களில் ஆஸ்திரேலிய அணி எப்பொழுதோ அரிதாகத்தான் தோற்கிறது. இலங்கை அணி உலகக்கோப்பை வெற்றியைத் தொடர்ந்து பல ஆட்டங்களில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது வெற்றிபெறும் சூத்திரத்தை சரியாகப் புரிந்து கொண்டிருந்தது.

இப்பொழுது இந்திய அணியும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வகையில் தொடர்ச்சியாக இரண்டாவது முறை பேட்டிங் செய்யும்போது வெற்றி பெற்று வருகிறது. இதுவரையில் chase செய்யும்போது கடந்த 13 முறைகள் தொடர்ச்சியாக இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி நியூசிலாந்து, ஜிம்பாப்வே, இலங்கை, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராகக் கிடைத்துள்ளது. இதுபோன்ற தொடர் வெற்றி இதற்குமுன்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு மட்டும்தான் கிடைத்துள்ளது.

அது மட்டுமல்ல; கடந்த மூன்று ஒரு நாள் போட்டித் தொடரில் இந்தியா தன்னைவிட ஐசிசி ரேட்டிங்கில் அதிகப் புள்ளிகளை உடைய மூன்று அணிகளுடன்தான் விளையாடியது. இலங்கைக்கு எதிராக 6-1; தென்னாப்பிரிக்காவுடன் 2-2; பாகிஸ்தானுடன் 4-1 என்ற கணக்கில் வெற்றி அல்லது டிரா செய்திருக்கிறது. இதனால் இன்று இந்தியா ஐசிசி ரேட்டிங்கில் நான்காவது இடத்தில் உள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன்னர் இந்தியா ஏழாவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது! இப்பொழுதைக்கு இந்தியாவுக்கு மேல் இருக்கும் நாடுகள் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா.

கராச்சி ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்னரே இந்தியா 3-1 என்ற நிலையில் தொடரை வென்றுவிட்டது. டெண்டுல்கர், பதான் இருவரும் ஓய்வெடுத்துக்கொண்டனர். சேவாக் ஏற்கெனவே இந்தியா திரும்பியிருந்தார். ஹர்பஜன் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. கடைசி ஆட்டத்தில் ரமேஷ் பவாருக்கு விளையாட வாய்ப்பளிக்கப்பட்டது.

இந்தியா டாஸில் வென்றதும் முதலில் பவுலிங் செய்யத் தீர்மானித்தது. இதுவரையில் பதானும் ஸ்ரீசாந்தும் பந்துவீச்சைத் தொடங்கினார்கள். ஆனால் அன்று பதான் விளையாடவில்லை; ஜாகீர் கானும் அகர்கரும் பந்துவீச்சைத் தொடங்கினார்கள். இருவருமே எதிர்பார்த்த அளவு சரியாக வீசவில்லை. இருவருமே பொதுவாக பழைய பந்துடன்தான் பந்துவீசுபவர்கள். புதுப்பந்தின் ஸ்விங்கை சரியாகக் கட்டுபடுத்தத் தெரியாதவர்கள். ஆனால் ஏன் இவர்களை திராவிட் முதலில் பந்துவீச அழைக்கிறார் என்று வர்ணனையாளர்கள் சந்தேகப்பட்டனர். ஆனால் திராவிட் இவர்களை அழைத்ததன் காரணம் இவர்களைப் பரிசோதிக்கத்தான்.

எப்படி பேட்டிங்கில் வெவ்வேறு இடத்தில் ஒரே ஆட்டக்காரர் விளையாடுகிறார் என்று பரிசோதிப்பதைப் போல ஒவ்வொரு வேகப்பந்து வீச்சாளரும் எவ்வாறு பந்தின் நிலையைப் பொருத்து தங்களது ஆட்டத்தை மாற்றியமைக்கிறார்கள் என்று கணிப்பது குறிக்கோள். அப்படியானால் சோதனையில் ஜாகீர் கான், அகர்கர் தோல்வியுற்றார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஸ்ரீசாந்த் முதல் மாறுதலாகப் பந்துவீச வந்தார். பொதுவாக புதுப்பந்தில் நன்றாக ஸ்விங் செய்பவர், எப்படி சற்றே பழைய - 10 ஓவர்கள் வீசப்பட்ட - பந்தைக் கையாள்வார் என்ற சந்தேகம் இருந்தது. பந்தை அவரால் அதிகம் ஸ்விங் செய்ய முடியாவிட்டாலும்கூட நீளத்தை மாற்றுவதன்மூலம் பாகிஸ்தான் மட்டையாளர்களை அதிகம் திணறச் செய்தார்.

அதுவரையில் விக்கெட் இழக்காமல் இருந்தது பாகிஸ்தான். ஆனால் ஸ்ரீசாந்த் திடீரென வீசிய அளவு குறைந்த பந்து தோள்பட்டை அளவுக்கு எகிறி வந்தது. அதனைச் சரியாகக் கணிக்காத இம்ரான் ஃபார்ஹத் பந்தை புல் செய்தார். பந்து மட்டையின் மேல்பக்கம் பட்டு எளிதானதொரு கேட்சாக மாறியது. அதை தானே பிடித்தார் ஸ்ரீசாந்த். தனது அடுத்த ஓவரிலேயே மற்றுமொரு எகிறும் பந்தை வீச, அதை கம்ரான் அக்மல் மேலெழும்பி அடிக்க ஃபைன் லெக்கில் ஆர்.பி.சிங் பிடித்தார். தன் மூன்றாவது ஓவரில் ஸ்ரீசாந்த் மிக அற்புதமான பந்து ஒன்றை வீசினார். கிரீஸின் முனையிலிருந்து வீசிய பந்து உள்நோக்கி வந்து தரையில் பட்டதும் நன்கு எழும்பி சற்றே வெளியே சென்றது. இதனைச் சரியாக எதிர்பார்க்காத ஷோயப் மாலிக் மட்டையை முன்னோக்கி நகர்த்த பந்து விளிம்பில் பட்டு கல்லி திசையில் சென்றது. அங்கு சுரேஷ் ரெய்னா நல்ல கேட்சைப் பிடித்தார். இப்படியாக ஸ்ரீசாந்த் தனது முதல் மூன்று ஓவர்களிலேயே பாகிஸ்தான் அணியை நிலைகுலையச் செய்துவிட்டார்.

இன்ஸமாம்-உல்-ஹக், மொஹம்மத் யூசுஃப் ஜோடி அணியின் எண்ணிக்கையை பலப்படுத்த வேண்டிய கட்டாயம். யூசுஃப் பொறுமையாக விளையாடினார். இன்ஸமாம் தனக்கே உரிய லாகவத்துடன் விளையாடினார். ஆனால் ஒரு நெடிய இன்னிங்ஸை விளையாடக்கூடிய நிலையில் இருவருமே இல்லை. ரமேஷ் பவார் பந்தில் லாங் ஆன் மேல் ஒரு சிக்ஸை அடித்த இன்ஸமாம் அடுத்த பந்தை ஸ்வீப் செய்யப்போனார். பந்து கால்காப்பில் பட, அவர் எல்.பி.டபிள்யூ என்று தீர்ப்பானது. யூசுஃபும் யூனிஸ் கானும் சேர்ந்து அணிக்கு மிக முக்கியமான ரன்களைப் பெற்றனர். ஓவருக்கு ஐந்து ரன்கள் என்ற கணக்கில் ரன்கள் வந்துகொண்டிருந்தது.

