Wednesday, March 22, 2006

வநதாரை வாழவைத்த திராவிட்

எப்போது சந்திரமுகி அறை திறக்கப்பட்டதோ... சாரி. எப்போது திராவிட் டாஸில் ஜெயித்து இங்கிலாந்தை பேட் செய்யச் சொன்னாரோ, அப்போதே இந்தியாவின் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது.இதே போன்ற தவறை அஜார் 1990ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் செய்தார். 1999 உலகக் கோப்பையில் கல்கத்தாவில் செய்தார். இந்திய துணைக் கண்டத்தில் நான்காவது இன்னிங்ஸ் ஆடுவது சுலபமான செயல் அல்ல. இந்திய பந்து வீச்சாளர்களின் மீதான அபரீத்மான நம்பிக்கையில் திராவிட் இம்முடிவை எடுத்திருக்கக் கூடும். ஆனால் நடந்தது முற்றிலும் வேறு.

இந்த டெஸ்டில் கேட்சை எவ்வாறெல்லாம் கோட்டை விடலாம் என பலவிதமாக செய்து காட்டினார்கள் இந்திய வீரர்கள். இத்தகைய மோசமான பீல்டிங்கிற்கு பின்னாலும் இந்தியா வெற்றி பெற்றால்,அது இங்கிலாந்தின் போதாத நேரமாகத்தான் இருக்க முடியும்.

இந்திய அணியின் பேட்டிங் திறமை கணிசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. சச்சினுக்கு ஒரு அளவுகோல், லஸ்மணுக்கு ஒரு அளவுகோள் என்றெல்லாம் வைத்து அணியை தேர்வு செய்தால் இவ்வாறான தோல்விகளை பெற் நேரிடும். சேவாக் பலமிழந்தது இந்தியாவிற்கு மிகப் பெரிய பின்னடைவு. சேவாக்கை நீக்குங்கள் என்று சுலபமாக கூறலாம்.ஆனால் அவரிடத்தை நிரப்ப, அவரைப் போலவே துரிதமாக ரன்குவிக்கும் அதிரடி ஆட்டக்காரர்கள் இல்லை. எனவே சேவாக்கின் ஆட்டம் தரும் பலனை, பிற ஆட்டக்காரர்களால் தர இயலாது.சேவாக் எழும்பும் பந்துகளை ஆடக் கற்றுக் கொண்டால்தான், இச்சிக்கல் தீரும். இல்லாவிடில் சேவாக்கை அணியில் சேர்த்தும் பிரயோசனப்படாது.

இர்பான் பதான் இம் மேட்சில் மிக மோசமாக பந்து வீசினார். அவருக்கு காயம் பட்டிருக்கிறதா என சந்தேகம் வருகிறது. பிட்னஸ் இல்லாத ஆட்டக்காரர்களை போட்டியில் சேர்க்கக் கூடாது. இங்கிலாந்தின் முதல் நாள் ரன் குவிப்பிற்கு பதானின் மோசமான பந்து வீச்சும் காரணம்.

ஜான் ரைட் கோச்சாக இருந்த போது இந்தியா சிறப்பான டெஸ்ட் அணியாக மாறியது. சாப்பலின் உத்திகள் ஒருநாள் போட்டிகளில்தான் பரிமளிக்கிறதே தவிர டெஸ்ட் போட்டிகளில் சொதப்புகிறது. சாப்பல் லஸ்மன் மேல் இன்னும் நம்பிக்கை வைக்க வேண்டும்.லஸ்மண் மற்றும் கங்குலியை முழுவதுமாக நீக்குமளவிற்கு மாற்று ஆட்டக்காரர்களை இந்தியா இன்னும் கண்டுபிடிக்கவில்லை

இந்தியா தோல்வி; தொடர் சமன்

யாரேனும் ஒரு ஆட்டக்காரராவது சதமடிக்க வேண்டும் என்றிருந்த நிலையில் ஒட்டுமொத்த இந்திய அணியே 100 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்திருக்கிறது. இன்று காலையில் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே கும்ளேவும் ஜாபரும் ஆட்டமிழக்க சச்சின் - டிராவிட் ஜோடி கொஞ்சம் நம்பிக்கையையளித்தது. உணவு இடைவேளையின் போது 75 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் என்ற நிலையில் கொஞ்சம் வாய்ப்பிருப்பதாக தோன்றியது, ஆனால் அடுத்தடுத்து டிராவிடும், சச்சினும் அவுட்டாகி இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தனர். காயம் காரணமாக நேற்று ஆடாததால் இன்று ஐந்து விக்கெட்டுகள் விழுந்த பின்னரே களமிறங்க வேண்டிய சூழலில் இறங்கிய சேவாக் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகியது நிலைமையை மேலும் மோசமாக்கியது. இறுதியில் 100 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தொடரும் சமன் ஆனாது.

