Wednesday, December 28, 2005

கெர்ரி பேக்கர் மறைவு

ஆஸ்திரேலியாவின் PBL நிறுவனத்தின் தலைவரும், சானல் 9 தொலைக்காட்சி மூலம் கிரிக்கெட் ஒளிபரப்பில் பெருத்த மாற்றத்தைக் கொண்டுவந்தவருமான கெர்ரி பேக்கர் திங்கள், 26 டிசம்பர் 2005 அன்று காலமானார்.

கெர்ரி பேக்கர் இரண்டு விஷயங்களுக்காக முக்கியமானவர். இன்று கிரிக்கெட் வணிகபூர்வமாக மாறியதன் முதல் காரணம் பேக்கர். கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் சண்டை போட்ட பேக்கர், அதிகாரபூர்வ கிரிக்கெட்டுக்கு எதிராக, இணையாக தான் ஒரு கிரிக்கெட் லீகை உருவாக்குவேன் என்று சபதம் பூண்டார். அதையடுத்து உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வீரர்களை எக்கச்சக்கமான சம்பளத்தில் தன் லீகில் விளையாட அழைத்தார். இது நடந்தது 1977-ல்.

பேக்கரின் தரகர்களாக இந்த விவகாரத்தில் ஈடுபட்டது இயான் சாப்பல் (ஆஸ்திரேலியா), டோனி கிரேக் (இங்கிலாந்து) மற்றும் ரிச்சி பெனாட் (ஆஸ்திரேலியா). அண்ணன் சாப்பல் தலைமையில் அவரது தம்பியும் தற்போதைய இந்திய அணிப் பயிற்சியாளருமான கிரேக் சாப்பல் உண்டு. இயான் சாப்பல் தலைமையில் ஓர் ஆஸ்திரேலிய அணியும் டோனி கிரேக் தலைமையில் உலக அணியும் ஒருவரை ஒருவர் எதிர்த்து விளையாடுவதாகவும், ரிச்சி பெனாட், அவரது நிறுவனம் மூலம் இந்தப் போட்டிகளை நடத்துவார் என்றும், இந்தப் போட்டிகள் சானல் 9 தொலைக்காட்சி மூலம் ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்பப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

உலகெங்கிலுமாகச் சேர்த்து 50க்கும் மேற்பட்ட முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பேக்கர் சர்கஸில் இணைந்தனர். இது உலக கிரிக்கெட் வாரியங்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது. ஐசிசி (அப்பொழுது எந்த அதிகாரமும் இல்லாத வெத்துவேட்டு) தலைமையில், இந்த ஆட்டங்களில் ஈடுபடும் கிரிக்கெட் வீரர்கள் அவரவர் நாடுகளுக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தகுதியற்றவர்களாவார்கள் என்று அறிவித்தனர். இதை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மூவர் - டோனி கிரேக், ஜான் ஸ்னோ, மைக் பிராக்டர் - எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

கிரேக் அண்ட் கோவின் வாதம் என்னவென்றால் "அவர்களுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் எந்த ஒப்பந்தமும் இல்லை. (அந்தக் காலத்தில் விளையாட்டு வீரர்களுக்கு ஒப்பந்தம் ஏதும் கிடையாது.) அவர்களுக்கு மாதச்சம்பளம் என்று ஏதும் கிடையாது. அதுவும் அவர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் விளையாடாத குளிர்கால மாதங்களில்தான் ஆஸ்திரேலியாவில் விளையாடுகின்றனர். எனவே இந்த விளையாட்டில் இவர்கள் ஈடுபடுவது கூடாது என்றால் அது "restraint of trade" என்னும் வகையைச் சார்ந்தது, அநியாயமானது; தனி மனிதன் பணம் சம்பாதிக்கும் வழியை நியாயமற்ற முறையில் தடுக்கக் கூடியது."

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த மூவரையும் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை செய்யக்கூடாது என்றும் நீதிமன்றத்தின் செலவுகளுக்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஐசிசி ஆகியவை மொத்தமாக 200,000 பவுண்டுகள் கட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

தொடர்ந்து உலகெங்கிலும் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்கள் தரத்தில் குறைவுபட்டன. இந்திய வீரர்களைத் தவிர பிற நாடுகளில் கிரிக்கெட் வீரர்கள் பேக்கர் சர்கஸில் விளையாடினர். காவஸ்கருக்கு வாய்ப்பு வந்ததாகவும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சொல்வர். (ஆனாலும் ஒரு வலுவான இந்திய அணி, ஆஸ்திரேலியா சென்று வலுவற்ற ஆஸ்திரேலிய அணியிடம் மோதி மண்ணைக் கவ்வியது என்பது சரித்திர நிகழ்வு!)

இந்தச் சண்டை மூன்று வருடங்கள் நீடித்தது. பேக்கரும் நிறையப் பணத்தைத் தொலைத்தார். ஆனால் ஆஸ்திரேலியா Vs உலக அணிப் போட்டிகள் பலவும் மிக சுவாரசியமாக இருந்தன. பிற நாடுகளிலும் சூப்பர் ஸ்டார்கள் இல்லாததால் கிரிக்கெட் சுவாரசியம் இன்றி இருந்ததோடு மட்டுமல்லாமல், பண வரவும் வெகுவாகக் குறைந்தது.

இதையடுத்து பேக்கரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் சண்டைகளை மறந்து கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆஸ்திரேலிய வாரியம் அடுத்த சில வருடங்களுக்கான கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை பேக்கரின் நிறுவனத்துக்கே கொடுக்க ஒப்புக்கொண்டது. அத்துடன் பேக்கர் தொடரில் பரிசோதிக்கப்பட்ட சில விஷயங்களும் ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஒருநாள் போட்டிகளில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அவை:
* 30 யார்ட் வட்டம்; பந்துத் தடுப்புக் கட்டுப்பாடு
* விளையாட்டு வீரர்களுக்கு வண்ண உடை
* பகல்-இரவு ஆட்டம்; விளக்கு ஒளியில்

இந்த மாற்றங்கள் சிறிது சிறிதாக உலகெங்கிலும் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்களுக்குள் புகுந்தன. இப்பொழுது வெள்ளை உடையில் ஒருநாள் போட்டி நடப்பது அரிதாகிவிட்டது!

பேக்கர் மற்றொரு விஷயத்துக்காகவும் நினைவில் கொள்ளத்தக்கவர். உலகெங்கிலும் தொலைக்காட்சித் துறையில் தன் முத்திரையைப் பதித்த ஆஸ்திரேலியரான ரூப்பர்ட் மர்டாக்கை தன் கொல்லைப்புறத்தில் இரண்டாம் இடத்தில் வைத்திருக்கும் சாமர்த்தியம் கெர்ரி பேக்கருக்கு இருந்தது! ஆனால் பேக்கரையும் மீறி உயிர்வாழும் மர்டாக் நாளை ஆஸ்திரேலியாவை விழுங்கினாலும் விழுங்கி விடலாம். பேக்கர் இருந்தவரையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தொலைக்காட்சி உரிமத்தை அவருக்கே கொடுத்துவந்தது. இனி என்ன ஆகும் என்று பார்ப்போம்!

பேக்கர் 2000வது வருடத்தில் இந்தியாவிலும் கால் பதிக்கலாம் என்று நினைத்தார். இந்தியாவில் இரண்டு தவறுகளைச் செய்தார். தூரதர்ஷனுடன் சேர்ந்து கிரிக்கெட் ஆட்டங்களின் ஒளிபரப்பைத் தயாரிப்பது; தூரதர்ஷனின் ஆள்களுக்கு ஒளிபரப்பு பற்றி சொல்லித் தருவது. இது படுதோல்வியில் முடிந்தது. நம் தூரதர்ஷனின் கேமராமேன்களுக்கு இதிலெல்லாம் ஆர்வம் இல்லை! இரண்டாவதாக ஹிமாச்சல் ஃப்யூச்சரிஸ்டிக் நிறுவனத்தில் பேக்கர் 1040 கோடி ரூபாய்கள் முதலீடு செய்து 10% பங்குகளைப் பெற்றார். இந்த நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபடுவதாக முடிவு செய்தார். ஆனால் அவர் தேர்ந்தெடுத்த ஆசாமிகள்.... என்ன சொல்ல, அவ்வளவு தரமானவர்கள் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம் (அதற்கு மேல் சொன்னால் அது slander, libel என்று ஆகும்).

இந்தக் கல்யாணம் கருமாதியில்தான் முடிந்தது. ஒரிரு வருடங்களில் போனது போகட்டும் என்று 'துண்டைக் காணோம், துணியைக் காணோம்' என்று ஓடியே போனார் பேக்கர்.

பேக்கர் சொர்க்கத்துக்குப் போனாலும் நரகத்துக்குப் போனாலும் அங்கு எல்லோரையும் கலர் பைஜாமாவில் கிரிக்கெட் ஆடவைத்து கலகத்தை ஏற்படுத்தி தன் அதிகாரத்தை நிலைநாட்டுவார் என்றே நினைக்கிறேன்.

Monday, December 26, 2005

பாக்ஸிங் டே டெஸ்ட் மாட்ச்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாளான டிசம்பர்-26ஆம் நாள் வருடா வருடம் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் நடக்கும் டெஸ்ட் போட்டிக்கு ஒரு மிகப் பாரம்பரிய வரலாறே உண்டு. அதே போல ஜனவரி 2ஆம் நாள் சிட்னியில் அடுத்த டெஸ்ட் துவங்கும். மெல்போர்ன் நகரில் நடக்கும் டெஸ்ட் போட்டி "பாக்ஸிங் டே டெஸ்ட் மாட்ச்" என காலாகாலமாக நடைபெறுகிறது.


Photo Courtesy: Cricinfo.com

கிறிஸ்துமஸ் விடுமுறை, புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பல மக்களும் கிரிக்கெட் ஆட்டத்தைக் காண ஏதுவாக இருக்கும் என இத்தகைய தேதிகள் வகுக்கப்பட்டாலும் அதை துளியும் மாற்றாமல் இத்தனையாண்டுகளாக நடத்தி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுக்கு ஒரு பெரிய "ஓ". இந்த கால கட்டங்களில் ஆஸ்திரேலிய அணி வேற எந்த நாட்டுக்கும் பயணம் செய்யாது. அதே போல எல்லா உள்நாட்டு சீசனிலும் பிரிஸ்பேன், அடிலெய்டு, ஹோபர்ட் (சமீபகாலமாக), பெர்த், மெல்போர்ன், சிட்னி என்ற ஆறு ஊர்களில் டெஸ்ட் போட்டிகள் நடக்கும்.

இதுபோலவே பொங்கலுக்கு முதல் நாள் அல்லது அதற்கு முதல்நாள் சென்னை சேப்பாக்கத்தில் டெஸ்ட் போட்டி துவங்கும். வருடா வருடம் பல வருடங்களாக நடந்த இந்த முறை டால்மியா கோலோச்சிய பிறகு சுழல் முறை, ஓட்டு போட்ட அசோசியஷனுக்கு போட்டி நடத்த பங்கு என அரசியலான பிறகு, சென்னையில் மழைநாட்களில் போட்டி வைத்து பொங்கல் நாள் டெஸ்டின் பாரம்பரியமே போய்விட்டது. இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. இந்தியா சென்னையில் பொங்கல் சமயத்தில் விளையாடிய பல டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான சில ஆட்டங்களை காணக் கிடைத்துள்ளது (இந்தியா மற்றும் எதிர் அணிகூட சில சமயங்களில்..)

இன்றைய ஆட்டத்திற்கு வருவோம். ரிக்கி பாண்டிங்கின் சதத்தைத் தவிர ஆண்ரே நெல்லின் பந்துவீச்சுக்கு 230க்கு 8 என சுருண்ட ஆஸி அணியில் மைக் ஹுஸ்ஸி மற்றும் மக்ராத்தின் (மற்றுமோர் முறை - இந்த வீரரின் பங்களிப்பு ஈடு இணையற்றது) சிறப்பான ஆட்டத்தால் ஆஸி அணி இன்று முதல் இன்னிங்க்ஸ் முடிக்கும் போது 355க்கு ஆல் அவுட். மைக் ஹுஸ்ஸி 122. பத்தாவது விக்கெட்டிற்கு மாத்திரம் 107 ரன்கள்!!!

