Wednesday, November 30, 2005

மொஹம்மத் யூசுஃபின் சதம்

இவர் யாரோ என்று தடுமாறாதீர்கள். இவர்தான் சில மாதங்கள் முன்புவரை யூசுஃப் யோஹானா என்ற பெயருடன் பாகிஸ்தானுக்காக விளையாடி வந்த கிறித்துவர். இந்தியா தொடருக்குப் பின்னர் இஸ்லாத்துக்கு மாறி, தன் பெயரை மொஹம்மத் யூசுஃப் என்று மாற்றிக்கொண்டார்.

இதுதான் இந்தப் பெயருடன் இவர் அடிக்கும் முதல் சதம் - இப்பொழுது இங்கிலாந்துக்கு எதிராக நடக்கும் மூன்றாவது டெஸ்டில் உணவு இடைவேளைக்கு முன் அடித்திருக்கிறார்.

இவர் கடைசியாக அடித்த சதம் இந்தியாவுக்கு எதிராக - கொல்கொத்தாவில், மார்ச் 2005-ல். அந்த ஆட்டத்தில் ராகுல் திராவிட் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்தார். இந்தியா அந்த டெஸ்டை ஜெயித்தது.

சென்னை மழை அப்டேட் + முரளி

சென்னையை நோக்கி வரும் புயல் 'புலி வருது' போல பயமுறுத்துகிறது. இன்று (வியாழன்) இரவு கரையைக் கடக்கும் (அல்லது 'கடக்காது') என்கிறார்கள் இப்பொழுது.

இதுவரையில் - வியாழன் காலை - சென்னையில் மழை இல்லை. ஒருவேளை இன்று டிக்கெட் விற்கப்படலாம்.

முரளிக்கு தமிழ் பேசத்தெரியாது என்று யாரோ ஒரு வலைப்பதிவர் சொன்னதாக ஞாபகம். நேற்று தொலைக்காட்சியில் காண்பித்த ஒரு பிட்டில் சகிக்கக்கூடிய அளவுக்கு தமிழில் பேசினார். "எல்லா மேட்சிலும் ஜெயிக்க வேணும், அதுக்கு என்னால முடிஞ்சதைச் செய்வேன்" - அல்லது கிட்டத்தட்ட இந்த மாதிரி தொனிக்கக்கூடிய ஏதோ வார்த்தைகளைச் சொன்னார்.

-*-

கடைசியாக சென்னையில் நடந்த டெஸ்ட் இந்தியா - ஆஸ்திரேலியா. நான்கு நாள்கள் நடந்த கடுமையான போட்டிக்குப் பிறகு ஐந்தாம் நாள் இந்தியா ஜெயிக்க நல்ல வாய்ப்பு இருந்தது. மழை அதை வாரிக்கொண்டு போனது. சத்தியமாக மழை இருக்காது என்று தெனாவெட்டாகச் சொன்னேன். "இது சென்னை" என்றேன். ஆனால் அடுத்த நாள் ஒரு பந்தைக் கூட வீச முடியவில்லை.

இந்த முறையோ மழை இல்லாமல் இருந்தால் அதிசயம் என்ற நிலை. ஆனால் பாருங்கள்... ஆட்டம் நடக்கும், ரிசல்ட் கூட இருக்கும் என்று பட்சி சொல்கிறது.

மூன்றாவது டெஸ்ட் கான்பூரில் இல்லை

இந்தியா - இலங்கை மூன்றாவது டெஸ்ட் கான்பூரில் நடக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேறு இடம் எது என்று இனிதான் தெரிய வரும்.

கான்பூரில் டெஸ்ட் ஆடுகளம் முனிசிபாலிட்டிக்கு சொந்தமானது. உத்தர பிரதேச கிரிக்கெட் அசோசியேஷனுக்கும் கான்பூர் நகராட்சிக்கும் ஏதோ தகராறு போல...

இதற்கிடையில் சென்னை முதல் டெஸ்ட் வாய்ப்புகள் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. புயல் நாளை இரவு கரையைக் கடக்கும் என்று இப்பொழுது சொல்கின்றனர். நாளைக் காலை முதலே மழை இருக்கும் என்று தகவல்கள் சொல்கின்றன. இன்னமும் டிக்கெட்டுகள் விற்பனைக்கு வரவில்லையாம்.

சென்னை டெஸ்ட் மழையால் பாதிக்கப்படுமா?

இன்று இரவு முதல் சென்னையில் மழை பெய்யும் என வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. நாளை மதியம் (டிசம்பர் 1, 2005) சென்னைக்கும் மசூலிப்பட்டணத்துக்கும் இடையில் புயல் ஒன்று கரையைக் கடக்கும் என்றும் செய்திகள் சொல்கின்றன. ஆனால் நேற்றே மழை பெய்யும் என்றார்கள்; பெய்யவில்லை.

காசு கொடுத்து நான் டிக்கெட் வாங்கப்போவதில்லை. ஓசியில் கிடைத்தால் பார்க்கலாம்:-)

யாஹூ! சென்னை வானிலை அறிக்கை

சென்னை டெஸ்ட் போட்டியைத் தடை செய்ய வழக்கு

எதற்கெல்லாம் நீதிமன்றத்துக்குப் போவது என்று விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.

கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சுரேஷ் பாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையில் டிசம்பர் 2-ம் தேதி தொடங்க இருக்கும் இந்தியா-இலங்கை டெஸ்ட் போட்டியைத் தடை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளாராம்.

இது மழைக்காலம் என்பதாலும், ஏற்கெனவே சென்னையில் நடைபெற்ற இந்தியா-தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி ரத்தானதாலும், அதில் டிக்கெட்டுக்கான பணம் திருப்பித் தராததாலும் கோபமுற்ற சுரேஷ் பாபு அக்டோபர்-டிசம்பர் நேரங்களில் சென்னையில் சர்வதேச கிரிக்கெட் போட்டி எதுவும் நடைபெறக் கூடாது என்று இந்த வழக்கைப் போட்டுள்ளார். மேற்கொண்டு டிக்கெட்டுகளை எதையும் விற்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரிக்கப்படும்போலத் தெரிகிறது.

தகவல்: சன் நியூஸ்

Tuesday, November 29, 2005

கங்குலிக்கு 'ஆப்பு'??!!

'எப்படி இருந்த நான் எப்படி ஆயிட்டேன்?' - அநேகமாக கங்குலி மனதுக்குள் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கான தேர்தலில் ஷரத் பவாரின் வெற்றி டால்மியாவின் பன்னெடுங்கால குத்தகைக்கு வைக்கப்பட்ட வேட்டாக
மட்டும் இல்லாமல் இப்போது சுழன்று வந்து கங்குலிக்கும் 'ஆப்பு' வைத்து விடுமோ என்ற அச்சம் கங்குலி ஆதரவாளர்களிடையே எழுந்திருக்கிறது.

காரணம், கங்குலியை டெஸ்ட் போட்டிகளில் ஆட வைக்க வேண்டும் என்று தேர்வுக்குழுவில்கங்குலிக்காக வாதாடிய பிரணாப் ராய், யஷ்பால் ஷர்மா, கோபால் ஷர்மா மூவருமே பவாரின்வெற்றிக்குப் பின்னர் தேர்வுக் குழுவிலிருந்து அகற்றப்பட்டு விட்டனர். இவர்களுக்கு பதிலாக
டெஸ்ட் ஆட்டங்கள் எதையும் ஆடியிராத ரஞிப் பிஸ்வால், சஞ்சய் ஜக்டலே, பூபிந்தர் சிங் ஆகியோர்தேர்வுக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

ஏற்கெனவே சென்னை டெஸ்ட் போட்டியில் கங்குலி ஆட வேண்டும் என்பதற்காக நான்கு மணி நேரம் தேர்வுக்குழுவினரிடையே பெருத்த விவாதம் நிகழ்ந்திருக்கிறது. தேர்வுக்குழு தலைவர் கிரன் மோரேயும், சந்திரசேகரும் கங்குலிக்கு எதிராகவும் தற்போது வெளியேற்றப் பட்டவர்கள் கங்குலிக்கு ஆதரவாகவும் பேசி, கடைசியில் 3-2 என்ற நிலையில் கங்குலி சென்னை டெஸ்டில் ஆடுவது என்று தீர்மானமாகியிருந்தது.

ஆனால், தற்போது கங்குலி ஆதரவாளர்கள் தேர்வுக்குழுவை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் சென்னை டெஸ்டில் கங்குலி ஆடுவாரா என்பது மீண்டும் சந்தேகத்திற்குரியதாயிருக்கிறது.
'பெங்கால் புலி' புல்லைத் தின்ன வேண்டிய கட்டாயம் வந்திருப்பது இந்தியக் கிரிக்கெட்டிற்கு உதவுமா இல்லையா என்பதை சென்னை டெஸ்ட் போட்டிக்குப் பின்னர்தான் தீர்மானிக்க முடியும்.

ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சு

இந்தியா கடைசியாக விளையாடிய 12 ஒருநாள் போட்டிகளை எடுத்துக்கொள்வோம் - ஏழு இலங்கைக்கு எதிராக, ஐந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக. அதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சென்னை ஆட்டம் நடக்கவில்லை. ஹர்பஜன் இலங்கைக்கு எதிரான ஓர் ஆட்டத்தில் (அஹமதாபாத்) விளையாடவில்லை.

ஆக, ஹர்பஜன் கடைசியாக விளையாடிய பத்து ஒருநாள் போட்டிகளின் அவரது பந்துவீச்சின் விவரம்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக:
மும்பை: 10-0-32-2
கொல்கொத்தா: 10-0-37-0
பெங்களூர்: 10-2-33-2
ஹைதராபாத்: 10-0-35-1

இலங்கைக்கு எதிராக:
வடோதரா: 10-1-45-0
ராஜ்கோட்: 9-1-38-0
பூனா: 10-0-35-1
ஜெய்ப்பூர்: 10-0-30-0
சண்டிகர்: 6.4-1-19-2
நாக்பூர்: 10-0-35-3

ஆக, இந்தப் பத்து ஆட்டங்களிலும் சேர்த்து மொத்தமாக: 95.4 - 5 - 339 - 11
எகானமி ரேட் ஓவருக்கு 3.54 ரன்கள்.

இந்தியாவின் வெற்றிக்கு இவரது பந்துவீச்சுதான் மிக முக்கியக் காரணம் என்று நினைக்கிறேன். ஒருநாள் போட்டிகளை எடுத்துக்கொண்டால் இவரது பந்துவீச்சுதான் சமீபகாலத்தில் கன்சிஸ்டன்சியின் உச்சம் - இந்தியாவுக்கு மட்டுமல்ல, வேறெந்த அணியையும் பார்க்கும்போது.

(நன்றி: கிரிக்கின்ஃபோ ஸ்டாட்ஸ்குரு)

கிரீம் ஸ்மித் விரல்

மும்பை ஒருநாள் போட்டியின்போது ஸ்லிப்பில் நின்ற ஸ்மித்தின் கைவிரலில் அடிபட்டது.

ஸ்லிப் வழியாக சில கேட்ச்கள் சென்றபோது ஸ்லிப்பில் யாருமே நிற்கவில்லை. பின் கிட்டத்தட்ட இந்தியா வெற்றிக்கு அருகே வந்தபோது ஸ்மித் மூன்றாம் ஸ்லிப் இருக்கும் இடத்தில் நின்றார். அப்பொழுது திராவிட் கட் செய்த பந்து முதல் ஸ்லிப் வழியாக மேலாகச் சென்றது. அதைப் பிடிக்கப் பாய்ந்த ஸ்மித் தனது இடதுகை மோதிரவிரலை மட்டும்தான் பந்தின் வழியில் கொண்டுவர முடிந்தது. அந்த ஓவர் முடிந்ததும் மிகுந்த வலியோடு மைதானத்தை விட்டு வெளியே சென்றார் ஸ்மித்.

இப்பொழுது அவரால் ஆஸ்திரேலியா பயணத்தை மேற்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் உள்ளதாம். அப்படியானால் இது தென்னாப்பிரிக்காவுக்குப் பெருத்த பின்னடைவு.

பீகாரும் பி.சி.சி.ஐயும்....

இது வித்தியாசமான தேர்தல் சீசனாயிருக்கும் போல.

பீகாரை தொடர்ந்து இன்று பி.சி.சி.ஐ.....

எனக்கு பீகார் தேர்தலுக்கும், பி.சி.சி.ஐ தேர்தலுக்கும் பல ஒற்றுமைகள் தோன்றுகிறது.

* இரண்டிலும் தேர்தல் கடந்த முறையை ஒப்பிடும்போது மிக அமைதியாகவே முடிந்திருக்கிறது.
* இரண்டு தேர்தல்களும் தனிக்காட்டு ராஜாவாய் சம்ராஜ்யத்தை ஆண்டவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது.
* இரண்டும் கடந்த முறை வெற்றியை அநியாயமாய் பறிகொடுத்த வலுவான எதிர் கூட்டணிக்கு பெரிய வெற்றியை தந்திருக்கிறது.
* இரண்டிலும் உச்சநீதிமன்றம் அவ்வப்போது தலையிட்டிருக்கிறது
* இங்கேயும் அங்கேயும் தேர்தல் பார்வையாளர்கள் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள்.
* இரண்டிலும் வெற்றி வாகை சூடியவர்களுக்கு பெரும் பணிகள் காத்திருக்கிறது.

இப்படி பல ஒற்றுமைகள்.......

சரத்பவார் கடும் போரட்டத்துக்கு பின் பி.சி.சி.ஐயின் தலைவராயிருக்கிறார். இந்த மாநிலத்தை சார்ந்த வாரியத்துக்கு வாக்களிக்கும் அங்கிகாரம் கிடையாது, அந்த மாநிலத்துக்கு இல்லை என்று பல திடுக்கிடும் திருப்பங்களுக்கு பின் ஒரு சிறந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸுக்கு இணையாக நடந்த இந்த தேர்தல் இறுதியில் சுபமாகவே முடிந்திருக்கிறது.