முக்கிய ஆட்டக்காரர்கள் யாரும் இல்லாத சூழ்நிலையில் இந்திய சூழற்பந்துவீச்சில் படு தோல்வி அடையும் என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு இந்த வெற்றியும், தொடர் சமநிலையும் நிச்சயம் மிகப்பெரிய சாதனையே. இந்த வெற்றியின் மூலம் ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்து தன் இரண்டாமிடத்தை தக்கவைத்துக்கொள்ளும். இந்தியாவும் மூன்றாமிடத்திலேயே நீடிக்கும்

ஆட்டத்தில் இந்தியா படு தோல்வியடைந்த நிலையில், டாஸில் வென்று பந்து வீச தீர்மானித்த முடிவு மீண்டும் விவாதத்திற்குள்ளாகும்.

Tuesday, March 21, 2006

பரபரப்பான இறுதிநாள் ஆட்டம்...

மும்பை மைதானத்துக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இருக்காது போல இருக்கிறது. கடந்த முறை நடந்த ஆட்டத்தில் தொடர்ந்து டெஸ்ட் ஆட்டங்களில் வெற்றி பெற்று முழுபலத்துடன் வந்த ஆஸ்திரேலியாவிடம் ஏற்கனவே இரண்டு ஆட்டங்களில் தோல்வியுற்று, வெற்றி பெற்றிருக்க வேண்டிய சென்னை டெஸ்டின் இறுதி நாள் மழை குறுக்கிட்டதால் டிராவில் முடிய, இறுதி டெஸ்டில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றி பெறலாம் என்ற நிலையில் மும்பை ஆட்டத்தை எதிர் கொண்டது. மழையினால் முற்றிலுமாய் பாதிக்கப்பட்ட முதல் மூன்று நாள் ஆட்டத்திற்கு பிறகு நான்காம் நாள் ஆட்டத்தில் மொத்தம் 22 விக்கெட்டுகள் விழ இறுதி நாளில் 107 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் ஆட்டத்தை வெல்லலாம் என்ற மிக கடினமான இலக்குடன் இந்திய அணி கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொண்டது. அவ்வப்போது ஆச்சரியங்களை நிகழ்த்தும் இந்திய அணியினர் அன்றைய ஆட்டத்திலும் மிக அபாரமாக பந்து வீசி பேட்டிங்கில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை 93 ரன்களில் சுருட்டி சாதனை வெற்றி கொண்ட மைதானம் இது. இந்த முறை மிக எளிதாக இந்திய அணியின் சுழற் பந்து வீச்சில் சுருண்டு போகுமென எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி இதுவரை இரண்டாம் டெஸ்டின் சில செஷன்களை தவிர மிக அனைத்து நேரங்களிலும் மிகச்சிறப்பாக ஆடி வரும் நிலையில், இந்த டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யலாம் என்ற இறுதி நாளில் வெற்றி பெற 295 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

295 ரன்கள் , 9 விக்கெட்டுகள் கையில் , அணியின் மிக முக்கிய ஆட்டக்காரர்களான டெண்டுல்கரும், சேவாகும் பார்மில் இல்லாத சூழலில் காயம் வேறு, நிச்சயம் இந்தியாவுக்கு மிகவும் சோதனையான தருணம்தான். ஆனால் இந்திய அணிக்கு ஆறுதலளிக்க கூடிய ஒரே விஷயம் மைதானம் கடந்த முறை போல் பந்து வீச்சுக்கு மட்டுமே மிக சாதகமாய் இல்லாமல் பேட்டிங்கிற்கும் வாய்ப்பாக இருப்பது. நேற்றைய ஆட்டத்தை பொறுத்தமட்டில் இந்திய அணியின் மிக நேர்த்தியான பந்து வீச்சே இங்கிலாந்தை 191 ரன்களுக்கு இரண்டாம் இன்னிங்ஸில் ஆட்டமிழக்க செய்ய காரணமாக இருந்தது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்களும் இதுவரை நடந்த ஆட்டங்களில் இந்தியாவின் பேட்டிங்கின் மீது ஆதிக்கம் செலுத்தி வரும் சூழலில் நிச்சயம் இன்றைய ஆட்டம் ஒரு நாள் ஆட்டத்தை போல பரபரப்பாக இருக்கப்போவது நிஜம். பரபரப்பான முதல் செஷனை அதிக பட்ச சேதமில்லாமல் கடந்து மதிய உணவு இடைவேளை வரை அதிகபட்சம் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமிழந்து 80 முதல் 100 ரன்களை இந்தியா கடந்திருந்தால் டெண்டுல்கர், தோனி, சேவாக் துணையுடன் தொடரையும் கைப்பற்றலாம். தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறலாம்.

