Tuesday, January 24, 2006

பைசலாபாத்- டிரா ?

இந்திய பாகிஸ்தான் டெஸ்ட் மேட்சுக்கள் பொதுவாக வெற்றி பெற வேண்டும் என்ற மனப்பான்மையை விடுத்து, தோல்வி அடையக் கூடாது என்ற தற்காப்பு மனோபாவத்துடன் ஆடப்படுபவை என்ற கருத்து உண்டு. அதை நிரூபிக்கும் வகையில் இரு டெஸ்ட் போட்டிகளும் விளையாடப்பட்டுள்ளன.

லாகூரைப் போல் இல்லாமல், பைசலாபாத்தில் நல்ல தட்பவெப்ப நிலை நிலவியது. கிட்டத்தட்ட 90 ஓவர்கள் தினமும் வீச முடிந்தது. ஆனாலும் முடிவு கிடைக்காதது வருத்தத்திற்குரிய விசயம். போட்டியின் ஒரே ஆறுதலான அம்சம், இரு நாட்டின் மட்டையாளர்களும் ஆடிய அதிரடி ஆட்டம். அது ஒன்றுதான் முந்தைய இந்திய பாகிஸ்தான் அறுவை டெஸ்ட் போட்டிகளுடன் ஒப்பிடும் போது மாறுபட்ட சுவையான அம்சம். முன்பு இந்தியாவில் நிகழ்ந்த ஒரு டெஸ்டில் கெய்க்வாட் ஆமை வேகத்தில் ஆடி 201 ரன்கள் குவித்தார். ஆனால் தற்போது அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடி ஆட்டம் ஆடினார்கள்.

இந்திய அணியின் தற்போதைய சிறப்பம்சம்- நெஞ்சில் மாஞ்சா கூடியிருப்பது. லாகூர் டெஸ்ட்டில் முன்னிலை பெற இரு அணிக்கும் வாய்ப்பே கிட்டவில்லை.ஆனால் இங்கே இந்திய அணிக்கு முதல் நாள் முகம்மது யூசுப் ஆட்டமிழந்த போதும் (216-4), பாகிஸ்தான் அணிக்கு சச்சின் ஆட்டமிழந்த போதும் ( 281-5) வாய்ப்புக்கள் கிடைத்தன. ஆனால் இன்சமாம், அப்ரிதி ஆகியோர் பாகிஸ்தானையும், தோனி, பதான் ஆகியோர் இந்தியாவையும் காப்பாற்றி விட்டார்கள். இந்த இரு ஜோடிகளிடையே, மிகவும் முக்கியத்துவம் பெறும் ஆட்டம் தோனி-பதான் ஜோடி ஆடிய ஆட்டம்.

இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விகளை அலசிப் பார்த்தால் எதிரணியின் ஒரு குறிப்பிட்ட பந்து வீச்சாளரை டாமினேட் செய்ய விட்டிருப்பது தெரியும். 83ம் வருட பாகிஸ்தான் தொடரில் இம்ரான் 40 விக்கெட்டுக்களை எடுத்தார். ஆனால் தற்போதைய பாக். அணியில் அக்தர் அத்தகைய ஆக்கிரமிப்பை நிகழ்த்துவார் என எதிர்பார்த்தார்கள். ஆனால் தோனியின் அதிரடி ஆட்டம் அந்த நம்பிக்கையை தவிடு பொடியாக்கிவிட்டது.

தோனியின் சதம் சரியான ச்ந்தர்பத்தில் சரியான முறையில் எடுக்கப்பட்ட சதம். வேகமாக ரன்கள் குவித்தாலும், பொறுப்புணர்ந்து ஆடப்பட்ட ஆட்டம். முன்பு கபில்தேவ் அதிரடியாக ரன்கள் குவித்திருந்தாலும் அவருடைய ஆடும் முறையில் ஒரு "ரிஸ்க்" எப்போதும் இருக்கும். நிலைமை உணர்ந்து நிதானமாக ஆடுவது கபிலால் இயலாது. ஆனால் தோனி நிதானமாக ஆடினார். இத்தகைய அணுகு முறையை அவர் தொடர்ந்து கையாண்டால் பல சாதனைகளை புரியலாம்.

இந்தியா 5 பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்ததும் வரவேற்கத் தக்க அம்சம். 5 பந்து வீச்சாளர்கள் இல்லாத பட்சத்தில் 700 ரன்களை பாக் குவித்திருக்கும். ஜாகிர்கானின் பந்து வீச்சு பிரமாதமாக இருந்தது. குறிப்பாக வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வர அவர் வீசும் பந்துகளும், உருவாக்கும் கோணங்களும் இந்த சொத்தை பிட்சிலும் பேட்ஸ்மேன்களை திணற வைக்கின்றன. இன்சமாமை அவுட்டாக்கிய பந்து மிகவும் அருமை.அதே போல் யூனுஸ்கானிற்கு யுவராஜ் பிடித்த கேட்ச், முன்பெல்லாம் ஜாண்டி ரோட்ஸ் மட்டுமே பிடிப்பார்.

அடுத்த டெஸ்டில் இன்சமாம் ஆடாவிட்டால் பாகிஸ்தானிற்கு பிரச்சனைதான். பந்து வீச்சாளர்களில் நவீத் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படலாம் ( காயம் குணமாகும் பட்சத்தில்).

கராச்சி கரைச்சலான ஊர். அங்கே இந்திய எதிர்ப்புணர்வு அதிகம். ஒருமுறை மியாண்டாட்டை மனோஜ் பிரபாகர் அவுட்டாக்கியவுடன் கத்தி கலாட்டா செய்து போட்டியையே நிறுத்தி விட்டார்கள். சென்ற தொடரை போல் இம்முறை பாக். வீரர்கள் அமைதியாக நடந்து கொள்ளவில்லை. அக்தரும், அப்ரிதியும் நிறைய வம்பிழுக்கிறார்கள். ஆனால் இந்திய வீரர்கள் மட்டையால் பதிலளிக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக கிரிக்கெட் மகான் திராவிட் அடித்த சதங்களைப் பற்றி இன்னொருமுறை தனியாக எழுத வேண்டும்.

எனது சாய்ஸ் 'தோனி'.. உங்கள் சாய்ஸ் ??

இந்தியா முதல் இன்னிங்ஸ் - 603 ஆல் அவுட். பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ் 588 ஆல் அவுட். இரண்டாம் இன்னிங்ஸ் 152/1.