அடுத்த நடந்த ஆட்டத்தை இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் முன்னிலைக்கு வந்தனர். அகர்கர் வீசிய அருமையான அவுட்ஸ்விங்கரில் யூசுஃப் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்துல் ரசாக் அதிரடியாகச் சில ரன்களைப் பெற்றார் ஆனால் தொடர்ந்து நிலைக்காமல் ஆர்.பி.சிங்கின் பந்தை புல் செய்யப்போய் மிட்விக்கெட்டில் நின்ற திராவிடிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். யாசிர் அரஃபாத் ஜாகீர் கானின் பந்தில் பவுல்ட் ஆனார். உடனேயே மொஹம்மத் சாமியும் ஸ்ரீசாந்தின் ஃபுல் டாஸ் பந்தை கவர் திசையில் நின்ற காயிஃப் கையில் அடித்து அவுட்டானார்.

கடைசிக் கட்டம் யூனிஸ் கான். கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடியாக ரன்கள் பெற்று அணியின் எண்ணிக்கையை 286க்குக் கொண்டு சென்றார் யூனுஸ் கான். அதில் இரண்டு சிக்ஸ்கள் அடக்கம். கடைசிவரை ஆட்டமிழக்காமல் 79 பந்துகளில் 74 ரன்கள் பெற்றிருந்தார்.

286 நல்ல ஸ்கோர்தான். இந்தியா எப்படி இந்த எண்ணிக்கையைத் துரத்தும் என்பது முக்கியம். இந்தியாவுக்காக கவுதம் கம்பீர், ராகுல் திராவிட் இருவரும் களமிறங்கினர். கம்பீர் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து ரன் சேர்த்தாலும் திராவிட் மிகவும் சிரமப்பட்டார். முதல் பத்து ஓவர்களில் இந்தியா 42/0 என்ற எண்ணிக்கையில் இருந்தது. முதலில் பந்துவீசிய மொஹம்மத் ஆசீஃப் மிகவும் நன்றாகவே வீசினார். மொஹம்மத் சாமிதான் கொஞ்சம் ரன்களைக் கொடுத்தார். ஆனால் மாற்றுப் பந்துவீச்சாளர்களாக வந்த இஃப்திகார் அஞ்சும், யாசிர் அரஃபாத் இருவருமே மிக நன்றாக வீச ஆரம்பித்தனர். கம்பீர் அஞ்சுமின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். அடுத்து உள்ளே வந்தவர் யுவராஜ் சிங்.

திராவிட் மூன்று நான்கு வருடங்களுக்கு முன் ஒருநாள் போட்டிகளில் விளையாடியதுபோல விளையாடினார். இந்த அளவுக்கு அவர் கடைசி வருடத்தில் கஷ்டப்பட்டதில்லை. அடிக்கும் பந்துகள் நேராக தடுப்பாளர்களிடம் சென்றன. இடைவெளியைப் பயன்படுத்த முடியாமல் இருந்தார். விரும்பிய மாதிரியான ஷாட்களையும் அடிக்க முடியவில்லை. 23வது ஓவரில்தான் இந்தியா 100 ரன்களைத் தொட்டது. ஷோயப் மாலிக், அப்துல் ரசாக் இருவரும் பந்துவீச வந்ததும் ஓரளவுக்கு ரன்கள் கிடைக்க ஆரம்பித்தன. 30 ஓவர்களில் இந்தியா 141/1 என்ற ஸ்கோரில் இருந்தது. ஆனால் அடுத்த ஓவரிலேயே திராவிட் மொஹம்மத் சாமியின் மெதுவான பந்தில் மிட் ஆனில் பிடிகொடுத்து அவுட்டானார்.

ஒருவகையில் நல்லதுதான். அடுத்து காயிஃப், ரெய்னா ஆகியோருக்கு முன்னதாக தோனி விளையாட வந்தார். இந்தியாவின் பேட்டிங் அன்று மிகவும் பலவீனமாக இருந்தது. கொஞ்சம் நல்ல பவுலிங் இருந்திருந்தால் இந்தியாவின் நிலைமை மோசமாக ஆகியிருக்கும். தோனி உள்ளே வரும்போது இந்தியாவுக்கு 6 ரன்களுக்கு மேல் தேவைப்பட்டது.

தோனி ஏதோ நேர்முகத்தில் சொல்லியிருந்தாராம், "முதல் 15 பந்துகள் நான் அடித்து ஆடமாட்டேன். ஆனால் அதற்குப் பின்னர் அடிதடிதான்", என்று. அன்று அதைச் சரியாகவே செய்தார். முதல் 15 பந்துகள் அங்கும் இங்குமாகத் தட்டி ஓரிரு ரன்கள் பெற்றார். சரியாக 16வது பந்தில் ஒரு நான்கு. ஆனால் அதற்குப் பின்னரும்கூட இஷ்டத்துக்கு அடிக்கவில்லை. ஓவருக்கு 5 அல்லது 6 ரன்கள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால் தேவைப்படும் ரன்ரேட்டோ எகிறிக்கொண்டே சென்றது. 38வது ஓவர் முடியும்போது இந்தியாவின் ஸ்கோர் 190/2. Required Run Rate 8.08.

சாதாரணமாக இந்நிலையில் பழைய இந்திய அணியாக இருந்தால் நடுங்கிப்போயிருக்கும். யாராவது ஏதாவது தவறு செய்து பிரச்னையில் மாட்டியிருப்பார்கள். ஆனால் யுவராஜ் பயப்படவில்லை, அதிகமாக ரன்கள் பெற முயற்சி செய்யவும் இல்லை. எந்த நிலையிலும் தோனி அதிரடியாக ரன்கள் பெற்று ஆட்டத்தை ஜெயிப்பார் என்று யுவராஜுக்கு நம்பிக்கை. தான் ஏதாவது தவறு செய்து அவுட்டானால் யுவராஜ் எப்படியும் ஆட்டத்தை முடித்துக் கொடுப்பார் என்று தோனிக்கு நம்பிக்கை. மேலும் 44 ஓவர்கள் வரை அதிகப் பிரசங்கித் தனமாக எதையும் செய்யவேண்டாம் என்று கிரேக் சாப்பல் தோனியிடம் சொல்லியிருந்தாராம். எனவே பொறுமையாக இருவரும் ரன்களைச் சேர்த்தனர். ஆனால் 41வது ஓவரின் கடைசிப் பந்தை லாங் ஆஃபுகுக்கு அடித்து யுவராஜ் நான்கு ரன்களைப் பெற்றார். அதே சமயம் ஓடிவரும்போது கால் தொடையில் தசை இழுத்துப் பிடித்துக் கொண்டது. பிற்பாடு ஸ்கேன் செய்து பார்க்கும்போது அங்கு தசை கிழிந்தது தெரியவந்தது. இதனால் யுவராஜுக்கு ரன்னர் (கவுதம் கம்பீர்) தேவைப்பட்டது.

இதுவும்கூட தோனியை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. யுவராஜ் அப்பொழுது 82*, தோனி 30*. 40வது ஓவருக்குப் பிறகு இந்தியா ரன்கள் பெறும் வேகம் அதிகமானது. 40வது ஓவரில் 9, அடுத்த ஓவர்களில் முறையாக 8, 8, 12, 12, 14, 14 என்பதுடன் ஆட்டம் முடிவடைந்தது!

44வது ஓவரில் தனது மோசமான நிலையிலும் யுவராஜ் விடாது நின்று சதமடித்தார். 45வது ஓவரில் தொடங்கி அடுத்த இரண்டு ஓவர்களில் தோனலாட்டத்தை முடித்துவைத்தார். இந்த மூன்று ஓவர்களில் தோனி சந்தித்த பந்துகள்: 14; பெற்ற ரன்கள்: 35. இதில் நான்கு சிக்ஸ்கள், இரண்டு நான்குகள் அடங்கும். மொத்தத்தில் தோனி 56 பந்துகளில் 77 ரன்கள் பெற்றிருந்தார். யுவராஜ் 93 பந்துகளில் 107 ரன்கள் பெற்றிருந்தார்.