எனது கணிப்புபடி இந்தியாவுக்கும் இங்கிலாந்திற்கும் வெற்றி வாய்ப்பு 30 சதவிகிதம். டிராவாகும் வாய்ப்பு 40 சதவிகிதம் ( உபயம் : முதல் டெஸ்ட் டிராவிட் + வாசிம் ஜாபர் இன்னிங்க்ஸ்)

Cross posted in தண்டோரா

Monday, March 13, 2006

இந்தியா ஜெயித்தது

மிகவும் கஷ்டப்பட்டு விளையாடிக் கிடைத்த வெற்றி இது. ஏதோ 9 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று ஆகா ஓகோ என்று சொல்லிவிட முடியாது. இந்த ஆட்டத்தில் சேவாக், தோனி, டெண்டுல்கர் மூவரும் கஷ்டப்பட்டுத்தான் விளையாடினார்கள். இரண்டாம் இன்னிங்ஸில் சேவாக் 76 அடித்தாலும் தடுமாறித்தாண் விளையாடினார். நாம் எப்பொழுதும் நம்பிக்கை வைக்கும் திராவிட்கூட நிறையவே கஷ்டப்பட்டார்.

பந்துவீச்சைப் பொருத்தமட்டில் கும்ப்ளே இந்த ஆட்டத்தில் மிக அற்புதமாகப் பந்துவீசினார். முதல் இன்னிங்ஸில் எந்த நேரமும் எந்தப் பந்திலும் கும்ப்ளே விக்கெட்டைப் பெறுவார் என்று தோன்றியது. ஹர்பஜன் நன்றாகத்தான் வீசினார் என்றாலும் விக்கெட் பெறுவதில் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. பியுஷ் ஷாவ்லா சோதனை இந்த மேட்சுடன் முடிந்துபோகும் - இப்பொழுதைக்கு. அடுத்தமுறை இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் நடக்கும்வரை - அதற்குச் சில மாதங்கள் ஆகும் - அவர் விளையாடுவது சாத்தியமில்லை.

அடுத்த ஆட்டத்தில் காயிஃப் சாவ்லாவுக்கு பதில் உள்ளே வரவேண்டும். வேறு மாற்றங்கள் தேவையில்லை. அடுத்த ஆட்டம் மும்பையில் ஸ்பின்னுக்கு ஏதுவான ஆடுகளத்தில்தான் நடைபெறுகிறது. ஆனாலும் இரண்டு ஸ்பின்னர்கள் போதும்.

காலையில் எட்டு விக்கெட்டுகள் விழுந்ததும் ஹார்மிசன் ஃபிளிண்டாஃபுக்கு நல்ல ஜோடியாகக் கிடைத்தார். இருவரும் சேர்ந்து இந்தியாவின் வெற்றியைத் தடுத்துவிடுவார்கள் போலிருந்தது. ஆனால் அடுத்தடுத்த ஓவர்களில் இருவருமே அவுட்டாயினர். முதலில் தோனி கும்ப்ளே பந்தில் ஹார்மிசனை மிக அழகாக, கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்தார். அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஃபிளிண்டாஃப் ஸ்வீப் செய்து ஃபைன் லெக்கில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இந்தியா வெற்றிபெற 144 ரன்கள் தேவை என்று இருந்தது. உணவு இடைவேளையின்போது இந்தியா 28/0 என்று இருந்தது. இடைவேளைக்குப் பின்னர் ஜாஃபர் அவுட்டானார். திராவிட் உள்ளே வந்தார். திராவிட், சேவாக் இருவருமே நிறையத் தவறுகளைச் செய்தனர், ஆனால் அதிர்ஷ்டவசமாக அவுட்டாகவில்லை. திராவிட் கொடுத்த ஒரு ஸ்லிப் கேட்சை ஃபீல்டர் பிடிக்காது கோட்டை விட்டார்.