மெல்போர்ன் ஸ்டேடியமும் மிக அழகாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சென்ற இரண்டு ஆண்டுகள் கான்கிரீட்டும், கம்பிகளுமாக காட்சி அளித்த அரங்கு இப்போது சூப்பராக உள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இணைப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக கிரவுண்டு அழகுக்காகவேனும் இந்த ஆட்டத்தைக் காணுமாறு கேட்டுக் கொள்கிறேன். (ஆஸி, தென்னாப்பிரிக்கா ஆட்டம் போனஸ் :-)) 150 ஆண்டுகள் பழைமையான இந்த ஸ்டேடியம் இப்போது ஆஸ்திரேலிய நாட்டின் ஒரு தேசிய அளவு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மெல்போர்ன் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது இந்தியா ஜெயித்த (முழங்காலில் வலியுடன் கபில்தேவ் 5 விக்கெட்டுகள் 28 ரன்களுக்கு எடுத்து) இந்த டெஸ்ட் போட்டிதான். ஸ்ரீகாந்த் - அசிம் ஹஃபீஸை ஸ்ட்ரேயிட் ட்ரைவில் சிக்ஸர் அடித்த உலக சாம்பியன்ஷிப் போட்டியும் நினைவுக்கு வரும். ((வாசிம் அக்ரம் அல்ல அது அசிம் ஹஃபீஸ் என ராஜ்குமார் கொடுத்த தகவலுக்கு நன்றி)


- அலெக்ஸ் பாண்டியன்
27-டிசம்பர்-2005

பி.கு: இன்று கிரிக்கெட் இவ்வளவு பரபரப்பாக, ஒரு நாள் போட்டி சூடுபிடிக்க, தொலைக்காட்சி ஒளிபரப்பில் ஒரு மைல்கல் என்றெல்லாம் ஆக முன்னோடியாக இருந்த கெர்ரி பாக்கர் மறைவு. அன்னாரது ஆத்மா சாந்தி அடைவதாக.

Saturday, December 24, 2005

காசு மேல காசு வந்து...

பிசிசிஐக்குக் கொட்டுகிற நேரம் இது...

சென்ற வாரம், ஏர் சஹாரா இந்திய அணியின் சட்டைகளை ஸ்பான்சர் செய்ய நான்கு வருடங்களுக்கு ரூ. 313.80 கோடி தர ஒப்புக்கொண்டது. அடுத்ததாக நைகி (Nike). சட்டைகளை உருவாக்கும் + கோடிக்கணக்கில் அடித்து விற்கும் நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து வருடங்களுக்கு இதற்காக நைகி கொடுக்கும் பணம் ரூ. 197 கோடி. நைகி (ரூ. 197 கோடி), அடிடாஸ் (ரூ. 128 கோடி) மற்றும் ரீபாக் (ரூ. 119 கோடி) போட்டியிட்டனர், அதில் நைகிக்கே வெற்றி.

இனி இந்திய அணியைப் பார்த்து "Just do it" என்று சொல்லலாம்!

வேறென்னென்ன ஸ்பான்சர்ஷிப், ஒலி/ஒளிபரப்பு வாய்ப்புகள் உள்ளன?

முதலில் ஒலி/ஒளிபரப்புகளை எடுத்துக்கொள்வோம்:

1. தொலைக்காட்சி - இது தரைவழித் தொலைக்காட்சி, செயற்கைக்கோள் தொலைக்காட்சி, DTH தொலைக்காட்சி என்று மூன்றாகப் பிரிக்கப்படப்போகிறது என்கிறார் லலித் மோடி. இதில் தரைவழி (terrestrial) வேலையைச் செய்யக்கூடிய நிறுவனம் தூரதர்ஷன் மட்டும்தான். செயற்கைக்கோள் வழியாகக் (கேபிள் & சாடிலைட்) காண்பிப்பதற்கு ESPN Star Sports, Zee Sports இரண்டும் கடுமையாகப் போட்டிபோடப் போகின்றன.

ஆனால் DTH என்பதைத் தனியாகப் பிரித்து விற்க முடிவு செய்தால் Zee இன்னமும் வலுவாகப் போட்டியிடும் என்றே நினைக்கிறேன். இந்த DTH உரிமத்தில் ஸ்பெஷலாக என்ன இருந்துவிடமுடியும்? அதுவும் செயற்கைக்கோள் தொலைக்காட்சிதானே என்று கேட்கிறீர்களா?

இல்லை, அதற்கும் மேலே. உதாரணத்துக்கு ஒரே நேரத்தில் அத்தனை கேமராக்களும் காண்பிக்கும் கோணம் உங்களுக்குக் காணக் கிடைக்கும். நீங்களாகவே வேண்டிய, விரும்பிய கோணத்தைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம். ஒவ்வொரு விக்கெட்டும் தனியாக மெனு வழியாகக் கிடைக்கும். நீங்கள் அவசரமாக டாய்லெட் போயிருக்கும்போது ஒரு விக்கெட்டோ, சிக்ஸோ நடந்தது என்றால் அதை நீங்கள் வெளியே வந்தவுடன் மெனுவிலிருந்து தேடிப்பிடித்துப் பார்க்கலாம். அதே நேரம் பிக்ச்சர்-இன்-பிக்ச்சரில் நடப்பு நிகழ்வு ஓடிக்கொண்டே இருக்கும். தனித்தனியாக சில ஹைலைட்டுகளைச் செய்து வைத்திருப்பார்கள். நீங்கள் வேண்டியதை வேண்டும்போது பார்க்கலாம்.

ரிமோட் கண்டிரோலைக் கையில் வைத்துக்கொண்டு தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்புக்கு ("கங்குலி பாகிஸ்தானுக்குப் போக வேண்டுமா, கூடாதா?") வாக்களிக்கலாம். அந்த வாக்குகள் உடனடியாகப் பதிவாகி திரையில் பலரும் பார்க்கக் கிடைக்கும். ஒரு பட்டனை அழுத்தினால் முழு ஸ்கோர்கார்ட் பார்க்கக் கிடைக்கும். எப்பொழுதுமே. இப்படி இன்னமும் பலதைச் சொல்லிக்கொண்டே போகலாம். அதாவது முழுமையான கிரிக்கெட் ஃபேன் இந்த DTH காட்சியைத்தான் விரும்புவார். அதனால் கொஞ்சம் அதிகம் பணம் கொடுத்தும் ஆட்டத்தைப் பார்க்க ஒப்புக்கொள்வார்.

இந்த வகையில் மொத்தமாக அடுத்த நான்கு வருடத்தில் பிசிசிஐக்குக் கிடைக்க உள்ள வருமானம் ரூ. 1,500 கோடிகள்.

2. வானொலி: தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடுங்கிப் பார்ப்பது மட்டுமல்ல, தானம் கொடுத்தவரை நாலு அடி கொடுப்பதும் நம்மூரில் வாடிக்கை. போனால் போகட்டும் என்று ஆல் இந்தியா ரேடியோவுக்கு பிசிசிஐ வானொலி உரிமத்தை இலவசமாக - காசு ஏதும் வாங்கிக் கொள்ளாமலேயே - கொடுத்துள்ளது. பிரசார் பாரதி வாங்கிக்கொண்டு சந்தோஷப்படக்கூடாதா?

இல்லை.

பிசிசிஐ, இந்த உரிமத்தை non-exclusive என்ற முறையில் கொடுத்துள்ளது. அதே நேரம் ஒவ்வோர் ஊரிலும் உள்ள பண்பலை (தனியார்) வானொலிகளுக்கும் இதே non-exclusive முறையில் வானொலி உரிமத்தை விற்க முடியுமா என்று பிசிசிஐ பார்க்கிறது. இதை ஏற்றுக்கொள்ளாத பிரசார் பாரதி தலைவர் ஷர்மா பிசிசிஐக்கு காட்டமாக ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் இந்தியாவில் எந்த FM வானொலிக்கும் கிரிக்கெட் வர்ணனை அளிக்க்கும் உரிமை கிடையாது என்று சொல்லியுள்ளார். அதை பிசிசிஐ ஏற்க மறுக்கிறது. இதில் அடிப்படைப் பிரச்னை "கிரிக்கெட் வர்ணனை என்பது செய்தி வகையைச் சார்ந்ததா அல்லது கேளிக்கை வகையைச் சார்ந்ததா" என்பதைப் பற்றியது. தனியார் பண்பலை வானொலிகள் செய்தி, செய்தி சார்ந்த current affairs நிகழ்ச்சிகளைத் தயாரிக்க முடியாது. ஆனால் கேளிக்கை (entertainment) நிகழ்ச்சிகளைக் கொடுக்கலாம். பிசிசிஐ கிரிக்கெட் வர்ணனைகள் கேளிக்கை வகையைச் சார்ந்தது என்கிறது.

நமக்கும் அதுவே உடன்பாடு.

அதனால் சில பிரச்னைகளுக்குக் பிறகு இந்த உரிமம் விற்கப்படலாம்.

இதன்மூலம் பிசிசிஐ குறைந்தது ரூ. 100 கோடி பார்க்கும்.

3. இணையம்: வில்லோ டிவி என்னும் இணையத் தொலைக்காட்சி நிறுவனம் 44 மில்லியன் டாலர்கள் தருவதாகச் சொல்லியிருப்பதாக சில செய்திகள் கசியவிடப்பட்டுள்ளன. ஆனால் பிசிசிஐ ஆசாமிகளுக்கு இணைய ஒளிப்படங்களுக்கும் இணையத்தளங்களுக்குமான வித்தியாசங்கள் தெரியவில்லை. எது எப்படியோ, இம்முறை இணைய உரிமம் தனியாக விற்கப்படும்.

இதன்மூலம் பிசிசிஐ குறைந்தது ரூ. 100 கோடி பார்க்கும். 44 மில்லியன் டாலர்கள் என்பது மிக அதிகமாகத் தோன்றுகிறது. அவ்வளவு கொடுத்தால் அந்த நிறுவனத்தின் கதை கந்தலாகலாம்!

4. மொபைல் உரிமம்: இது ஸ்பான்சர்ஷிப் + ஒலி/ஒளிபரப்பு வகையைச் சார்ந்தது.

இதன்படி மொபைல் போன்களில் வீடியோ விக்கெட் அலர்ட், நேரடி ஒளிபரப்பு ஆகியவற்றைச் செய்யலாம்.

இதில் நிறையப் பணம் புரள வாய்ப்பு உள்ளது. நான்கு வருடங்களுக்கு நிச்சயமாக ரூ. 200 கோடிக்கு மேல் பெறலாம்.

5. இதைத்தவிர பல சில்லறை விஷயங்களில் பிசிசிஐ 200 கோடிகளுக்கு மேல் புரட்டும்.

மொத்தத்தில் ரூ. 2100 கோடிக்கு மேல் வருகிறது. கொஞ்சம் இங்கும் அங்குமாக இழுத்துப் பார்த்தால் ரூ. 2500 கோடிகள். இதில் சஹாரா, நைகி சேர்த்தால் மொத்தமாக ரூ. 3000 கோடி.

இதற்கு மேல் ஆட்டத்தொடர் ஸ்பான்சர்ஷிப். அப்புறம் in-stadia advertisement. டிக்கெட் கலெக்ஷன். ம்ம்ம்ம்ம்.....

கங்குலி மீண்டும் இந்திய அணியில்

கங்குலி ஷரத் பவாரைச் சந்தித்தார். கர்நாடகத்துக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் விளையாடவில்லை.

பாகிஸ்தான் செல்லும் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

காயிஃப் அணியில் இல்லை; முரளி கார்த்திக் அணியில் இல்லை. பார்த்திவ் படேல் மீண்டும் உள்ளே வந்துள்ளார், இரண்டாவது விக்கெட் கீப்பராக. தினேஷ் கார்த்திக் ரஞ்சியில் அவ்வளவாக ஒன்றும் செய்யாததாலும் படேல் நன்றாக விளையாடியிருப்பதாலும் கார்த்திக்குக்கு பதிலாக படேல் வந்திருப்பதாக கிரன் மோரே சொல்கிறார்.

அகர்கர் அணியில் தொடர்கிறார். ஆனால் நல்லவேளையாக ஜாகீர் கானும் ஆர்.பி.சிங்கும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆக அணி-16:

ராகுல் திராவிட் - அணித்தலைவர்
விரேந்தர் சேவாக் - துணைத்தலைவர்
வாசிம் ஜாஃபர் - தொடக்க ஆட்டக்காரர்
கவுதம் கம்பீர் - தொடக்க ஆட்டக்காரர்
சச்சின் டெண்டுல்கர் - மிடில் ஆர்டர்
விவிஎஸ் லக்ஷ்மண் - மிடில் ஆர்டர்
யுவராஜ் சிங் - மிடில் ஆர்டர்
சவுரவ் கங்குலி - மிடில் ஆர்டர்
மஹேந்திர சிங் தோனி - விக்கெட் கீப்பர்
பார்த்திவ் படேல் - விக்கெட் கீப்பர்
இர்ஃபான் பதான் - வேகப்பந்து, ஆல் ரவுண்டர்
அஜித் அகர்கர் - வேகப்பந்து
ஜாகீர் கான் - வேகப்பந்து
ஆர்.பி.சிங் - வேகப்பந்து
அனில் கும்ப்ளே - சுழல்பந்து
ஹர்பஜன் சிங் - சுழல்பந்து

Wednesday, December 21, 2005

வதம் ! வதம்!