இந்த ஆட்டத்தில் தோனியின் அப்ரோச் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வெறும் தடாலடி அடிப்பவராக மட்டும் அவர் நடந்துகொள்ளவில்லை. சரியாகக் கணித்து எப்பொழுது எந்த மாதிரி விளையாடவேண்டும் என்று தீர்மானித்து அதற்கேற்றவாறு விளையாடினார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக இதுவரை தோனி மிகவும் நன்றாக விளையாடியுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நான்கு ஆட்டங்களில் அந்த அளவுக்கு சோபிக்கவில்லை. தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு, மார்பளவுக்கு எகிறிவரும் பந்துகள் ஆகியவை அவருக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்தது. அதனால் பிற நாடுகளுக்கு எதிராக இனிவரும் நாள்களில் தோனி எப்படி விளையாடுவார் என்று கவனிக்கவேண்டும். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தவிர பிற நாடுகளுக்கு எதிராக மிக எளிதாகவே ரன்கள் பெறுவார் என்று தோன்றுகிறது.

மற்றொருபுறம் யுவராஜ். இவரும் காயிஃபும் கிட்டத்தட்ட ஒரே நிலையில் இருந்தார்கள். ஆனால் கடந்த சில மாதங்களில் யுவராஜ், காயிஃபை விட்டு வெகுதூரம் முன்னேறிவிட்டார். இப்பொழுது விவிஎஸ் லக்ஷ்மணைவிட முன்னிலையில் இருக்கிறார் (டெஸ்ட் போட்டிகளையும் சேர்த்து) என்று சொல்லலாம். நிச்சயமாக இன்றைய நிலையில் இந்தியாவின் நான்காவது சிறந்த பேட்ஸ்மன் (திராவிட் - 1, சேவாக் - 2, டெண்டுல்கர் - 3) என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

பந்துவீச்சில் ஸ்ரீசாந்த், ஆர்.பி.சிங் இருவருமே மனத்துக்கு நிறைவாக விளையாடினார்கள். ஜாகீர் கான், அகர்கர் இருவருமே ஏமாற்றத்தைத் தந்தார்கள். அடுத்த டெஸ்ட் போட்டியில் பதானுக்கு ஜோடியாக இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் வேண்டும் என்றால் நான் ஆர்.பி.சிங்கைத் தேர்ந்தெடுப்பேன். ஆனால் திராவிட் ஸ்ரீசாந்தை விரும்புவார் என்று தோன்றுகிறது. மொத்தம் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை என்றால் பதான், ஆர்.பி.சிங், ஸ்ரீசாந்த். நிச்சயமாக அகர்கர் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டியவர் - டெஸ்ட் போட்டிகளைப் பொருத்தவரை. ஜாகீர் கான் நிறைய உழைக்க வேண்டும்.

ஸ்கோர்கார்ட்

கராச்சி கடைசி ஒருநாள் போட்டி

இதைப்பற்றி நிறைய எழுதவேண்டும் என்று நினைத்து நேரமின்மையால் தள்ளிப்போட்டிருக்கிறேன். இன்று இரவு எழுதுவிடுகிறேன். அத்துடன் இந்தியா-பாகிஸ்தான் தொடர் பற்றிய ஒரு ரவுண்டப், நடைபெறப்போகும் இந்தியா - இங்கிலாந்து தொடர் பற்றிய ஒரு முன்னோட்டம், இன்று பங்களாதேஷ் அடைந்திருக்கும் ஒருநாள் வெற்றி (இலங்கைக்கு எதிராக), பரிதாபமான மேற்கிந்தியத் தீவுகள் தொடர்ந்து உதை வாங்குவது பற்றி, சமீபத்தில் முடிந்த முத்தரப்பு VB தொடரில் இலங்கை முதல் ஆட்டத்தில் ஜெயித்தாலும் அடுத்த இரண்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது பற்றி, தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா வாய்ச்சண்டைகள் பற்றி, லலித் மோடி என்று ஒருவர் பிசிசிஐ உரிமங்கள் விற்பனையில் புகுந்து விளையாடுவது பற்றி, நிம்பஸ் பற்றி, ஜக்மோகன் தால்மியா திருடினாரா இல்லையா என்று இப்பொழுது நடக்கும் வாக்குவாதங்கள் பற்றி...

பார்ப்போம்.

Thursday, February 16, 2006

முல்டானில் வெற்றி இந்தியாவுக்கு

முல்டான் ஒருநாள் போட்டியை ஜெயித்து இந்தியா போட்டித்தொடரை வென்றுள்ளது. இன்னமும் ஓர் ஒருநாள் போட்டி பாக்கி இருக்கையில் இந்தியா 3-1 என்ற கணக்கில் அசைக்கமுடியாத முன்னிலையில் உள்ளது.

கடந்த இரு ஆட்டங்களில் மட்டையாளர்கள் உதவியால் ஜெயித்த இந்தியாவை இன்று முழுக்க முழுக்க பந்துவீச்சாளர்களும் பந்துத் தடுப்பாளர்களும் இணைந்து வெற்றிப்பாதைக்குக் கொண்டுசென்றனர்.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா நான்கு கேட்ச்களை விட்டனர். ஆனால் இன்று சாதாரணமாகப் பிடிக்கக் கஷ்டப்படும் கேட்ச்களைக்கூட எளிதாகப் பிடித்தனர். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக அமைந்தது இந்தியாவின் வேலையைச் சுலபமாக்கியது. அதற்குமேல் அதிர்ஷ்டமும் திராவிட் பக்கம். டாஸில் வென்ற திராவிட் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார்.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் தடதடவென நான்கு விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் இன்று எக்காரணம் கொண்டும் ஒரு விக்கெட்டைக்கூட இழக்கக் கூடாது என்று தனக்குள்ளாகச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். அதனால் எந்தவிதமான அபாயம் தரக்கூடிய ஷாட்களையும் தவிர்த்து மிகவும் கவனமாக ஆட ஆரம்பித்தனர். ஆறாவது ஓவரில்தான் முதல் நான்கு ரன்கள் கிடைத்தன. ஆறு ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் 14/0 என்ற எண்ணிக்கையில் இருந்தது. இந்த அளவுக்கு மெதுவாக பாகிஸ்தான் விளையாடும் என்று இந்தியா நினைத்துப் பார்த்திருக்கவே முடியாது.

அதனால் விக்கெட்டுகள் விழாது என்று எந்த நிச்சயமும் இல்லை!

ஏழாவது ஓவரில் கம்ரான் அக்மல் அளவு குறைந்து வந்த பந்தை வெட்டி ஆடினார். நான்கு ரன்களுக்குப் பந்து சென்றிருக்கவேண்டும். ஆனால் ஷார்ட் பாயிண்டில் நின்றுகொண்டிருந்த சுரேஷ் ரெய்னா திடீரென பந்தின் பாதையில் வந்தார்; கேட்சைப் பிடித்தார். 15/1. 12வது ஓவரில் ஸ்ரீசாந்த் பந்துவீச்சில் இடதுகை ஆட்டக்காரரான சல்மான் பட் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்த பந்தை முதல் ஸ்லிப்பைத் தாண்டித் தட்டிவிட்டார். ஆனால் திராவிட் தனது இடதுகைப் பக்கமாகப் பாய்ந்து விழுந்து இரண்டாவது ஸ்லிப் இருக்கும் இடம் வரை சென்று மிக அழகாக இந்த கேட்சைப் பிடித்தார். 27/2.