தேநீர் இடைவேளையை நெருங்கும்போது திடீரென சேவாக் அதிரடியாக ரன்களைப் பெற ஆரம்பித்தார். அதுவும் ஒருவகையில் நல்லதற்குத்தான். ஜெயிக்க ஆறு ரன்கள் தேவை என்றபோது சிறிய மழைத்தூறல்கள் விழுந்தன. இங்கிலாந்து ஃபீல்டர்கள் இதுதான் சாக்கு என்று நடுவர்களைப் பார்த்தனர். ஆனால் நடுவர்கள் தொடர்ந்து ஆட்டத்தை நடத்தினார்கள். திராவிடும் ஃபிளிண்டாஃபும் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். அடுத்த ஓவரில் இரண்டாவது பந்தில் திராவிட் அதிரடியாக ஒரு நான்கை அடித்தார். அடுத்த இரண்டு பந்துகளிலும் ரன்கள் கிடைக்கவில்லை. ஆனால் ஐந்தாவது பந்தில் தட்டிவிட்டு ஒரு ரன் பெற்றார். அரங்கமே அதிர்ந்தது. கடைசிப் பந்தை சேவாக் அரங்கை விட்டு வெளியே கிளப்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சேவாக் பந்தை மிட் ஆஃபுக்குத் தட்டிவிட்டு வேகமாக ஒரு ரன் பெற்றார்.

தொடர்ந்து மழை ஏதும் பெய்யவில்லை. ஆனாலும் இந்தியா ஓவருக்கு 4.36 ரன்கள் என்ற வீதத்தில் அடிக்காதிருந்திருந்தால் ஒருவேளை மழை பெய்து ஆட்டம் டிரா ஆனாலும் ஆயிருக்கும்.

-*-

ஃபிளிண்டாஃப் இந்த ஆட்டத்தில் செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்துவிட்டார். இரண்டு இன்னிங்ஸிலும் அரை சதங்கள். முதல் இன்னிங்ஸில் அதிகமாக 4 விக்கெட்டுகள். ஆனாலும் சரியான துணை இல்லாமல் இங்கிலாந்து தடுமாறியது. ஹோக்கார்டுக்கு விக்கெட்டுகள் அவ்வளவாகக் கிடைக்கவில்லை. சரியான ஸ்பின் பந்துவீச்சாளர்கள் இல்லை.

முனாஃப் படேல் பற்றித் தனியாகக் குறிப்பிடவேண்டும். இந்த ஆட்டத்தை வெல்ல அவரது ஏழு விக்கெட்டுகளும் மிகவும் துணைபுரிந்தன. ரிவர்ஸ் இன்ஸ்விங்கிங் யார்க்கர்கள் இவரது மிக முக்கியமான ஆயுதங்கள். அவற்றை மிக நன்றாகப் பயன்படுத்தினார்.

பதானின் பேட்டிங், திராவிடின் பேட்டிங், ஹர்பஜன் - கும்ப்ளே பேட்டிங் ஆகிய இவை மூன்றும் இந்தியாவுக்குப் பெரிதும் துணைபுரிந்தன. இந்தியா லீட் எடுத்திருக்காவிட்டால் இந்த டெஸ்டை ஜெயித்திருக்காது. சைக்கலாஜிகலாக அப்பொழுது கிடைத்த பலம்தான் இந்திய வெற்றிக்குத் வழிகாட்டியது.

சாம்பியன் கும்ப்ளே ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டது நியாயமான தேர்வு.

Sunday, March 12, 2006

இந்தியா ஜெயிக்குமா?

'நொண்டிக்குதிரை' என்று நான் அன்புடன் அழைத்த இங்கிலாந்து அணி முதலாம் டெஸ்டில் இந்தியாவை நொண்ட வைத்தது.