மிகவும் துரிதமாக வெற்றி பெற்றுவிட்டது இந்தியா. சென்னையில் இந்தியா சொதப்பியதை பார்த்த போது, இலங்கை அணி மிச்சமுள்ள போட்டியில் ஒரு "காட்டு" காட்டும் என பயம் வந்தது. அதற்கேற்றாற் போல், முரளியும் முதல் இன்னிங்ஸில் இந்தியாவை தடவ வைத்தார். ஆனால் அதோடு சரி. அதன் பின்னால் இந்தியாவின் அதிரடி வியூகங்களுக்கு பதிலளிக்க இயலாமல் சரிந்தது இலங்கை அணி.

இப்போட்டிகள் ஒருசாரார் மட்டும் ஆக்கிரமித்து நடந்த போட்டிகள் அல்ல. வெற்றியின் அளவை வைத்து போட்டிகள் எந்த அளவு ஆக்ரோசத்துடன் விளையாடப்பட்டன என்பதை முடிவு செய்ய முடியாது. இரு அணிகளும் ஆட்டத்தின் சில பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தன. ஆனால் இறுதியாக இந்தியாவில் சில உத்திகள் இலங்கையை சுருட்ட ஏதுவாயின.

தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வது என்பது ஒரு கலை. முன்பெல்லாம் இந்திய அணியின் அணுகுமுறையில் அது வெளிப்படாது.செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்து கொண்டேயிருப்பார்கள். தற்போது இந்நிலை வெகுவாக மாறியிருக்கிறது. அணியின் ஒவ்வொரு ஆட்டக்காரரிடமும் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொறுப்பான ஆட்டம் ஆட ஒரு ஆட்டக்காரருக்கு தன்னுடைய பொறுப்பு என்ன? என்ற உணர்தல் அவசியம். அதற்கான ஆற்றல் தன்னிடம் உள்ளதா? என்ற சுய சந்தேகங்களும் சமயத்தில் ஆட்டக்காரர்கள் மனதில் எழும். கோச் மற்றும் கேப்டனின் வேலை இத்தகைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து ஆட்டக்காரர்களை ஊக்கப்படுத்துவது.

தற்போதைய இந்திய அணியில் திரைக்குப் பின்னால் ஒவ்வொரு ஆட்டக்காரரும் தொடர்ச்சியாக உழைக்க வேண்டியதற்கான திட்டங்களும், பயிற்சி முறைகளும் வகுக்கப்படுகின்றன. அதன் விளைவுகள் ஆடும் ஆட்டத்தில் தெரிகிறது. இதற்காக பயிற்சியாளரை நாம் பாராட்டத்தான் வேண்டும்.

இந்தியாவின் வெற்றிகள், குழுவின் கூட்டு முயற்சியால் அமைவது வரவேற்கத்தக்க அம்சம். முன்பெல்லாம் சில தனிப்பட்ட ஆட்டக்காரர்களின் திறமையைச் சார்ந்தே வெற்றிகள் ஈட்டப்பட்டன.

இலங்கை அணியின் பிரச்சனைகள் அணிதேர்விலிருந்தே தொடங்கி விட்டது. ஜெயசூர்யாவை டெஸ்ட் போட்டிகளிலிருந்து நீக்கியது தவறான முடிவு. ஜெயசூர்யாவை சேர்த்திருந்தால் உளவியல் ரீதியாக கலக்கத்தை இந்திய அணிக்கு ஏற்படுத்தியிருக்க முடியும். தாரங்கா போன்ற இளம் ஆட்டக்காரர்களுக்கு முதலிலே வாய்ப்பு தராமல் குணவர்த்தெனே போன்ற ஆட்டக்காரர்களுக்கு வாய்ப்பு தந்தது , ஆர்னால்ட்டை விட்டு விட்டு அதிகம் பிரகாசிக்காத முபாரக்கை எடுத்தது போன்ற பல குளறுபடிகள் நிகழ்ந்தன.

இன்று தில்சன் இலங்கை அணியின் தடுமாற்றத்திற்கு எஸ்ஜி பந்துகள் பயன்படுத்தப்பட்டதை காரணமாக கூறியிருக்கிறார். குக்கூபாரா பந்துகளில் பந்துவீசி பழகிய இலங்கை அணியினர், எஸ்ஜி பந்துகளை சரியாக கையாளத் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். இது விவாதிக்கப்பட வேண்டிய அம்சம். முன்பு ஹர்பஜன் வெளிநாட்டுக் களங்களில் சரியாக பந்து வீச இயாலததற்கு இதே போன்ற காரணங்கள்தான் கூறப்பட்டது.

உபயோகிக்கப்படும் பந்தின் வகைகளை ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்ய முடியாதா? அல்லது எந்த பந்தை உபயோகப்படுத்துவது என்பது குறிப்பிட்ட நாட்டின்/போர்டின் முடிவா? இதைப் பற்றிய விவரங்கள் சரியாக தெரியவில்லை.

இக்கட்டுரையை முடிப்பதற்குள்,ஜெயசூர்யா மீண்டும் அணியில் நியூசிலாந்து பயணத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளார் என செய்தி கிடைத்துள்ளது. ஜெயசூர்யா நன்றாக விளையாடும் பட்சத்தில், இலங்கை அணியின் திறன் பலமடங்கு அதிகரிக்கும்.

இந்தியா இத்தொடர் வெற்றியின் மூலம் ஐசிசி தர வரிசையில் இரண்டாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. வரவிருக்கும் பாகிஸ்தான் தொடர் இந்தியாவிற்கு மிகப்பெரிய சவாலாக அமையும். இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது மிகவும் சுவாரஸ்யமாக அமையும் என நம்புகிறேன்.

வாழ்த்துக்கள்! அணி இந்தியாவிற்கு.

இந்தியா 259 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இன்று காலை 7.3 ஓவர்கள்தான் தேவைப்பட்டது, இலங்கையை ஆல் அவுட் ஆக்க.

காலையின் இரண்டாவது ஓவரிலேயே மஹரூஃப் கும்ப்ளே பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். 235/7. அதற்கடுத்த ஹர்பஜன் ஓவரின் முதல் பந்திலேயே முபாரக், ஸ்லிப்பில் நின்ற லக்ஷ்மணிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 235/8.

ஹர்பஜன் தனது அடுத்த ஓவரில் முரளிதரனை பவுல்ட் ஆக்கினார். இலங்கை 245/9. கடைசி விக்கெட் கும்ப்ளேக்குக் கிடைத்தது. பண்டாரா ஸ்லிப்பில் கேட்ச் கொடுக்க, சேவாக் பிடித்தார். இலங்கை 249 ஆல் அவுட். இதுதான் இந்தியாவுக்கு ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

கும்ப்ளே 34.3-9-89-5 எடுத்தார். ஆனால் இந்த டெஸ்டில் ஹர்பஜனுக்குத்தான் 10-141 என்று மிக அதிக விக்கெட்டுகள் கிடைத்தது! ஹர்பஜன் சிங்கே ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ஆனால் இந்தப் போட்டித்தொடரில் கும்ப்ளே 374 ரன்கள் கொடுத்து 20 விக்கெட்டுகள் பெற்றுள்ளார். ஹர்பஜன் 312 ரன்கள் கொடுத்து 14 விக்கெட்டுகள் பெற்றுள்ளார். கும்ப்ளேதான் போட்டித் தொடரின் நாயகன்.

இங்கிலாந்து பெற்ற ஆறுதல் வெற்றி

இன்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆனாலும் போட்டித்தொடரை பாகிஸ்தான் 3-2 என்ற கணக்கில் வென்றது.

ஸ்கோர்கார்ட்

தோல்வியைத் தள்ளிப்போட்டது இலங்கை

நான்காம் நாள் வெகு விரைவாக ஆட்டம் முடிந்துவிடும் என்ற நினைப்பில் மண்ணள்ளிப்போட்டது ஜெயவர்தனே - தில்ஷன் ஜோடி.

காலையில் கும்ப்ளே-ஹர்பஜன் ஜோடி ஆறு ஓவர்கள் அதிகமாக விளையாடி விக்கெட் இழக்காமல் 29 ரன்கள் பெற்றனர். அதையடுத்து இந்தியா டிக்ளேர் செய்ய, இலங்கை 509 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்படி எடுத்தால் அது உலக சாதனை என்று அனைவருக்கும் தெரியும்.

அட்டபட்டு-தரங்கா ஜோடி நன்றாகவே தொடங்கியது என்றாலும் உணவு இடைவேளை நெருங்கும்போது அட்டபட்டு ஹர்பஜன் பந்தில் ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 39/1.

உணவு இடைவேளைக்குப் பின்னர் சங்க்கார-தரங்கா ஜோடி அமைதியாகத் தொடர்ந்தது. ஆனால் கும்ப்ளே அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளைப் பெற்றார். முதலில் சங்கக்கார நேராகும் ஒரு பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். 84/2. அடுத்து தரங்கா தன் அரை சதத்தைப் பெறுவதற்கு முன்னால் லெக் ஸ்லிப்பில் நின்ற கம்பீரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 89/3. சமரவீரா முதல் இன்னிங்ஸிலும் ஒன்றும் செய்யவில்லை. இப்பொழுதும் அப்படியே. ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் நின்ற காயிஃபிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 96/4.

ஆனால் இலங்கை அணி அத்துடன் சுருண்டுவிடவில்லை. ஜெயவர்தனே, முதல் இன்னிங்ஸ் டாப் ஸ்கோரர் தில்ஷனுடன் சேர்ந்து மிக நன்றாக விளையாடினார். கும்ப்ளே, ஹர்பஜன் இருவரும் என்னென்னவோ செய்தும் இந்த ஜோடியைப் பிரிக்க முடியவில்லை. டெண்டுல்கர் அழைக்கப்பட்டார். சேவாக் சில ஓவர்களை வீசினார். பலன் இல்லை. மட்டையாளர்கள் இருவருமே அரை சதத்தைப் பெற்றனர். கடைசியாக சேவாக் தன் வேகப்பந்து வீச்சாளர்களைக் கூப்பிட வேண்டியிருந்தது.

அகர்கர் வீசிய யார்க்கர் ஒன்றை ஜெயவர்தனே தடுத்தாட அது அகர்கருக்குக் கேட்சாக அமைந்தது. மூன்றாவது நடுவர் அது நிஜமாகவே கேட்சா அல்லது தரையில் பட்டு வந்ததா என்று சோதிக்க வேண்டியிருந்தது. ஜெயவர்தனே 57, இலங்கை 201/5. முதல் இன்னிங்ஸைப் போலவே இப்பொழுதும் 65 ரன்களை எடுத்த நிலையில் தில்ஷன் பதானின் பந்தை விக்கெட் கீப்பரிடம் தட்டி அவுட்டானார். இலங்கை 229/6.

அதன்பிறகு ஜெஹான் முபாரக்கும் ஃபெர்வீஸ் மஹரூஃபும் கடைசி ஐந்து ஓவர்களைத் தட்டிக் கழித்தனர்.

ஆனால் நாளை மூன்று வேளைகளையும் இப்படித் தட்டிக்கழிக்க முடியாது.

காலை ஒன்றரை மணி நேரத்துக்குள்ளாகவே ஆட்டம் முடிந்துவிடும்!

தென்னாப்பிரிக்காவைக் காத்தார் ருடால்ப்!

ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சுத் திறன் குறைந்துள்ளது. அல்லது பெர்த் ஆடுகளம் பின்னோக்கிச் செல்கிறது. முதல் நாள் ஆடுவது கடினம், கடைசி இரண்டு நாள்கள் வெகு எளிது?