ஆனால் இனி நடக்கப்போவது இதைவிடவும் மோசமாக இருக்கும் என்று யாருமே நினைத்துப் பார்த்திருக்க முடியாது. 13வது ஓவரை பதானுக்கு பதிலாக வீசவந்தவர் புதியவர் ஆர்.பி.சிங். இந்தப் போட்டித் தொடரில் இந்தியா மிகவும் திண்டாடியது ஷோயப் மாலிக்கின் விக்கெட்டைப் பெறுவதில்தான். ஆர்.பி.சிங் வீசிய அளவு குறைந்த பவுன்சரை சரியாக விளையாடாத மாலிக் ஃபார்வர்ட் ஷார்ட் லெக் அருகில் மேலெழும்புமாறு ஒரு கேட்சைக் கொடுத்தார். விக்கெட் கீப்பர் தோனியும் ஷார்ட் லெக்கில் நின்ற பதானும் கேட்சைப் பிடிக்கப் பாய்ந்தனர். இருவரும் பந்தை நெருங்கியிருக்க முடியாது என்றுதான் அனைவரும் நினைத்தோம். ஆனால் எப்படியோ ஓடிவந்து வழுக்கி விழுந்து தரைக்கு ஓர் இஞ்ச் மேலாக பதான் அந்தக் கேட்சைப் பிடித்துவிட்டார்! 29/3. அடுத்த பந்து மிடில் ஸ்டம்பில் விழுந்து நேராகி யூனுஸ் கான் கால்காப்பில் பட்டது. இதைவிட எளிதான எல்.பி.டபிள்யூ எதுவும் இருந்திருக்க முடியாது. 29/4! ஹாட்-ட்ரிக் கிடைக்கவில்லை.

அடுத்த சில ஓவர்களில் மொஹம்மத் யூசுஃபும் இன்ஸமாம்-உல்-ஹக்கும் ஜோடி சேர்ந்து மிக முக்கியமான சில ரன்களைச் சேர்த்தனர். மிகவும் மோசமான நிலையில் பாகிஸ்தான் இருந்தாலும் கிட்டத்தட்ட பந்துக்கு ஒரு ரன் வீதம் வந்தவண்ணம் இருந்தது. ஆர்.பி.சிங் எக்கச்சக்கமான வைட் பந்துகளை வீசினார். ஸ்ரீசாந்துக்கு பதில் பந்துவீச்சுக்கு வந்த அகர்கர் அவ்வளவு நன்றாக வீசவில்லை. நிறைய ரன்களைக் கொடுத்தார். டெண்டுல்கர் பந்துவீச்சுக்குக் கொண்டுவரப்பட்டார். இதற்குள்ளாக இந்த ஜோடி 68 ரன்களைச் சேர்த்திருந்தது. அப்பொழுது அகர்கர் வீசிய ஓர் அவுட்ஸ்விங்கரில் யூசுஃப் மட்டையின் விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப்பை நோக்கிப் பந்து பறந்தது. முதல் ஸ்லிப் வரை சென்றிருக்காது. கீழே விழுந்துவிடும். அப்பொழுது தோனி தன் வலதுபக்கம் தாவி, பந்தை சற்றே மேல்நோக்கித் தட்டிவிட்டு, அதனை தன் இரண்டாம் முயற்சியில் பிடித்தார். இதுவும் எளிதில் கையில் மாட்டாத கேட்ச். இன்று இந்தியா எந்தத் தவறுமே செய்யாது என்பதுபோலத் தோன்றியது. 97/5.

பாகிஸ்தான் சூப்பர் சப் இம்ரான் ஃபர்ஹத்தை பந்துவீச்சாளர் யாசிர் அரஃபாத்துக்குப் பதில் கொண்டுவந்தனர். ஆனால் அவரும் நிறைய நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. ஆர்.பி.சிங் வீசிய பந்தை சரியான இடத்தில் நிற்காமல் புல் செய்தார். பந்து மிட் ஆனில் நின்ற ரெய்னாவின் கையில் எளிதான கேட்சாக விழுந்தது. 124/6. நான்கு பந்துகள் கழித்து ஆர்.பி.சிங் அப்துல் ரசாக்கைத் தவறு செய்ய வைத்து தோனி மூலம் கேட்ச் பிடித்தார். 126/7.

இனி பாகிஸ்தான் 50 ஓவர்கள் வரை இருந்து கிடைக்கும் ரன்களைப் பெற்று இந்தியாவை ஆல் அவுட் செய்தாக வேண்டும் என்ற நிலை. ஆனால் அதற்கு இன்ஸமாம் கடைசி வரையில் நின்றாக வேண்டும். ஆனால் இன்ஸமாமின் நம்பர் டெண்டுல்கர் கையில். டெண்டுல்கர் கையில் இன்று பந்து விளையாடியது. அவுட்ஸ்விங்கர், இன்ஸ்விங்கர், கட்டர்கள் என்று எதையும் வீசினார். நடுவில் திடீரென ஒரு டாப் ஸ்பின்னர். தடுமாறினர் பாகிஸ்தான் மட்டையாளர்கள். ஆஃப் ஸ்டம்பில் விழுந்து சற்றே உள்ளே வந்த சாதாரணமான பந்தில் இன்ஸமாம் எல்.பி.டபிள்யூ ஆனார். 131/8.

வால் சற்றே ஆடியது. ரன்கள் நிறைய வருவதுபோல இருந்ததால் திராவிட் பதானைக் கொண்டுவந்தார். பதான் தன் அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளைப் பெற்றார். முதலில் மொஹம்மத் சாமி பதானின் பவுன்சர் ஒன்றை லாங் லெக் திசையில் ஹூக் செய்து அகர்கர் கையில் எளிதான கேட்ச் ஒன்றைக் கொடுத்தார். 147/9. அடுத்து மொஹம்மத் ஆசிஃப் தோனியிடம் ஒரு கேட்சைக் கொடுத்தார். 41.5 ஓவர்களில் பாகிஸ்தான் 161 ஆல் அவுட்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தியா பேட்டிங் செய்ய வந்தது. நின்று ஆடினால் ரன்களை எளிதாகப் பெறலாம். ஆனால் மிக நன்றாகப் பந்துவீசிய காரணத்தால் டெண்டுல்கர் ரன்கள் ஏதும் பெறாமலேயே மொஹம்மத் சாமியின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். 5/1. கம்பீர் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். மிகவும் ஆக்ரோஷமாக ஐந்து பவுண்டரிகளைப் பெற்றார். அதில் மூன்று ஒரே ஒவரில் மொஹம்மத் சாமியின் பந்துவீச்சில். ஆனால் அதே ஓவரில் தொடர்ந்து மற்றுமொரு புல் ஷாட் ஆடப்போய் பந்தை மேல்நோக்கி புஸ்வானம் போல் அடிக்க, சாமியே ஓடிச்சென்று கேட்ச் பிடித்தார். இந்தியா 29/2.

இந்தியாவின் கதையும் கந்தலாகியிருக்கும். ஆனால் திராவிடும் யுவராஜும் மிகப் பொறுமையாக அதே சமயம் ஓவருக்கு கிட்டத்தட்ட ஐந்து ரன்கள் வீதமும் ரன்கள் பெற்றனர். வெற்றிக்கு அருகில் வரும்போது மீண்டும் தடங்கள். முதலில் யுவராஜ் (37) நவீத்-உல்-ஹசன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். 114/3. அடுத்த ஓவரிலேயே காயிஃப் ரன்கள் ஏதும் பெறாமல் ஸ்லிப்பில் அப்துல் ரசாக் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 115/4. ஆக இந்தப் போட்டித் தொடரில் காயிஃப் இதுவரை உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை. இப்படியே போனால் காயிஃப் இடம் கேள்விக்குள்ளாகும்.