புத்தம் புதியவர்களான தொடக்க ஆட்டக்காரர் அலிஸ்டார் குக், இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசார் இருவரும் அற்புதமாக விளையாடினார்கள். குக் ஒரு சதம் அடித்தார். பனேசார் இந்தியாவின் மிக முக்கியமான சில விக்கெட்டுகளைப் பெற்றார்.

ஹோக்கார்ட் மிக நன்றாகப் பந்து வீசினார். ரிவர்ஸ் ஸ்விங் மூலம் இந்தியர்களைத் திணற வைத்தார். இந்தியாவுக்காக புதியவர் ஸ்ரீசாந்த் நன்றாகப் பந்து வீசினார். வாசிம் ஜாஃபர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் நன்றாக விளையாடினார். இரண்டாம் இன்னிங்ஸில் சதமடித்தார். கடைசி இன்னிங்ஸில் திடீரென இந்தியா ஆட்டத்தை ஜெயிக்க எடுத்த முயற்சிகள் மக்கள் மனத்தைக் கவர்ந்தன. ஆனாலும் இந்தியாவுக்கு முதல் டெஸ்ட் பின்னடைவுதான்!

இரண்டாம் டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 300 ரன்கள் பெற்றது. கெவின் பியட்டர்சன், ஃபிளின்டாஃப் இருவருமே நன்றாக விளையாடினார்கள். இந்தியாவின் ஃபீல்டிங் படுமோசமாக இருந்தது. மூன்றாம் நாள் காலை முனாஃப் படேல் வீசிய முதல் ஓவரில் ஃபிளிண்டாஃப் கொடுத்த எளிதான கேட்சை திராவிட் நழுவ விட்டார். ஃபிளிண்டாஃப் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட ரன்களைப் பெற்றார். கும்ப்ளே ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளைப் பெற்று இங்கிலாந்து அணியை ஆல் அவுட்டாக்கினார். இவற்றுள் இவரது 500வது விக்கெட்டும் அடங்கும்.

தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா மோசமாக விளையாடியது. திராவிட் ஒருவர்தான் நின்று விளையாடினார். திராவிட்-பதான் ஜோடி சேர்ந்து ரன்கள் பெற்றிராவிட்டால் இந்தியாவின் கதி அதோகதிதான். பின் பதான் - கும்ப்ளே; கும்ப்ளே - ஹர்பஜன் ஜோடிகள் சேர்ந்து அணியை இங்கிலாந்து ஸ்கோரைவிட அதிகத்துக்குக் கொண்டுசென்றன. இந்தியா 338 ஆல் அவுட். இந்த 38 ரன்கள் மிக முக்கியமானவை.

இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்பம் முதற்கொண்டே பிரச்னையைச் சந்தித்தது. தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்தன. குக் படேலின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கும்ப்ளே பந்தில் ஸ்டிரவுஸ் மட்டையில் பட்டு, அவரது ஷூ நுனியில் பட்டு, பேடில் பட்டு மேலே எழும்பியதை தோனி ஓடிவந்து பிடித்தார். பியட்டர்சன் ஹர்பஜனை ஸ்வீப் செய்யப்போய் கையுறை அல்லது முன்கையில் பட்டுப்போனதை திராவிட் பிடித்தார். பியட்டர்சன் சந்தோஷமாக இல்லை. காலிங்வுட் ஸ்லிப்பில் நின்ற திராவிட் கையில் எளிமையான கேட்சைக் கொடுத்தார். நாளின் இறுதியில் பெல் கும்ப்ளேயை கட் செய்யப்போய் விக்கெட்கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். இங்கிலாந்து 112/5 என்ற நிலையில் இருந்தது.

இன்று காலை முனாஃப் படேல் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளைப் பெற்றுள்ளார். இன்றுதான் கடைசி நாள். இப்பொழுது இங்கிலாந்து 158/8 என்ற ஸ்கோரில் உள்ளது. ஃபிளிண்டாஃப் இன்னமும் அவுட்டாகவில்லை. இப்பொழுதைக்கு இங்கிலாந்தின் லீட் 120 ரன்கள். இன்னமும் 30 ரன்களுக்குள் இங்கிலாந்தை இந்தியா ஆல் அவுட் ஆக்கினால் இந்தியா ஜெயிக்க வாய்ப்பு உள்ளது.