நான் முன்னரே கூறியது போல சரத்பவாரின் முன் ஏகப்பட்ட பணிகள் காத்திருக்கிறது.....

தொலைக்காட்சி உரிமங்கள், வீரர்களுக்கான ஒப்பந்தம், விளையாட்டு மைதானத்தை தேர்வு செய்வது தொடர்பாக எழுந்திருக்கும் சர்ச்சைகள், என்று நிறையவே காத்திருக்கிறது.

உலகின் மிக பணக்கார கிரிக்கெட் வாரியங்களுள் ஒன்றான பி.சி.சி.ஐக்கு இன்னும் ஒரு வலைத்தளம் கூட கிடையாத பெருமையை பெற்றிருக்கிறது.
உலகக்கோப்பை நெருங்கும் வேளையில் இப்போதிலிருந்தே அணியை தயார் செய்யும் கட்டாயம் இருக்கிறது. அதற்கு நீண்ட கால திட்டங்களில் ஈடுபடும் தேர்வுக்குழுவினர், அணித்தலைவர், பயிற்சியாளர் ஆகியோருக்கு தேவையான அனைது உதவிகளையும், அர்சியல் ரீதியான எந்த இடையூறுகளும் ஏற்படாவண்ணம் பார்த்துகொள்ளுதல் அவசியமாகிறது. ஆடுகளம் பற்றி காலங்காலமாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள், வளரும் வீரர்களுக்கு தேவையான உதவிகள் இல்லாதது, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் என்ற கண்டுகொள்ளபட வேண்டிய பல பணிகளும் வரிசையில் இருக்கிறது. மகாரஷ்டிரா அளவிலும் தேசிய அளவிலும் வலுவான எதிர்கட்சிகளுடன் போராடி தொடர்ந்து களத்திலிருக்கும் பவாருக்கு இந்த கடுமையான சாவல்களையும் சமாளிப்பார் என நம்பலாம்....

தொடங்கட்டும் "பவார் பிளே"....

(பி.கு) : மிஸ்டர் பவார், தேர்வுக்குழுவில் கங்குலி அணிக்கு திரும்ப வாதாடிய மூவர் நீக்கப்பட்டதற்கும் உங்கள் CMPக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உறுதியாக நம்பலாமா???

இந்தியா ஒருநாள் போட்டிகளில் நான்காவது இடம்

எல்.ஜி ஒருநாள் போட்டிகளுக்கான இடவரிசையில் 109 புள்ளிகளைப் பெற்று இந்தியா நான்காவது இடத்தை அடைந்துள்ளது. ஆஸ்திரேலியா முதலிடம், தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடம், பாகிஸ்தான் மூன்றாவது இடம்.

செய்தி, இடவரிசைப் பட்டியல்

சாப்பல் பிசிசிஐக்கு எழுதிய கடிதம்

மிகப்பழைய செய்திதான். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆனாலும் இதைப் படிக்காதவர்களுக்கு - மிகவும் சுவாரசியமானது.

கங்குலி மீது பல புகார்களைச் சொல்லி கிரெக் சாப்பல் பிசிசிஐக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அந்த அஞ்சல் ரகசியமானது; ஆனால் லீக்கானது.

DNA செய்தித்தாளின் இணையத்தளத்தில் இருக்கிறது.

பிரித்தாளும் சூழ்ச்சி வெள்ளைக்காரர்களுக்கு மட்டுமல்ல, கங்குலிக்கும் கைவந்த கலைதான் போல.

இந்தியத் தேர்வுக்குழுவில் மாற்றம்

ஷரத் பவார் தலைமையிலான புது அதிகாரிகள் பதவியேற்றதும், கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழுவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கிரன் மோரே குழுவின் தலைவராகத் தொடர்கிறார். புபிந்தர் சிங் சீனியர், சஞ்சய் ஜக்தாலே, ரஞ்சிப் பிஸ்வால் ஆகியோர் புதிதாக உள்ளே வருகின்றனர். தெற்குப் பிராந்தியங்களின் பிரதிநிதி (யார் என்று ஞாபகம் இல்லை) தொடர்கிறார்.

தென்னாப்பிரிக்காவுடனான போட்டிகள்- ஒரு அலசல்

நடைபெற்ற ஒருநாள் போட்டித்தொடர் 2-2 என்ற கணக்கில் யாருக்கும் வெற்றி, தோல்வி இல்லாமல் முடிந்து இருக்கிறது. இந்தியா மிகவும் போராடி சமன் செய்த தொடர் இது. ஸ்ரீலங்கா தொடரை போலில்லாது மிகவும் போராடி பெற்ற வெற்றிகள் இவை.

உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு மீண்டும் நிமிர்ந்து எழுந்து விட்டது தென்னாப்பிரிக்கா அணி. வேகம் குறைந்தவராக கருதப்பட்ட போலாக் மீண்டும் துல்லியமான பந்து வீச்சின் மூலம் கலக்குகிறார். "கற்பழிப்பு புகழ்" நிட்டினி விக்கெட்டுக்களையும், இல்லாவிட்டால் கை,கால்களையும் உடைப்பதில் கவனமாக இருக்கிறார்.

உளறு வாய் நெல்லின் பந்து வீச்சும் காட்டத்துடன் இருக்கிறது. லாங்கர்வெட்,ஹால் என அனைவருமே ஒழுக்கத்துடன் பந்து வீசுகிறார்கள். நேற்றைய மும்பை ஆட்டத்தில் முதல் முப்பது ஓவர்களுள் ஒரே ஒரு நோபால்தான். நேர்த்தியான ஸ்பின்னர் இல்லாததுதான் குறை. ஆனாலும் போஜே,யையும், போத்தாவையும் வைத்து தேற்றி விடுவார்கள்.

1992ம் ஆண்டு ஜாண்டி ரோட்ஸ், உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானின் இன்சமாமை அவுட் செய்தபோது நான் அனைவருமே வாய் பிளந்து நின்றோம். அப்போது இந்திய அணியில் அஜார் மட்டுமே சிறந்த பீல்டர். ஜடேஜா புதிதாக அணியில் சேர்ந்திருந்தார். இன்று ஆப்பிரிக்க அணியில் பல ஜாண்டி கள் இருக்கிறார்கள். பீட்டர்சன், ஆண்டாங், பிரின்ஸ் போன்ற பல தடுப்பாளர்களை தாண்டி பந்தை அனுப்புவது இயலாத காரியமாகிவிட்டது. பீட்டர்சன் வலது கை, இடது கை என இரு கைகளிலும் லாங் த்ரோ எறியக் கூடிய வல்லமை படைத்தவராம். மும்பை ஆட்டத்தில் டெண்டுல்கர் அவுட்டான சாட் வேறு எந்த நாட்டு அணிக்கு எதிராகவும் நான்கு ரன்களை சுலபமாக பெற்றுத் தந்திருக்கும்.

பேட்டிங்கில், சுமித்தின் விளாசல் அதிரடியாக இருந்தது. கிரீஸ்ஸில் அதிகமாக நகர்ந்து ஆடினாலும் நம்முடைய பந்து வீச்சாளர்களின் வேகம் அவரை சிரமப்படுத்தவில்லை. ஆஸ்திரேலியாவில் மெக்ராத்திற்கு எதிராக இதே போல் shuffle செய்து ஆடுகிறாரா என்பதை பார்க்க வேண்டும். காலிஸ்ஸின் ஆட்டம் வழக்கம் போல் நிலையான ஆட்டம். ஜஸ்டின் கெம்பின் அதிரடி ஆட்டம் காண வாய்ப்பில்லாமல் போய்விட்டது. முன்பு நம்பர் 10 இடத்தில் குளூஸ்னரை வைத்து அதிரடி ஆட்டம் ஆடியது தென்னாப்பிரிக்கா அணி. 1999 ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் அவர்கள் பின்பற்றிய கலக்கல் உத்தி -குளூஸ்னரை 10 வது ஆட்டக்காரராக அனுப்பியது. தற்போதைய அணியில் குளூஸ்னர் போன்ற ஆட்டக்காரர் இல்லாத்து ஒரு குறையே.

சூப்பர் சப் விதி அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஆல்ரவுண்டருக்கான அவசியம் முன்பளவு இல்லாமல் போய்விட்டது. இந்தியாவிலும் டெண்டுல்கரை பந்து வீசச் சொல்லும் கட்டாயம் குறைந்து விட்டது என்றே நினைக்கிறேன்.

இந்திய அணியை பொறுத்தவரை நிவர்த்திய செய்ய வேண்டிய குறைகள் சில இருக்கின்றன. என்னதான் பேட்டிங் ஜாம்பவான்கள் என்றாலும் பந்து ஆடுகளத்தில் எழும்பினாலே, அல்லது ஸ்விங் ஆனாலே மூன்று விக்கெட்டுக்கள் சட சடவென சரிந்து விடுகின்றன. அதிரடி தோனி இந்தத் தொடரில் பாம்பாய் சுருண்டு விட்டார். இன்னும் தரம் வாய்ந்த வேகப்பந்தை எதிர்கொள்வதில் தோனி தேற வேண்டும். இல்லாவிடில் டெஸ்ட் போட்டிகளில் சோபிப்பது கடினம்.

டெண்டுல்கர் இன்னும் முழுமையான பார்மிற்கு திரும்பவில்லை. நேற்றைய மும்பை ஆட்டத்திலும் பல பந்துகள் முழுமையாக பேட்டில் படவில்லை. திராவிட் மிகவும் அற்புதமாக ஆடினார். அவர் அடித்த பல அடிகள் உண்மையான கிரிக்கெட் அடிகள். நல்ல பேட்டிங் விக்கெட்டில் பவர் பிளே நடைமுறையில் இருக்கும் போது திராவிட் ஆட நேரிட்டால் சுலபமாக ரிஸ்க் இல்லாமல் பல ரன்களை குவிப்பார் என்பது என் கணிப்பு. நேற்று முதல் 22 ரன்களை 24 பந்துகளில் அதிக சிரமமின்றி குவித்தார் திராவிட்.

யுவராஜ் மீண்டும் சிறப்பாக ஆடிகிறார். கால்கள் ஒழுங்காக நகர்கின்றன. ஆப் ஸ்டம்பிற்கு வெளியே பீட் ஆகவில்லை. இந்த தொடரில் அவர் ஆட வந்தபோதெல்லாம் இக்கட்டான சூழ்நிலையே நிலவியது. ஆனாலும் சமாளித்து ஆடினார். பத்தானின் பந்து வீச்சு வெற்றி பெற்ற போட்டிகளில் சிறப்பாக இருந்தது. மீண்டும் இன்ஸ்விங்கர் அவருக்கு வேலைபார்க்க ஆரம்பித்து விட்டது. பாகிஸ்தானிற்கு எதிரான தொடரில் அவர் அதை முற்றிலும் இழந்திருந்தார்.

ஹர்பஜனின் சுழற்பந்து இந்திய பந்துவீச்சின் ஆதார அம்சமாக இருக்கிறது. கல்கத்தாவில் கூட இவருடைய பந்து வீச்சு சிறப்பாகவே இருந்தது. இவருடைய பந்து வீச்சில் ஸ்மித் கொடுத்த கேட்சை டிராவிட் நழுவ விட்டார்.

இந்தியாவின் பீல்டிங் வெகுவாக முன்னேறி இருக்கிறது. நேற்று 20 முதல் 25 ரன்களை இந்திய வீரர்கள் தடுத்தனர். சேப்பலின் வரவிற்கு பிறகு இந்திய அணியில் ஏற்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க மாற்றம் இது.முன்பெல்லாம் கபில்தேவ் குனிந்து பந்தை எடுக்க மாட்டார். இப்போது யாரென்றாலும் டைவ் அடிக்க வேண்டிய கட்டாயம்.

இந்த தொடரில் பெரிதாக நடந்த விவாதம் பகலிரவு ஆட்டங்களை பற்றி- இந்தியாவில் பனிப் பொழிவு இரண்டாவதாக பந்து வீசும் அணியை வெகுவாக பாதிக்கிறது. முன்பிருந்தே இதே பிரச்சனைதான். இந்தியாவில் பகலிரவு ஆட்டம் வைப்பதால் தனியாக அதிக கூட்டம் வருகிறதா? கண்டிப்பாக இல்லை. பகல் ஆட்டத்திற்கு வரும் அதே கூட்டம்தான். டெலிவிசன் பார்ப்பவர்களுக்கு மட்டும்தான் பகலிரவு ஆட்டம் வசதியாயிருக்கிறது.எனவே பனிப்பொழிவு குறைவான இடங்களில் மட்டும் பகலிரவு ஆட்டங்களை நடத்துவது உசிதம்.

கடந்த இரு தொடர்களை அலசிப்பார்க்கும் போது, , யார் சூப்பர் சப், யார் ஓப்பனிங் என்ற ரீதியில் பல புதிய உத்திகள் கையாளப்பட்டு மூளையை உபயோகப் படுத்துவதற்கான தேவை அதிகரித்து விட்டதோ எனப்படுகிறது.இது உண்மையா என்பது போகப் போக தெரியும்.

-ராஜ்குமார்

ஷரத் பவார் வெற்றி

கிரிக்கின்ஃபோ ஆனந்த் வாசுவின் செய்தியின்படி இன்று நடந்த தேர்தலில் பிசிசிஐ தலைவராக ஷரத் பவார் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இன்னமும் அதிகாரபூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

கொல்கொத்தா, மும்பை ஆட்டங்கள்

கொல்கொத்தா ஆட்டம் முடிந்ததுமே அதைப்பற்றி எழுத நினைத்திருந்தேன். ஆனால் ஏதோ காரணங்களால் தள்ளிப்போனதால் மும்பை ஆட்டத்துடன் சேர்த்தே எழுதிவிடலாம் என்று தீர்மானித்தேன்.