பந்துவீச்சுத் திறன்தான் குறைந்துள்ளது என்று நினைக்கிறேன். முன்னெல்லாம் மெக்ராத் எந்த மாதிரியான பிட்ச் ஆக இருந்தாலும் விக்கெட்டுகளை எடுப்பார். கில்லெஸ்பி இருந்தவரை விடாமுயற்சியுடன் 'இன்னும் ஒரு விக்கெட்தான், நிலைமை மாறிவிடும்' என்று பந்து வீசிக்கொண்டே இருப்பார். இங்கு கில்லெஸ்பி இல்லை. லீ, பிராக்கென் என்று எத்தனை பேர் வந்தாலும் அவரை ஈடுசெய்ய முடியாது. மெக்ராத் தன் அந்திமக் காலம் வந்துவிட்டதை உணர்த்துகிறாரோ என்னவோ.

அத்துடன் ஜாக் ருடால்ப் அற்புதமாக விளையாடினார். ஒரு நாள் முழுவதும் நின்று அணியைக் காத்தார். மறுபக்கம் சில விக்கெட்டுகள்தான் விழுந்தன. கெம்ப் அவருக்கு நல்ல ஆதரவு அளித்தார்.

கடைசியில் ஒருவழியாக தென்னாப்பிரிக்கா டிரா செய்தது.

முழுக்க முழுக்க பந்துவீச்சுக்கு ஆதரவான ஆடுகளமாக இருந்தால், அதுவும் வேகப்பந்து வீச்சுக்கு ஆதரவான ஆடுகளமாக இருந்தால், தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவைத் தோற்கடிக்க நிறையவே வாய்ப்புகள் உள்ளன.

ஸ்கோர்கார்ட்

Tuesday, December 20, 2005

பாகிஸ்தான் உபசரிப்பு

சென்ற முறை நாம் பாகிஸ்தான் சென்றபோது அங்குள்ள ஆடுகளங்களெல்லாம் இந்தியர்களுக்குச் சாதகமாக இருந்தது என்று இன்ஸமாம் குறைபட்டுக்கொண்டார். அதாவது எல்லா ஆடுகளங்களும் ஓரளவுக்கு மிதவேகப்பந்து வீச்சுக்கு - சீம் & ஸ்விங் பந்துவீச்சுக்கு ஆதரவானதாக - இருந்ததாம்.

இம்முறை எல்லா ஆடுகளங்களும் நல்ல வேகப்பந்து வீச்சுக்கு ஆதரவாகச் செய்யப்பட வேண்டும் என்று இன்ஸமாம் கேட்டிருப்பதாகக் கேள்வி. ஏனெனில் சென்ற முறையை விட இப்பொழுது ஷோயப் அக்தர், நவீத்-உல்-ஹசன் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பதாக பாகிஸ்தான் நினைப்பதே காரணம்.

ஆனால் உண்மை என்ன?

ஷோயப் அக்தர் இங்கிலாந்துக்கு எதிராக நிறைய விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனால் லெக் ஸ்பின்னர் தனீஷ் கனேரியாவும் கூடத்தான். ஷப்பீர் அஹமதை ஐசிசி ஒரு வருடத்துக்கு விளையாடத் தடை செய்துள்ளது. நவீத்-உல்-ஹசன் சுமார்தான். மொஹம்மத் சாமி தடுமாறுகிறார்.

சென்ற முறையும் ஷோயப் அக்தர் பாகிஸ்தானுக்காக விளையாடினார். ஆனால் படுமோசமாகப் பந்துவீசினார். சேவாக் எடுத்த எடுப்பிலேயே அக்தரை தாக்கத் தொடங்கினார். இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் உமர் குல் என்ற புதியவர் எடுத்த சில விக்கெட்டுகள் அந்த டெஸ்டின் திசையை மாற்றியது. முல்டான், லாஹூர், ராவல்பிண்டி என அனைத்து டெஸ்ட்களிலுமே இரண்டு பக்கத்திலிருந்தும் பல சதங்கள் பெறப்பட்டன. எதுவுமே பந்துவீச்சுக்கு வெகுவாக ஆதரவுடையது என்று சொல்லமுடியாது. பாகிஸ்தானின் பேட்டிங் உடைந்து சிதறக்கூடியது என்பது மட்டும்தான் அப்பொழுது முடிவாகத் தெரிந்தது.

இந்தியப் பந்துவீச்சாளர்கள் யாரும் தனித்து சோபிக்கவில்லை. பாலாஜி சில விக்கெட்டுகள் பெற்றார். பதான் சில விக்கெட்டுகள். ஆஷீஸ் நேஹ்ரா சுமார்தான். கும்ப்ளே முக்கியமாக இந்தியா வெற்றிபெற்ற இரண்டு டெஸ்ட்களிலும் நன்றாக விளையாடினார்.

இம்முறை இந்திய அணி எதுவாக இருக்கும்?

பாகிஸ்தான் இவ்வளவு சொன்னபிறகு இந்தியா மூன்று ஸ்பின் பந்துவீச்சாளர்களை அழைத்துச் செல்வதே அதிகம்.

ஸ்பின்: கும்ப்ளே, ஹர்பஜன், கார்த்திக்.
தொடக்க ஆட்டக்காரர்கள்: சேவாக், ஜாஃபர், கம்பீர்
மிடில் ஆர்டர்: திராவிட், டெண்டுல்கர், லக்ஷ்மன், யுவராஜ்
விக்கெட் கீப்பர்: தோனி
வேகப்பந்து வீச்சுக்கு: பதான், ஜாகீர் கான், ஆர்.பி.சிங், இன்னுமொருவர்

ஜாஃபர், கம்பீர் என்று இருவரும் செல்வார்களா? இலங்கை தொடரில் நிகழ்ந்தது போல சேவாக் அல்லது திராவிடுக்கு, அல்லது பிற மிடில் ஆர்டர் மட்டையாளர்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் யார் விளையாடுவது? காயிஃப் டெஸ்ட் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் செல்லவேண்டுமா? கங்குலி தேவையா? கங்குலி இருந்தால் யுவராஜுக்கு முன்னதாக அவர் அணி-11 ல் இருப்பாரா? அல்லது தொடக்க ஆட்டக்காரர் இடம் பலியாக்கப்படுமா? முரளி கார்த்திக் தேவையா? அதற்கு பதில் இன்னொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் போவாரா? நான்காவது வேகப்பந்து வீச்சாளர் யாராக இருக்கக்கூடும்?

ஆடுகளம் வேகப்பந்துக்குச் சாதகமானது என்று முன்னதாகவே தெரிந்தாலும் இந்தியா 2+2 என்று பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுக்குமா அல்லது 3+1 ஆ? ஒரே ஸ்பின்னர்தான் என்றால் அது கும்ப்ளேயா அல்லது ஹரபஜனா? ஆஸ்திரேலியா சென்றபோது முதல் டெஸ்டில் விளையாடியது ஹர்பஜன். இரண்டாவது டெஸ்டில் ஹர்பஜனுக்குக் கையில் ஏதோ காயம் என்பதால் கும்ப்ளே உள்ளே வந்தார். கொத்து கொத்தாக விக்கெட்டுகள் பெற்றார். ஆனால் இப்பொழுதைய நிலைமையில் கும்ப்ளேதான் முன்னணி ஸ்பின்னர்.

ஆர்.பி.சிங் 15-ல் இருந்தால் நிச்சயம் ஒரு டெஸ்டிலாவது விளையாடுவார். அகர்கர் அணியுடன் செல்லவேண்டுமா? டெஸ்ட் பந்துவீச்சில் அவர் எதையும் சாதிக்கப்போவதைப்போலவே தெரியவில்லையே?

இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை இன்னும் வெகு சீக்கிரமே தெரிந்துவிடும்.

வாலு போயி வாலு வந்தது டும் டும் டும்

அடுத்தடுத்த நாள்களில் இந்தியாவின் வால் இரண்டாவது முறையாக ஆடியது. இன்று ரொம்பவே ஆடியது!

இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் ஹீரோ லக்ஷ்மண். தனது ஒன்பதாவது சதத்தை அடித்தார். ஆனால் தோனியும் பதானும் அவருக்கு நல்ல ஆதரவை அளித்தனர். இரண்டாவது ஹீரோ ஹர்பஜன் சிங். முதலிரண்டு டெஸ்ட்களில் சொல்லிக்கொள்ளக்கூடிய அளவுக்கு ஒன்றும் செய்யாவிட்டாலும் நேற்று மாலை அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை எடுத்து இலங்கை அணியை நிலைகுலையச் செய்தார்.

ஆனால் இன்று காலையில் முதல் விக்கெட்டைப் பெற்றது கும்ப்ளேதான். ஜெஹான் முபாரக்கை பவுல்ட் ஆக்கினார். 144/6. இலங்கை ஃபாலோ-ஆனிலிருந்து விடுபடாதோ என்ற நிலை. (ஆனாலும் இந்தியா ஃபாலோ-ஆனை விதித்திருக்காது.) அடுத்து மஹரூஃப் ஹர்பஜன் சிங் பந்தில் அவருக்கே கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹர்பஜனின் ஐந்தாவது விக்கெட் அது. 155/7.

இந்நிலையில் தில்ஷனும் மலிங்க பண்டாராவும் சேர்ந்து அழகாக விளையாடினர். பண்டாரா கும்ப்ளே, ஹர்பஜன் இருவரையுமே இறங்கி வந்து அடித்தாடினார். இருவருமாகச் சேர்ந்து ஃபாலோ-ஆனைத் தவிர்த்தனர். தில்ஷன் 65 ரன்கள் பெற்ற நிலையில் ஹர்பஜனின் பந்தில் பார்வர்ட் ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 198/8. முரளிதரன் கும்ப்ளே பந்தில் தோனியால் ஸ்டம்ப் செய்யப்பட்டு அவுட்டானார். 201/9. லசித் மலிங்கா லெக் ஸ்லிப்பில் நின்றிருந்த சேவாகிடம், ஹர்பஜன் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹர்பஜன் 22.2-3-62-7 என்னும் அற்புதமான பந்துவீச்சைச் செய்திருந்தார். இலங்கை 206க்கு ஆல் அவுட். இலங்கையின் வால் அவ்வளவாக ஆடவில்லை! இந்தியா 192 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

உணவு இடைவேளைக்குப் பிறகு இந்தியா தன் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. முதல் பந்து அளவு குறைவாக, ஆஃப் ஸ்டம்புக்கு வெகு வெளியே சென்ற பந்து. சேவாக் தர்ட்மேனுக்கு மேலாக அந்தப் பந்தைத் தூக்கி அடித்தார். ஆனால் மஹரூஃப் அங்கு நின்று கொண்டிருந்தார். முதல் பந்திலேயே சேவாக் அவுட்! லக்ஷ்மண் உள்ளே வந்தார். வந்து மூன்று ஓவர்கள் கழித்து மஹரூஃப் பந்தில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். 9/2. டெண்டுல்கர் வந்தது முதற்கொண்டு மிக எளிதாகப் பந்துகளை அடித்தார். முரளியை நன்றாகவே எதிர்கொண்டார். ஆனால் பார்ட்-டைம் ஆஃப் ஸ்பின்னர் தில்ஷனின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். 34/3. இந்தியாவின் சீனியர் மட்டையாளர்கள் மூவரும் பெவிலியனுக்குத் திருப்பிவிட்டனர்.

நிலைமை மோசமாகாமல் கம்பீரும் யுவராஜ் சிங்கும் அமைதியாக விளையாடினர். இருவரும் ஸ்பின்னை எதிர்கொள்ள சற்றே தடுமாறினாலும் தயங்காமல் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அடித்து பவுண்டரிகளைப் பெற்றனர். முரளியில் பந்தை கட் செய்யப்போய் கம்பீர் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். கம்பீர் 30, இந்தியா 81/4. காயிஃப் உள்ளே வந்தார். முதல் இன்னிங்ஸைவிட நன்றாக விளையாட நினைத்தார்தான். ஆனால் ஸ்பின்னுக்கு எதிரான இவரது உத்தி சரியானதில்லை. கிரீஸில் நின்றுகொண்டே பந்து குத்தி எந்தத் திசையில் செல்கிறது என்பதைப் பார்த்தபிறகு அதை விளையாடுகிறார். இது நல்ல ஸ்பின்னர்களுக்கு எதிராகப் பயன்படாத உத்தி. அதுவும் கூக்ளி, தூஸ்ரா என்று வித்தை காட்டுபவர்களுக்கு முன் எடுபடாத உத்தி.

பண்டாராவின் பந்தில் காயிஃப் எல்.பி.டபிள்யூ என்று தீர்மானிக்கப்பட்டார். நன்கு முன்னால் வந்து கால்காப்பில் வாங்கினார் என்றாலும் நடுவர் இதை அவுட் என்று தீர்மானித்தார். காயிஃப் 9, இந்தியா 100/5. எப்படியோ கிட்டத்தட்ட முதல் இன்னிங்ஸ் நிலைமைக்கு இந்தியா வந்துவிட்டது. அப்பொழுது 97/5, இப்பொழுது 100/5. ஆனால் இப்பொழுது லக்ஷ்மணுக்கு பதில் யுவராஜ்.