திராவிட் கடைசிவரை நின்றிருக்க வேண்டும். ஆனால் ஒரு ஃபுல் டாஸ் பந்தை ஃப்ளிக் செய்யப்போய் எல்.பி.டபிள்யூ ஆனார். அவர் எடுத்த 59 ரன்கள் மிக முக்கியமானவை. உள்ளே வந்தவர் தோனி. இவர் சுரேஷ் ரெய்னாவுடன் சேர்ந்து மிச்சம் மீதி ரன்களைப் பெற வேண்டும். ஆனால் அவற்றைப் பெற்றவர் ரெய்னா! ஆறு நான்குகளுடன் ரெய்னா 34 பந்துகளில் 35* ரன்களைப் பெற்றார். தோனி 2 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்தியாவுக்கு ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

ஆர்.பி.சிங் ஆட்ட நாயகர். ஆனால் அவரது பந்துவீச்சில் இன்னமும் நிறைய முன்னேற்றம் ஏற்படவேண்டும்.

பதான், ஸ்ரீசந்த் இருவரும் ஆங்காங்கே நன்றாக வீசினாலும் பல இடங்களில் மோசமாக வீசினர். அகர்கரும் அப்படியே.

இந்த வெற்றி முழுக்க முழுக்க பந்துவீச்சாளர்கள் மூலம் கிடைத்தது என்றாலும் பயிற்சியாளர் சாப்பல் நம் பந்துவீச்சாளர்களை இன்னமும் அதிகம் வேலை வாங்க வேண்டும்.

Tuesday, February 14, 2006

லாஹோர் ஒருநாள் போட்டி

பல நாள்களுக்குப் பிறகு ஒரு மயிர்க்கூச்செரியும் ஒருநாள் போட்டியைப் பார்க்க நேரிட்டது. பெஷாவர், ராவல்பிண்டிக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இரு அணிகளும் 1-1 என்ற நிலையில் இருந்தன. லாஹோரில் திராவிட் டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தார்.

காலை 11.00 மணிக்கு ஆட்டம் ஆரம்பிக்கும், ஆனால் மாலை வெளிச்சம் சீக்கிரம் போய்விடும் என்பதால் இரவு விளக்குகள் எரியும். அதே நேரம் இரவு வெகுநேரம் வரை பனியில் விளையாடாமல் இருக்கலாம். பனி வந்தால் பந்து கனமாகி, பந்துவீசுவது கடினமாகிவிடும்.

டாஸில் வென்றதும் திராவிட் சரியாக என்ன செய்வது என்று தெரியாமலே பிறகு முதலில் பந்துவீசுவது என்று தீர்மானித்ததாகப் பின்னர் சொன்னார். இரண்டாவது ஒருநாள் போட்டியைப் போலவே இங்கும் இர்ஃபான் பதான் முதல் இரண்டு விக்கெட்டுகளை சீக்கிரம் வீழ்த்தினார். பந்து அங்கும் இங்கும் பயங்கரமாக ஸ்விங் ஆனது. ஸ்ரீசாந்தும் மிக நன்றாகவே பந்தை ஸ்விங் செய்தார். ஆனால் அவரது பந்தில் வரிசையாகப் பல கேட்ச்கள் கோட்டைவிடப்பட்டன. திராவிட் முதல் ஸ்லிப்பில் ஒரு கேட்ச், கம்பீர் இரண்டாவது, மூன்றாவது ஸ்லிப்பில் இரண்டு கேட்ச்கள், காயிஃப் பாயிண்டில் ஒரு கேட்ச் விட்டனர். கடைசிவரையில் ஸ்ரீசாந்துக்கு விக்கெட்டே கிடைக்கவில்லை.

ஆனால் ஆர்.பி.சிங் வந்தார். ஸ்ரீசாந்த் அளவுக்குப் பந்து வீசவில்லை என்றாலும் விக்கெட்டுகளை மட்டும் பெற்றுக்கொண்டே இருந்தார். அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் அவருக்கு. டெண்டுல்கரும் இன்ஸமாம்-உல்-ஹக்கின் முக்கியமான விக்கெட்டைப் பெற பாகிஸ்தான் படு மோசமான நிலையில் இருந்தது. 158/6 - 33 ஓவர்களில். இந்த நிலையில் ஷோயப் மாலிக்கும் அப்துல் ரசாக்கும் ஜோடி சேர்ந்தனர். ஷோயப் மாலிக் எக்கச்சக்கமான ஃபார்மில் இருக்கிறார். 12 ரன்களில் இவருக்கு ஒரு கேட்சும் கோட்டை விடப்பட்டது. முதலிரண்டு மேட்ச்களில் 90, 95 ரன்கள். இந்த முறை சதத்தைப் பெற்றார். மிக நன்றாக விளையாடினார். அப்துல் ரசாக் ஆரம்பத்தில் மாலிக்குக்குத் துணையாக ஆடினாலும் மாலிக் அவுட்டானதும் கடைசி ஆட்டக்காரர்களுடன் ஜோடி சேர்ந்து அற்புதமாக ரன்களைச் சேர்த்தார். பதானை ஓர் ஓவரில் இரண்டு சிக்ஸ்கள் அடித்தார்.

அகர்கர் தன் ஆறு ஓவர்களில் நன்றாகப் பந்துவீசியிருந்தார். ஆனால் ஏதோ பிரச்னை காரணமாக அதற்குமேல் பந்துவீசவில்லை. அதற்கு பதில் சூப்பர் சப்-ஆக வந்த ஜாகீர் கான் தான் வீசிய மிச்சம் நான்கு ஓவர்களிலும் அடித்துத் துவைக்கப்பட்டார். 50 ஓவர்களில் பாகிஸ்தான் 288 ரன்கள், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு. கடைசி 10 ஓவர்களில் 89 ரன்கள்!

இந்தியாவும் ஆரம்ப ஓவர்களில் மிகவும் கஷ்டப்பட்டது. மொஹம்மத் ஆசிஃப், உமர் குல் இருவரும் மிக அழகாக ஸ்விங், சீம் பந்து வீசினர். ரன்களும் கிடைக்கவில்லை, ஆசிஃப் வீசிய ஒரு ஓவரில் கம்பீர், பதான் இருவரும் அடுத்தடுத்து அவுட்டானார்கள். பதானை மூன்றாவது இடத்தில் அனுப்பியிருக்கக் கூடாது என்றே நினைக்கிறேன். பந்து எக்கச்சக்கமாக ஸ்விங் ஆகும் நேரத்தில் திராவிட் விளையாட வந்திருக்கவேண்டும். நல்லவேளையாக தோனியை அனுப்பாமல் நான்காவதாக ஆட வந்தார் திராவிட். அடுத்த பத்து ஓவர்கள் டெண்டுல்கர், திராவிட் இருவரும் மிகவும் கஷ்டப்பட்டே விளையாடினார். டெண்டுல்கர் இழந்த தன் டச்சை மீண்டும் பெற்றதுபோல விளையாடினார். பந்தை மிகச்சரியாகக் கணிப்பதில் திராவிடைவிடச் சிறப்பாக விளையாடினார் டெண்டுல்கர். இருவருமே திணறினாலும் விக்கெட்டை இழக்காமல் இருந்தனர். 15 ஓவர்கள் தாண்டிவிட்டால் பார்த்துக் கொள்ளலாம்தானே?