இந்தியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 603 ரன்கள் குவித்தது. தோனி அபாரமாக ஆடி 144 ரன்களும்,பதான் 90 ரன்களும் குவித்தனர். பந்து வீச்சாளர்கள் அனைவரும் ரன்கள் குவித்து, இந்தியா பாகிஸ்தானின் ஸ்கோரை தாண்ட உதவியது சிறப்பம்சம்.பந்துவீச்சில் பிரகாசிக்காத பதான் பேட்டிங்கில் அக்குறையை ஈடுகட்டினார். பாகிஸ்தானை விட 15 ரன்கள் அதிகமாக எடுத்து, இந்தியா உளவியல் ரீதியான வெற்றியை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் தரப்பில் கனேரியா 3 விக்கெட்டுகளும், ரசாக் மற்றும் அப்ரிடி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்துள்ளது. 300 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தை டிக்ளேர் செய்து, இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க பாகிஸ்தான் விரும்பலாம். டிராவுக்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆட்ட நாயகன் விருது சிறப்பாக ஆடி 156 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்த அப்ரிடிக்கோ அல்லது நெருக்கடியான சூழ்நிலையில் அதிரடியாக ஆடி 144 ரன்கள் குவித்து இந்தியா பாலோ-ஆனை தவிர்க்க காரணமான தோனிக்கோ கிடைக்கலாம். எனது சாய்ஸ் 'தோனி'.. உங்கள் சாய்ஸ் ??

Monday, January 23, 2006

இந்தியா - முதல் இன்னிங்ஸ் 441/5

இன்றைய ஆட்ட நேர இறுதியில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 441 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தானை விட 147 ரன்கள் பின்தங்கி உள்ளது. இந்தியாவின் சார்பில் டிராவிட் 103, லஷ்மண் 90, தோனி 116, பதான் 49 ரன்கள் குவித்தனர். தோனி மற்றும் பதான் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். டெஸ்ட் டிராவில் முடிவடைய வாய்ப்புகள் அதிகம்.

நெருக்கடியான சூழ்நிலையில் தோனியின் சதம் பாரட்டுக்குறியது. பந்துவீச்சில் பிரகாசிக்காத பதானின் 49 ரன்கள் அணித்தலைமைக்கு ஆறுதல் தந்திருக்கும். தேவையான நேரத்தில் டெண்டுல்கர் சீக்கிரம் அவுட்டானது தூரதிஷ்டமே. டிராவிட் துவக்க ஆட்டக்காரராக இறங்கி தொடர்ந்து இரண்டாவது சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. லஷ்மணும் நன்றாக விளையாடினார்.

கங்குலியின் போட்டியாளரான யுவராஜ்சிங் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார். இது கங்குலி நீக்கம் மீதான சர்ச்சையை இன்னும் சூடாக்கும். இன்னும் ஒரு 200 ரன்கள் குவித்து பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க இந்தியாவும், மீதமுள்ள விக்கெட்டுகளை சீக்கிரம் வீழ்த்தி 100 ரன்களாவது முன்னிலை பெற பாகிஸ்தானும் முயலும். இருந்தாலும் 3 நாட்கள் ஆட்டத்தில் 15 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்ந்துள்ள நிலையில் ஆட்டம் டிரவை நோக்கியே செல்கிறது. பார்ப்போம் ஏதாவது அதிசயம் நடக்குமா என்று !

Saturday, January 21, 2006

இரண்டாவது டெஸ்ட் - பாகிஸ்தான் 379/4

இரண்டாவது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 379 ரன்கள் குவித்துள்ளது. இன்சாமம் 79 ரன்களுக்கும், அப்ரிடி 85 ரன்களுக்கும் ஆட்டமிழக்காமல் களத்திலுள்ளனர். யூனிஸ்கான் 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாக உள்ளது. இந்திய பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்துள்ளார். சகீர் கான் 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அகார்கர், கங்குலி அணியில் இல்லை. இவர்களுக்கு பதிலாக ஆர்.பி.சிங், சகீர் கான் இடம் பிடித்துள்ளனர். இன்னமும் கம்ரான் அக்மல், ரசாக் போன்றவர்கள் இருப்பதால் பாகிஸ்தான் 600 ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. பார்ப்போம், இம்முறையும் இந்திய மட்டையாளர்கள் அசத்துவார்களா, என்று !

Tuesday, January 17, 2006

பாகிஸ்தான் - இந்தியா முதல் டெஸ்ட் டிரா

அனைவரும் எதிர்பார்த்த படியே முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. ஆனால் யாரும் எதிர்பாராதது சேவக் 254 ரன்களில் அவுட்டானது. ஆட்ட முடிவில் இந்தியா 410 ரன்கள் ஒரு விக்கெட் இழப்பிற்கு எடுத்திருந்தது. ஆட்ட நாயகன் சேவக். சேவக் பார்மிற்கு வந்திருப்பது மகிழ்ச்சி. டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்புகள் அதிகம். இந்தியா உளவியல் ரீதியாக வெற்றியை பெற்றிருக்கிறது. அடுத்த டெஸ்ட்டில் கங்குலி இருப்பாரா ? இருந்தால் யார் ஓப்பனிங் ? டிராவிட் ஓப்பனிங்கில் தொடர்வாரா போன்ற கேள்விகளுக்கு விடை தெரிய அடுத்த டெஸ்ட் வரை காத்திருப்போம்.

இந்த வார நகைச்சுவை : சீதோஷ்ண நிலை சரியாக இருந்திருந்தால் இந்தியாவை இந்த போட்டியில் வீழ்த்தியிருப்போம் - அக்தர்

Monday, January 16, 2006

வேண்டாம் இது போன்ற போட்டி

இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட்டை பற்றி அலசிய போது, இவ்வகையான ஒரு தட்டை ஆட்டம் ஆடப்படும் என யாரும் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை. பந்து எழும்பும் மைதானங்கள், சுழலும் பந்துகள் என அனைவரும் அலசிக் கொண்டிருந்த வேளையில் கான்கிரீட்டால் போட்டது போல் பந்து வீச்சாளர்களுக்கு சிறிதளவும் உதவாத ஒரு பிட்சை உருவாக்கி, அதில் கிரிக்கெட் மேட்சை விளையாடிவிட்டார்கள்.

1997 ல் இலங்கையில் இதைப்போன்ற ஆடுகளத்தை அமைத்து, இலங்கை 952 ரன்கள் குவித்தது சிலருக்கு நினைவிருக்கலாம். இவ்வகையான ஆட்டங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டின் மேல் ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துபவை. ஒரு நாள் போட்டிகளின் மேலான ஈடுபாடு ரசிகர்களிடம் ஏற்பட்ட காரணங்கள் ,அதன் விறுவிறுப்பு மற்றும் முடிவு கிடைக்கும் தன்மை மட்டுமல்ல. 80 களில் டெஸ்ட் போட்டிகளில் பல அணிகளும் பின்பற்றிய சவசவ தன்மையும், பல டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்ததும் காரணமாகும். குறிப்பாக துணைக்கண்டங்களில் நடைபெறும் போட்டிகளில், அணி கேப்டன்களிடம் வெற்றி பெற வேண்டும் என்ற மனப்பான்மையை காட்டிலும், தோல்வி அடையக் கூடாது என்ற தற்காப்பு எண்ணமே மேலோங்கி நிற்கும். 1982 ம் ஆண்டு நடந்த இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் மேட்சுகள் , 83ல் நடந்த பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் மற்றும் 86ல் நடந்த இந்திய பாகிஸ்தான் தொடர் ஆகியவை மிகவும் தற்காப்பாக ஆடப்பட்ட விறுவிறுப்பற்ற தொடர்கள்.