தோனி முதல் இன்னிங்ஸ் அளவுக்கு நின்று விளையாடவில்லை. முரளியின் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். தோனி 14, இந்தியா 134/6. பதான் சில ஓவர்கள் நின்று யுவராஜுக்கு ஆதரவளித்தார். யுவராஜ் அற்புதமாக விளையாடினார். அவ்வப்போது சிரமப்பட்டாலும் ஸ்பின்னர்களைத் தொடர்ந்து ஸ்வீப் செய்துகொண்டிருந்தார். வேகப்பந்து வீச்சாளர்களை புல், கட், ஹூக் என்று அடித்து விளையாடினார். 70ஐத் தாண்டியதும் பதான் உதவியால் சதத்தைப் பெறுவாரா என்று நினைக்கையில், பண்டாராவின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். யுவராஜ் 75, இந்தியா 174/7. நல்ல வேளையாக இந்தியாவுக்கு முதல் இன்னிங்ஸில் 192 ரன்கள் லீட் இருந்தது.

பதான், அகர்கருடன் ஜோடி சேர்ந்து கொத்து கொத்தாக விக்கெட்டுகளை எடுக்காவிட்டாலும் ரன்களைப் பெற்றார். பதான் 27 ரன்கள் இருக்கும்போது முரளியின் பந்தில் பவுல்ட் ஆனார். இந்தியா 198/8. இந்தியா டிக்ளேர் செய்யுமா அல்லது ஆல் அவுட் ஆகுமா என்ற கேள்வி.

அகர்கர்-கும்ப்ளே ஜோடி வேறு நினைப்பில் இருந்தனர். அகர்கர் இதற்குமுன் இங்கிலாந்தில் டெஸ்டில் சதம் அடித்துள்ளார். இங்கு வலுவாக முன்னேறி 48 ரன்களைப் பெற்றார். அரை சதம் கைக்கருகில் இருக்கும்போது பண்டாரா பந்துவீச்சில் அவருக்கே கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்தியா 247/9. அதற்குப் பின்னும்கூட இந்தியா ஆல் அவுட் ஆகவில்லை. மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுறும்போது ஹர்பஜனும் கும்ப்ளேயும் பத்தாவது விக்கெட்டுக்காக 40 ரன்களைச் சேர்த்திருந்தனர்! ஆளுக்கு ஒரு சிக்ஸ் வேறு. கடைசி ஐந்து விக்கெட்டுகளுக்காக இதுவரையில் 187 ரன்களைச் சேர்த்திருக்கின்றனர். முதல் இன்னிங்ஸையும் சேர்த்தால் இந்தியாவின் வால் இதுவரையில் 488 ரன்களைப் பெற்றுள்ளனர்!

நாளைக் காலை ஹெவி ரோலரைப் பயன்படுத்தியபின்னர் ஒரு பந்தைக்கூடச் சந்திக்காமல் இந்தியா டிக்ளேர் செய்யும். அதனால்தான் இன்று மாலையே டிக்ளேர் செய்யவில்லை. ஹெவி ரோலர் ஆடுகளத்தின் மேல்பரப்பை உடைத்துவிடும். ஏற்கெனவே ஸ்பின்னாகும் ஆடுகளம் நாளைக் காலை இன்னும் என்னென்ன செய்யப்போகிறதோ!

நாளை கடும் போட்டி நிலவும். கும்ப்ளே - ஹர்பஜன் இடையில்.

Monday, December 19, 2005

பனிவிழும் மலர்வனம்

அஹமதாபாத் மோடேரா மைதானம் சபர்மதி ஆற்றுக்கு வெகு அருகில் உள்ளது. ஆற்றுக்கும் மைதானத்துக்கும் இடையில் பெரிய கட்டடங்கள் ஏதுமில்லையாம். இதனால் வருடம் 365 (அல்லது 366) நாளும் மைதானப் புல்வெளியில் - அதாவது outfieldஇல் - பனிப்பொழிவு உண்டாம். காலையில் ஆட்டம் 9.30க்கு தொடங்க வாய்ப்பே இல்லை! முதல் நாள் அதி நீர் உறிஞ்சியைப் பயன்படுத்தியபின் 10.30க்கு ஆட்டம் தொடங்கியது. இரண்டாம் நாள் 10.00 மணிக்கு. இன்று மூன்றாம் நாளும், இனிவரும் நாள்களிலும் அப்படியேதான் இருக்கும்.

அதே நேரம் மாலையில் குளிர்காலம் என்பதால் சூரிய அஸ்தமனம் வெகு சீக்கிரமே நடக்கிறது. இத்தனைக்கும் அரங்கில் உள்ள விளக்குகளை 4.45க்கே ஏற்றிவிடுகின்றனர். ஆனால் 5.15க்கு மேல் விளக்கிலும் விளையாட முடியாத நிலை. சிகப்புப் பந்தை வெள்ளை விளக்கொளியில் சரியாகப் பார்க்கமுடியாது!

இந்திய தனது 'சுழற்சிமுறை' திட்டத்தைக் கைவிட வேண்டும். டெஸ்ட் போட்டிகள் என்றால் எந்தெந்தக் காலகட்டத்தில் எந்தெந்த நகரங்களில் ஆட்டம் நடைபெறலாம் என்று முன்னதாகவே தீர்மானித்து அங்கு மட்டுமே விளையாட வேண்டும்.

பாகிஸ்தான் ஒருநாள் போட்டித் தொடரிலும் வெற்றி

பாகிஸ்தான் - இங்கிலாந்து ஒருநாள் போட்டித்தொடரில் நான்காவது ஒருநாள் ஆட்டத்தை வென்று பாகிஸ்தான் 3-1 என்ற முன்னிலையில் உள்ளது. இன்னமும் ஒரு ஆட்டம் பாக்கி உள்ளது.

நேற்று நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து எளிதாக ஜெயித்திருக்கலாம். பாகிஸ்தானை 47.2 ஓவர்களில் 210க்கு ஆல் அவுட் என்று இங்கிலாந்து நெருக்கிவைத்தது. இன்ஸமாம்-உல்-ஹக்கின் ஆசுவாசம் தரக்கூடிய 81* இல்லாவிட்டால் பாகிஸ்தானின் நிலைமை இன்னமும் மோசமாக இருந்திருக்கும். ஆனால் 211ஐத் துரத்திச் சென்ற இங்கிலாந்தும் நிலை தடுமாறி சடசடவென விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 114/8 என்ற நிலையை அடைந்தது. ஆனாலும் கடைசி இரண்டு விக்கெட்டுகளுக்கு கபீர் அலி, ப்ளாக்வெல், ஆண்டர்சன் ஆகியோர் இணைந்து 83 ரன்கள் சேர்த்தனர். வெற்றிபெற 14 ரன்களும் 11 பந்துகளும் இருக்கும் நிலையில் ஆண்டர்சன் அவுட்டாக பாகிஸ்தான் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சஹாரா இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர்

சஹாரா இந்தியா, தன் ஏர் சஹாரா நிறுவனம் வழியாக இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக மீண்டும் தொடர உள்ளது.

கடந்த நான்கு வருடங்கள் இந்தியச் சட்டையை ஸ்பான்சர் செய்த சஹாரா அதற்காக ரூ. 78.10 கோடி ரூபாய்களை பிசிசிஐக்குக் கொடுத்தது. இப்பொழுது அடுத்த நான்கு வருடங்களுக்கு சஹாரா ரூ. 313.80 கோடி ரூபாய்களைத் தர ஒப்புக்கொண்டுள்ளது! அத்துடன் ஐசிசி ஆட்டங்கள் (ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி, உலகக் கோப்பைளிந்த ஸ்பான்சர்ஷிப்பில் சேர்க்கப்படவில்லை. இதற்கென பிசிசிஐக்குத் தனியாகவும் பணம் கிடைக்கும். மேலும் clothing merchandising partner என்று ஒருவரையும் பிசிசிஐ தீர்மானம் செய்துகொள்ளலாம். இவரது லோகோவும் இந்தியச் சட்டையில் காணப்படும். இந்த ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து குறைந்தது இன்னமும் ஒரு 30-40 கோடி ரூபாய்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆக பிசிசிஐ காட்டில் மழைதான். இன்னமும் கிரிக்கெட் தொலைக்காட்சி உரிமம் முடிவாகவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

வாலாட்டும் இந்தியா முன்னிலையில்

இந்தியா இதற்கு முன் இப்படி வாலாட்டியதில்லை. முதல் ஆறு பேர் எடுப்பது மட்டும்தான் ரன்கள். அடுத்த ஐவரும் ஏதோ கொஞ்சம் ரன்களுடன் அவுட்டாகி விடுவார்கள். நமக்கெல்லாம் மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, பாகிஸ்தானைப் பார்த்தாம் பொறாமையாக இருக்கும்.

ஆனால் இந்த டெஸ்டில் முதல் ஐந்து விக்கெட்டுகளும் 97க்கு விழுந்தவுடன் லக்ஷ்மனுடன் ஜோடி சேர்ந்து தோனி, பதான் இருவரும் 211 ரன்கள் பெற்றனர். இதில் லக்ஷ்மணின் பங்கு குறைவுதான்! லக்ஷ்மண் அவுட்டானபிறகும்கூட பதான் - அகர்கர், அகர்கர் - கும்ப்ளே, கும்ப்ளே - ஹர்பஜன் ஜோடிகள் சேர்ந்து 90 ரன்களைப் பெற்றனர். ஆக 97/5 என்ற நிலையிலிருந்து 301 ரன்கள் கடைசி ஐந்து விக்கெட்டுகளிடமிருந்து கிடைத்துள்ளன!

முன்னெல்லாம் டெண்டுல்கர், திராவிட் இருவரும் விளையாடுவதைப் பார்க்கும்போது இருவேறு எண்ணங்கள் மனத்தில் தோன்றும். டெண்டுல்கரின் விளையாட்டு பார்க்க மிக அழகாக இருக்கும்; ஆனால் எந்த நேரமும் அவுட்டாகிவிடுவாரோ என்று பயமாகவும் இருக்கும். அதே நேரம் டெண்டுல்கரே எல்லா பந்துகளையும் விளையாடக்கூடாதா என்றும் இருக்கும். மறுபக்கத்தில் திராவிட் விளையாடும்போது ஆட்டத்தில் ஒன்றுமே நடக்காதது போலவும் விக்கெட் ஏதும் இப்பொழுதைக்கு விழ வாய்ப்பில்லாதது போலவும் இருக்கும். ஆனால் ஆட்டத்தில் சுவாரசியமும் குறைவாகவே இருக்கும்.

தோனி, பதான் இருவரது விளையாட்டைப் பார்க்கும்போது கிட்டத்தட்ட இதே மாதிரியான உணர்வுகள்; சில வித்தியாசங்களுடன். தோனி எப்பொழுதும் ஏதாவது வாய்ப்புகளை எதிரணிக்குத் தருவதுபோலவே உள்ளார். ஆனால் அவரே எல்லாப் பந்துகளையும் விளையாடினால் நன்றாக இருக்கும் போல உள்ளது. பதான் விளையாடும்போது எதிரணிக்கு விக்கெட் எடுக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்பது போலத் தோன்றுகிறது. ஆனால் பதான் (பழைய) திராவிட் போல விளையாடாமல் கவர்ச்சிகரமாகவும் விளையாடுகிறார்.

இலங்கையின் பதில் கிட்டத்தட்ட எதிர்பார்த்த விதமாகவே இருந்தது. புதியவர் உபுல் தரங்கா வெகு சீக்கிரமாகவே பதானிடம் அவுட்டானார். 14/1. அடுத்து சங்கக்காரவும் அட்டபட்டுவும் நன்றாக விளையாடினார்கள். ஆனால் ஒரு விக்கெட் விழுந்தால் இலங்கை சிதறிவிடும் என்ற எண்ணம் நமக்கு இருந்தவாறே இருந்தது.