அதுதான் நடந்தது. டெண்டுல்கர் கொஞ்சம் கொஞ்சமாக அடித்தாட ஆரம்பித்தார். திராவிடும் தன் ஓட்டுக்குள் இருந்து வெளியே வர ஆரம்பித்தார். ஆசீஃப், குல் இருவரும் பந்துவீச்சிலிருந்து எடுக்கப்பட்டதும் ஒரு காரணம். நவீத்-உல்-ஹஸன், யாசிர் அரஃபாத் போன்றவர்கள் சுமாராகத்தான் வீசினர். பந்தும் ஸ்விங் ஆவது நின்றுவிட்டது. இந்த நேரத்தில் எதிர்பாராத ரன் அவுட் காரணமாக திராவிட் வெளியே வந்தார். 19வது ஓவரில் இந்தியா 84/3. யுவராஜ் உள்ளே வந்தது முதற்கொண்டே மிக அற்புதமாக விளையாடினார். ரன்கள் கிடுகிடுவென உயர்ந்தன. இந்தியாவின் ரன் ரேட் 4.5 என இருந்தது, வேகமாக 5.5ஐ நோக்கிச் சென்றது. டெண்டுல்கர் தன் சதத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தார். இப்படியே போனால் 45 ஓவர்களுக்குள் இந்தியா ஜெயித்துவிடும் என்ற நிலை.

ஆனால் ஆட்டம் மீண்டும் மாறியது. அடுத்தடுத்த ஓவர்களில் டெண்டுல்கர் 95-ல் அப்துல் ரசாக்கிடமும் காயிஃப் 0 ரன்களில் உமர் குல்லிடமும் ஆட்டத்தை இழந்தனர். திடீரென இந்தியா 189/3 -> 190/5 என்றானது. இப்பொழுது தோனியும் ரெய்னாவும்தான் பாக்கி முழுநேர மட்டையாளர்கள். இந்தியாவுக்கோ ஓவருக்கு 6.53 ரன்கள் தேவை. தோனி உள்ளே வந்ததும் இரண்டு ஓவர்கள் பொறுமையாக விளையாடினார். அதன்பின் கண்ணைப் பறிக்கும் தடாலடி விளையாட்டுதான். இதைக் கவனித்த யுவராஜ் தன் ஸ்டைலை மாற்றிக்கொண்டு தோனிக்கு ஆதரவாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ரன்களைப் பெற்றார்.

கொஞ்சம் அளவு குறைந்தாலும் தோனி பந்தை புல், ஹூக் செய்தார். ஸ்கொயர் லெக் பகுதியில் மட்டும் தோனிக்கு ஐந்து பவுண்டரிகள் கிடைத்தன. அதில் ஒரே ஓவரில் அடுத்தடுத்து அடித்த இரண்டு புல் ஷாட்கள். அளவுக்கு அதிகமாக வந்தால் கவர் திசையில் பறந்தன பவுண்டரிகள். எல்லைக்கோட்டுக்கு அருகே நிற்கும் தடுப்பாளரால்கூடப் பந்தை நெருங்கமுடியாத அளவுக்கு பவர்ஃபுல் அடிகள்.

46 பந்துகளில் 72 ரன்கள், 13 நான்குகள். ரிஸ்க் எடுத்து விளையாடினார் என்றாலும் எல்லாமே அற்புதமான கிரிக்கெட் ஷாட்கள். யுவராஜ் தன் விக்கெட்டை இழக்காமல் பார்த்துக்கொண்டார். அவ்வளவே.

இந்தியாவின் வெற்றிக்கு நான்கு பேருடைய பேட்டிங் காரணம். டெண்டுல்கர் மிகவும் கடினமான சூழ்நிலையில் அடித்த 95 ரன்கள் மிக முக்கியமானவை. திராவிடின் இன்னிங்ஸும் முக்கியமானது. யுவராஜின் இன்னிங்ஸ் மிகச்சரியான கலவை விகிதத்தில் இருந்தது. ஆனால் தோனியின் இன்னிங்ஸ் வேறோர் உலகத்தைச் சார்ந்தது.

யுவராஜின் மிகச்சிறந்த ஃபார்ம், டெண்டுல்கர் தன்னை மீட்டெடுத்திருப்பது, தோனி/பதானின் பிரமாதமான பேட்டிங் - இவைதான் இந்தியாவுக்குப் புதிதாகக் கிடைத்திருக்கும் பலங்கள். காயிஃப் இப்படி வழிதெரியாமல் திண்டாடுவது இந்தியாவின் பலவீனங்களில் ஒன்று. பந்துவீச்சைப் பொருத்தவரை இந்தியாவுக்கு மிக நல்ல எதிர்காலம் உள்ளது. ஆர்.பி.சிங், ஸ்ரீசாந்த் ஆகியோர் நன்றாக வீசுகின்றனர். இன்னமும் சிறிது அனுபவம் தேவை.

இந்தியா ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது சிறந்த அணியாக வருவதற்கு மிக நல்ல வாய்ப்புகள் உள்ளன.

(சேவாக் இந்தத் தொடரில் இனி விளையாட மாட்டார். தோளில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு குணமாக இன்னமும் இரண்டு வாரங்கள் ஆகுமாம்.)

ஸ்கோர்கார்ட்

Monday, February 13, 2006

பாகிஸ்தான் ஒருநாள் போட்டிகள்

முதல் ஒருநாள் போட்டி பெஷாவரில் நடைபெற்றது. டாஸில் ஜெயித்த பாகிஸ்தான் இந்தியாவை பேட்டிங் செய்ய வைத்தது. டெண்டுல்கர் சதமடித்தார். பதான், தோனி இருவரும் அற்புதமாக விளையாடினார்கள். டெண்டுல்கர் ஆரம்பத்தில் டெண்டெடிவாக விளையாடினாலும் பின்னர் சுதாரித்து நன்றாகவே விளையாடினார்.

ஆனால் மிடில் ஆர்டர் முழுவதுமாக சொதப்பியது. யுவராஜ், திராவிட், காயிஃப் மூவரும் நின்று விளையாடி நிறைய ரன்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. விளைவாக 350க்கு மேல் இந்தியா எடுத்திருக்கலாம். அதற்கு பதில் 328 ஆல் அவுட் என்ற நிலை.

பதிலுக்கு பாகிஸ்தானின் சல்மான் பட் (சதம்), ஷோயப் மாலிக் இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை அடித்து விரட்டினார்கள். அப்பொழுதே பாகிஸ்தான் ஜெயிக்க நல்ல வாய்ப்புகள் உள்ளது தெளிவானது. ஆனால் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்தவண்ணமே இருந்தன. இன்ஸமாம் obstructing the field என்ற முறையில் அவுட்டானார். இது ஆட்டத்துக்குப் பிறகும்கூட சில நாள்கள் பெரிதாகப் பேசப்பட்டது. யூனுஸ் கானும் நவீத்-உல்-ஹசனும் சேர்ந்து கடைசியில் சில ரன்களைப் பெற்று அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றிருந்தார்கள். அப்பொழுது பாகிஸ்தான் 47 ஓவர்களில் 311/7 என்ற ஸ்கோரில் இருந்தது. ஆனால் வெளிச்சம் போய்விட்டதால் ஆட்டத்தை நிறுத்தவேண்டிய நிலைமை. டக்வொர்த் - லூவிஸ் முறையில் பாகிஸ்தான் 7 ரன்களில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஸ்கோர்கார்ட்

இரண்டாம் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. பாகிஸ்தான் இங்கும் டாஸில் ஜெயித்தது. ஆனால் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. பதான் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளைப் பெற்றார். அதன்பின்னர் ஒரு ரன் அவுட், ஜாகீர் கானுக்கு ஒரு விக்கெட் என்று பாகிஸ்தானின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஷோயப் மாலிக் இந்த ஆட்டத்திலும் நன்றாக விளையாடினார். யூனுஸ் கானுடன் சேர்ந்து மிக முக்கியமான 102 ரன்களைச் சேர்த்தார். மாலிக் முதல் ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் எடுத்திருந்தார். இப்பொழுது 95 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மாலிக், யூனுஸ் இருவரும் அவுட்டானதும் பிறரால் அதிகமாக ரன்களைச் சேர்க்க முடியவில்லை. 265 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட் ஆனது.