கொல்கொத்தா ரசிகர்கள் மிகவும் பாரபட்சமானவர்கள். சென்னையில் நடக்கும் ஆட்டங்களில் தினேஷ் கார்த்திக் இல்லை என்பதால் மஹேந்திர சிங் தோனி சென்னை ரசிகர்கள் மீது கல்லெறிவார்களா? ஆனால் திராவிட், சாப்பல், இந்திய அணி என்று அனைவர் மீதும் கொல்கொத்தா வெறியர்களுக்குக் கோபம்.

ஆடுகளம் டர்பனைப் போல இருக்கிறது என்றார் கிரீம் ஸ்மித். தவறில்லை. ஆனால் டாஸில் ஸ்மித் ஜெயித்தது அவரது சொந்த அதிர்ஷ்டம். அதைத் தொடர்ந்து இந்தியா ஆடிய ஆட்டம் படு மோசம். இந்த ஆடுகளத்தில் தேர்ந்த ஆட்டக்காரரே தடுமாறுவார் என்ற நிலையில் பதானை ஏன் தொடக்க ஆட்டக்காரராக சாப்பல்/திராவிட் அனுப்பினர் என்று புரியவில்லை! முதல் ஓவரிலேயே பதான் அவுட்டானார். தொடர்ந்து போலாக் டெண்டுல்கர், கம்பீர் இருவரையும் அவுட்டாக்கினார். டெண்டுல்கர் இதுவரை ஆடிய மூன்று ஆட்டங்களிலுமே போலாக் பந்து வீச்சில் 2 ரன்கள் மட்டுமே பெற்று ஆட்டம் இழந்துள்ளார்.

சேவாக் வந்தது முதற்கொண்டே தடாலடி ஆட்டம்தான். ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் ஓர் ஆஃப் டிரைவ் செய்யப்போய் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். திராவிட் உள்ளே நுழைந்ததுமே ரசிகர்களிடமிருந்து எதிர்ப்பு. அவரும் சார்ல் லாங்கஃபெல்ட்டின் அற்புதமான அவுட்ஸ்விங்கிங் யார்க்கரில் க்ளீன் போல்ட் ஆனார். அதையடுத்து யுவராஜ் சிங்கும் காயிஃபும் இன்னிங்ஸைக் கட்டி நிறுத்த வேண்டியதாயிற்று. ஓவர்கள் கழிந்தன; ரன்கள் குறைவாகவே வந்தது. 81 ரன்கள் இருவரும் ஜோடி சேர்ந்து பெற்றபின்னர் யோஹான் போத்தாவின் பந்தில் யுவராஜ் எல்.பி.டபிள்யூ ஆனார். சாதாரணமான பந்து. உள்நோக்கி வந்த ஆர்ம் பால். அதையடுத்து காயிஃப் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து அவுட்டாக இந்திய அணி முற்றிலுமாக உருக்குலைந்தது. கடைசியில் 50 ஓவர்கள் கூட முழுதாக விளையாடாமல் 46வது ஓவரில் 188 ஆல் அவுட் என்றானது.

கிரீம் ஸ்மித் எந்தவித பயமுமின்றி விளையாடினார். மறுமுனையில் ஆண்டிரூ ஹால் மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால் தடுமாறினாலும் கடைசிவரை அவுட்டாகவில்லை. இந்தியப் பந்துவீச்சாளர்களும் உருப்படியாக எதையும் செய்யவில்லை. ஹர்பஜன் ஒருவர்தான் எப்பொழுதும்போல அற்புதமாக வீசினார். 10-0-37-0. மீதி அத்தனை பேரும் ரன்களைக் கொட்ட, எந்த விக்கெட்டும் இழக்காமல் தென் ஆப்பிரிக்கா ஆட்டத்தை வென்றது. ஸ்மித் 124 பந்துகளில் 134 ரன்கள் பெற்றார்.

பாதியிலேயே ரசிகர்கள் பலரும் அரங்கை விட்டு வெளியேறினர். இந்திய அணி வீரர்களைக் கற்களால் அடிக்காமல் விட்டதே பெரிய காரியம். இல்லாவிட்டால் உட்காரும் நாற்காலிகளை நெருப்பால் கொளுத்தாமல் விட்டார்களே!

திராவிட் அவுட்டானபோது அதைக் கரகோஷத்தால் கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்கள், இந்திய அணி வெளியே செல்லும்போது கூச்சல் போட்டிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து கிரேக் சாப்பல் தன் கைவிரல்களால் அசிங்கமாகச் சைகை செய்ததாகத் தகவல். (நான் அந்த விடியோவினைப் பார்க்கவில்லை.)

ஆக அசிங்கமான ஓர் ஆட்டம் முடிந்தது. இதற்கு ஈடுகட்டும் வகையில் மும்பை ரசிகர்கள் இந்திய அணிக்கு பெருத்த ஆதரவைக் கொடுத்தனர்.

சொல்லிவைத்தாற்போல திராவிட் டாஸில் ஜெயித்து முதலில் பந்துவீச, இதுவரை நடந்த மூன்று ஆட்டங்களைப் போல இங்கு இர்ஃபான் பதான் எடுத்த எடுப்பிலேயே முதல் ஓவரிலேயே ஹாலின் விக்கெட்டைப் பெற்றார். அற்புதமான இன்ஸ்விங்கிங் பந்து - ஆஃப் ஸ்டம்பில் விழுந்து நடு ஸ்டம்பைத் தாக்கியது. பின்னர் மிக முக்கியமான இரண்டாவது விக்கெட்டாக ஸ்மித்தை அவுட்டாக்கினார். கால் திசையில் விழுந்த பந்தை - அதன் வேகத்தைச் சரியாகக் கணிக்காமல் - ஓவர் பேலன்ஸ் செய்து மிட்விக்கெட் திசையில் அடிக்க, அது ஹர்பஜன் சிங்கிடம் எளிதான கேட்சாகப் போனது. அகர்கர், ஆர்.பி.சிங் இருவரும் அவ்வளவு நன்றாக வீசாவிட்டாலும் பதான் அவர்கள் இருவரையும் ஈடுசெய்வது போல வீசியிருந்தார்.

தொடர்ந்து ஹர்பஜன், கார்த்திக் இருவருடன், சேவாக், யுவராஜ் என்று நான்கு ஸ்பின்னர்களும் ரன்களைக் கட்டிப்போட்டனர். கால்லிஸ் மிகவும் ஸ்லோவாக விளையாடினார். ஆட்டத்தின் நடுப்பகுதியில் பிரின்ஸ் ரன்களை அதிகமாகப் பெற முடியாததால் ஹர்பஜன் சிங்கை ஸ்வீப் செய்யப்போய் மேல் விளிம்பில் பட்டு ஷார்ட் ஃபைன் லெக்கில் நின்ற யுவராஜ் சிங்கிடம் எளிதான கேட்சைக் கொடுத்தார்.

பவுஷரும் கால்லிஸும் வெகு நேரம் நின்று விளையாடினர். ஆனால் ஸ்பின்னுக்கு எதிராக ரன்களை வேகமாகச் சேர்க்க முடியவில்லை. பின்னர் பவுஷர், சேவாகின் பந்தை டீப் மிட்விக்கெட்டில் அடிக்க, ஹர்பஜன் சிங் அற்புதமான ஒரு கேட்சைப் பிடித்தார். கெம்ப் ஹர்பஜனை ஸ்வீப் செய்து யுவராஜ் சிங்கிடம் ஷார்ட் ஃபைன் லெக்கில் கேட்ச் கொடுத்தார். கால்லிஸ் தன் சதத்தைப் பெறாமல் பதான் பந்தில் காயிஃபிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கடைசியில் போலாக் சில பவுண்டரிகளைப் பெறாதிருந்தால் தென்னாப்பிரிக்காவின் நிலைமை இன்னமுமே மோசமாக இருந்திருக்கும். 50 ஓவர்களில் 221 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழப்பு.

இந்தியாவால் நிச்சயமாக இந்த எண்ணிக்கையைப் பெற முடியும். அதுவும் இப்பொழுதெல்லாம் இரவுப்பனி ஏற்படுத்தும் பிரச்னையால் பந்துவீசும் அணிக்கு ஏற்படும் பின்னடைவு ஒரு காரணம். கம்பீர் ரன்கள் ஏதும் பெறாமல் அவுட்டானார். தன் டிரேட்மார்க் கட் ஷாட் அடிக்கப்போனார். ஆனால் பந்து மேல் விளிம்பில் பட்டு ஸ்லிப் திசையில் வானளாவச் சென்றது. கெம்ப்பினால் கேட்ச் பிடிக்கப்பட்டது.

டெண்டுல்கரும் சேவாகும் வேகமாக ரன்கள் பெற ஆரம்பித்தனர். டெண்டுல்கர் மிட்விக்கெட் திசையில் ஒரு நான்கை அடித்து ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றார். ஆனால் சேவாக்தான் அடுத்த சில நிமிடங்களில் மும்பை ரசிகர்களை ஆனந்தப் பெருங்கடலில் ஆழ்த்தினார். போலாக்கின் ஓர் ஓவரில் அடுத்தடுத்து 4, 6, 4. முதலில் ஒரு கவர் டிரைவ். அடுத்த பவுன்சரை மட்டையை நேர் மேலாகப் பிடித்து மிட் விக்கெட் மேலாக சிக்ஸ் அடித்தார். அடுத்த பந்தில் நெருப்பு பறக்குமாறு பாயிண்டில் ஒரு ஸ்கொயர் கட். ஆனால் அதே ஓவரிலேயே போலாக்கின் பந்தில் எல்.பி.டபிள்யூ என்று நடுவர் ஹார்ப்பரால் தீர்மானிக்கப்பட்டார். பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்றிருக்கும்.

டெண்டுல்கரும் திராவிடும் இணைந்து ரன்கள் பெற்றனர். திராவிட் வந்தது முதற்கொண்டே மூன்று அருமையான ஷாட்களை அடித்தார். ஒன்று மிட்விக்கெட் திசையில் மணிக்கட்டைத் திருப்பி அடித்த ஃபிளிக். அடுத்தது மிட் ஆனை ஏமாற்றிய ஓர் ஆன் டிரைவ். மற்றொன்று ஆஃப் டிரைவ். ஆனால் மறுபக்கம் சற்றே அமைதியான டெண்டுல்கர் நெல்லின் பந்தில் உயரத் தூக்கி அடித்த ஸ்கொயர் கட்டை பாயிண்டில் நின்றிருந்த பிரின்ஸ் பக்கவாட்டில் குறுக்காகப் பாய்ந்து அற்புதமாகப் பிடித்தார். இந்தியா 83/3.

இந்த நேரத்தில் இந்தியாவுக்கு ஓர் அமைதியான ஜோடி தேவைப்பட்டது. இந்தத் தொடரில் நல்ல முறையில் விளையாடி வந்திருக்கும் யுவராஜ் சிங் திராவிடுடன் ஜோடி சேர்ந்தார். மறுபக்கம் திராவிட் தன் விக்கெட்டைப் பத்திரமாகப் பாதுகாத்தார். நெல், லாங்கெஃபெல்ட் இருவரும் ரன்கள் ஏதும் கொடுக்காமல் பந்து வீசினர். ஆனால் இந்தியாவுக்குத் தேவை ஓவருக்கு 4.2 ரன்கள் என்ற விகிதம்தான். அது எளிதாகவே கிடைத்து வந்தது.

திராவிட் தன் அரை சதத்தைத் தாண்டினார். யுவராஜும் தன் அரை சதத்தைப் பெறுவார் என்ற நிலையில் தர்ட்மேன் பகுதியில் ஒரு ரன் பெற நினைத்தவர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

தோனி சிறிது நேரம் திராவிடுக்கு ஜோடியாக ரன்கள் பெற்றார். ஆனால் தன் அதிரடி ஆட்டத்தைக் காண்பிக்காமல் ஏமாற்றத்தையே தந்தார். ஆனால் மிக ஆழமான இந்திய பேட்டிங் இது. அடுத்து வந்த காயிஃப் கடைசிவரை அணித்தலைவருக்கு ஜோடியாக இருந்து ஜெயிக்கும் ரன்களைப் பெற்றுத்தந்தார். திராவிட் 78 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

தான் விருதைப் பெறும்போது கொல்கொத்தாவில் ரசிகர்கள் நடந்துகொண்டதைப் பற்றி ஒரு வார்த்தை பேசினார். ஸ்பெஷலாக மும்பை ரசிகர்கள் அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

தொடரின் நாயகர்களாக யுவராஜ் சிங்கும் ஸ்மித்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தத் தொடரில் இந்திய அணியின் + யுவராஜ் சிங்கின் பேட்டிங், ஹர்பஜன் சிங்கின் ரன் கொடுக்காத அற்புதமான பந்துவீச்சு, பதானின் விக்கெட் எடுக்கும் திறமை ஆகியவை. திராவிட் கடைசி ஆட்டத்தில்தான் நன்றாக விளையாடினார். டெண்டுல்கர் இன்னமும் முழுமையான ஃபார்மில் இல்லை. சேவாக் அதிரடியாக விளையாடினாலும் இன்னமும் அதிகம் செய்யலாம். ஆர்.பி.சிங் கொஞ்சம் ஏமாற்றம்தான். கார்த்திக்கும் அப்படியே.

இனி அடுத்த சில ஆட்டங்கள் டெஸ்ட் போட்டிகள்தான்.

நான்காவது ஆட்டம்
ஐந்தாவது ஆட்டம்

Monday, November 28, 2005

கிரிக்கெட் பற்றி எழுத உறுப்பினர் தேவை

இந்த வலைப்பதிவில் கிரிக்கெட் பற்றி எழுத விரும்புபவர்கள் எனக்கு bseshadri at gmail dot com என்ற முகவரிக்கு எழுதவும். உங்களையும் உறுப்பினராக்குகிறேன்.

இந்தப் பதிவு கிரிக்கெட் பற்றி மட்டுமே எழுதுவதற்காக. தமிழில்தான் எழுத வேண்டும்.