டெஸ்ட் போட்டிகளை அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த அணிகள் மேற்கிந்திய தீவுகள் அணியும், ஆஸ்திரேலிய அணியும் மட்டும்தான். 95ம் ஆண்டிற்கு பிறகுதான் அதுவும் ஒருநாள் போட்டிகள் அதிகம் ஆடத்தொடங்கிய பின், அதிரடி யுத்திகள் டெஸ்ட் போட்டிகளிலும் பின்பற்றப்பட்டன.

இப்போட்டியின் ஆடுகள பண்பிற்கு சீதோஷ்ண நிலையை காரணமாக சொல்கிறார்கள். இது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. இதே சீதோஷ்ண நிலை தொடரும் சூழலில் மற்ற மைதானங்களும் இதே போன்று ரன்கள் குவிக்கும் களமாகவே அமையுமா? அவ்வாறிருந்தால் இத்தொடரை தற்போதே கேன்சல் செய்யலாம்.

இப்போட்டியை பொறுத்தவரை இந்திய அணியின் ரன்குவிப்பு ,அதுவும் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் ரன்கள் குவித்தது உளவியல் ரீதியான முன்னிலையை தந்திருக்கிறது. "நாங்கள் 7 விக்கெட்டுக்கள் எடுத்த களத்தில் பாக். ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை" என்று கூறி வெகுவாக சீண்டியிருக்கிறார் சேவாக்.

அடுத்த போட்டியாவது, உருப்படியான ஆடுகளத்தில் விறுவிறுப்பாக அமைய வேண்டும். இவ்வகையான ஆடுகளத்தை அமைத்ததன் மூலம் இந்திய அணியின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்திருக்கிறார்கள் பாக்.நாட்டினர்.

இப்போட்டியைப் பற்றி அதிகப்படியாக விவாதிக்க ஏதுமில்லை.

சேவாக் - திராவிட் பதிலடி

நான்கு நாள்களாக நடந்துவரும் பாகிஸ்தான் - இந்தியா டெஸ்ட் போட்டியின் ஒரு பந்தைக்கூட நான் பார்க்கவில்லை. சென்னை புத்தகக் கண்காட்சியில் நேரம் செலவழிந்தது. ரேடியோவிலும் வர்ணனை கிடையாது. ஆல் இந்தியா ரேடியோ முட்டாள்தனமாக நடந்துகொண்டு வர்ணனை உரிமையை வாங்கவில்லை. ஸ்கோர் பார்ப்பது எல்லாம் wap வழியாக கிரிக்கின்ஃபோவில் இருந்துதான்.

முதல் இரண்டு தினங்களில் பாகிஸ்தான் அடித்த அடி தாங்க முடியவில்லை. யூனுஸ் கான் 199, மொஹம்மத் யூசுஃப் (யோஹானா) 173, ஷாஹித் ஆஃப்ரீதி 103, கம்ரான் அக்மல் 102* - என்று ஃபைசலாபாத் மைதானத்தில் இம்ரான் கானின் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு செய்ததும், முடாசர்-மியாண்டாட் ஜோடி இந்தியாவுக்கு எதிராக அடித்துக் குவித்ததும் மட்டும்தான் ஞாபகத்துக்கு வந்தது. வெறுப்பு தாளவில்லை.

ஆனால் இந்தியாவின் பதிலடியோ பிரமாதமாக இருந்தது. சேவாக் பாகிஸ்தானை ஒருவழி செய்துவிடுவதாக உள்ளார் போல. திராவிட் சத்தமே இல்லாமல் ஒரு செஞ்சுரி. இன்னமும் விக்கெட் ஏதும் விழவில்லை. நாளை கடைசி நாள். ஆட்டம் டிராதான். ஆனால் சேவாக் எவ்வளவு தூரம் போவார் என்பது ஒருவகையில் சுவாரசியமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது என்ன ஆடுகளமோ!

Sunday, January 15, 2006

VB சீரீஸ் போட்டி- தென் ஆப்பிரிக்கா வெற்றி

நேற்று பிரிஸ்பேன் காபா(Gabba) மைதானத்தில் நடைபெற்ற ஒரு விறுவிறுப்பான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ஆஸி அணியை வென்றது


Photo: Courtesy: Cricinfo.com

பிரிஸ்பேன் நகரின் காபா (Gabba) மைதானம் ஆஸ்திரேலியாவில் இருக்கும் சிறந்த மைதானங்களில் ஒன்று. நவம்பரில் துவங்கும் ஆஸி கிரிக்கெட் சீசனில் முதலில் பெரும்பாலும் இங்குதான் டெஸ்ட் அல்லது ஒரு நாள் போட்டி துவங்கும். பிட்ச் நல்ல வகையில், வேகப் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தாலும் நல்லபடியாக மட்டையை நோக்கி வரும் அளவிற்கு இருப்பதால் பந்துவீச்சாளர்கள், மட்டையாளர்கள் இருவர்களுக்கும் சமமாக இருப்பதால், இங்கு நடக்கும் பெரும்பாலான போட்டிகள் டிரா ஆக சான்ஸ் குறைவு.


நேற்று நடந்த VB சீரீஸின் இரண்டாவது ஆட்டத்தில் முதலில் ஆஸி அணி ஆடத்துவங்கியது. Pollockகின் அபார பந்துவீச்சில் ஆரம்ப ஆட்டக்காரர்களை கிடுகிடுவென ஆஸி அணி இழக்க, 6 விக்கெட்டுக்கு 100 என இருந்த அணியின் ஸ்கோரை மைக் ஹூஸ்ஸியும், ப்ரெட் லீயும் அபாரமாக ஆடி 228 வரை கொண்டு சேர்த்தனர்.

மைக் ஹூஸ்ஸி ஒரு நல்ல கண்டுபிடிப்பு. கொஞ்சம் வயதாகிவிட்டாலும், இன்னும் பல போட்டிகளில் ஆஸி அணிக்கு விளையாடுவார் என்றே தோன்றுகிறது. பிரெட் லீயும் சிறப்பாக ஆடினார்.

பதிலுக்கு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு இலக்கு 229 என்றாலும் ஆஸி அணியின் அபார ·பீல்டிங் மற்றும் நல்ல பந்துவீச்சில் கொஞ்சம் கொஞ்சமாக இலக்கை நோக்கி முன்னேறினர். சில விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் டிப்பெனார் மற்றும் மார்க் பவுச்சர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதையில் எடுத்துச் சென்றனர். கடைசியாக வந்திறங்கிய ஜஸ்டின் கெம்பும் பவுச்சருக்கு துணைகொடுத்து வெற்றியை நெருங்கிவிட்ட நிலையில் மழை..!