இந்தியாவின் பதிலடி மிகச் சிறப்பாக அமைந்தது. சேவாக் நவீத்-உல்-ஹஸன் வீசிய ஒரு பவுன்சரை அப்பர்-கட் அடித்து பாயிண்ட்டுக்கு மேல் சிக்ஸ் அடித்தார். அப்பொழுது தோள் இழுத்துப் பிடித்துக் கொண்டது. உடனடியாக பிசியோதெரபிஸ்ட் முதுகுப் பட்டை, தோள் என்று மருந்தைப் பூசிவிட்டார். அடுத்த பந்தை முன்காலில் சென்று தடுத்தாடினார் சேவாக். பந்து தரையில் பட்டு எழும்பி, பந்துவீச்சாளரில் தலைக்கு மேல் பறந்து லாங் ஆனில் எல்லைக்கோட்டைக் கடந்தது! அடுத்த இரண்டு பந்துகள் - ஒன்று மிட்விக்கெட் திசையில், மற்றொன்று கவர் திசையில் நான்குகள். ஆனாலும் சேவாக் முகத்தில் வலி அப்பட்டமாகத் தெரிந்தது.

தோள்வலியோடே சேவாக் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை அடித்து விளாசினார். டெண்டுல்கர் இங்கும் முதலில் தடுமாறி, பின்னர் சுதாரித்து விளையாடினார். ஆனால் தன் அரை சதத்தை நெருங்கியபோது விக்கெட்கீப்பரிடம் தேவையின்றி கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆனால் அதற்குள் இந்தியாவுக்குத் தேவையான ரன்ரேட் ஐந்துக்குக் கீழே வந்துவிட்டது. இப்பொழுது திராவிட் விளையாட வந்தார். சேவாக் தன் அரை சதத்தைப் பெற்றதும் பொறுமையாக விளையாடினார். ஆனால் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். திராவிட், யுவராஜ் இருவரும் அமைதியாக விளையாடி 118 ரன்களைச் சேர்த்தனர். திராவிட் தன் அரை சதத்துக்குப் பின்னர் அவுட்டானாலும் யுவராஜ் கடைசிவரையில் நின்று இந்தியாவுக்கு எளிதாக வெற்றியை வாங்கிக் கொடுத்தார்.

பதானுக்கு ஆட்ட நாயகர் விருது கொடுத்தார்கள். ஆனால் சேவாகுக்குக் கொடுத்திருக்கலாமோ என்று நினைக்கிறேன்.

ஸ்கோர்கார்ட்

Tuesday, February 07, 2006

உலகக் கோப்பை- அணிகளின் தயார் நிலை

இன்னும் ஒரு வருடம் இருக்கிறது என்றாலும், அனைத்து அணிகளும் உலகக் கோப்பை போட்டிகளுக்கான ஆயத்தங்களை துவக்கி விட்டதாக பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உலகக் கோப்பையை சாக்காக வைத்து கங்குலி, கும்ப்ளே யை ஓரம் கட்டியாகிவிட்டது. ஸ்ரீலங்காவில் ஜெய சூர்யாவை ஓரம் கட்டப்பார்த்தார்கள். ஆனால் அவர் மீண்டும் வந்து பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். உண்மையாகவே அணிகள் உலகக் கோப்பைக்கான ஆயத்தங்களை துவக்கிவிட்டனவா? எந்த அணி தற்போதைய நிலையில் அதிக முனைப்புடன் இருக்கிறது? என்பதை இங்கு அலசிப்பார்க்கலாம்.

இந்தியா சாப்பல் பயிற்சியாளராக நியமிக்கப்ப்ட்டவுடன் ஒருநாள் ஆட்டத்தில் பல புதிய உத்திகளை கையாண்டுள்ளது. சாப்பலின் முதல் குறிக்கோள் -அணியின் ஆட்டநிலைகளில் இலகுத்தன்மையை ஏற்படுத்தி யார் வேண்டுமானாலும் சூழ்நிலைக்கேற்ப எந்த வரிசையிலும் ஆடலாம் என்ற நிலையை உருவாக்குவது. இதில் கணிசமான வெற்றியை சாப்பல் பெற்றுவிட்டார் என்று சொல்லலாம். ஆனாலும் அடிப்படையான பல தேவைகள் இன்னும் பூர்த்தியாகமால் இருக்கின்றன.

மேற்கிந்திய ஆடுகளத்தில் பந்து வீச இன்னும் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் அவசியம். முனாப் படேல் மற்றும் நம்மால் அறியப்படாத பந்து வீச்சாளர் யாராவது இருந்தால் அவர்களை கண்டுபிடித்து, இந்திய அணிக்கு பங்களிக்கச் செய்வது அவசியம்.

இரண்டாவது தேவை , பத்து ஓவர்களுக்கு பந்து வீசக் கூடிய ஒரு பேட்ஸ்மேன் ( அதாவது நான் - ரெகுலர் பவுலர், இலங்கை அணியின் ஜெயசூர்யா, மேற்கிந்திய தீவின் கிரிஸ் கெய்ல் போன்று பந்து வீசக் கூடிய ஆட்டக்காரர்கள். சச்சின் டெண்டுல்கர் முன்பு இப்பணியை செய்தாலும் தற்போது அவரால் செய்ய இயலுமா? என்பது சந்தேகமாக உள்ளது. யுவராஜ் சிங்/சேவாக் அல்லது ரைனா -இவர்களுள் யாராவது இப்பணிக்கு தயார் செய்யப்பட வேண்டும்.

மற்றொரு முக்கிய அம்சம்- உலகக் கோப்பை வரை திராவிட் கேப்டனாக இருப்பாரா? என்பதும் உடனடியாக நிர்ணயிக்கப்பட வேண்டும். உலகக் கோப்பையின் போது ஒரு புதிய கேப்டனை நிர்ணயிக்கக் கூடாது. ஆராய்ந்து பார்க்கும் போது இந்தியா மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் நிறைய உள்ளன.

பாகிஸ்தான் தயார் நிலையில் இந்தியாவைக் காட்டிலும் முண்ணனியில் உள்ளது. இந்தியாவுடனான தொடரில் வெற்றி பெறும் பட்சத்தில், உலகக் கோப்பை முடியும் வரை இன்சமாம் கேப்டனாக இருப்பது உறுதியாகி விடும்.பந்து வீச்சில் அக்தரை மட்டும் சார்ந்திராமல் , ஆசிப், நவீத் என்று பல புதிய பந்து வீச்சாளர்கள் உருவாகி விட்டார்கள். யூனிஸ்கான், முகமது யூசுப் நடுவரிசையை கவனித்துக் கொள்வார்கள். அப்ரிதி தற்போது மூளையை உபயோகித்து விளாசுகிறார். அப்துல் ரஜாக் சூழ்நிலைக்கேற்ப அதிரடியாகவோ அல்லது நிதானமாகவோ ஆடக் கூடியவர். நாளையே உலகக் கோப்பை நடத்தினால் கூட, ஆடக்கூடிய நிலையில் உள்ள அணி பாகிஸ்தான்.