BCCI தேர்தல்

இன்று நடக்க இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத் தேர்தலில் தால்மியா அணி தோற்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

இதனால் ஷரத் பவார் பிசிசிஐ தலைவர் ஆவார். அரசியல்வாதிகள் இப்படி கிரிக்கெட்டில் புகுந்து விளையாடுவது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், இந்த நேரத்தில் தால்மியா அணியின் கொழுப்பை அடக்க ஷரத் பவார் தேவைப்படுகிறார். பவார் வந்தபின் பிசிசிஐ சட்ட விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்.

ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை டெஸ்ட் தொடரில் வென்றுள்ளது.

மூன்றாவது டெஸ்டில் பிராவோ நன்றாகப் பந்துவீசினாலும் மேற்கிந்தியத் தீவுகளால் முன்னணியை எட்ட முடியவில்லை. லாராவின் முதல் இன்னிங்ஸ் சதம் போதவில்லை. இரண்டாம் இன்னிங்ஸில் ஷேன் வார்ன் எடுத்த ஆறு விக்கெட்டுகளால் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெகுவாகச் சரிந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இறங்குமுகம் தொடர்கிறது. ஆஸ்திரேலியா சாம்பியன்தான்.

Sunday, November 27, 2005

பிரையன் லாரா

உலகில் மிக அதிக ரன்கள் பெற்ற லாராவுக்கு வாழ்த்துகள். ஆலன் பார்டரின் மொத்த எண்ணிக்கையை லாரா தாண்டியுள்ளார். ஆனாலும் நடக்கும் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுவிடலாம்.

டெண்டுல்கர்தான் முதலில் இந்தச் சாதனையைச் செய்வார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் கடந்த சில டெஸ்ட்களில் டெண்டுல்கர் ரன்கள் குறைவாகப் பெறுவதும் லாரா மிக அதிகமாகப் பெறுவதும் வாடிக்கையாக இருந்தது.

லாராவுக்கும் டெண்டுல்கருக்கும் இனி எவ்வளவு டெஸ்ட்கள் பாக்கி இருக்கும் என்று தெரியவில்லை. டெண்டுல்கரால் இனி டெஸ்ட் மேட்ச்களில் எவ்வளவு ரன்கள் பெற முடியும் என்றும் தெரியவில்லை.

மற்றொரு புறம் இன்ஸமாம்-உல்-ஹக், ரிக்கி பாண்டிங், மாத்தியூ ஹெய்டன் ஆகியோர் சதங்களின் எண்ணிக்கையிலும் மொத்த ரன்களிலும் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். பாண்டிங் தன் இளம் வயது காரணமாக லாரா, டெண்டுல்கர் சாதனைகளை முறியடிக்கக்கூடியவராக இருப்பார் என்று நினைக்கிறேன்.

Sunday, November 20, 2005

ஹைதராபாத், பெங்களூர் கிரிக்கெட் ஆட்டங்கள்

சென்னையில் இப்பொழுது மீண்டும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம். மழை கடுமையாக உள்ளது. நேற்றிரவு முதற்கொண்டே தெருவில் தண்ணீர் தேங்குமளவுக்கு மழை. இன்று சில பள்ளிகளுக்கு விடுமுறை.

நாளை இந்தியா - தென்னாப்பிரிக்கா மூன்றாவது கிரிக்கெட் ஒருநாள் போட்டி இருக்குமா என்பது சந்தேகமே.

முதல் இரண்டு ஆட்டங்கள் நடந்தபோதும் நான் ஊர்சுற்றும் வேலையில் இருந்துவிட்டேன். அதனால் இரண்டையும் சேர்த்து சுருக்கமாக இங்கே.

இலங்கையை 6-1 என்ற கணக்கில் ஜெயித்த இந்திய அணியும் தொடர்ந்து 19 ஒருநாள் போட்டிகளில் தோற்காமல் இருந்த தென்னாப்பிரிக்க அணியும் மோதும் ஆட்டம். இந்த ஆட்டத்தில் இந்தியா கவனமாக ஆடவேண்டும் என்ற நிலை. தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் இலங்கை வீச்சாளர்களை விட திறமை வாய்ந்தவர்கள். தென்னாப்பிரிக்க தடுப்பாளர்கள் உலகிலேயே மிகச்சிறந்த பந்து தடுப்பாளர்கள்.

இந்தியாவின் முன்னணி மட்டையாளர்கள் அனைவருமே ரன்கள் பெற்றிருந்தாலும் புதுப் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் கவனம் இருக்கவேண்டும். டாஸில் ஜெயித்த தென்னாப்பிரிக்கா அணித்தலைவர் க்ராம் ஸ்மித் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். ஷான் போலாக், மகாயா ந்டினி இருவருமே எடுத்த எடுப்பிலேயே இந்திய வீரர்களைத் திக்குமுக்காடச் செய்தனர். ஐந்து ரன்களுக்குள் முதல் மூன்று விக்கெட்டுகள் போயின. திராவிட் - நின்று விளையாட வேண்டியவர் - சற்றும் எதிர்பாராத விதமாக இறங்கி வந்து பந்தைத் தடுக்கு முயற்சி செய்து பந்தை முழுவதுமாக விட்டு ஸ்டம்பை இழந்தார். 'சூப்பர் சப்' கம்பீர் உள்ளே வந்து அதிகம் ரன் அடிக்காமல் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஆக 12வது ஓவரில் இந்தியா 35-5.

யுவராஜ் சிங்கும் இர்ஃபான் பதானும் ஜோடி சேர்ந்து மேற்கொண்டு விக்கெட் இழக்கமால் ரன்கள் சேர்த்தனர். ரன்கள் வேகமாக வரவில்லை. ஆனால் இந்தியர்களுக்கு வேறு வழியில்லை. நன்றாக விளையாடிக் கொண்டிருந்த பதான் ஆஃப் ஸ்பின்னர் போத்தாவின் பந்துவீச்சில் அவுட்டானபோது 46 ரன்கள் பெற்றிருந்தார். பதான் இந்தியாவின் முக்கியமான ஆல்ரவுண்டராக வருவார்.

யுவராஜும் தோனியும் சேர்ந்து சிறிது வேகமாக ரன்கள் சேர்த்தனர். தோனி தென்னாப்பிரிக்காவின் சிறப்பான பந்து தடுப்பால் ரன் அவுட் ஆனார். பந்துத் தடுப்பாளர்களை ஏமாற்றிவிட்டு ஒரு ரன் பெறுவது, பந்துகளை அவுட்ஃபீல்டில் அடித்துவிட்டு வேகமாக ஓடு இரண்டு ரன்கள் பெறுவது - இரண்டுமே தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சுலபமானதல்ல. ஒருவர் விடாமல் தென்னாப்பிரிக்காவின் பந்துத் தடுப்பாளர்கள் வேகமாக ஓடு பந்துகளை அழகாகத் தடுக்கிறார்கள். அதே கையுடன் பந்தைப் பொறுக்கி, விக்கெட் கீப்பருக்கு எறிகிறார்கள். பலமுறையும் ஸ்டம்பை நேராகக் குறிவைத்தே அடித்துத் தாக்குகிறார்கள். தோனிக்குப் பிறகு அகர்கர் யுவராஜுடன் ஜோடி சேர்ந்து ரன்கள் பெற்றார். இப்பொழுது ரன்கள் பெறும் வேகம் இன்னமும் அதிகமானது. ஆனாலும் 220ஐ இந்தியா எட்டுமா என்பதே சந்தேகமாக இருந்தது.

அகர்கர் அவுட்டானதும் ஹர்பஜன் வந்தார். இப்பொழுது யுவராஜ் வேகமாக அடித்து ரன்கள் சேர்த்தார். தன் சதத்தை எட்டுவதற்கு சற்று முன்னரே நொண்ட ஆரம்பித்தார். திராவிடுக்கு இதுபோன்ற தொல்லைகள் எப்பொழுதுமே உண்டு. உடலிலிருந்து வியர்வை அதிகமாக வெளியேறுவதாலும் தசைப்பிடிப்பு (cramps) அதிகமாவதாலும் வெகுநேரம் பேட்டிங் செய்யும்போது கஷ்டப்படுவார். ஆனால் யுவராஜ் போன்ற இளைஞர்கள் இந்த மாதிரி கஷ்டப்படுவது ஏனென்று புரியவில்லை. ஆனாலும் கொஞ்சம் சுதாரித்து சதத்தைப் பெற்றார். உடனேயே ரன் அவுட். 122 பந்துகளில் 103 ரன்கள் (10x4, 3x6). தென்னாப்பிரிக்காவின் ஆஃப் ஸ்பின்னர் ஜான் போத்தாவை மிகவும் எளிதாக விளையாடினார். வேகம் குறைவாகப் பந்துவீசும் லாங்கவெல்ட், நெல் ஆகியோரையும் பிரச்னையின்றி விளையாடினார்.

ஹர்பஜன் கடைசி ஓவர்களில் ந்டினியையும் நெல்லையும் அடித்து விளாசினார். கடைசி மூன்று ஓவர்களில் 16, 10, 12 என்று ரன்கள் வந்தன. ஹர்பஜன் 17 பந்துகளில் 37* (4x4, 2x6). ஒருவழியாக இந்தியாவின் எண்ணிக்கை ஐம்பது ஓவர்களில் 249/9 என்றானது.

காலையில் 35/5 என்று இருந்தபோது ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்று இருந்த நிலை மதியம் கணிசமாகவே மாறியிருந்தது. ஆனாலும் இந்த ஸ்கோர் போதுமானதில்லைதான்.

தென்னாப்பிரிக்காவின் ஸ்மித் ஆரம்பத்திலிருந்தே மிகவும் ஆவேசமாக விளையாடினார். எப்படியாவது பந்துவீச்சாளர்களை கதிகலங்கச் செய்யவேண்டும் என்று இருந்தது அவரது ஆட்டம். பதான் அவருக்குப் பந்து வீச நிறையத் தடுமாறினார். நல்ல வேளையாக மறுமுனையில் அகர்கர் இரண்டு விக்கெட்டுகளை விரைவாகப் பெற்றார். டி வில்லியர்ஸ் எல்.பி.டபிள்யூ. ஆண்டாங் ஆஃப் ஸ்டம்புக்கு மிக வெளியே செல்லும் பந்தை ஓங்கி வெட்டி அடித்தார். அதை ஸ்லிப்பில் நின்ற திராவிட் நன்றாகப் பிடித்தார். ஸ்மித், நன்றாக விளையாடிக் கொண்டிருந்தவர், ஆர்.பி.சிங்கின் பந்தை ஸ்டம்பை நோக்கி இழுத்து அவுட்டானார்.

இந்தியா காலையில் சூப்பர் சப் கம்பீரை பேட்டிங் செய்யக் கொண்டுவந்ததால் முரளி கார்த்திக்கினால் பந்து வீச முடியவில்லை. பதானும் மிகவும் மோசமாகப் பந்து வீசியதால் இந்தியா சேவாக், டெண்டுல்கர் ஆகியோரை நம்ப வேண்டியிருந்தது. ஆர்.பி.சிங் மிக நன்றாக வீசினார். ஹர்பஜனும் கடந்த ஒரு மாதமாக வீசிக்கொண்டிருப்பதைப் பல ரன்கள் எதையும் தராமல் அற்புதமாக வீசினார். ஜாக் கால்லிஸ், ஆஷ்வெல் பிரின்ஸ் இருவருமே மெதுவாக ரன்கள் சேர்த்தனர். அடுத்தடுத்து பிரின்ஸ், பவுஷர் இருவரும் அவுட்டானாலும் கால்லிஸ், கெம்ப் இருவரும் ஜோடி சேர்ந்து 49வது ஓவரில் இந்திய எண்ணிகையைத் தாண்டினர்.

இந்தியாவின் பேட்டிங் சுதாரித்துக்கொண்டாலும் பவுலிங் ஓரிரு மாற்று குறைவாகவே இருந்தது. அதனால் முதல் சுற்றில் வெற்றி தென்னாப்பிரிக்காவுக்கு.

இரண்டாவது ஆட்டத்தின் நிலைமை தலைகீழ். பெங்களூரில் திராவிட் டாஸ் ஜெயித்து முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். இது பகல்-இரவு ஆட்டம். இரண்டாவது இன்னிங்ஸில் பனி காரணமாக பந்துவீச்சாளர்கள் சிரமப்பட நேரிடும் என்பதால் டாஸ் ஜெயிப்பவர் முதலில் பந்துவீசுவார் என்பதே முன்னரே தீர்மானிக்கப்பட்டது.

இம்முறை பதான் எடுத்த எடுப்பிலேயே ஃபார்முக்கு வந்துவிட்டார். அடுத்தடுத்து தன் முதல் நான்கு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளைப் பெற்றார். முதல் ஓவரில் டி வில்லியர்ஸ் கால்திசையில் வந்த பந்தை ஸ்கொயர் லெக்கில் நின்ற ஹர்பஜன் சிங் கையில் கேட்சாக அடித்தார். பதானின் மூன்றாவது ஓவரில் ஸ்டம்புக்கு நேராக வந்த பந்தை கால் திசையில் தட்டி ஆட முயன்று பந்தைக் கோட்டை விட்டதில் ஸ்மித் எல்.பி.டபிள்யூ. பதானின் நான்காவது ஓவரில் எங்கோ ஆஃப் ஸ்டம்புக்கு வெகு வெளியில் சென்ற பந்தை ஜாக் கால்லிஸ் துரத்திச் சென்று தோனியிடம் கேட்ச் கொடுத்தார். தென்னாப்பிரிக்கா 20/3.

இந்தியாவின் பிற பந்துவீச்சாளர்கள் தென்னாப்பிரிக்காவின் கழுத்தை நெறிக்க ஆரம்பித்தனர். ரன்கள் எங்கிருந்து வரும் என்றே தெரியவில்லை. அகர்கர், பதான் இருவருமே ரன் அடிக்கும் பந்துகளை வீசவேயில்லை. ஆர்.பி.சிங்கின் பந்துவீச்சு சற்று சுமார்தான். எனவே திராவிட் ஸ்பின்னர்களை அழைத்தார். ஹர்பஜன் சிங் - இந்த சீசனின் இந்தியாவின் தலைசிறந்த பந்துவீச்சாளர் இவர்தான்! - இங்கும் ரன்கள் தரவில்லை. ஆடுகளம் ஸ்பின்னுக்கு சாதகமாக இருந்ததால் கார்த்திக் 10-4-16-0 என்ற அளவில் பந்துவீசியிருந்தார். இது போதுமே திராவிடுக்கு... மிச்ச ஓவர்களை சேவாக், யுவராஜ் ஆகியோரை வைத்து வீசவைத்தார். விக்கெட்டுகளும் சரமாரியாக விழுந்தன.