1992 உலகப்கோப்பையிலேயே தென்னாப்பிரிக்க அணிக்கு மழையால் இதுமாதிரி ஒரு ஜெயிக்க வேண்டிய போட்டியை தோற்க நேர்ந்தது. இந்த முறை டெஸ்ட் தொடரிலும் ஆஸியிடம் தோற்ற நிலையில், அட்லீஸ்ட் ஒருநாள் போட்டியிலாவது ஜெயிக்க வந்து மழை மற்றும் Duckworth Lewis எண்ணிக்கையால் தோற்க நேர்ந்தால் அதைவிட மோசமான நிலை என்னவென்று சொல்வது ?

ஆனால் கடைசியில் வருண பகவான் கொஞ்சம் கருணை காட்டியதால் ஆட்டம் முடிய 10 நிமிடம் இருக்கும் போது மீண்டும் துவங்க 5 ரன்களை எடுத்து தென்னாப்பிரிக்கா ஆஸி அணியை வென்றது. மைதானத்தில் இருந்த பல பார்வையாளர்கள், ஆஸி அணி ஆதரவாளர்கள், கொஞ்சம் பதற்றத்துடன் இருக்கும் அளவிற்கு போட்டி கடைசி 10 ஓவர்களில் மிகவும் பரபரப்பாக இருந்தது. மக்ராத்தின் ஓவரில் (47ஆவது) மார்க் பவுச்சர் அடித்த ஸ்டிரேய்ட் டிரைவ் Flat சிக்ஸர் ஓர் மறக்க முடியாத ஷாட். மக்ராத்தை இது மாதிரி, அதுவும் உயரே தூக்கி அடிக்காமல் Flatஆக ஸ்டிரெய்ட் டிரைவில் சிக்ஸர் அடித்தது இதுதான் முதல் முறை என நினைக்கிறேன்.

விளையாட ஆரம்பத்தில் மார்க் பவுச்சர் ஒரு சென்சேஷன் என கருதப்பட்டாலும் சமீப காலமாக அவரின் பேட்டிங்கில் அவ்வளவாக அணிக்கு வலு சேர்க்கவில்லை. அந்த குறையை நேற்றைய போட்டியில் தீர்த்துவிட்டார். (ஆனால் Man of the Match - Pollock தான்)


ஸ்கோர்: http://usa.cricinfo.com/ci/content/match/226375.html

படங்கள்: http://content-usa.cricinfo.com/vbseries/content/gallery/233083.html



- அலெக்ஸ் பாண்டியன்
16-ஜனவரி-2006

பி.கு: லாகூரில் நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி அநேகமாக
டிராவில் முடிவடையும். ஆப்ரிடியும், கம்ரான் அக்மாலும் பின்னர் விரேந்திர சேவாகும்
அடி தூள்.

Saturday, January 14, 2006

பாகிஸ்தான் 679 / 7 decl - முதல் இன்னிங்ஸ்

எதிர்பார்த்த படியே பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 679 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. யூனிஸ் கான் 199, மொகம்மது யூசுப் 173, அப்ரிடி 103, கம்ரான் அக்மல் 102 ரன்கள் குவித்தனர். அப்ரிடி மற்றும் கம்ரான் 80 பந்துகளிலேயே அபாரமாக சதமடித்தது குறிப்பிடத் தக்கது. பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ் முழுவதும் விரைவாக ரன்களை குவித்ததற்கு 4.8 ரன்ரேட்டே சாட்சி. இந்தியாவின் முதல் வரிசை பந்து வீச்சாளர்கள் அனைவரின் பந்து வீச்சும் அடித்து நொறுக்கப் பட்டது. கும்ப்ளே 2, அகார்கர் 2, பத்தான் 1 மற்றும் 2 விக்கெட்டுகள் ரன் அவுட்.


இன்னும் 3 நாட்கள் ஆட்டம் மீதி இருக்கிறது. இந்தியா தோல்வியை தவிர்க்க கவனமாக ஆட வேண்டும். டிரா செய்தால் பாராட்டலாம். பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமாக உள்ளது. டிராவிட், சேவக் இந்திய இன்னிங்ஸை துவக்கியுள்ளனர். அக்தர் மிரட்டுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.


வாசகர்கள், வலைப் பதிவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் !

Friday, January 13, 2006

பாகிஸ்தான் ரன் குவிப்பு

இன்று முதல் நாள் ஆட்ட இறுதியில் பாகிஸ்தான் 85 ஓவர்களில், 326 ரன்கள் 2 விக்கெட் இழப்பிற்கு குவித்துள்ளது. ரன் ரேட் 3.84. யுவராஜ் சல்மான் பட்டை ரன் அவுட் செய்தார். பத்தான் மாலிக்கை அவுட்டாக்கினார். யூனிஸ் கானும், மொகம்மது யூசுபும் பின்னி எடுத்து வருகின்றனர். அனேகமாக பாகிஸ்தான் 600 ரன்களை குவித்து மிரட்ட வாய்ப்புள்ளது. கும்ப்ளே, ஹர்பஜன் இருவரது பந்து வீச்சும் முதல் நாள் ஆடுகளத்தில் எடுபடவில்லை. பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமானது. சேவக் இன்னொரு 300 அடிப்பாரா ?? இந்தியா மேட்ச்சை டிரா செய்யுமா ?? கங்குலி ஓப்பனிங்கா ? அக்தரை சமாளிப்பாரா ? கேள்விகள் நிறைய, பதில்களுக்கு இரண்டு நாட்கள் காத்திருப்போம் !!!!

VB தொடர்- அதிரடி ஆஸி

இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா பங்கு கொள்ளும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இன்று மெல்போர்னில் துவங்கியது. இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே முதல் போட்டி இன்று நடைபெறுகிறது.

முதல் 15 ஓவர்களில் ஆஸி இரு விக்கெட்டுக்களை எடுத்து 64 ரன்கள் எடுத்திருந்தது. பெரைரா இரு விக்கெடுக்கள் வீழ்த்தியிருந்தார். அப்போதைய நிலையில் இலங்கையின் கை ஓங்கியிருந்ததாக பட்டது. ஆனால் இறுதி நிலவரம் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்தது.

கடிச், மார்டின் , சிமண்ட்ஸ் மற்றும் கிளார்க்கின் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 318 ரன்களை 50 ஓவர்களில் குவித்தது. இதில் மார்ட்டின் மற்றும் சிமண்ட்ஸின் அதிரடி ஆட்டம் குறிப்பிடத்தக்கவை. டெஸ்ட் இடத்தை இழந்த மார்ட்டின், ஒருநாள் மற்றும் அரை நாள் போட்டிகளில் ( அதுதாங்க 20: 20) துவம்சம் செய்து வருகிறார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான அரைநாள் போட்டியில் கிட்டத்தட்ட சதம் அடித்தார். இப்போட்டியிலும் பல பவுண்டரிகள், சில சிக்ஸர்கள்.