ஆஸ்திரேலியா சென்ற உலகக் கோப்பை அணியுடன் ஒப்பிடும் போது பல ஆட்டக்காரர்களை இழந்து விட்டது. ஹேடன், ஆண்டி பிக்கேல் , கில்லஸ்பி ஆகியோர் தற்போது ஒருநாள் அணியில் இல்லை. மெக்ராத் கூட ஆட இயலாத நிலையில் உள்ளார். மைக்கேல் பேவன் ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஆனாலும் தன் முதல்நிலையை இழக்காமல் உள்ளது ஆஸ்திரேலியா. இதை ஆஸ்திரேலியா கிரிக்கெட் கட்டமைப்பின், நிர்வாகத்தின் வெற்றி என்றே நான் கூறுவேன். மைக்கேல் பேவனை காட்டிலும் அதிரடியாக ஆடக்கூடிய மைக்கல் ஹஸ்சி என்ற ஆட்டக்காரர் தற்போது அணியில் இடம் பெற்றுள்ளார். ஸ்டூவர் கிளார்க், லூயிஸ், ஹோப்ஸ், சான் டெய்ட் என்று பல புதிய பந்து வீச்சாளர்கள். யாராவது ஒரு பந்து வீச்சாளருக்கு அடிபட்டாலும் அவரை பேக் அப் செய்ய இன்னொரு ஆட்டக்காரர் தயாராக இருக்கிறார்.
நம் ஊரில் சச்சினை வெளியேற்ற் வேண்டும் என்று சொல்பவர்கள் கூட மாற்று ஆட்டக்காரர்களை அடையாளம் காட்ட பயப்படுகிறார்கள். ஆஸ்திரேலியாவில் ஹடைனை ஓரம் கட்டி விட்டார்கள். அவரது இடத்தை அதே திறனுடன் நிரப்ப ஒருவர் அல்ல... பலர் தயாராக இருக்கிறார்கள்.

உலகக் கோப்பை பைனலில் ஆடக்கூடிய அணியாக ஆஸ்திரேலியாவை எப்போதும் சுட்டிக் காட்டலாம். அவர்கள் தனக்கென்று ஒரு பெஞ்ச் மார்க் வைத்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்

(தொடரும்)

Wednesday, February 01, 2006

யார் ஆட்ட நாயகன்?

பாகிஸ்தானின் வெற்றிக்கு பல ஆட்டக்காரர்கள் பங்களித்திருக்கும் வேளையில், ஆட்டநாயகனை எவ்வாறு முடிவு செய்யப்போகிறார்கள்? என்பது கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.

பாகிஸ்தானின் வாய்ப்புக்கள் கிட்டத்தட்ட காணாமல் போன நிலையில் அதிரடி சதத்தின் மூலம் பாகிஸ்தானை மீண்டும் முன்னிலைக்கு கொண்டு வந்தவர் கம்ரான் அக்மல். இதே போல் முன்பு கல்கத்தாவில் நடந்த டெஸ்ட் மேட்சில் மோயின்கான் 72 ரன்கள் எடுத்ததும் ( பாக் 26 ரன்களுக்கு 6 விக்கெட்டுக்களை முதல் நாள் ஆட்டத்தில் இழந்தது), போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதும் சிலருக்கு நினைவிருக்கலாம்.

பந்து வீச்சாளர் ஆசிப்பிற்கு இது முதல் டெஸ்ட். ஆனாலும் இந்தியாவின் பேட்டிங் ஜாம்பவான்களை எல்லாம் தடுமாறச் செய்து விக்கெட்டுக்களைப் பெற்றார். குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் லஷ்மண், சேவாக் மற்றும் சச்சினின் விக்கெட்டுக்க்ளை கைப்பற்றிய விதம் ( அனைவரும் க்ளீன் போல்ட்) மிகவும் பாராட்டத்தக்கது.

அப்துல் ரஜாக். பாக். அணியின் முக்கியமான ஆட்டக்காரர். இவருடைய பந்து வீச்சையும், விக்கெட்டுக்கள் எடுக்கக் கூடிய திறன் குறித்தும் சில சந்தேகங்கள் இருந்தன. ஆனால் அவற்றை பொய்ப்பித்து விக்கெட்டுக்களை கைப்பற்றி பாக் அணிக்கு பங்களித்திருக்கிறார் ரஜாக். பந்து வீச்சில் மட்டுமல்ல. பேட்டிங்கில் முதல் இன்னிங்சில் அக்மலுடன் ஜோடி சேர்ந்து எடுத்த ரன்கள், மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்த 90 துரித ரன்கள் பாகிஸ்தானின் வெற்றியை உறுதி செய்த அம்சங்கள்.

ரஜாக் போன்ற ஒரு ஆல்ரவுண்டர்- இந்தியாவில் இல்லை. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையேயான வித்தியாசம் இத்தகைய ஆல்ரவுண்டர்கள்தான்.

என்னுடைய ஆட்டநாயகன் தேர்வு- அப்துல் ரஜாக்.

வெல்டன் ரஜாக்

கராச்சி டெஸ்ட்: பாக். வெற்றி முகம்

இதே தலைப்புடன் ஒரு பதிவை முதல் நாள் ஆட்ட முடிவிலே போட்டிருக்க வேண்டும். ஏனென்றால் இந்தியாவின் தோல்வியின் அடிப்படை- முதல் நாளே இழந்த நான்கு விக்கெட்டுக்கள் மற்றும் கம்ரான் அக்மல் அடித்த சதம். 0-3 என்ற நிலையிலிருந்து ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வது பாகிஸ்தானால் மட்டுமே செய்யக் கூடிய செயல். பாக் ஆட்டக்காரர்களை போல போட்டி மனப்பான்மையும், மனதில் உறுதியும் கொண்ட ஆட்டக்காரர்களை காண்பது அரிதான செயல். அவர்களுக்குள்ளாகவே அடித்துக் கொண்டு குழி பறிப்பது ஒன்றுதான் அவர்களுடைய பலவீனம். அந்த பலவீனத்தை வுல்மரும், இன்சமாமும் சேர்ந்து சரி செய்து விட்டார்கள். ஒற்றுமையுடன் ஆடும் பாக்.அணி உலகின் அனைத்து அணிகளையும் வெல்லக் கூடிய தகுதி வாய்ந்தது.

இந்திய அணிக்கு அதி வேக பந்து வீச்சாளர்களை பார்த்து கூட பயமில்லை. பந்தை சீம் செய்யும் ரஜாக், ஆசிப் போன்றவர்கள் பெரும் சேதத்தை விளைவிக்கக் கூடியவர்கள். சிக்கந்தர் பகத் என்ற பாக் பவுலர் டில்லியில் நடந்த டெஸ்டில் ( 81-82) எட்டு விக்கெட்டுக்கள் எடுத்தார். அதே போல்தான் அக்வீப் ஜாவேத்தும். தற்போது ஆசிப் சிறப்பாக பந்து வீசி இந்திய அணியின் தோல்விக்கு அடித்தளம் அமைத்திருக்கிறார்.

இந்திய அணியின் தோல்விக்கு காரணம் மட்டையாளர்களே. முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் அதிகம் எடுத்திருக்கும் பட்சத்தில் மட்டுமே நாம் வெற்றிக்கு முயற்சி செய்திருக்கலாம். ஆனால் ஏழு ரன்கள் குறைவாக பெற்ற பட்சத்தில் நான்காவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கிக் கொண்டோம். பாக். அணியினர் அதிரடியாக ஆடி, டிக்ளேர் செய்து, இந்தியா அதிக நேரம் நான்காவது இன்னிங்ஸ் ஆட வேண்டிய அவசியத்தையும் கூடுதலாக ஏற்படுத்தி விட்டார்கள்.

தற்போதைய ஸ்கோர் 63-3, இன்று சாயங்காலத்திற்குள் அல்ல.. நாளை மதியத்திற்குள் இந்தியாவை சுருட்டி விடுவார்கள்.

பாகிஸ்தானில் மற்றொரு தோல்வி (???). வாழ்த்துக்கள் பாக் அணிக்கு.

பின் குறிப்பு:

இதை எழுதி முடிப்பதற்குள் டெண்டுல்கரும் அவுட். இந்தியா இன்றே தோற்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.