ஆண்ட்ரூ ஹால், ஆஷ்வெல் பிரின்ஸ் ஆகிய இருவரும்தான் 30ஐத் தாண்டினர். சேவாக், ஹர்பஜன் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளைப் பெற்றனர். யுவராஜ் சிங்குக்குக் கூட ஒரு விக்கெட் கிடைத்தது. கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் அகர்கர் ஒரு விக்கெட்டைப் பெற்றார். தென்னாப்பிரிக்காவால் ஐம்பது ஓவர்களில் 169/9 என்ற ஸ்கோரை மட்டுமே எடுக்க முடிந்தது.

உணவு இடைவேளைக்குப் பின் தென்னாப்பிரிக்கா மிக அற்புதமாகப் பந்துவீச்சைத் தொடங்கியது. சேவாகின் மோசமான ஃபார்மை மனதில் வைத்து கம்பீர் (சூப்பர் சப்), டெண்டுல்கரை தொடக்க ஆட்டக்காரர்களாக அனுப்பினார் திராவிட். முதல் மூன்று ஓவர்களில் ஒரு ரன்னும் இல்லை. அதில் கம்பீர் அவுட்டாகியிருக்க வேண்டும். ஒரு நிச்சயமான எல்.பி.டபிள்யூவை நடுவர் ஜெயப்பிரகாஷ் கொடுக்கவில்லை.

நான்காவது ஓவரில்தான் சில ரன்கள் கிடைத்தன. அதில் ஒன்று வானளாவ தர்ட்மேனில் கம்பீர் அடித்த நான்கு. எட்டு ஓவர்களில் இந்தியா 13/0. இது ஒன்றும் மோசமில்லை. பதினைந்து ஓவர்கள் அமைதியாக விளையாடினால் பின்னர் ரன்கள் தானாகக் கிடைக்கும். ஆனால் டெண்டுல்கர் போலாக்கை மிட் ஆன் மேல் அடிக்கப்போய் மட்டை திரும்பியதால் சரியாக அடிகக் முடியாமல் ராபின் பீட்டர்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து திராவிட் வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வந்தது இர்ஃபான் பதான். நிச்சயமாக பிஞ்ச் ஹிட்டராக இல்லை.

பதான் அமைதியாக விளையாட, மறுபுறம் கம்பீர் எல்லாப் பந்துகளையும் அடிக்கப்போனார். நிறைய பந்துகள் மட்டையில் மாட்டின. சில மாட்டவில்லை. ரன்கள் வந்துகொண்டிருந்தன.

போலாக், ந்டினி ஆகியோரின் மாற்றுப் பந்துவீச்சாளர்கள் அவ்வளவு சரியாக வீசவில்லை. ஆண்ட்ரே நெல் வாய் ஓயாமல் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கம்பீர் விடவில்லை. ஒரு முறை கம்பீர் நெல்லின் பந்தை அடிக்க, அது விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் தலைக்கு மேலாக எல்லைக்கோட்டுக்குச் சென்றது. நெல் கம்பீரிடம் அதைப்பற்றிப் பேச, கம்பீர் பதிலுக்குப் பேச, நடுவர்கள் இடையிடவேண்டியிருந்தது. இதனால் கம்பீருக்கு எந்த பாதிப்பும் இல்லை. நெல்லின் பந்துவீச்சுதான் மோசமாகப் போனது.

சிறிது சிறிதாக இந்தியாவின் ரன் ரேட் அதிகரித்தது. ஆனால் கம்பீரும் பதானும் தென்னாப்பிரிக்காவின் பந்துத் தடுப்பாளர்களைச் சரியாக எடைபோடவில்லை. பதான் பந்தை கவர் திசைக்குத் தள்ளிவிட்டு ஒரு ரன் எடுக்கப்போனார். ஓடிவந்த ஆண்டாங் பந்தை விக்கெட் கீப்பர் பவுஷரிடம் கொடுக்க கம்பீர் ரன் அவுட் ஆனார்.

நான்காவதாக உள்ளே வந்தவர் சேவாக். இவர் வரும்போது நெல்லும் போத்தாவும்தான் பந்து வீசிக்கொண்டிருந்தனர். இந்தப் பந்துகளை எதிர்கொள்வதில் சேவாகுக்கு எந்த சிரமமும் இல்லை. எளிதாக ரன்கள் பெற்றார். மீண்டும் ஒரு ரன் அவுட் வந்துதான் இந்த ஜோடியைப் பிரித்தது. சேவாக் பந்தை கால்திசையில் தட்டிவிட்டு ஓட, ஆண்டாங் மீண்டும் பந்தை எடுத்து ஸ்டம்பைத் தட்டி பதானை ரன் அவுட்டாக்கினார். பதானின் நெல்லின் பந்தில் நேராக லாங் ஆஃப் மீது அடித்த சிக்ஸ் நினைவில் நிற்கும்!

அடுத்து திராவிட் உள்ளே வந்தார். கொஞ்சம் off-colour. ஆனால் சேவாக் முழு ஃபார்மில்.

ஆண்டாங் பந்தில் திராவிட் ரிடர்ன் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஓர் ஓவர் கழிந்து அடுத்த ஆண்டாங் ஓவரில் சேவாகும் யுவராஜ் சிங்கும் மூன்று பவுண்டரிகளை அடித்து ஆட்டத்தை முடித்துவிட்டனர். சேவாக் 62 பந்துகளில் 77* (11x4).

முதல் ஆட்டத்தில் யுவராஜுக்கும், இரண்டாவது ஆட்டத்தில் பதானுக்கும் ஆட்ட நாயகன் விருதுகள். மூன்றாவது ஆட்டத்தின் நாயகன் மழைதான்!

முதல் ஆட்டம் ஸ்கோர்கார்ட் | இரண்டாம் ஆட்டம் ஸ்கோர்கார்ட்

Saturday, November 12, 2005

பரோடா கிரிக்கெட் ஆட்டம்

இந்தியா எதிர்பார்த்தது போலவே 6-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இலங்கை இந்த ஆட்டத்துக்கு வரும்போதே துவண்டுபோன நிலையில்தான் வந்தது. முரளிதரன் காயங்கள் காரணமாக விளையாடவில்லை. ஜெயசூர்யாவின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்து வந்ததால் அவரையும் அணியில் சேர்க்கவில்லை. இனி நடக்கப்போகும் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். அணியின் பந்துவீச்சில் நம்பிக்கையானவர்கள் என்று யாருமே இல்லை. வயதாகும் சமிந்தா வாஸ் சில விக்கெட்டுகளை எடுத்தாலும் நிறைய ரன்கள் தருகிறார். பெர்னாண்டோ, மஹரூஃப், சோய்ஸா ஆகிய யாரிடமும் இந்தியர்களுக்குப் பயமில்லை. சந்தனா, தின்ல்ஷன் போன்ற சுழல்பந்து வீச்சாளர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

அதே நேரம் இலங்கை பேட்டிங்கிலும் நிறைய பலவீனங்கள். சங்கக்காரவைத் தவிர அனைவரும் ஒரு மாற்று குறைவாகவே விளையாடுகின்றனர். அட்டபட்டு, ஜெயவர்தனே - இரண்டு பெரும் தூண்கள் - இருவருமே மோசமாக விளையாடி வருகின்றனர். தில்ஷன், ஆர்னால்ட் இருவரும் நன்றாக விளையாடினாலும் தனித்து இந்தியாவைத் தோற்கடிக்கக்கூடிய திறன் படைத்தவர்கள் இல்லை.

இந்திய அணியைப் பார்த்தால் அனைத்து மட்டையாளர்களும் ஒரு முறையாவது ரன்களைக் குவித்துள்ளனர். ஒருவர் தோற்றாலும் பின்னால் விளையாட வரும் யாராவது ரன்னைப் பெறுவார் என்ற நம்பிக்கை அதிகம். எதிர்பார்க்காத இடங்களிலிருந்து கூட (பதான்) ரன்கள் வருகின்றன. பந்துவீச்சிலும் எதிர்பார்த்த அனைவருமே மிக நன்றாக வீசுகின்றனர். கார்த்திக் நிறைய ரன்களைக் கொடுத்தாலும் விக்கெட்டுகளை எடுக்கிறார். ஹர்பஜன் சிங் இந்தத் தொடரிலேயே மிகக் குறைவாக ரன்களைக் கொடுக்கிறார். ஆர்.பி.சிங் போன்ற புதுமுகங்கள் அசத்துகிறார்கள்.

பந்துத் தடுப்புக்குப் பெயர்போன இலங்கை இப்பொழுது படுமோசம். வானளாவ அடிக்கப்படும் கேட்ச்களைப் பிடிப்பார்களா என்பது சந்தேகமே. ஒரு ரன் அவுட்டையாவது நேராக ஸ்டம்பை அடித்து வீழ்த்துவதன்மூலம் பெறுவார்களா என்பதும் சந்தேகமே. மாற்றாக, இந்தியா கேட்ச்களைப் பிடிப்பதிலும், ரன் அவுட்களை நிகழ்த்துவதிலும், பந்துகளைத் தடுத்து ரன்களைக் குறைப்பதிலும் நிறைய முன்னேற்றத்தைக் காண்பித்துள்ளார்கள்.

அதற்கு மேல் அணித்தலைமை. திராவிட் காண்பிக்கும் தன்னம்பிக்கை அட்டப்பட்டுவிடம் இல்லை. பவர்பிளேயை எப்படிப் பயன்படுத்துவது என்று அட்டபட்டுவுக்குப் புரியவில்லை. திராவிடுக்கோ தொட்டதனைத்தும் பொன்.

இப்படிப்பட்ட நிலையில் இந்தியா ஏழாவது ஆட்டத்தையும் ஜெயிக்கும் என்று எதிர்பார்ப்பதில் ஐயமில்லை.

டாஸில் வென்ற அட்டபட்டு என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தார் என்றுதான் சொல்லவேண்டும். இந்தியா டாஸில் ஜெயித்தால் முதலில் பந்துவீசும் என்று திராவிட் சொன்னார். அட்டபட்டு டாஸில் ஜெயித்ததும் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். திராவிடுக்கு வருத்தம் இல்லை.

இம்முறை பதான், அகர்கர் இருவரும் மிக நன்றாகப் பந்து வீசினார்கள். ரன்கள் கொடுக்கவில்லை. ஆளுக்கு ஒரு விக்கெட்டை எடுத்தார்கள். அதைத் தொடர்ந்து பந்து வீச வந்த - அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ள - ஆர்.பி.சிங் பிரமாதமாகப் பந்து வீசினார். தன் ஸ்பெல்லில் தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளைப் பெற்றார். இலங்கையின் முதல் ஐந்து விக்கெட்டுகள் மற்றொரு முறை எளிதாக வீழ்ந்தன. அட்டப்பட்டுவும் ஆர்னால்டும் நன்றாக விளையாடி கடைசியில் நிறைய ரன்கள் சேர்த்தனர். ஆனால் பதான் மீண்டும் வந்து கடைசியில் இருவரையும் அவுட்டாக்கினார். 244 போதாது. 280 கூடப் போதாது.

இந்தியா கடந்த சில ஆட்டங்களில் விளையாடியது போலவே இந்த ஆட்டத்திலும் விளையாடியது. சேவாக் கிடைத்த பந்துகளில் அடித்து நொறுக்கினார். 24 பந்துகளில் 35. அவர் அவுட்டானதும் பதான் தன் சொந்த ஊரில் விளையாட (முதல் மேட்சைப் போலவே மூன்றாவது இடத்தில்) வந்தார். வந்தது முதற்கொண்டே தன் ஊர்க்காரர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தோடே வந்தார். தன் விக்கெட்டை இழக்க பயப்படவேயில்லை. 23 பந்துகளில் 35. பதான் அவுட்டானதும், அதுவரையில் அமைதியாக இருந்த டெண்டுல்கர் அடித்து விளையாடினார். 48 பந்துகளில் 39. தோனியும் காயிஃபும் விளையாட அணி சேர்ந்த போது இந்தியாவுக்குத் தேவை 130 ரன்கள். ஆனால் எக்கச்சக்க ஓவர்கள் பாக்கி (35 ஓவர்கள்). தேவை ஓவருக்கு 3.7 ரன்கள்தான். இருவரும் மிகவும் அமைதியாக, எந்தவித ரிஸ்க்கும் எடுக்காமல் ரன்கள் பெற்றனர்.

தோனி இதுபோல விளையாடுவது இது இரண்டாவது முறை. காயிஃப் அவுட்டாகும்போது இந்தியாவுக்குத் தேவை 100 ரன்களுக்கும் குறைவு. இன்னமும் 28 ஓவர்கள் இருந்தன. அடுத்து திராவிட் வந்தார். அவர் யுவராஜ் சிங்கை அனுப்பியிருக்கக் கூடும். ஆனால் ஒருவேளை சிறிய பயம் இருந்திருக்கலாம்.

திராவிடும் தோனியும் எளிதாக, வேண்டிய ரன்களை வேகமாகவே எடுத்தனர். தோனி 40 ரன்களைத் தாண்டியவுடன் இரண்டு கியர்கள் மேலே சென்று ஆறு, நான்கு என்று கொண்டாடினார். சீக்கிரமே அரை சதத்தைத் தாண்டினார். 73 பந்துகளில் 80 ரன்கள். இந்தியா 240ஐத் தொட்டுவிட்டது. ஒரு சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடிக்க நினைத்தவர் எல்லைக்கோட்டுக்கருகில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். உள்ளே வந்த யுவராஜ் சிங்குக்கு ஒரு பந்தைக்குடச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. திராவிட் நான்கு ரன்களை அடித்து ஆட்டத்தை முடித்தார். இந்தியாவின் வெற்றி 40வது ஓவரிலேயே வந்துவிட்டது.