அதிரவைத்த ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா ஆட்டம்

இன்று ஓர் ஒருநாள் போட்டி. முதல் இரண்டு நிலைகளில் இருக்கும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா இரண்டும் விளையாடும் போட்டி. அவர்களுக்கிடையேயான ஒருநாள் போட்டித்தொடரில் ஐந்து ஆட்டங்களில் கடைசி ஆட்டம். இதுவரையில் 2-2 என்ற கணக்கில் இருந்தனர். யார் இன்றைய ஆட்டத்தை ஜெயித்தாலும் போட்டித்தொடரை வெல்வார்கள்.

முதலிரண்டு ஆட்டங்களையும் தென்னாப்பிரிக்கா வென்றிருந்தது. ஆஸ்திரேலியா அடுத்த இரண்டு ஆட்டங்களையும் ஜெயித்து சமத்தை எட்டியது.

இன்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா தொடக்கம் முதற்கொண்டே அதிரடியாக விளையாடியது. கில்கிறிஸ்ட், காடிச் இருவரும் எக்கச்சக்கமாக ரன்கள் சேர்த்தனர். ஆனால் கில்கிறிஸ்ட் அவுட்டானதும் உள்ளே வந்த பாண்டிங் ஆட்டத்தை ஐந்தாவது கியருக்கு எடுத்துச் சென்றார். உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவை அடித்துத் துவைத்தாரே, ஞாபகம் இருக்கிறதா? அதுமாதிரியான ஆட்டம். 105 பந்துகளில் 164 ரன்கள். 13x4, 9x6 !!! ஹஸ்ஸியும் பாண்டிங்கும் சேர்ந்து அணியை நானூறைத் தாண்ட வைத்தார்கள்! ஒருநாள் போட்டியில் 400க்கு அருகில் இதுவரை வந்தது இலங்கைதான் (398). அதுவும் 1996 உலகக்கோப்பை ஆட்டத்தில் கென்யாவுக்கு எதிராக. ஆனால் இன்று 400ஐத் தாண்டியும் ஆஸ்திரேலியா முன்னேறிச் சென்றது. சைமாண்ட்ஸ் உதவியுடன் அணியின் கடைசி எண்ணிக்கை 50 ஓவர்களில் 434/4.

இந்த நிலைக்குப் பிறகும் ஓரணியால் தோற்க முடியுமா? எதிரணியால் வெற்றி பெறத்தான் முடியுமா?

ஆனால் தென்னாப்பிரிக்காவின் விடாமுயற்சியில் அந்த அற்புதம் நிகழத்தான் செய்தது!

அணித்தலைவர் ஸ்மித், ஹெர்ஷல் கிப்ஸுடன் சேர்ந்து அபாரமாக விளையாடினார். 55 பந்துகளில் 90 ரன்கள் அடித்த நிலையில் ஸ்மித் இரண்டாவது விக்கெட்டாக அவுட்டானார். ஆனால் கிப்ஸ் தொடர்ந்து விளையாடினார். 111 பந்துகளில் 175 ரன்கள் பெற்றார். 21x4, 7x6 !

அப்படியும் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. விக்கெட் கீப்பர் பவுச்சர் ஒருவர்தான் பாக்கி. ஆனால் தென்னாப்பிரிக்காவின் ரன்ரேட் சரியான அளவிலேயே சென்று கொண்டிருந்தது. 47வது ஓவர் முடியும்போது மூன்று ஓவர்களில் 30 ரன்கள் தேவை. அடுத்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தன. இப்பொழுது தென்னாப்பிரிக்காவின் வெற்றி மிகவும் உறுதி என்றாயிற்று. அடுத்த ஓவரில் ஆறு ரன்களும் ஒரு விக்கெட்டும். இப்பொழுது கடைசி ஓவரில் 7 ரன்கள் அடித்தால் வெற்றி. ஆனால் கையில் இருப்பதோ 2 விக்கெட்டுகள்தான்.

பிரெட் லீ பந்துவீச வந்தார். முதல் பந்தை பவுச்சர் அற்புதமாக ஸ்டிரெயிட் டிரைவ் அடித்தார். நிச்சயம் நான்குதான்! ஆனால் இல்லை... லீ தன் காலால் பந்தைத் தடுத்தார், பந்து ஷூவில் பட்டு விக்கெட் கீப்பரை நோக்கிச் சென்றது. ஒரு ரன்தான். அடுத்தப் பந்தை ஆண்டிரூ ஹால் மிட் ஆன் திசையில் நின்ற ஃபீல்டரின் தலைமேல் அடித்தார். நான்கு ரன்கள்! லாங் ஆனில் யாருமே நிற்கவில்லை என்பவது திகைப்பை ஏற்படுத்தியது! இனி தென்னாப்பிரிக்காவின் வெற்றியை யாருமே தடுக்க்க முடியாது. தேவை இரண்டு ரன்கள். நான்கு பந்துகளில்.