அந்த விக்கெட் 100வது டெஸ்ட் விளையாடும் கும்ப்ளேயிடமிருந்து வரவில்லை. 50வது டெஸ்டில் விளையாடும் ஹர்பஜன் சிங்கிடமிருந்து வந்தது. ஹர்பஜன் இந்த ஆடுகளத்தில் நல்ல எழும்புதலைப் பெற்றார். அதில் ஏமாந்த அட்டபட்டு பேக்வர்ட் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்தார். அடுத்த பந்திலேயே மற்றுமொரு எழும்பி வந்த பந்தில் ஏமாந்த ஜெயவர்தனே ஃபார்வர்ட் ஷார்ட் லெக் மொஹம்மத் காயிஃபிடம் கேட்ச் கொடுத்தார். சமரவீராவும், அப்படியே அவுட்டானார். கடைசியாக சங்கக்கார கால் வழியாக ஹர்பஜன் பந்தில் பவுல்ட் ஆனார். இரண்டாம் நாள் ஆட்டம் முடியும்போது இலங்கை 40 ஓவர்களில் 131/5. ஹர்பஜன் 11-3-24-4 என்றால் கும்ப்ளே அதற்கு முற்றிலும் மாறாக 13-2-50-0! எல்லா நாள்களும் எல்லோருக்கும் தீபாவளியாக இருக்க முடியாது!

முக்கியமாகச் சொல்லவேண்டியது அகர்கரின் வெகு சாதாரண பந்துவீச்சு.

இந்த டெஸ்ட் போட்டித்தொடரில் இந்தியா மீண்டும் வெற்றி வாய்ப்பை நோக்கிச் செல்கிறது. இலங்கை ஃபாலோ-ஆனைத் தவிர்க்குமா என்று வர்ணனையாளர்கள் கேட்கின்றனர். ஆனால் இந்தியா ஃபாலோ-ஆனை விதிக்காது; மீண்டும் பேட்டிங் செய்து இலங்கைக்கு 450க்கு மேல் இலக்கை நிர்ணயிக்கும் என்றே நினைக்கிறேன். இந்த ஆடுகளத்தில் நான்காவதாக விளையாட இந்தியா விரும்பாது.

பெர்த் டெஸ்ட்-அசத்தும் ஆஸ்திரேலியா

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் நிலையில் உள்ளது.வெற்றி பெறும் பட்சத்தில் ஆஸ்திரேலியா கடுமையாக உழைத்து ஈட்டிய வெற்றியாக இது கருதப்படும். மேலும் புதிய இளம் ஆட்டக்காரர் ஹாட்ஜ்-ன் சிறப்பான ஆட்டத்தால் கிடைத்த வெற்றி என்பது கூடுதல் பெருமையாக அமையும்.

பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகம் உதவும் ஆடுகளமாக கருதப்படுகிறது. 1992 ம் ஆண்டு பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் முத்தரப்பு ஒருநாள் போட்டி ஒன்றில் இந்தியாவும்,மேற்கிந்திய தீவுகளும் மோதி ஆட்டம் டையில் முடிவடைந்தது. அப்போது பந்துகள் மிகவும் எகிறியதால் விக்கெட் கீப்பர் பவுண்டரிக்கு பாதி தூரத்தில் நின்று பந்தை சேகரித்துக் கொண்டிருந்தார்.ஆனால் தற்போதைய டெஸ்ட் மேட்ச்சின் போது ஆடுகளத்தில் பவுன்ஸ் அதிகமாக காணப்படவில்லை. மற்ற ஆஸ்திரேலிய மைதானங்கள் போலத்தான் இருந்தது.

ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆட கட் மற்றும் புல் செய்ய தெரிந்திருப்பது அவசியம். அங்கே பந்துகள் எழும்புவதால் இத்தகைய அடிகளை அடிப்பது இன்றியமையாத்து. முட்டிக்கு மேலே பந்து எழும்பாத நம்ப ஊரில் சப்பாத்தி சாட் என சொல்லப்படும் பிளிக் அடித்து பிழைத்துக் கொள்ளலாம். ஆஸ்திரேலியாவில் கட், புல் செய்யாமல் ரன்கள் குவிக்க முடியாது. ஆனாலும் அதிகமாக இத்தகைய சாட்களை ஆடி முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுக்களை இழந்தனர் ஆஸி அணியினர். இரண்டாவது இன்னிங்ஸில் கவனத்துடன் இத்தகைய அடிகள் அடிக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவின் அதிவேக ரன்குவிப்பு முயற்சியையும் கைவிட்டு நிதானமாக ரன்களை குவித்தார்கள்.

சவுத் ஆப்பிரிக்காவில் நின்று ஆடி அதிக ரன்கள் குவிக்க காலிஸ் இல்லை. ஆண்ட்ரூ ஹால் அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு நல்ல நின்றாடும் திறன் உண்டு. இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் போது சிறப்பாக ஆடினார். ஆனாலும் அவருக்கு இடம் தரவில்லை. தென்னாப்பிரிக்க அணியினர் பாஸ்ட் பவுலிங்கை சமாளித்து ஆடினாலும் வார்னேயிடம் தடவுகிறார்கள். எனவேதாம் மிக சொற்ப ரன்களையே அதிகமாக முதல் இன்னிங்ஸில் பெற முடிந்தது.

தென்னாப்பிரிக்க அணியின் மற்றொரு பிரச்சனை- பந்து வீச்சில் வெரைட்டி இல்லாதது. அனைவரும் வேகப்பந்து வீச்சாளர்கள். அனைவரும் வலக்கை பந்து வீச்சாளர்கள். நல்ல சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது டெஸ்ட் போட்டிகளில் பெரும் குறைதான். ஆஸ்திரேலியா அணியிலோ ஒரு ஸ்விங் பவுலர், ஒரு அதிவேக பாஸ்ட் பெளலர், ஒரு லெக் ஸ்பின்னர், ஒரு இடக்கை பந்து வீச்சாளர் என்று நல்ல வெரைட்டி.

கிராம் ஸ்மித் ஆஸ்திரேலியாவின் பலவீனமாக நடுவரிசை ஆட்டக்காரர்களை குறிப்பிட்டிருந்தார். அதைப் போல முதல் இன்னிங்ஸில் அவர்களை சுருட்டியும் விட்டார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் 203 ரன்களை எடுத்ததன் மூலம் ஹாட்ஜ் சரியான பதிலடி தந்து விட்டார்.

தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டுக்களை ஏற்கனெவே இழந்து விட்டது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் மிச்சமிருக்கும் சூழலில் எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் தோற்பார்கள் என்பதுதான் ஒரே கேள்வி. இதை பொய்ப்பிக்கும் வகையில் தென்னாப்பிரிக்கா விளையாடுமா?

Sunday, December 18, 2005

சறுக்கிய இந்தியா சுதாரிப்பு

மூன்றாவது டெஸ்ட் இன்று அஹமதாபாதில் தொடங்கும்போது இரு அணிகளுக்கும் சில தேக ஆரோக்கியப் பிரச்னைகள் இருந்தன.

இந்திய அணித்தலைவர் ராகுல் திராவிட் ஜுரம், வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இலங்கையில் சமிந்தா வாஸ், தில்ஹாரா ஃபெர்னாண்டோ, அவிஷ்கா குணவர்தனா மூவருமே ஜுரத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதைத்தவிர கேப்டன் அட்டபட்டுவும் நட்சத்திர பந்துவீச்சாளர் முரளிதரனும் முழுவதுமான ஆரோக்கியத்தில் இல்லை. அட்டபட்டு சென்ற ஆட்டத்திலேயே முதுகு வலி காரணமாக சில ஊசிகளைப் போட்டுக்கொண்டுதான் விளையாடினார்.

இந்தியா கங்குலியை அணியை விட்டு நீக்கியிருந்ததால் திராவிடுக்கு பதில் மொஹம்மத் காயிஃபை விளையாடக் கொண்டுவந்திருந்தது. சேவாக் அணித்தலைவர். இலங்கை அணியில் வேகப்பந்து வீச லசித் மலிங்கா, பெர்வீஸ் மஹரூஃப் ஆகியோரும், தொடக்க ஆட்டக்காரராக உபுல் தரங்காவும் வந்துள்ளனர். ஒருவேளை சங்கக்காரவும் அட்டபட்டுவும் ஆட்டத்தைத் தொடங்கலாம். தரங்கா பின்னால் வரலாம்.

இங்கும் அட்டபட்டு டாஸில் தோற்றார். சேவாக் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார்.

முதல்நால் பனியின் காரணமாக காலையில் ஒரு மணிநேரம் தாமதமாகவே ஆட்டம் தொடங்கியது. தொடக்கத்தில் கம்பீர் நன்றாகவே ஆடினாலும் லசித் மலிங்காவின் பந்தைப் பல தடவை சரியான இடத்தில் நிற்காமல் ஹூக் செய்து விளையாடினார். அதன் காரணமாகவே பின்னர் தன் ஆட்டத்தையும் இழந்தார். மலிங்காவை ஹூக் செய்யப்போய் பந்து மட்டையில் சரியாகப் படாமல் மிட்விக்கெட் திசையில் நின்றிருந்த உபுல் தரங்காவிடம் கேட்சாகப் போனது. 31/1. உணவு இடைவேளை வரை கிடைத்த ஒரு மணிநேரத்தில் 12 ஓவர்களே வீசப்பட்டிருந்தன. இந்தியா 51/1 என்ற எண்ணிக்கையில் இருந்தது.

உணவு இடைவேளைக்குப் பிறகு வீசிய முதல் ஓவரிலேயே லசித் மலிங்கா தன் அதிவேகப் பந்துவீச்சினால் சேவாகை பவுல்ட் ஆக்கினார். 52/2. மலிங்காவின் ஆக்ஷன் சைட்-ஆர்ம் ஆக்ஷன், அதாவது வீசும் கை பக்கவாட்டில் தோள்பட்டைக்கு சமமான உயரத்தில் இருக்குமாறு வீசுவது. வகார் யூனுஸ் போடுவதைக் காட்டிலும் மிக அதிகமாக இவரது கை பக்கவாட்டில் நீண்டு வீசுகிறது. நல்ல வேகத்தில் பந்து வீசுகிறார். ஆனால் துல்லியமாக வீசுவதில்லை. நிறைய நோபால்கள் வீசுகிறார். பந்துகள் பலவும் லெக் ஸ்டம்புக்கு வெளியே போனதால் கம்பீர், சேவாக் ஆகியோருக்கு ரன்கள் பெறுவது எளிதாக இருந்தது. மறுமுனையில் மஹரூஃப் மிகவும் துல்லியமாக ஆஃப் ஸ்டம்ப் திசையிலேயே ரன்கள் ஏதும் கொடுக்காத வகையில் வீசினார்.

லக்ஷ்மண், டெண்டுல்கர் இருவரும் சேர்ந்து விளையாடும்போது முரளிதரன் வீசவந்தார். சீக்கிரமாகவே டெண்டுல்கரைத் தவறுசெய்ய வைத்தார். சற்றே அளவு குறைந்து வந்த பந்தை புல் செய்யப்போன டெண்டுல்கர் பந்தின் உயரத்தைச் சரியாகக் கணிக்காததால் பந்து மட்டையில் முன்புறத்தில் ஓரத்தில் பட்டு எழும்பி அவரது கால்காப்பில் பட்டு முன்னால் விழுந்தது. ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் நிறிருந்த ஜெஹான் முபாரக் நன்றாக முன்னால் விழுந்து இந்த கேட்சைப் பிடித்தார். 88/3. அடுத்த இரண்டாவது பந்தில் யுவராஜ் சிங் முன்னால் சென்று தடுத்தாட, பந்து விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த சமரவீராவிடம் கேட்ச் ஆனது. 88/4.

நிலைமையை இன்னமும் மோசமாக்குமாறு உள்ளே வந்த காயிஃப் மிகவும் தடுமாறினார். லக்ஷ்மணும் மிகவும் சுதாரித்து ஆடவேண்டியதாக இருந்தது. இந்நிலையில் மலிங்க பண்டாரா வீசிய அளவு குறைந்த பந்தை மிட்விக்கெட்டில் புல் செய்தார் காயிஃப். ஆனால் பந்து நேராக அங்கு நின்றிருந்த அட்டபட்டுவிடம் கேட்ச் ஆகப் போனது. இந்தியா 97/5.