ஆஸ்திரேலிய அணி ரன்கள் குவிக்காத போதுதான் அதைப் பற்றி அலச வேண்டும், மற்றபடி ஒரு இயந்திரத்தனமையுடன் ரன்களை குவிக்கிறார்கள். அது சில நேரம் போரடிக்க கூட செய்கிறது.

இலங்கை தற்போதைய நிலவரப்படி 10 வது ஓவரில் இரு விக்கெட்டுக்கள் இழந்து 27 ரன்கள் எடுத்துள்ளது. என்னுடைய பார்வையில் எத்தனை ரன்களில் தோற்பார்கள் என்பதை தவிர தோல்வி நிர்ணயிக்கப்பட்ட விசயம். முபாரக்கை தொடக்க ஆட்டக்காரராக இலங்கை அணியினர் அனுப்புகிறார்கள். அவர்களுக்கு முபாரக் இன்னொரு ஜெயசூர்யாவாக வருவாரா? என்ற நப்பாசை உள்ளது. முபாராக்கின் சராசரியும் சாதனைகளும் சொற்பமே. ஜெயசூர்யாவும் ஓப்பனராய் நியமிக்கப்படாத முன் அதிகம் சாதித்தவரில்லை. எனெவே முபாராக் இன்னொரு ஜெயசூர்யாவாக வரலாம் என்பது அவர்களது நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால் இன்றைய மேட்சில் இரண்டு ரன்களுக்கே முபாரக் காலி.

ஏதாவது செய்து இலங்கை வெற்றி பெற்றாலே ஒழிய இம் மேட்ச்சை பற்றி எழுத வேண்டிய அவசியம் இல்லை.

Thursday, January 12, 2006

லாகூர் டெஸ்ட்- பாக். பேட்டிங்

டாஸ் முடிந்து விட்டது. அணிகளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. பாகிஸ்தான் டாஸில் வென்று பேட் செய்ய முடிவு செய்து விட்டது. பாகிஸ்தான் அணியில் சாகிப் மாலிக் ஓப்பன் செய்யப் போகிறார். ஏற்கனெவே இங்கிலாந்திற்கு எதிராக ஒரு டெஸ்டில் ஓப்பன் செய்தவர்.

இந்திய அணியில் கங்குலி இடம் பெற்றுள்ளார். கங்குலி தொடக்க ஆட்டக்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. கங்குலிக்கு கண்டிப்பாக இது வாழ்வா ? சாவா? மேட்ச். இந்திய அணியில் இரு வேகப் பந்து வீச்சாளர்கள் ( பதான், அகர்கர்), இரண்டு ஸ்பின்னர்கள். பாக் அணியில் மூன்று பந்து வீச்சாளர்கள். இந்த மூன்று பந்து வீச்சாளர்களையும் இந்தியா முன்பே எதிர் கொண்டுள்ளது இந்திய அணிக்கு சற்று சாதகமான அம்சம்.

இந்தியா சொற்ப ரன்களுக்கு பாகிஸ்தானை அவுட்டாக்குவது அவசியம். இல்லாவிடில் பாக். கை ஓங்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

ஆல் தி பெஸ்ட் - பாக் & இந்தியா.

நாளை வெள்ளி 13ந் தேதி

அனைத்து முன்னாள் பாகிஸ்தான் மற்றும் இந்திய வீரர்களும் கருத்து கந்தசாமிகளாக மாறி சொல்வதை எல்லாம் சொல்லி விட்டார்கள். நாளை முழு கவனமும் ஆடுகளத்தை நோக்கி திரும்பும்.

முதலில் சில கருத்து கந்தசாமிகள் என்ன சொன்னார்கள் என்று பார்ப்போம்.

கவாஸ்கர் மூன்று ஓப்பனர்களையும் அணியில் சேர்க்கச் சொல்கிறார்.( கதைக்குதவாது) . பாகிஸ்தான் ஆடுகளம் ஒன்றும் ஆஸ்திரேலிய ஆடுகளம் அல்ல, அதிகப்படியாக பயப்படுவதற்கு என்கிறார். இது உண்மைதான். வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக வீசும் பட்சத்தில் கூட அதிகப்படியான LBW மற்றும் பவுல்ட் ஆவதற்கான வாய்ப்புக்களே அதிகம். ஒரு நாள் முழுவதும் பந்து தொடர்ந்து ஸ்விங் ஆகாது. ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் பட்சத்தில் பந்தை புல்பிட்ச் செய்துதான் பந்து வீசுவார்கள்.அதில் பந்து காலில் பட்டு அவுட்டாகவோ, போல்ட் ஆகவோ வாய்ப்புக்கள் அதிகம்.

ஜாகிர் அப்பாஸ் கவாஸ்கரை காட்டிலும் சச்சின் சிறந்த ஆட்டக்காரர் என்று கூறுகிறார். எந்த நாட்டின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்களோ அந்த நாடு வெற்றி பெறும் என கணிக்கிறார்.

ஸ்ரீநாத் பாகிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளதாக சொல்கிறார். இந்தியாவை ஒரு காலத்தில் அம்பயர்கள் உதவியுடன் துவம்சம் செய்த அக்வீப் ஜாவேத், பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் கோப்பையை வெல்லும் என மார்தட்டுகிறார்.

மோயின் கான் இந்தியாவின் வெற்றி வாய்ப்புகள் அதிகம் என குறிப்பிடுகிறார்.

இந்திய அணியின் ஆட்டக்காரர்கள் பட்டியலை டிராவிட் முடிவு செய்து விட்டார்.ஆனால் அறிவிக்கவில்லை. கங்குலி இடம் பெறுவாரா/ என்ற அலசல் தொடர்கிறது. கங்குலி இடம் பெறக்கூடும் என உள்ளுணர்வு சொல்கிறது.

சென்னைவாசிகள் நேரடி ஒளிபரப்பை செட்டாப் பாக்ஸ் இல்லாமல் பார்க்க முடியாது. வானொலியில் நேர்முக வர்ணனையும் தகராறு என்று சொன்னார்கள்.சஞ்சய் மஞ்ரேக்கர், ஹோல்டிங், ரமிஸ்ராஜா, சிவராமகிருஸ்ணன், டீன் ஜோன்ஸ், வக்கார் யூனஸ் ஆகியோர் கொண்ட 10 வர்ணனையாளர்கள் அணி பணியில் ஈடுபட உள்ளது.

ஒரு சிறப்பான கிரிக்கெட் தொடரை பார்க்க முடியும் என்று நம்புவோமாக.

Monday, January 09, 2006

கலக்கலா? கலக்கமா?- பாக். தொடர் பற்றிய திரை ஏற்றம்

இந்தியா-பாகிஸ்தான் தொடரைப் போல கிரிக்கெட் ரசிகர்களையும், பொது மக்களையும் பாதிக்கும் சங்கதிகள் மிகவும் குறைவே. மீடியாவில் இதற்கான முன்னோட்டம் , களத்தில் ஆட்டம் துவங்குவதற்கு பலநாட்கள் முன்பாகவே துவங்கி விடுகிறது.இந்த மீடியா ஆட்டத்தில் பங்கு பெற இரு நாட்டிலும் பல ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அவர்களுள் சிலர் சாதனைகள் செய்தவர்கள். சிலர் வாய்சொல் வீரர்கள்.