இலங்கை அவ்வளவு மோசமான அணியில்லை. ஆனால் இந்தியாவின் விளையாட்டு யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்த நிலையை கடந்த ஏழு ஆட்டங்களிலுமே எட்டியிருந்தது.

இது உண்மையா இல்லையா என்பது அடுத்த வாரம் முதல் தொடங்க இருக்கும் இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டிகளின்போது தெரிய வரும்.

ஸ்கோர்கார்ட்
வீடியோ ஸ்கோர்கார்ட்

Thursday, November 10, 2005

ராஜ்கோட் கிரிக்கெட் ஆட்டம்

இந்தியா தொடர்ந்து அணியில் மாற்றங்களைச் செய்தது. இம்முறை திராவிட் விளையாடவில்லை. சேவாக் அணித்தலைவர். வேணுகோபால ராவுக்கு பதில் காயிஃப் உள்ளே வந்தார். சேவாக் டாஸில் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். ராஜ்கோட் ஆடுகளம் நிறைய ரன்கள் பெற வசதியானது, முதலில் ஆடும் அணி குறைந்தது 270-280 ரன்களாவது பெறும் என்று கருத்து நிலவியது.

இந்தியா பதான், ஸ்ரீசந்த், ஆர்.பி.சிங் ஆகியோருடன் பந்து வீச்சைத் தொடங்கியது. பதான், ஸ்ரீசந்த் இருவருமே பந்து வீச்சைக் கட்டுக்குள் கொண்டுவரத் தடுமாறினார்கள். இதனால் இலங்கை அணி ரன்கள் பெறுவது கடினமாக இல்லை. முதல் பத்து ஓவர்களில் இலங்கை 55/1 என்ற கணக்கில் இருந்தது. கிடைத்த ஒரு விக்கெட் ஜெயசூரியாவுடையது. வலது கைப் பந்து வீச்சாளர் வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வரப் பந்து வீசினால் ஜெயசூரியா தடுமாறுகிறார் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால் ஸ்ரீசந்த் தொடக்கம் முதற்கொண்டே இதனைச் செய்யவில்லை. கடைசியில் ரவுண்ட் தி விக்கெட் வந்து பந்து வீசிய உடனேயே விக்கெட் விழுந்தது. அகலம் குறைவான பந்தை வெட்டியாட முயற்சி செய்து, முடியாமல் உள்விளிம்பில் பட்டு தோனியின் வலது புறத்தில் கேட்ச் சென்றது. அதை அழகாகக் கீழே விழுந்து பிடித்தார் தோனி. 11வது ஓவரில் பதான் வீசிய பந்தை புல் செய்ய முயற்சி செய்த சங்கக்கார அதன் உயரத்தைக் கணிக்காமல் தூக்கி அடித்தார். மிட் ஆனிலிருந்து ஓடி வந்த டெண்டுல்கர் மிட் விக்கெட்டில் கேட்ச் பிடித்தார். அடுத்த ஓவரிலேயே - ஆர்.பி.சிங்கின் முதல் ஓவர் - நல்ல அளவில் சட்டென்று எழும்பி வந்த ஒரு பந்தில் உபுல் தரங்கா தோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 57/3.

அதன்பிறகு இலங்கை ஆட்டத்திலிருந்து முற்றிலுமாக விலக வேண்டி வந்தது. கார்த்திக் வீசிய முதல் பந்திலேயே (17வது ஓவர்) ஜெயவர்தனே முன்காலில் வந்து தடுத்தாட முயன்றார். ஆனால் பந்து ஸ்பின் ஆகி அவரை ஏமாற்றியது. தோனி அழகான ஸ்டம்பிங்கைச் செய்தார். அதற்கடுத்த ஓவரில் ஆர்.பி.சிங் கேப்டன் அட்டபட்டுவை மிட் ஆனில் நின்றிருந்த சேவாகிடம் பிடி கொடுக்க வைத்து ஆட்டமிழக்கச் செய்தார். 83/5.

அஹமதாபாதில் இலங்கை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற தில்ஷன் - ஆர்னால்ட் ஜோடி இங்கும் ரன்களைப் பெற்றன. இந்த நேரத்தில்தான் இந்தியாவின் தடுப்பு வீரர்கள் அற்புதமாக இரண்டு விக்கெட்டுகளைப் பெற்றனர். காயிஃபிடம் தட்டிவிட்டு தில்ஷன் ஒரு ரன் வேகமாக எடுக்கப் போனார். காயிஃப் கவர் திசையில் வேகமாக ஓடிவந்து பந்தை எடுத்து தோனியிடம் எறிய, அவர் ஆர்னால்டை ரன் அவுட் ஆக்கினார். வாஸ் கார்த்திக்கிடம் பவுல்ட் ஆனார். அடுத்து யுவராஜ் சிங் நேரடியாக ஸ்டம்பை எறிந்து தில்ஷனை ரன் அவுட்டாக்கினார். தில்ஷன் ஒருவர்தான் 50க்கு மேல் ரன்களைப் பெற்றிருந்தார்.

ஆர்.பி.சிங் தனது இரண்டாவது ஸ்பெல்லில் மஹரூஃபையும் சந்தனாவையும் அவுட்டாக்கினார். 42.5 ஓவர்களில் இலங்கை 196க்கு ஆல் அவுட் ஆனது. இதற்கு இந்தியாவின் பந்து வீச்சு, குறிப்பாக ஆர்.பி.சிங்கின் பந்துவீச்சு, ஹர்பஜனின் ரன்கள் கொடுக்காத கிடுக்கிப்பிடி, இந்தியாவின் அற்புதமான ஃபீல்டிங் அத்தனையும் துணைபுரிந்தது. இலங்கை அணியின் மோசமான ஃபார்மும் ஒரு காரணம்தான்.

டெண்டுல்கரும் கம்பீரும் ஆட்டத்தைத் தொடங்கினர். கம்பீர்தான் மனதைக் கவர்ந்தார். வேகமாக ரன்கள் சேர்த்தார். ஆனால் பெர்னாண்டோவின் மெதுவான பந்தைச் சரியாகக் கணிக்காமல் உள்விளிம்பில் பட்டு பவுல்ட் ஆனார். அதே போன்ற ஒரு மெதுவான பந்தால்தான் டெண்டுல்கரும் மிட் ஆனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆடுகளம் எந்த விதத்திலும் பந்து வீச்சாளர்களுக்கு ஆதரவாக இல்லை. சந்தனா நல்ல லெக் ஸ்பின்னர் ஒன்றின் மூலம் சேவாகை ஏமாற்றி கவரில் நின்ற தில்ஷன் மூலமாக அவுட்டாக்கினார்.

அதைத் தொடர்ந்து உள்ளே வந்த யுவராஜ் சிங் காயிஃபுடன் ஜோடி சேர்ந்து அற்புதமாக விளையாடினார். சுழல்பந்து, வேகப்பந்து என்று எதையும் பொருட்படுத்தாமல் ரன்கள் பெற்றார். இறுதியில் நிறைய சிக்ஸ் மழையும் இருந்தது. காயிஃப் ஒரு பக்கம் நின்று விக்கெட்டுகள் விழாமல் கவனித்துக்கொள்ள, யுவராஜ் தடையின்றி ஆடினார். தனது அரை சதத்தை 48வது பந்தில் பெற்றார். (6x4, 2x6). 67 பந்துகளில் 79 ரன்களைப் பெற்று இந்தியாவுக்கு எளிதான ஒரு வெற்றியைத் தேடித்தந்தார் யுவராஜ் சிங். காயிஃப் 71 பந்துகளில் 38 ரன்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆர்.பி.சிங் ஆட்ட நாயகன் என்று அறிவிக்கப்பட்டார். எனக்கு இவரது பந்து வீச்சு மிகவும் பிடித்திருக்கிறது. பதானைப் போல side-on-action அல்ல இவருடையது. Front-on-action. இதனால் ஸ்விங் குறைவுதான் என்றாலும் இவரால் பந்தை நன்கு எழும்ப வைக்க முடிகிறது. ஸ்ரீசந்தை விட வேகம் குறைவாக இருந்தாலும் பந்து அதிகமாக எழும்புவதாலும், நல்ல control இருப்பதாலும் இவருக்கே விக்கெட்டுகளும் அதிகம் கிடைக்கும், ரன்களும் குறைவாகக் கொடுப்பார். இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட இவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஸ்ரீசந்துக்கு டெஸ்ட் வாய்ப்புகள் இப்பொழுதைக்குக் கிடைக்காது.

யுவராஜ் பேட்டிங் ஃபார்முக்குத் திரும்ப வந்திருப்பது நல்ல விஷயம். சேவாக்தான் இந்தத் தொடரிலேயே அதிகமாக ஒன்றும் செய்யாதவர். டெண்டுல்கரும் எனக்கு ஏமாற்றத்தையே தந்தார். நாளைய ஆட்டத்தில் யாரை இந்தியா நிறுத்தி வைக்கப்போகிறது என்பது கஷ்டமான விஷயம்தான். திராவிட் விளையாடுவார் என்று நினைக்கிறேன். சேவாக், டெண்டுல்கர் இருவரும் விளையாட வேண்டும். காயிஃப், யுவராஜ் இருவருக்கும் வாய்ப்புகள் தரவேண்டும். தோனி விக்கெட் கீப்பிங் செய்வதால் தேவைப்படுவார். ஹர்பஜன், பதான், ஆர்.பி.சிங், அகர்கார், கார்த்திக் ஐவரும் + சுரேஷ் ரெய்னா சூப்பர் சப்.

பார்க்கலாம்.

ஸ்கோர்கார்ட்

வீடியோ ஸ்கோர்கார்ட்

Sunday, November 06, 2005

அஹமதாபாத் ஆட்டம்

இந்தியா தோற்றது. கடைசியாக இலங்கைக்கு ஒரு வெற்றி. ஆனால் இந்த ஆட்டத்தில் இந்தியாவின் பக்கத்திலிருந்து பல நல்ல விஷயங்களை என்னால் கவனிக்க முடிந்தது. ஒரு மாறுதலுக்கு அவற்றைப் பற்றி மட்டும்தான் எழுதப்போகிறேன்.

சுருக்கமாக ஆட்டத்தைப் பற்றி. இந்தியா அணியில் மூன்று மாறுதல்களைச் செய்திருந்தது. டெண்டுல்கருக்கு பதிலாக கவுதம் கம்பீர். ஹர்பஜன் சிங்குக்கு பதிலாக முரளி கார்த்திக். இர்ஃபான் பதானுக்கு பதிலாக ஆர்.பி.சிங். ஸ்ரீசந்த், சுரேஷ் ரெய்னா அணியில். ஜே.பி.யாதவ் சூப்பர் சப். இலங்கை அணியில் கல்யாணப் பையன் ஜெயவர்தனே மீண்டும்.

இலங்கை டாஸில் வென்று முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இரவு நேரம் பனி அடர்ந்திருக்கும் என்றும் அதனால் இரண்டாம் இன்னிங்ஸில் பந்து வீசுவது கஷ்டமாக இருக்கும் என்றும் கடந்த இரண்டு ஆட்டங்களிலுமே டாஸ் ஜெயிக்கும் அணி பந்து வீசுவது வாடிக்கை. அதைத்தான் இலங்கையும் செய்தது. கம்பீர் பிரமாதமாக ஆரம்பித்தார். கடைசியில் கம்பீர், திராவிட் தவிர யாரும் ரன்கள் பெறவில்லை. இவர்கள் இருவரும் சதமடித்தனர். 285 ரன்களை 50 ஓவர்களில் பெற்றனர். இலங்கை அணிக்காக திலகரத்னே தில்ஷன், ரஸ்ஸல் ஆர்னால்ட் இருவரும் ஆறாவது விக்கெட்டுக்கு அமைதியாக விளையாடி ஆட்டத்தை ஜெயித்துக் கொடுத்தனர்.

எனக்கு இன்றைய இந்தியர்கள் ஆட்டத்தில் பல விஷயங்கள் பிடித்திருந்தன. முதலில் கவுதம் கம்பீரின் ஆட்டம். வெகு காலம் கழித்து ஒருநாள் ஆட்டம் ஆடுகிறார். பயமின்றி விளையாடினார். ஒருமுறை ஹூக் செய்யப்போய் சங்கக்காரவிடம் கேட்ச் கொடுத்தார். விடுபட்டது. அதைத்தவிர வேறெந்தத் தவறுகளும் செய்யவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களை இறங்கி வந்து அடித்தார். டிரைவ், புல், ஹூக், கட் என்று எல்லா ஷாட்களையும் நன்றாகவே விளையாடினார். பந்துக்கு ஒரு ரன்னை விட அதிகமாக அடித்துக்கொண்டிருந்தார்.

அடுத்து திராவிடின் ஆட்டம். நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. நேற்று கடைசிவரை இருந்து மறுபக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், கால் நரம்பு இழுத்துக்கொண்டாலும் விடாது ரன்கள் பெற்றார். அவரது முதல் ஸ்டிரெய்ட் டிரைவ், கடைசி புல் (இதன் மூலம் சதத்தைப் பெற்றார்), இரண்டுமே அற்புதம். இந்திய அணியின் பந்துவீச்சின் போது இவர் பங்கேற்கவில்லை. சேவாகை தலைமையேற்க வைத்தார்.

அடுத்து சேவாகின் தலைமை. இந்தியா தோற்றாலும், சேவாக் திறமையாகவே பந்துவீச்சில் மாற்றங்களையும் தடுப்பு வியூகங்களையும் அமைத்தார். அனைவருடனும் பேசிக்கொண்டிருந்தார் - நடுவர்களுடன் கூட. மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டார். இந்தியாவின் எதிர்கால கேப்டன் இவர்தான். பந்து வீச்சாளர்களின் அனுபவக் குறைவால் இந்திய அணி தோற்க நேர்ந்தது வேறு விஷயம்.