ஆனால் ஹால் அடுத்த பந்திலேயே ஆட்டத்தை முடிக்க நினைத்து பந்தை அதே மிட் ஆனுக்கு மேல் அடித்தார். ஆனால் மட்டை சற்றே திரும்பியதால் பந்து நேராக மிட் ஆன் ஃபீல்டர் மைக்கேல் கிளார்க் கையில் கேட்சாக முடிந்தது! இப்பொழுதோ கையில் இருப்பது ஒரே விக்கெட்தான். அதுவும் மகாயா ந்டினி. ஆஸ்திரேலியா மீண்டும் வெற்றிவாய்ப்பை நுகர ஆரம்பித்தது.

ஆனால் அது நடக்கவில்லை. அடுத்த பந்தை ந்டினி தர்ட்மேனுக்குத் தட்டிவிட்டு ஒரு ரன் பெற்றார். இனி தென்னாப்பிரிக்கா தோற்க முடியாது. மேட்ச் டை ஆகுமா?

அடுத்த பந்தை பவுச்சர் லாங் ஆன் மேல் தூக்கி அடித்து நான்கைப் பெற்றார். தனது அரை சதத்தையும் தொட்டார். 43 பந்துகளில் பெற்ற மிக முக்கியமான அரை சதம் அது. ஒருவகையில் கிப்ஸின் 175 ரன்களுக்கு ஈடானது இந்த 50 ரன்கள்!

ஆக தென்னாப்பிரிக்கா யாருமே எதிர்பாராத வகையில் 434ஐத் தாண்டி மகா சாதனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. காலையில் ஆஸ்திரேலியா உருவாக்கிய சாதனை ஸ்கோர் அன்றே முடியடிக்கப்பட்டது!

Wednesday, March 01, 2006

நொண்டிக் குதிரையா? சண்டிக் குதிரையா?

இங்கிலாந்து அணியை எடை போடுவது கடினம். ஆளுக்காளு அடிபட்டு, மூட்டையைக் கட்டிக்கிட்டு ஊருக்குப் போனாலும், முதல் நாள் அந்தகால பாய்க்காட் போல ரன் எடுத்தாலும், இன்னிக்கி அடிச்சுக் கிளப்புறாங்க.

கடைசி விக்கெட்ட எடுக்க முடியாம இந்தியா இதுவரை 67 ரன் கொடுத்தாச்சு. இது கண்டிப்பாக ஆபத்துக்கு அறிகுறி. இந்த் ஆட்டத்துல கெலிக்கணும்னா 200 ரன்கள் கூட எடுக்கணும். அப்படின்னா, இந்தியா 600 ரன் எடுக்கணும்.அதில்லாம நாலாவது இன்னிங்ஸ்ல 200 ரன்ன சேஸ் பண்ற நிலைமை வந்துச்சுண்ணா , கடவுள்தான் காப்பாத்தணும்.

இங்கிலாந்து டீம்ல வேற இங்கிலீச்காரன தவிர சிங் ஒருத்தன கூட்டிட்டு வந்துருக்காங்க. இதெல்லாம் அழுகுணி ஆட்டம். இந்தியா இங்கிலாந்துல விளையாடுறப்ப, இங்கிலீச்காரனையா டீம்ல சேர்க்குது? அந்த சிங் வேற ஸ்பின் பவுலராம்...

யார் கண்டது?கருப்புக் கிணறு ன்ன பேரை வச்சுக்கிட்டு ஒரு நொட்டாங்கை ஸ்பின்னர் இங்கிலாந்து டீம்ல இருக்கார். அந்த கருப்பும் சேர்ந்து ஒரு காட்டு காட்டினா, நாலாவது இன்னிங்ஸ்ல அம்பேல்தான்.

அப்புறம் நொண்டிக் குதிரைய சண்டிக் குதிரைன்னு சப்பைக்கட்டு கட்டலாம்.

என்ன பண்னப் போறாங்களோ?