இந்தியாவில் வெங்சர்கார், சித்து போன்றோர்கள் இந்திய அணியின் பலத்தை வலியுறுத்தியும், பாகிஸ்தானில் இம்ரான், சப்ராஸ், அக்ரம் போன்றோர்கள் பாகிஸ்தான் பலத்தை அடிக்கோடிட்டும் பேட்டிகள் மற்றும் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆடப்போகும் இரு தரப்பு அணிகளின் பயிற்சியாளர்களும் சரி, கேப்டன்களும் சரி.. வெகுவாக அடக்கி வாசிக்கிறார்கள் இந்தியாவை புகழ்கிறார் இன்சமாம். வுல்மரை புகழ்கிறார் சாப்பல்.

இதிலிருந்து கண்கூடாகத் தெரிவது.. இரு நாடுகளுமே "பேவரைட்ஸ்" என்று முத்திரை குத்தப்படுவதை விரும்பவில்லை. "அண்டர் டாக்" ஆக கணிக்கப்படுவது அழுத்தத்தை குறைப்பதற்கு உதவுவதாக கருதுகிறார்கள். இரு நாடுகளுக்குமான சாதக அம்சங்கள் என கூறப்படுபவற்றை நான் உங்கள் முன் வைக்கிறேன்.முதலில் பாகிஸ்தான்

  • போட்டி நிகழும் காலம்-குளிர்காலம் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், அதனால் குறிப்பாக பாக். வேகப் பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக அமையும்.
  • பாக். பந்து வீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் இந்திய பந்து வீச்சாளர்களை காட்டிலும் வல்லவர்கள்.
  • சாகிப் அக்தர் மிகவும் ஒழுக்கத்துடனும், நேர்த்தியாகவும் பந்து வீசுவதால் அதிக விக்கெட்டுக்களை இம்முறை வீழ்த்தக் கூடும். அக்தரின் மெதுபந்துகள் (slow ball), அவரது அதீத வேகக்குறைப்பால் ( 145 கி.மீ லிருந்து 110 கி.மீ) இந்திய பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைக்கும்.
  • இன்சமாம் உல்ஹக் பிரமாதமான பார்மில் இருக்கிறார்.
  • பாக் பந்து எழும்பும் மைதானங்களை தயாரிக்கும்.எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள்.

இந்திய அணியின் சாதகமான அம்சங்களாக முன்வைக்கப் படுவது.

  • சிறந்த மித வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சிற்கு உதவும்படி களம் தயாரித்தால் அதை சாதகமாக்கிக் கொள்ள இந்திய பந்து வீச்சாளர்களாலும் இயலும்.
  • இந்திய மட்டையாளர்களின் திறன். குறிப்பாக சேவாக்,திராவிட் மற்றும் சச்சின்.
  • இப்ரான் பதான்.

இரு அணிகளுமே மேலே குறிப்பிட்டுள்ளவைகளைக் காட்டிலும் மேலும் பல பலம் மற்றும் பலவீனங்களை உள்ளடக்கியுள்ளன.என்னுடைய பார்வையில் எந்த அணி மனோ உறுதியுடனும், அதற்கும் மேலாக ஒழுக்கத்துடனும் விளையாடுகிறதோ அந்த அணியே வெற்றி பெறும். ஒழுக்கம் என்பது நேர்த்தியுடன் பந்து வீசுவது, சூழ்நிலைக்கேற்ப பேட் செய்வது, ஒழுங்காக கேட்சுக்களை பிடிப்பது, ரன்களை தடுப்பது போன்ற அம்சங்களை உள்ளடக்கியது.

மற்ற அணிகளுக்கும், இந்திய துணைக்கண்ட அணிகளுக்குமான வித்தியாசமே கடைபிடிக்கப்படும் ஒழுங்கு முறையில்தான் இருக்கிறது. நோ- பால்களை வீசும் அக்தர், கால்களை சரியாக நகர்த்தாமல் கவர் டிரைவ் செய்யும் லஷ்மண் -ஆகியோர் திறமையிருந்தும் ஒழுக்கமற்றவர்களாகவே கருதப்படுவர். ஆனால் வெளிநாட்டு கோச்சுக்களின் உதவியால் இரு அணிகளும் தங்கள் அணுகுமுறையை வெகுவாக சீர்திருத்தியிருக்கின்றன.

என் பார்வையில் சோபிக்க் கூடிய ஆட்டக்காரர்கள்

பாகிஸ்தான்

நவீத் அல் ஹூசைன்

கம்ரான் அக்மல்

முகம்மது யூசுப்

அப்ரிதீ ( பிப்டி, பிப்டி)

இந்தியா

லஷ்மண் ( சோபிக்கா விட்டால் இந்திய அணியிலிருந்து கல்தா)

அனில் கும்ப்ளே

சேவாக்

திராவிட், சச்சின், இன்சமாம் போன்ற வல்லவர்களை பற்றி தனிப்பட்ட யூகம் செய்ய விரும்பவில்லை.

சர்ப்ராஜ் நவாஜ் கூறிய ஒரு கருத்து அனைவராலும் கவனித்தில் கொள்ள வெண்டியது. இந்திய பாக் தொடரில் , குறிப்பாக பாகிஸ்தானில் இரு அனிகளுமே நன்றாக இன்னிங்ஸை துவக்கும். ஆனால் திடீரென ஒரு வீழ்ச்சி நிகழ்ந்து விக்கெட்டுக்கள் மடமடவென சரியும். பெரும்பாலும் பாகிஸ்தான் இந்தியாவை அவ்வாறு சுருட்டியிருக்கிறது. எந்த அணி அத்தகைய வீழ்ச்சிக்கு இடம் கொடுக்காதோ அந்த அணி வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம்.

கலக்குவோமா? கலங்குவோமா?- பொறுத்திருந்து பார்ப்போம்.

Sunday, January 08, 2006

பாக். தொடர்- ஒளி(லி) பரப்பு குழப்பங்கள்

இந்திய அணியின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது, ஒவ்வொரு முறையும் பிராச்சார் பாரதிக்கும், ஒளிபரப்பு உரிமம் பெற்றிருக்கும் நிறுவனத்திற்கும் இடையே பஞ்சாயத்து நடப்பது வழக்கமாகிவிட்டது. இம்முறை கூடுதலாக ஆல் இந்தியா ரேடியோவும் களத்தில் குதித்துள்ளது.