மிக மிக மோசமான நிலை. உள்ளே வந்தவர் தோனி. அவருக்கு முன் பதானைக் கூட அனுப்பியிருக்கலாம் என்று நினைத்தேன். தோனி வந்ததுமே ஆட்டக்காரர்கள் மீதுள்ள அழுத்தத்தைப் போக்கும்வண்ணம் சில பவுண்டரிகளை அடித்தார். அதனால் லக்ஷ்மணுக்கு சற்றே மூச்சுவிட முடிந்தது. தோனி முரளிதரனை மிக நன்றாக விளையாடினார். ஆறாவது விக்கெட்டுக்கு இருவருமாக ஜோடி சேர்ந்து மிக அற்புதமான 86 ரன்களைப் பெற்றனர். அதில் தோனியின் பங்கு 49. தன் இரண்டாவது அரை சதத்தைப் பெறுவதற்குமுன் முரளியின் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். ஆனால் இந்தப் பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்வது போல எனக்குத் தோன்றியது. இந்தியா 183/6. லக்ஷ்மண் இதற்கிடையே தன் அரை சதத்தைப் பெற்று 53-ல் நாட் அவுட்டாக இருந்தார்.

இப்பொழுதும்கூட இலங்கை சில விக்கெட்டுகளை வேகமாகப் பெற்று இந்தியாவைத் திணற அடித்திருக்கலாம். ஆனால் உள்ளே வந்த பதான் மிக நன்றாக விளையாடினார். முரளியை லாங் ஆஃபுக்கு அடித்து தன் எண்ணிக்கையைத் தொடங்கியவர், அடுத்த பந்திலேயே ஸ்லிப் வழியாக மற்றுமொரு நான்கைப் பெற்றார். பின் படிப்படியாக, வேகமாக அவர் ரன்களைப் பெறத்தொடங்கியதும் அட்டபட்டு தடுப்பு வியூகத்தைத் தளர்த்தவேண்டியதாயிற்று. இதற்கிடையில் முரளியும் ஆடுகளத்தைவிட்டு வெளியே செல்லவேண்டி வந்தது. இது இந்திய வீரர்களுக்கு மிகவும் வசதியாகப் போயிற்று.

பன்ண்டாராவின் பந்தில் லக்ஷ்மன் மட்டை, கால் காப்பு என்று சில்லி பாயிண்டில் கேட்ச் பிடிக்கப்பட்டார். ஆனால் நடுவர் நதீம் கவுரி இதைச் சரியாகக் கவனிக்காததால் அவுட் தரவில்லை. கடைசிவரையில் இருவரும் ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர். லக்ஷ்மண் 71* (194 பந்துகளில்). பதான் 39* (64 பந்துகளில்). பதான் தன் 27 ரன்களை வெறும் 26 பந்துகளில் பெற்றார். அதன்பின்னர்தான் சற்றே சுதாரித்து ரன்கள் பெறுவதைவிட நின்றாடுவது முக்கியம் என்று தீர்மானித்தார்.

இன்று 78 ஓவர்கள்தான் போடமுடிந்தது. கடைசி பத்து ஓவர்கள் வீசும்போது அரங்கில் விளக்குகள் எரிந்தன. அப்படியும் சிவப்புப் பந்தை வைத்துக்கொண்டு விளையாட முடியாததால் நடுவர்கள் வெளிச்சம் போதவில்லை என்று அறிவிக்க, லக்ஷ்மண், பதான் அதனை ஏற்றுக்கொண்டு வெளியே வந்தனர்.

ஆக 78 ஓவர்களில் இந்தியா 247/6 என்ற நிலையில் உள்ளது. 97/5 என்ற இடத்திலிருந்து 150 ரன்களைப் பெற்றுள்ளனர், ஒரே விக்கெட்டை அதிகப்படியாக இழந்து. இந்த ஆடுகளத்தில் வரும் நாள்களில் ஸ்பின் அதிகமாக எடுக்கும். இந்தியா 320-350 எடுத்தால் மிக நல்ல நிலையில் இருக்கும்.

Friday, December 16, 2005

திராவிட் உடல்நலக் குறைவு!

தில்லி டெஸ்டில் சேவாகால் விளையாடமுடியாதது போல நாளை தொடங்க இருக்கும் அஹமதாபாத் டெஸ்டில் திராவிட் விளையாடமாட்டார் என்று தோன்றுகிறது. வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமமையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். எனவே நாளைய டெஸ்டில் சேவாக் அணித்தலைவராக இருப்பார். மொஹம்மத் காயிஃப் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கிரிக்கின்ஃபோ செய்தி கூறுகிறது.

கங்குலி மேளா!

கங்குலி விவகாரம் கேலிக்குரிய விஷயமாகி வருகிறது.

மேற்கு வங்கத்தினருக்கு இது ஒரு தன்மான விஷயமாகிவிட்டதோ என்று தோன்றுகிறது. விளையாட்டு போட்டிகளை வெறும் விளையாட்டு போட்டிகளாக மட்டுமே காண்கின்ற மனப்பக்குவம் இல்லாதவர்கள் அவர்கள். நான் சிறிது காலமே கொல்கொத்தாவில் பணியாற்றியிருந்தாலும் மோஹன் பகானுக்கும், மொஹம்மதன் ஸ்போர்ட்டிங்குக்கும் அல்லது முந்தைய கால்பந்தாட்ட அணிகளில் ஒன்றுக்கும் ஈஸ்ட் பெங்கால் கால்பந்தாட்ட அணிக்கும் நடக்கும் போட்டி தினங்களில் கொல்கொத்தா நகரமே போர்க்கோலம் கொண்டு காணப்படுவதைக் கண்டிருக்கிறேன். அதில் யார் வெற்றி பெற்றாலும் தோற்றவர் அணி கலவரத்தில் ஈடுபட்டு முக்கிய சாலைகளில் போக்குவரத்தே ஸ்தம்பித்து போய்விடும். போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய காவல்துறையினரும் இப்போட்டிகளில் உணர்ச்சிபூர்வமாக பங்குகொண்டிருப்பவர்களாகவே இருந்ததால் அவர்களும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வேடிக்கைப் பார்ப்பார்கள்.

கொல்கொத்தா இளவரசர் என்றும் தாதா என்றும் செல்லப்பெயர் வைத்து அழைக்கப்பட்டுவரும் கஙகுலி விஷயத்தில் மேற்கு வங்கத்தினரின் உணர்ச்சிபூர்வமான ஈடுபாடு ஒரு அதிசயமே இல்லை. ஆனால் இதுவரை அது சாதாரண அடிமட்ட கிரிக்கெட் விசிறிகளிடம் மட்டுமே இருந்துவந்த விஷயம். இப்போது மத்திய அரசில் முக்கிய பொறுப்பு வகிக்கும் பிரணாப் முகர்ஜி, பாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி போன்றவர்கள் தலையிட்டு பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படுகிற அளவுக்கு போனது பைத்தியக்காரத்தனமாகவே தோன்றுகிறது.

மேற்கு வங்க முதல்வர் புத்தாதேப் ஒரு படி மேலே போய் கங்குலியின் வெளியேற்றம் 'நமக்கெல்லாம் ஒரு அவமானம்'என்பதுபோல் பேசுகிறார்!

இதில் வேடிக்கையென்னவென்றால் கங்குலியும் BCCI முன்னாள் தலைவர் டால்மியாவும் இதைப்பற்றி கலந்து ஆலோசித்தப்பிறகு டால்மியா BCCI தலைவர் பவாரை அழைத்து இந்த விஷயத்தில் நீங்கள் ஏன் தலையிடக்கூடாது என்கிறாராம்!

ரசிகர்களையும் அரசியல்வாதிகளையும் விட்டுவிடுவோம். அவர்கள் எதிலுமே உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். ஆனால் கங்குலி! அவர் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் என்பதுதான் தெரியவில்லை. இத்தனைக்கும் பிறகு அவர் அணியில் சேர்க்கப்படுகிறார் என்றே வைத்துக்கொள்வோம். அவருக்கு அணியிலுள்ள மற்ற வீரர்களின் முழுமையான வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கிறாரா? அல்லது இனியும் இரண்டு, மூன்று வருடங்களுக்கு இந்திய அணியில் தொடர்ந்து ஆடவேண்டும் என்றுதான் நினைக்கிறாரா? இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக மேற்கு வங்காள அணியின் தலைவர் பதவியிலிருந்து தானாக முன்வந்து இறங்கியவர் ஏன் அதே கொள்கையை யுவராஜ் மற்றும் கேய்ஃபுக்காகவும் கடைப்பிடிக்கக் கூடாது?

கங்குலிக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நீங்கள் சாதித்ததை ரசிகர்கள் மதித்து உங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் நடந்ததை ஏற்றுக்கொண்டு மதிப்புடன் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிடுங்கள்.

அதுதான் உங்களுக்கு நல்லது. அதை விட்டு விட்டு இந்த விஷயத்தை இனியும் பெரிதுபடுத்தி கேலிக்கு ஆளாகாதீர்கள்.

நாடாளுமன்றத்தில் கங்குலி பற்றிய விவாதம்

இந்தியாவில் எத்தனையோ கடுமையான பிரச்னைகள் இருக்கையில் சோம்நாத் சாட்டர்ஜி - அவைத்தலைவர் - கங்குலி இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஏன் நீக்கப்பட்டார் என்று நாடாளுமன்றத்தில் விவாதிப்போம் என்று சொல்லியுள்ளார். அபத்தம்!

மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜி, பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் சத்தம் போடுவதில் பொருள் இருக்கிறது. இப்பொழுது வங்காளிகள் அனைவரும் கங்குலியின் பக்கம். மேற்கு வங்கத்தில் அடுத்து மாநிலத் தேர்தல் வரப்போகிறது. ஆனால் இதுதான் சாக்கு என்று இதுபோன்ற எதற்கும் உதவாத விஷயங்களை மக்களவைத் தலைவர் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப் போவதாகச் சொல்வது பைத்தியக்காரத்தனம்.

மக்களவையில் ஷரத் பவார் விவசாயத்துறை அமைச்சராக உட்கார்ந்திருப்பார். ஆனால் அவரிடம் பிசிசிஐ பற்றிய கேள்விகள் எழுப்பப்படலாம். அதற்கு அவரும், எனக்குத் தெரியாது, விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேளுங்கள் என்று கூடச் சொல்லலாம்! ஏற்கெனவே 'கேள்விக்குப் பணம் ஊழல்', 'எதற்கெடுத்தாலும் வெளிநடப்பு' என்று மானம் போயிருக்கும் அவைக்கு இப்பொழுது கங்குலி பற்றிய விவாதம் மணிமகுடமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

Thursday, December 15, 2005

கங்குலியின் வெளியேற்றம்.

இன்றைய ஆங்கிலப் பத்திரிகைகளின் விளையாட்டு பக்கங்களில் காணப்பட்ட சூடான செய்தி இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து கங்குலியின் வெளியேற்றம்தான்.

அவருடைய வெளியேற்றத்தை விட அவர் வெளியேற்றப்பட்ட விதம்தான் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் கருத்தும் அதுதான். கங்குலி இதற்கு முன்னாலிருந்த பயிற்சியாளரின் ஒத்துழைப்புடன் இந்திய கிரிக்கெட் அணியின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்தியதில் பெரும் பங்கு ஆற்றியவர் என்பதை அவர்களுடைய எதிரிகளாலும் (அவர் அளவுக்கதிகமான எதிரிகளை உருவாக்கியுள்ளார் என்பதை மறுக்க முடியாது. அதில் முக்கியமானவர் க்ரெக் சாப்பல்) மறுக்க முடியாது.

இன்றைய சூழ்நிலையில் அணியில் தொடர்ந்து இடம் பெறுவது சந்தேகம் என்று அவருக்கே இன்னும் தெரியவில்லை என்பதுதான் பரிதாபம். அவர் கடந்த முறை அணியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்குப் பிறகு ரஞ்சி மற்றும் துலீப் கோப்பைகளில் சிரத்தையெடுத்து விளையாட ஆரம்பித்ததலிருந்து அவருக்கு மீண்டும் நாம் அணியில் சேர்க்கப் படுவோம் என்று நினைப்பு இருந்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.

பாவம் கங்குலி. ஓராண்டுகாலம் முன்பு வரை மிகவும் வலிமை வாய்ந்தவராக கருதப்பட்டவருக்கு இப்படியொரு நிலைமை.