அடுத்து இந்தியாவின் இரண்டு இளம் வேகப்பந்து வீச்சாளர்கள். ஸ்ரீசந்த், ஆர்.பி.சிங். என்னை மிகவும் கவர்ந்தவர் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங். நல்ல வேகம். அத்துடன் நல்ல அணுகுமுறையும் கூட. குட் லென்த், அளவு குறைந்த பந்து இரண்டையும் நன்றாக வீசினார். பந்து நன்றாக எழும்பி வருகிறது. தொடக்கத்தில் ஜெயசூரியா, சங்கக்கார இருவரையுமே தடுமாற வைத்தார். சங்கக்கார விக்கெட் இவருக்குக் கிடைத்திருக்க வேண்டியது. சரியான ஸ்லிப் ஃபீல்டர் இல்லாத காரணத்தால் கம்பீர் கேட்சை விட்டார். ஸ்ரீசந்த், மோசமில்லை. ஆனால் அவ்வப்போது நான்குகளைக் கொடுத்து விடுகிறார். இருவருமே குறைவாகத்தான் ஸ்விங்கைப் பயன்படுத்துகிறார்கள்.

ஏமாற்றம்: முரளி கார்த்திக் இன்னமும் சிறப்பாகப் பந்து வீசியிருக்கலாம். ஹர்பஜன் சிங் இல்லாதது இந்தியாவின் வெற்றியைப் பாதித்தது.

அடுத்து ஃபீல்டிங். இந்தியாவின் பந்துத் தடுப்பு அற்புதமாக இருந்தது. கடந்த பதினைந்து வருடங்களாக இந்தியா விளையாடும் எண்ணற்ற ஆட்டங்களைப் பார்த்திருக்கிறேன். நேற்று போல ஒருநாள் ஆட்டத்தின் இந்தியா இதுவரை ஃபீல்டிங் செய்ததில்லை. சுரேஷ் ரெய்னா ஃபீல்டிங்கை யுவராஜ், காயிஃபை விட ஒருபடி மேலே எடுத்துச் சென்றார். வேணுகோபால ராவ் ஸ்லிப்பின் இரண்டு அற்புதமான கேட்ச்களைப் பிடித்தார். வேணுகோபால ராவ், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் மூவரும் கவர் - பாயிண்ட் திசையில் இணைந்து அற்புதமாகத் தடுத்து விளையாடினர். திராவிட் ஸ்லிப்பில், காயிஃப் அணிக்குள் என்றால் இந்திய அணியின் தடுப்பு ஒன்றின் மூலமாகவே 30 ரன்கள் சேமிக்கலாம். நேற்று தோனி கூட ஓடிச்சென்று எல்லைக்கோட்டுக்கு அருகே ஒரு பந்தைத் தடுத்தார்! கம்பீர் மோசமில்லை.

நேற்றைய ஆட்டத்தில் கார்த்திக்கு பதில் ஹர்பஜன் விளையாடியிருந்தால் இந்தியா ஜெயித்திருக்கும் என்பது என் கணிப்பு.

இப்பொழுது இலங்கையைப் பற்றி. இலங்கை மோசமான அணி இல்லை. நேற்று இந்தியா சற்றே அனுபவக் குறைவுடைய அணியைக் களமிறக்கியதாலும் திராவிடால் அணியை வழிநடத்த முடியாததாலும் இலங்கையின் வாய்ப்புகள் அதிகமாயின. தில்ஷன் நன்றாகவே விளையாடினார். ஆட்ட நாயகர் விருதுக்கு முற்றிலும் தகுதியானவர். ஆனால் சங்கக்கார, அட்டபட்டு, ஆர்னால்ட், தரங்கா என அனைவரும் அவருக்கு உதவியாக ரன்கள் சேர்த்தனர்.

காலையில் பந்துவீச்சில் முதலில் சோய்ஸாவும், பின்னர் மஹரூஃபும் அவ்வப்போது விக்கெட்டுகளைப் பெற்ற வண்ணம் இருந்தனர். தோனி பூஜ்யத்துக்கு அவுட்டாவது நடப்பதுதான். முதல் பந்து, ஸ்விங் ஆகி வந்தது. ஆனால் யுவராஜ் சிங்கின் ஃபார்ம் கவலையைத் தருகிறது. வேணுகோபால ராவ், சுரேஷ் ரெய்னா இருவருக்கும் இன்னமும் சிறிது கவனம் தேவை.

அடுத்த ஆட்டம் சுவாரசியமாக இருக்கும்.

ஸ்கோர்கார்ட்

Thursday, November 03, 2005

பூனா கிரிக்கெட் ஆட்டம்

இதுவரை நடந்த நான்கு ஆட்டங்களிலும் மிக சுவாரசியமானது நேற்று பூனாவில் நடந்த ஆட்டம்தான். இங்குதான் இலங்கை அணிக்கும் ஓரளவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆட்டம் கடைசி ஓவர் வரை செல்லலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் அப்படி நடக்கவில்லை.

முதலில் டாஸ். நேற்று திராவிட் டாஸில் ஜெயித்ததும் பந்து வீசத் தீர்மானித்தார். தன் அணியின் பேட்டிங் மீது ஆழமான நம்பிக்கை வைத்திருக்கும் கேப்டன் மட்டுமே இதைச் செய்வார். கங்குலி இதைச் செய்திருக்க மாட்டார். பூனா, மொஹாலி அல்ல. இங்கு பந்து வீச்சாளர்களுக்கு என்று பிரமாதமான ஆதரவு ஏதும் கிடையாது. காலை நேரம் பந்து கொஞ்சம் ஸ்விங் ஆகலாம். அவ்வளவே. அதையும் எதிரணியினரால் எதிர்கொள்ளமுடியும். எதிரணி முதலில் பேட்டிங் செய்து 275 ரன்கள் பெற்றால், தொடர்ந்து ஆடும் அணி திண்டாட வேண்டியிருக்கும். ஆனால் திராவிட் தன் அணியின் இளம் மட்டையாளர்கள் மீது பயங்கர நம்பிக்கை வைத்திருந்தார், அதனால் முதலில் பந்து வீசத் தீர்மானித்தார்.

சென்ற ஆட்டத்தில் முரளி கார்த்திக் சரியாகப் பந்துவீசாததால் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசந்த்தை விளையாடக் கொண்டுவந்திருந்தார். சூப்பர் சப்ஸ்டிட்யூட்டாக சுரேஷ் ரெய்னா - இவர் ஓர் ஆல்ரவுண்டர். ஆனாலும் பவுலிங்கை விட, பேட்டிங்தான் இவரது வலுவான அம்சம். திராவிட் இவரை சூப்பர் சப்பாக நியமித்திருந்தது, தான் டாஸ் வென்றால் நிச்சயம் பந்துவீசப் போகிறோம் என்பதை வெகு முன்னதாகவே முடிவு செய்துவிட்டிருந்தார் என்பதைக் காண்பித்தது.

இலங்கையின் மஹிலா ஜெயவர்தனேயின் திருமணம் நேற்று நடந்தது! அதனால் அவரால் விளையாட முடியவில்லை. இது அவரது சொந்த விஷயம்... ஆனாலும் சரியானதில்லை. இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தின் தேதிகள் தெரியும். திருமணத்தை முன்னோ, பின்னோ வைத்துக்கொண்டிருக்கலாம். இது முக்கியமான ஆட்டமும் கூட. இதில் வென்றால், போட்டித்தொடரை ஜெயிக்க வாய்ப்புள்ளது. தோற்றாலோ, இத்துடன் தொடரும் போய்விடும்! எப்படி அணியின் நிர்வாகம் ஜெயவர்தனேயை அனுமதித்தார்கள் என்று புரியவில்லை. ஜெயவர்தனேக்கு பதில் உபுல் தரங்கா அணிக்கு வந்திருந்தார். சந்தனாவுக்கு பதில் நுவான் சோய்ஸா.

திராவிட், பதான் பந்து வீச்சுக்கு மூன்று ஸ்லிப்கள் வைத்திருந்தார். அல்லது இரண்டு ஸ்லிப்கள், ஒரு கல்லி. இதெல்லாம் சும்மா, எதிரணிக்கு பயங்காட்ட. சங்கக்கார, ஜெயசூரியா இருவரும் வழக்கம் போல அதிரடியாகவே ரன்கள் பெற ஆரம்பித்தனர். பதான் தொடக்கத்தில் சிறப்பாக எதையும் செய்யவில்லை, ஆனால் அகர்கர் எடுத்த எடுப்பிலேயே நன்றாக வீச ஆரம்பித்தார். சென்ற ஆட்டத்தில் ஜெயசூரியாவை எப்படி அவுட்டாக்கினாரோ அதே மாதிரி இடது கை ஆட்டக்காரர்களுக்கு வீசுவது என்று முடிவு செய்திருந்தார். ஆஃப் ஸ்டம்பில் விழுந்து மிடில் ஸ்டம்பை நோக்கி உள்ளே வளைந்து வருமாறு பந்து. சங்கக்கார, ஜெயசூரியா இருவருமே இதுபோன்ற பந்துகளை புல் செய்து விளையாட ஆசைப்படுபவர்கள். பந்தின் திசையைக் கணிக்கத் தவறினால் எல்.பி.டபிள்யூ நிச்சயம். பந்தை முழுவதுமாக விட்டால் நேராகவோ, உள்விளிம்பில் பட்டோ பவுல்ட் ஆகலாம். அதுதான் நடந்தது.

முதலில் சங்கக்கார, பின் ஜெயசூரியா என்று அணியின் நான்காவது, ஆறாவது ஓவர்களில் எல்.பி.டபிள்யூ ஆனார்கள். இதில் ஜெயசூரியா விக்கெட் மிகவும் முக்கியம். ஏனெனில் அவர் அவுட்டாவதற்கு நான்கு பந்துகள் முன்பு திராவிட் ஸ்லிப்பில் கேட்ச் விட்டார். அடுத்த பந்தில் ஜெயசூரியா ஒரு நான்கை அடித்தார். அடுத்து ஒரு இரண்டு. நிலைமை மோசமாகாமல் அடுத்த இரண்டு பந்துகளிலேயே எல்.பி.டபிள்யூ.

இலங்கை அணித்தலைவர் அட்டபட்டு மிகவும் மோசமான ஃபார்மில் இருப்பதால் தான் விளையாட வரவில்லை. புதியவர் தரங்கா, திலகரத்ன தில்ஷன் இருவரும் அணியை சற்றே தூக்கி நிறுத்த முனைந்தனர். இதைத்தான் சரியான நேரம் என்று கருதி திராவிட் பதானுக்கு பதில் ஸ்ரீசந்தைப் பந்து வீச அழைத்தார். அவரும் முதல் மூன்று ஓவர்கள் மிகவும் நன்றாக வீசினார். தன் இரண்டாவது ஓவரில் ஒரு பவுன்சர் போட, அதை தரங்கா தூக்கி அடித்து ஃபைன் லெக்கில் நின்ற அகர்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதைத்தொடர்ந்து அட்டபட்டு விளையாட வந்தார்.

அட்டபட்டு, தில்ஷன் இருவருமே நன்றாக விளையாடினார்கள். தில்ஷன் முதலில் மிகவும் தடுமாறினார். ஆனால் பின்னர் வேகமாக ரன்களைப் பெறத்தொடங்கினார். 21 ஓவர்கள் வரை திராவிட் ஹர்பஜன் சிங்கைப் பந்து வீச்சுக்குக் கொண்டுவரவில்லை. மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், மிதவேகப்பந்து வீச்சாளர் ஜெய் பிரகாஷ் யாதவ் ஆகியோரே பந்து வீசினர். சென்ற ஆட்டங்களில் மிகவும் துல்லியமாகப் பந்துவீசிய யாதவ் நேற்று அவ்வளவு துல்லியமாக வீசவில்லை. இதனால் தில்ஷன் ரன்கள் பெறுவது எளிதாக இருந்தது. அட்டபட்டுவும் தன் பங்குக்கு ரன்களை சேர்த்தார்.

ஹர்பஜன் தொடர்ச்சியாகத் தன் பத்து ஓவர்களையும் வீசினார். தன் தூஸ்ரா மூலம் தில்ஷனை அவுட் செய்தார். தன் 10 ஓவர்களில் 35 ரன்களை மட்டுமே கொடுத்தார். 40 ஓவர்கள் முடிந்தபோது இலங்கை 198/4 என்ற கணக்கில் இருந்தது. அட்டபட்டு 68இலும், ஆர்னால்ட் 14இலும் இருந்தனர். அடுத்த பத்து ஓவர்களில் 70-80 ரன்கள் பெற்றிருக்கலாம். ஆனால் பதானும், மிக முக்கியமாக அகர்கரும் அற்புதமாகப் பந்து வீசினர்.

பதான் திரும்பி வந்த முதல் ஓவரிலேயே (43வது ஓவர்), ஒரு யார்க்கர் வீசி ஆர்னால்டை பவுல்ட் செய்தார். அகர்கர் தான் திரும்பி வந்த முதல் ஓவரிலேயே (46வது ஓவர்) மஹரூஃபை ஒரு ஸ்லோ புல் டாஸ் மூலம் பவுல்ட் செய்தார். அதற்கு அடுத்த ஓவரில் சேவாக் அட்டபட்டுவை அவுட்டாக்கினார். தவறே செய்யாமல் சென்று கொண்டிருந்த அட்டபட்டு ஓங்கி அடித்த ஒரு பந்தை சேவாக் வலது கையை வீசிப் பிடித்தார். இது 'மாட்டும், இல்லாவிட்டால் விரலை உடைக்கும்' போன்ற அடி. பந்து நடுக்கையில் மாட்டியிராவிட்டால் விரலை உடைத்திருக்கும். முழு அதிர்ஷ்டம். இப்படி சடசடவென மூன்று விக்கெட்டுகள் விழுந்தன. அடுத்த ஓவரில் முரளி ஒரு நான்கைப் பெற்றபின் அகர்கரின் யார்க்கரில் பவுல்ட் ஆனார். ஐம்பதாவது ஓவரில் தன் பவுலிங்கின் ஃபாலோ த்ரூவில் சோய்ஸாவை ரன் அவுட் செய்த அகர்கர், அதற்கடுத்த பந்திலேயே வாஸை விக்கெட் கீப்பர் தோனி வழியாக கேட்ச் பிடிக்கவைத்து அவுட்டாக்கி தன் ஐந்தாவது விக்கெட்டைப் பெற்றார். 9.5-1-44-5. அத்துடன் ஒரு ரன் அவுட், ஒரு கேட்ச். இலங்கை 261 ஆல் அவுட், அட்டபட்டு 87, தில்ஷன் 52, ஆர்னால்ட் 32.