நேர்முக வர்ணணைக்கான ஒலிபரப்பு உரிமம் ARY Digital என்ற துபாய் நிறுவனத்திடம் உள்ளது. ஆல் இந்தியா ரேடியோவிற்கு அனுமதி அளிக்க 2,00,000 டாலர்கள் பணத்தை இந்நிறுவனம் கோரியுள்ளது. ஆல் இந்தியா ரேடியோ 80,000 டாலர்கள் மட்டுமே தர இயலும் என்று கூறியுள்ளது. இதனை தொடர்ந்து நேர்முக வர்ணனையை ஒலிபரப்ப இயலாத சூழல் உருவாகியுள்ளது.

தொலைக்காட்சி நேர்முக ஒளிபரப்பு குறித்து, டென்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் " தூர்தர்சனிற்கு" ஒளிஅலைகளை தரமுடியாது என வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை அனைத்து ஒளிபரப்பு நிறுவனங்களும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றன.

பாகிஸ்தானுடனான போட்டிகள் உணர்வு ரீதியில் இந்திய மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. இப்போட்டிகள் டிவியில் ஒளிபரப்பாகா விட்டால் மக்கள் வெகுண்டெழ வாய்ப்பிருக்கிறது. நீதிமன்றமும் இரு தரப்பினருக்கும் ஏதாவது சமாதானம் செய்து போட்டிகளை தூர்தர்சனில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யும் என்றுதான் நினைக்கிறேன்.

ஆனால் ஒவ்வொரு முறையும் கடைசி நேரம் வரை இப்பிரச்சனைகளை கண்டுகொள்ளாததும், கடைசி நேரத்தில் கோர்டிற்கு போவதும் மிகவும் எரிச்சலாக இருக்கிறது. பிராச்சார் பாரதியும் அரசாங்க போர்வையில் எதிரணியின் கைகளை முறுக்கி ஜெயித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. வணிக உலகில் இது அராஜகமான செயல்.

சென்னையில் கண்டிசனல் ஆக்ஸஸ் சிஸ்டம் நடைமுறையில் இருப்பதால், டென்ஸ்போர்ர்ட்ஸ் இலவசமாக கிடைக்காது. நேர்முக வர்ணனையும் இல்லாவிட்டால் இணையம்தான் ஒரே ஆப்சன்.


இப்பிரச்சனை குறித்த மேலதிக விவரங்களுக்கு

AIR stutters on cricket broadcast

பட்ட தோளிலே படும்

"பட்ட காலிலே படும்" என்ற பழஞ் சொற்றொடர் உண்டு. ஜெயசூர்யாவிற்கு மீண்டும் தோள்பட்டையில் சிக்கல் வந்திருக்கிறது. நீயூஸிலாந்து தொடரில் மீண்டும் அணியில் இடம் பெற்றவர், குளியலறையில் சோப் எடுக்கும் போது வழுக்கி, மீண்டும் தோள்பட்டையில் காயம் ஏற்படுத்திக் கொண்டார். இதன் மூலம் VB தொடரில் அவர் விளையாட முடியாமல் வீடு திரும்ப போகிறார்.

கிரிக்கெட் ஆடும் சமயத்தில் அல்லாது பிற சூழ்நிலைகளில் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு ஏற்பட்ட விநோத காயங்கள், அதனால் ஆட்டக்காரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கல் குறித்து சிஃபி யில் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை வந்திருக்கிறது.
உங்கள் பார்வைக்கு

கிடைத்தது வெற்றி

மூன்று மேட்சுக்களில் உதை வாங்கிய பின், கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது இலங்கை. உலகக் கோப்பை வெற்றிக்குப் பின்னால் (1996)இவ்வாறான தொடர் தோல்விகளை இலங்கை சந்தித்தது இல்லை என்றே நினைக்கிறேன். தோல்விகள் பல பிரச்சனைகளை வெளிக் கொணர்ந்து விடுகிறது. அணியில் மட்டுமல்ல, கிரிக்கெட் நிர்வாகத்திலும் கூட.வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் வரையில் இப்பிரச்சனைகள் வெளியே தெரிவதில்லை.

இலங்கை அணியில் வாஸ் துணைக்கேப்டனாக திடீரென நியமிக்கப்ப்ட்டுள்ளார். அதைக் குறித்து சர்ச்சையை கிளப்புகிறார்கள். இந்திய சுற்றுப்பயண ஆரம்பத்தின் போது, இலங்கை கிரிக்கெட் நிர்வாக முறையை குறித்து பெருமைப்பட்டுக் கொண்ட ரணதுங்கே தற்போது தனது பதவியை ராஜினமா செய்துள்ளார். அணிக்கு ஊக்கமளிக்க மனோதத்துவ நிபுணர் சாண்டிகார்டனை அழைத்திருக்கிறார்கள். இத்தகைய சிக்கல்களை மீறி ஒரு வெற்றியை பெற்று விட்டார்கள் இலங்கை அணியினர்.

நேற்றைய ஆட்டத்தின் சிறப்பம்சம் இலங்கை 273 ரன்களை குவித்தது. இலங்கை பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுக்களை எடுப்பதற்கு, போதிய ரன்களை இலங்கை பேட்டிங்கில் எடுப்பது அவசியம். ஏனெனில் இலங்கை பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுக்களை வீழ்த்தும் அதிரடி பந்துவீச்சாளர்கள் அல்ல. பேட்ஸ்மேனை கூடுதல் ரிஸ்க் எடுக்கச் செய்து விக்கெட்டுக்களை கைப்பற்றும் வகையினர்.

நேற்றைய ஆட்டத்தில் கூட புல்டானும், ஆஸ்லேயும் பெர்ணாண்டோவின் பந்துவீச்சை துவம்சம் செய்தவிதத்தை பார்த்தவுடன், நியூஸிலாந்து சுலபமாக ஜெயிக்கும் என்று நினைத்தேம். ஆனால் இலங்கை எடுத்த ரன்கள் அவ்வணியின் வெற்றிக்கு உதவின.

VB தொடர் விளையாட இலங்கை கூடுதல் நம்பிக்கையுடன் செல்லலாம்.

ஸ்கோர் கார்ட்

கிரிக்கெட் கூட்டுப்பதிவுக்கு ஆர்வலர்கள் தேவை

நண்பர்களே: இந்தக் கூட்டுப்பதிவில் தொடர்ச்சியாக உலகம் முழுவதிலும் நடக்கும் டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் பற்றிய சிறுகுறிப்புகள், வெற்றி - தோல்வி நிலவரம், தொடர்கள் பற்றிய கணிப்பு, விளையாட்டு வீரர்கள், கிரிக்கெட் அரசியல், கிரிக்கெட்டில் புரளும் பணம், கிரிக்கெட் மார்க்கெட்டிங், கிரிக்கெட் புள்ளிவிவரம் என பலவற்றையும் உடனுக்குடனாக எழுத ஆர்வலர்கள் தேவை.

சுடச்சுட ஆட்டங்கள் முடிந்துமே அவை பற்றி எழுதவேண்டும். இப்பொழுதைக்கு இது கூட்டுப்பதிவு என்ற பெயரில் இயங்கிவந்தாலும், பலரும் எப்பொழுதாவதுதான் எழுதுகிறார்கள். எனவே இந்தப்பதிவு தொடர்ச்சியாக நன்றாக நடைபெறவேண்டுமானால் அதற்கு உங்கள் பங்களிப்பு அவசியம். எழுத விரும்புவோர் என்னை மின்னஞ்சலில் (bseshadri at gmail dot com) தொடர்பு கொள்ளவும்.

கிரிக்கெட் அப்டேட்

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா மூன்றாம் கிரிக்கெட் டெஸ்ட்

கடைசி கிரிக்கெட் டெஸ்ட் சிட்னியில் நடந்தது. இம்முறை தென்னாப்பிரிக்கா டாஸில் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ஜாக் கால்லிஸ், ஆஷ்வெல் பிரின்ஸ் இருவரும் சதம் அடிக்க, தென்னாப்பிரிக்கா நல்ல வலுவான முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைப் பெற்றது - 451/9 டிக்ளேர்ட். அடுத்து மிக நல்ல பந்துவீச்சால் விக்கெட்டுகளைப் பெற்றாலும் பாண்டிங்கின் சதத்தைத் தடுக்க முடியவில்லை. அத்துடன் முதல்முறையாக கில்கிறிஸ்ட் இந்தத் தொடரில் அடித்து ஆடி 86 ரன்களைப் பெற்றார். லீ, மெக்கில் போன்ற 'வால்'களுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்கா அணியின் எண்ணிக்கைக்கு எவ்வளவு அருகில் வரமுடியுமோ வந்தார். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் முடியும்போது 359 ஆல் அவுட். வெறும் 92 ரன்கள் மட்டுமே குறைவு. எட்டாவது விக்கெட் விழுந்தபோது ஆஸ்திரேலியாவின் எண்ணிக்கை 263/8. கடைசி இரண்டு விக்கெட்டுகளுக்காக 96 ரன்கள் சேர்த்திருக்கின்றனர்.

தென்னாப்பிரிக்கா இரண்டாம் இன்னிங்ஸில் 250 ரன்களாவது பெற்று 346+ ரன்கள் டார்கெட் நிச்சயம் செய்யவேண்டும். ஆனால் நான்காம் நாள் மழை பெய்து ஆட்ட நேரத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது. இதனால் ஸ்மித் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். கடைசியாக ஐந்தாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா 194/6 என்ற எண்ணிக்கையில் இருக்கும்போது மீண்டும் டிக்ளேர் செய்தார். ஆஸ்திரேலியா 287 எடுத்தால் ஜெயிக்கலாம். குறைந்தது 76 ஓவர்கள் தென்னாப்பிரிக்க வீசும். உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 12 ஓவர்களில் 31/1.

ஹெய்டன் - பாண்டிங் ஜோடி மிக நன்றாக விளையாடி தேநீர் இடைவேளையின்போது அணியின் எண்ணிக்கையை 39 ஓவர்களில் 182/1 என்ற கணக்குக்கு எடுத்துச் சென்றது. அதாவது தேவைக்கும் அதிகமான ரன் ரேட். தேநீர் இடைவேளைக்குப் பின் ஹெய்டன் சதமடிக்காமல் அவுட்டாக, பாண்டிங் தொடர்ந்து தன் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஒரு சதமடித்து வெற்றியைப் பிடித்தார். 60.3 ஓவர்களில் 288/2!

இப்படியாக டெஸ்ட் போட்டித்தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்று வென்றது.

ஸ்கோர்கார்ட்

நியூசிலாந்து - இலங்கை ஒருநாள் போட்டிகள்

இந்தத் தொடர் முடிவடைந்தது. முதல் நான்கு போட்டிகளில் நியூசிலாந்து வென்றது. நேற்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை ஆறுதல் வெற்றி பெற்றது. தொடர் நிலவரம்: நியூசிலாந்து 4-1 என்ற கணக்கில் வென்றது.

Monday, January 02, 2006

சில கிரிக்கெட் போட்டி முடிவுகள்

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட்

பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்தது. டாஸில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. போலாக் முதல் சில விக்கெட்டுகளை எளிதாகப் பெற்றார். ஆனால் ஆண்டிரே நெல் பாண்டிங் கொடுத்த கேட்சை விட்டுவிட்டார். அப்பொழுது பாண்டிங் 17 ரன்னில் இருந்தார். பாண்டிங் மீண்டும் அவுட்டானபோது அவரது எண்ணிக்கை 117. இதுகூடப் பரவாயில்லை... தென்னாப்பிரிக்கா வலுவாகப் போராடி - முக்கியமாக நெல்லின் பந்து வீச்சினால் - ஆஸ்திரேலியாவை 248/9 என்ற எண்ணிக்கைக்குக் கொண்டுவந்தது. ஆனால் மைக்கேல் ஹஸ்ஸி கடைசி ஆள் மெக்ராத்துடன் ஜோடி சேர்ந்து பத்தாவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்தார்! ஹஸ்ஸி 122 ரன்கள். இதனால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 355 ரன்கள் பெற முடிந்தது.

இதற்குப் பிறகும் தென்னாப்பிரிக்கா ஜெயிப்பது என்பது இயலாத காரியமாகிப் போனது. ஹெர்ஷல் கிப்ஸ் 94 ரன்கள் பெற்றார். பலரும் ஆளுக்குக் கொஞ்சம் ரன்கள் பெற்றனர். ஆனால் அணியின் எண்ணிக்கை 311க்கு ஆல் அவுட். இரண்டாம் இன்னிங்ஸில் மாத்தியூ ஹெய்டன் சதம் அடிக்க, ஆஸ்திரேலியா அதிரடியாக 321/7 என்ற எண்ணிக்கையில் டிக்ளேர் செய்தது. தென்னாப்பிரிக்கா 181க்கு ஆல் அவுட் என்று சுருண்டது.

ஆண்டி சைமாண்ட்ஸ் இரண்டாம் இன்னிங்ஸில் 72 ரன்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல் இரண்டு இன்னிங்ஸிலுமாகச் சேர்த்து மொத்தம் 5 விக்கெட்டுகள் பெற்றார்! ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஸ்கோர்கார்ட்

நியூசிலாந்து - இலங்கை முதலாம் ஒருநாள் போட்டி

சென்ற வருடத்தின் கடைசி நாளில் நடந்த போட்டி. இலங்கை காற்றில் சுழலும் வேகப்பந்தில் தடுமாறி தன் அனைத்து விக்கெட்டுகளையும் 164 ரன்களுக்கு இழந்தது. தில்ஷன், அட்டபட்டு, ஆர்னால்ட் ஆகியோர்தான் ஓரளவுக்குத் தாக்குப்பிடித்தனர். பதிலுக்கு நியூசிலாந்து எளிதாகத் தன் இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ஸ்கோர்கார்ட்