-*-

262 எடுப்பது இந்த இந்திய அணிக்குச் சாத்தியமானதுதான் என்று நினைத்தோம். ஆனால் முதல் மூன்று ஓவர்களில் வாஸ், ஃபெர்னாண்டோ இருவருமே மிகவும் நன்றாகப் பந்து வீசினார்கள். முதல் இரண்டு ஓவர்களும் மெய்டன். மூன்றாவது ஓவரில் ஒரு நோ பால், அவ்வளவே. சேவாக், டெண்டுல்கர் இருவருக்குமே டைமிங் சரியாக வரவில்லை.

நான்காவது ஓவரில் டெண்டுல்கர் எப்படியாவது ரன்களைப் பெற வேண்டும் என்று ஆக்ரோஷமாக விளையாடினார். முதல் பந்து சற்றே அளவு குறைவாக வந்தது, அதை கவர் திசையில் அடித்து நான்கு ரன்களைப் பெற்றார். ஆனால் அடுத்து இறங்கி வந்து அடிக்கப்போய் ஒரு பந்து விளிம்பில் பட்டு தர்ட்மேன் திசையில் சிக்ஸ் ஆனது! மோசமான ஷாட். அடுத்த ஓவரில் சேவாக் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். இரண்டுமே நல்ல ஷாட்கள். ஆனால் அதே ஓவரில் மற்றுமொரு வானளாவிய ஷாட் அடித்தார். முதலில் சிக்ஸ் போல இருந்தது, ஆனால் பந்து லாங் ஆனில் எல்லைக்கோட்டுக்கு உள்ளேயே விழுந்தது. முரளிதரன் ஓடிவந்து அதைப் பிடித்தார், ஆனால் பந்து விரலில் பட்டு நழுவியது. சேவாகுக்கு அதிர்ஷ்டம்.

அதற்கடுத்த ஓவர் டெண்டுல்கர் எவ்வளவோ முயற்சி செய்தும் ஃபெர்னாண்டோவிடம் ரன்களைப் பெற முடியவில்லை. டைமிங் சரியாக வரவில்லை. டெண்டுல்கர் முகத்தில் ஒரு பதற்றம். இறங்கி இறங்கி வந்து அடிக்க வந்தார். ஆனால் மட்டையில் மாட்டவில்லை. தொடர்ந்த அடுத்த ஓவரில் வாஸ் பந்தை இறங்கி அடிக்கப்போய், முடியாமல், பவுல்ட் ஆனார். அந்தப் பந்து மிடில் ஸ்டம்பில் விழுந்து வீசிய கோணத்தில் வெளியே போகாமல் லேசாக இன்ஸ்விங் ஆகி ஆஃப் ஸ்டம்ப் மேல் பாகத்தில் விழுந்து ஸ்டம்பை உருளச் செய்தது.

திராவிட் நான்காவது மேட்சில் நான்காவதாக வேறொருவரை மூன்றாம் இடத்துக்கு அனுப்பினார். கடந்த மூன்று மேட்ச்களிலும் அவ்வளவாக நன்றாக விளையாடாத யுவராஜ் சிங். இவர் வந்தவுடனேயே ஃபெர்னாண்டோவின் ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார். இரண்டுமே பாயிண்ட் திசையில். ஆனால் அடுத்த நுவான் சோய்ஸா ஓவரில் சற்றே மேலாக பாயிண்ட் திசையில் அடித்து தில்ஷனால் கேட்ச் பிடிக்கப்பட்டார். இந்த முறை மூன்றாம் இடத்துக்கான சோதனை வெற்றி பெறவில்லை. திராவிட் உள்ளே வந்தார்.

முன்னெல்லாம் திராவிட் பேட்டிங் செய்ய வந்தால் ஒரு இருபது பந்துகளையாவது வீணாக்குவார். முதல் இருபது பந்துகளில் 3-4 ரன்களுக்கு மேல் எடுத்திருக்க மாட்டார். ஆனால் இப்பொழுது வந்த முதல் பந்து முதற்கொண்டே ரன்கள் பெறுகிறார். மஹரூஃப் வீசிய முதல் ஓவரில் திராவிட், சேவாக் இருவருமே அடித்து 15 ரன்களைப் பெற்றனர். அடுத்த ஓவரில் சோய்ஸாவின் பந்தில் சேவாக் விக்கெட் கீப்பர் சங்கக்காரவிடம் கேட்ச் கொடுத்தார். இதுவும் நழுவ விடப்பட்டது. ஆக சேவாகுக்கு இரண்டு "எக்ஸ்ட்ரா" கிச்சான்கள். அடுத்த பந்திலேயே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ஒரு நான்கு. இதற்குப் பிறகு திராவிட், சேவாக் இருவருமே மிக நன்றாக விளையாடி பந்துக்கு ஒரு ரன் விதம் ரன்கள் பெற்றனர். இந்திய அணியின் ரன்ரேட் வேகமாக ஏறத்தொடங்கியது.

அட்டபட்டு அடுத்தடுத்து பவர்பிளே-2, பவர்பிளே-3 இரண்டையும் எடுத்தார். 19 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் இந்தியா 110/2 என்ற கணக்கில் இருந்தது. திராவிட் உள்ளே வந்தபோது அணியின் எண்ணிக்கை 34/2, 8.1 ஓவர்களில். அடுத்த 11 ஓவர்களில் 76 ரன்கள் = 6.9 ரன்கள், ஓவருக்கு.

முரளிக்கு பவர்பிளே நடக்கும்போது பந்துவீச விருப்பமில்லையாம். இலங்கை அணி வலுவான நிலையில் இருந்தால் இதையெல்லாம் செய்யலாம். ஆனால் இப்பொழுது வேறு வழியில்லை. 20 ஓவர்கள் விட்டுவிட்டால் இந்தியா நல்ல நிலையில் இருக்கும். மேலும் சேவாக், திராவிட் இருவருமே முரளியை அவ்வளவு சரியாக விளையாடுவதில்லை. எனவே முரளி வந்து கொஞ்சம் ரன்கள் கொடுத்தாலும் இருவரையும் அவுட்டாக்கியிருந்தால் இலங்கைக்கு நல்ல வாய்ப்பு இருந்திருக்கும். இருபதாவது ஓவரில்தான் முரளியை அழைத்தார் அட்டபட்டு. தன் முதல் ஓவரிலேயே ஒரு தூஸ்ரா மூலம் சேவாகை அவுட்டாக்கினார் முரளி. சேவாக், இரண்டு வாய்ப்புகளுடன், 48 ரன்கள் பெற்றிருந்தார்.

அடுத்து தோனி வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் வேணுகோபால ராவ் வந்தார். இவர் முரளியை நன்றாக விளையாடுவார் என்பதால் இருக்கலாம். தோனியைத் தக்க வைத்துக்கொண்டதும் பின்னால் உபயோகமாக இருந்தது. வேணுகோபால ராவ் நன்றாகவே விளையாடினார். ஜெய்ப்பூர் ஆட்டத்தில் விளையாடியதை விட, இங்கு திராவிடின் அரவணைப்பில் அருமையாக விளையாடினார். முரளியை முற்றிலுமாக மழுங்கடித்தார். மஹரூஃபின் ஓர் ஓவரில் ஒரு ஆறும், அடுத்த அவரது ஓவரில் மூன்று நான்குகளும் அடித்தார்.

திராவிட் வேகப்பந்து வீச்சாளர்களையும் சரி, முரளியையும் சரி, கால் திசையிலேயே அடித்து ரன்கள் பெற்றார். மிட்விக்கெட் திசையில் அவர் அடித்த மூன்று பவுண்டரிகளும் அற்புதமானவை. ஒரு பிரமாதமான ஸ்டிரெயிட் டிரைவ். தனது 51வது பந்தில் தன் அரை சதத்தைக் கடந்தார்.

அடுத்து சில ஓவர்களில் நிலைமை முழுவதுமாக மாறியது. முதலில் வேணுகோபால ராவ் ஒரு தூஸ்ராவை ஸ்டியர் செய்யப்போய் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். மூன்று ஓவர்கள் கழித்து திராவிட் ஃபெர்னாண்டோவ புல் செய்யப்போய் ஃபைன் லெக்கில் கேட்ச் கொடுத்தார். அடுத்த ஓவரிலேயே பதான் ரன்கள் ஏதும் பெறாமல் முரளியின் ஆஃப் பிரேக்கில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். திடீரென இந்தியா 35வது ஓவரில் 180/6.

ஜெய்ப்பூர் நாயகன் மஹேந்திர சிங் தோனியும், இதுவரை இந்தத் தொடரில் பேட்டிங் செய்திராத சுரேஷ் ரெய்னாவும் விளையாடுகிறார்கள். இன்னமும் 82 ரன்கள் வேண்டும். 92 பந்துகள் உள்ளன.

தோனி ஜெய்ப்பூரில் விளையாடியது மாதிரி இங்கு விளையாடவில்லை. மிகவும் நிதானமாக ஒவ்வொரு ரன்களாக சேர்த்தார். ரிஸ்க் எதையும் எடுக்கவில்லை. ரெய்னா தோனியை விட வேகமாக ரன்களை சேர்த்தார். கொஞ்சம் கொஞ்சமாக தேவையான ரன்ரேட் அதிகரித்தது. ஆனால் இரண்டு இளைஞர்களும் சிறிதும் பயப்படவில்லை. பழைய இந்தியாவாக இருந்தால் பதற்றத்தாலேயே அனைவரும் அவுட்டாகி ஆட்டத்தை 40 ஓவர்களில் தோற்றிருப்பார்கள். ஆனால் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியர்களைப் போல விளையாடினார்கள் இருவரும். 40 ஓவர்கள் முடியும்போது இந்தியா 207/6. 42வது ஓவர் முடியும்போது 215/6. அடுத்த 48 பந்துகளில் 47 ரன்கள் தேவை.

43வது ஓவரில் இங்கும் அங்கும் தட்டிவிட்டு வேக வேகமாக ரன்களைப் பெற்றனர் இருவரும். முதல் ஐந்து பந்துகளில் 1, 1, 3, 2, 1. கடைசி பந்தில் தோனி தன் முதல் பவுண்டரியைப் பெற்றார். 43வது ஓவர் முடியும்போது இந்தியா 227/6. 44வது ஓவரில் 11 ரன்கள் கிடைத்தன, ரெய்னாவுக்கு 10 ரன்கள் அதில். இந்தியா 238/6. அட்டபட்டுவுக்கு இலங்கை தோற்பது உறுதியாகி விட்டது. முரளிதரனைக் கொண்டுவந்தார். ஆனால் சிறிதும் ரிஸ்க் எடுக்காமல் ரெய்னாவும் தோனியும் அந்த ஓவரில் 8 ரன்களைப் பெற்றனர். (2,1,1,1,2,1). இப்பொழுது வெற்றி பெற வெறும் 16 ரன்களே பாக்கி.

இப்பொழுதுதான் தோனி தனது கவனமான ஆட்டத்தை மாற்றி அதிரடி ஆட்டத்துக்குத் தாவினார். ஆர்னால்ட் வீசிய ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் 2, 2 ரன்கள். அடுத்த பந்தில் முதன்முறையாக தோனி லாங் ஆன் மேலாக அடித்து ஆறு ரன்களைப் பெற்றார். இப்பொழுது ஆறு ரன்கள்தான் பாக்கி. அதே மாதிரியான பந்து, அதே மாதிரியான ஷாட், லாங் ஆன் மேல் இதுவும் சிக்ஸ். நான்கே பந்துகளில் 16 ரன்கள், இந்தியாவுக்கு வெற்றி.

அகர்கர் ஆட்ட நாயகன்.

இந்த இன்னிங்ஸில் திராவிட், வேணுகோபால ராவ், தோனி, ரெய்னா நால்வருமே நன்றாக பேட்டிங் செய்தனர். 48 ரன்கள் பெற்றிருந்தாலும் சேவாகின் பேட்டிங் திருப்திகரமாக இல்லை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது தோனியின் பயமின்மை, ஆட்டத்தின் நிலைக்குத் தகுந்தாற்போல தன் பேட்டிங்கை மாற்றிக்கொண்டது. ரெய்னா - நிச்சயமாக இவருக்கு வாய்ப்புகள் தரவேண்டும். இது நல்லதொரு நியூக்ளியஸ். இதை இப்படியே வலுவாக்கி உலகக்கோப்பை வரை கொண்டுசெல்லவேண்டும்.

இந்தத் தொடரில் இதுவரை திருப்திகரமாக விளையாடாதவர்கள் என்றால் சேவாக், யுவராஜ் சிங். ஜெய் பிரகாஷ் யாதவ் - ஆல் ரவுண்டர் என்றாலும் இதுவரையில் மனதைக் கவரும் வண்ணம் ஒன்றும் செய்யவில்லை. அடுத்த ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னாவை உள்ளே கொண்டுவரலாம். ஜெய் பிரகாஷ் யாதவை சூப்பர் சப் என்று நியமிக்கலாம். அடுத்த ஆட்டத்தில் வேணுகோபால ராவை 3-ம் எண் உள்ள இடத்தில் கொண்டுவரலாம்.

ஸ்கோர்கார்ட்