இதில் என்ன பரிதாபம் என்றால் கடந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு இண்ணிங்சிலும் ஓரளவுக்கு நிதானித்து ஆடி அணியை சரிவிலிருந்து காப்பாற்றியவர் அவர் என்று அணியின் தலைவரே ஒத்துக்கொண்டதுதான். டிராவிட் ஒரு பக்கா ஜெண்டில்மேன் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அவரும் சாப்பல்-பாவர் பவர் விளையாட்டில் ஒரு கைப்பாவையாகிவிட்டாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

சரி, இன்றைய சூழலில் கங்குலிக்கு அணியில் நிரந்தர இடம் அளிக்க வாய்ப்பில்லை என்றே வைத்துக் கொள்வோம். அதை தேர்வுக்குழுவினரோ அல்லது BCCI தலைவரோ அவரிடம் நேரடியாக தொடர்புக் கொண்டு நிலைமையை விளக்கியிருக்கலாமே. அத்துடன் அகமதாபாத்தில் அவரை விளையாட அனுமதித்து அவருக்கு ஒரு முறையான வழியனுப்பு விழாவை நடத்தி கொடுத்திருந்தால் அவருடைய வங்காள ரசிகர்களுக்கும் அது நிச்சயம் திருப்தியளித்திருக்கும்.

அப்படியல்லாமல், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இத்தனைக் குரூரமாக அவரை அணியிலிருந்து வெளியேற்றியதற்குக் அவருடைய திறமையின்மை மட்டும் காரணம் அல்லவோ என்றுதான் தோன்றுகிறது.

கங்குலி, அவருடைய காலத்தில் அன்றைய BCCI தலைவரின் பாதுகாப்பில் இருந்துக்கொண்டு விளையாடிய விளையாட்டுகளையே இன்று யாரோ அவருக்கெதிராக விளையாடுகிறார்களோ என்றுதான் தோன்றுகிறது.

அது க்ரெக் சாப்பலாக இருந்தால் வெட்கக்கேடு. அவரை சமீபத்தில் எதிர்த்துப் பேசிய வீரர்களுக்கும் இதுபோன்ற நிலை ஏற்படுமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சவுரவ் கங்குலியும் பாகிஸ்தான் பயணமும்

இப்பொழுதைக்கு இந்திய டெஸ்ட் அணியில் நிச்சயமாக இடம் இருக்கவேண்டும் என்று பார்த்தால் அது மூவர்தான் - திராவிட், சேவாக், டெண்டுல்கர். இதைத்தவிர ஒரு தொடக்க ஆட்டக்காரர், இரண்டு மிடில் ஆர்டர் மட்டையாளர்கள் தேவை. தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு வாசிம் ஜாஃபர், கவுதம் கம்பீர் இன்னமும் சிலர் போட்டியிடலாம். மிடில் ஆர்டர் இடத்துக்கு லக்ஷ்மண், யுவராஜ் சிங், கங்குலி, மொஹம்மத் காயிஃப் நால்வரும்தான் இப்பொழுதைய முதல் லிஸ்டில் இருப்பார்கள். அடுத்து வேணுகோபால ராவ், சுரேஷ் ரெய்னா, அம்பாடி ராயுடு என்று ஆரம்பித்து பல இளம் நட்சத்திரங்கள் இருக்கிறார்கள்.

இதில் எந்தவொரு டெஸ்டாக இருந்தாலும் அதில் லக்ஷ்மண், யுவராஜ், கங்குலி, காயிஃப் என்ற நால்வரில் எந்த இருவரை வைத்துக்கொள்வது என்பது திராவிட்/சாப்பலின் தீர்ப்பாக இருக்கவேண்டும்.

உள்ளூர் டெஸ்ட் போட்டிகளுக்கு 15 பேர் அடங்கிய குழுவைத் தீர்மானிக்க வேண்டியதில்லை. 13 பேர்கள் போதும். கடைசி 11 என்று தீர்மானித்திருப்பவர்கள், அதிகப்படியாக ஒரு பேட்ஸ்மன், ஒரு பவுலர். முதல் 11-ல் பிரச்னை என்றால் இந்த அதிகப்படியிலிருந்து வேண்டிய ஆளை எடுத்துக்கொள்ளலாம். அப்படிப்பட்ட 12, 13 யாராக இருக்கலாம். இப்பொழுதைய நிலையில் முரளி கார்த்திக் + மொஹம்மத் காயிஃப். ஏனெனில் ஓடியாடி தண்ணீர் கொண்டுகொடுக்க கங்குலி விரும்ப மாட்டார்.

ஆனால் பாகிஸ்தானுக்குச் செல்லும் இந்தியக் குழுவில் கங்குலி இடம்பெறுவாரா? இந்தியா இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களை அழைத்துச் செல்லவேண்டாம். ஏனெனில் இது அடுத்த ஊர்தான். இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் என்றால் மொத்தமாக மூன்று தொடக்க ஆட்டக்காரர்களை அழைத்துச் செல்லலாம். ஆனால் பாகிஸ்தானுக்கு இரண்டு தொடக்க ஆட்டக்காரர்கள் போதும். சேவாகுடன் யாரை அழைத்துச் செல்வது? ஜாஃபர் அல்லது கம்பீர். அடுத்து ஒரு விக்கெட் கீப்பர் போதும். ஏழு பந்து வீச்சாளர்களை அழைத்துச் செல்லவேண்டும். நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள். மூன்று ஸ்பின்னர்கள். வேகப்பந்து = பதான், ஜாகீர் கான், அகர்கர், பாலாஜி அல்லது ஆர்.பி.சிங். (பாலாஜிக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை). சுழல்பந்து = கும்ப்ளே, ஹர்பஜன், கார்த்திக். ஆக மொத்தம் 10.

மீதி ஐந்தும் பேட்ஸ்மன். திராவிட், டெண்டுல்கர் - இரண்டு. லக்ஷ்மண், காயிஃப், யுவராஜ், கங்குலி என்ற நால்வரில் மூன்று பேரைத்தான் அழைத்துச் செல்ல முடியும். அப்படியானால் கங்குலி அஹமதாபாத் டெஸ்டில் நடப்பதை வைத்து இதை முடிவுசெய்யமுடியுமா? அல்லது நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பதில் மூவரை எடுத்துக்கொண்டு ஒரு அதிகப்படி மட்டையாளரை அழைத்துக்கொண்டு செல்லலாம். அது மற்றுமொரு தொடக்க ஆட்டக்காரரையா அல்லது கங்குலியையா? கங்குலியைவிட மற்றுமொரு தொடக்க ஆட்டக்காரரை அழைத்துச் செல்வதே சிறந்தது.

அப்படியானால் அடுத்த சில மாதங்களுக்கு கங்குலி அணியில் இடம்பெறுவது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. யுவராஜ், லக்ஷ்மண் இவர்களுடைய ஃபார்ம் மோசமானால், கங்குலி அப்பொழுது மிக நன்றாக விளையாடிக்கொண்டிருந்தால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

பாகிஸ்தான் இங்கிலாந்தை வென்றது

மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 165 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 2-1 என்ற முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து டாஸில் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஆனால் பாகிஸ்தான் ஆரம்பம் முதலே தடதடவென அடித்து ரன்கள் சேகரித்தது. கம்ரான் அக்மல் இந்தத் தொடரில் தன் இரண்டாவது சதத்தைப் பெற்றார். ஐம்பது ஓவர்களில் பாகிஸ்தான் 353/6 என்ற ஸ்கோரைத் தொட்டது. ஆனால் இங்கிலாந்தால் 42 ஓவர்களில் 188 ரன்களை மட்டுமே எடுக்கமுடிந்தது.

கங்குலி செய்ய வேண்டியது..

கங்குலியை சில நாட்கள் முன்பு திட்டிக் கொண்டிருந்தவர்கள் கூட, தற்போது அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதை கண்டித்திருக்கிறார்கள். இந்தியாவில் சாதனையாளர்களை அரசியலுக்கு அப்பாற்பட்டு மதிக்கும் மனோபாவம் யாரிடமும் காணப்படுவதில்லை. கவாஸ்கரை தவிர பல முக்கிய ஆட்டக்காரர்களை தேர்வாளர்கள் அவமானப்படுத்தியே வெளியேற்றியிருக்கிறார்கள்.

கங்குலியின் கதை முடிந்து விட்டது என்று ஒரு சாராரும், உள்ளூர் போட்டிகளில் விளையாடி முயற்சியைத் தொடருவேன் என கங்குலியும் கூறியுள்ளார்கள். எனவே இத் தருணத்தில் கங்குலி என்ன செய்யலாம் என்பதை பற்றி சற்று அலசலாம்.

பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை கங்குலி மற்ந்து விடலாம். அதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. கங்குலி மீண்டும் பெங்கால் அணிக்கான தலைமைப் பதவியை ஒப்புக் கொள்ள வேண்டும். பெங்கால் அணியை சிறப்பாக வழி நடத்த வேண்டும்.

அடுத்த கவுண்டி சீசனில் நல்ல கவுண்டியாய் சேர்ந்து உருப்படியாக விளையாட முயற்சிக்க வேண்டும். கவுண்டியில் கிடைக்கும் அனுபவம் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள உதவும். அளவு குறைந்த பந்துகளை எதிர் கொள்ளவும் கற்றுக் கொள்ள வேண்டும்.

பாகிஸ்தானில் அனைவருமா பட்டையை கிளப்பப் போகிறார்கள்? தற்போது அக்தர், நவீத், சாமி ஆகியார் வீசும் பந்து வீச்சைப் பார்த்தால் யுவராஜ், தோனி ஆகியோர் எவ்வாறு சமாளிக்கப் போகிறார்கள் என்று பயமாக இருக்கிறது? யாராவது ஒருவர் சொதப்பும் பட்சத்தில், மீண்டும் கங்குலிக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

இல்லாவிடில் அடுத்தவருட பிசிசிஐ தேர்தல் மீண்டும் வரத்தான் போகிறது. அதற்குள் டால்மியா ஏதாவது மேஜிக் செய்ய மாட்டாரா என்ன?

மனம் தளர வேண்டாம் தாதா.. மீண்டு (ம்) வர வாழ்த்துக்கள்.

Wednesday, December 14, 2005

அணி அறிவிப்பு- மீண்டும் சர்ச்சை

மூன்றாவது டெஸ்டிற்கான அணியிலிருந்து கங்குலியை நீக்கி விட்டார்கள். இந்திய அணியின் அசைக்க முடியாத சக்தியாக சில மாதங்கள் முன்பு கூட கருதப்பட்ட கங்குலி தற்போது இளரத்தங்களுக்கு வழி விடும் விதமாக நீக்கப்பட்டிருப்பது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. கங்குலி 40 மற்றும் 39 ரன்கள் இரு இன்னிங்ஸில் எடுத்தார் என்றாலும், பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து ஆடிய கங்குலியின் பழைய ஆட்டங்களுடன் ஒப்பிடுகையில் , டில்லியில் ஆடிய ஆட்டம் மிகவும் சுமார் ரகம். 75 ரன்களுக்கு மேலாக குவிக்காத பட்சத்தில் தன்னை நீக்கி விடுவார்கள் என்பது கங்குலிக்கே தெரிந்திருக்கும். கல்கத்தாவில் மூன்றாவது டெஸ்ட் நடந்திருந்தால் கங்குலியை நீக்கி இருக்க மாட்டார்கள். அகமதாபாத் என்றவுடன் தைரியமாக நீக்கி விட்டார்கள்.

யுவராஜ் 77 ரன்கள் எடுத்தாலும் கூட ஸ்பின்னர்களை தைரியமாக இன்னும் எதிர்கொள்ளவில்லை. ஆனாலும் இவருக்கு மீண்டும் வாய்ப்பு தருவதை யாரும் குறை சொல்ல முடியாது.மீண்டும் வாஸிம் ஜாபரை அணியில் சேர்த்திருப்பதுதான் எரிச்சல் தரும் சங்கதி. பவார் வந்தவுடன் மேற்கு மண்டலத்திலிருந்து கூடுதலாக ஒரு ஆட்டக்காரர் அணியில் இடம் பெறுகிறார்.

வாஸிம் ஜாபரை எதற்கு எடுத்தார்கள் என்பதை அலசிப் பார்ப்போம். கவுதம் காம்பீர் மூன்று இன்னிங்ஸில் ரன்கள் குவிக்கவில்லை. சற்று நாட்கள் முன்புதான் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டிகளிலும், அதற்கு முந்தைய டெஸ்ட் போட்டிகளிலும் குறிப்பிடத்தக்க அளவு ரன்களைக் குவித்தார் காம்பீர். தற்போது அவரை பயமுறுத்தும் விதமாக இன்னொரு துவக்க ஆட்டக்காரரை சேர்த்திருக்கிறார்கள்.

ஜாபர் ஏற்கனவே 7 டெஸ்ட்களில் விளையாடி மூன்று அரை சதங்கள் பெற்று, 20.7 என்ற சராசரியில் ரன்கள் குவித்த ஆட்டக்காரர். 2002 ல் அணியை விட்டு நீக்கிய பின் மீண்டும் மறுவாழ்வு தந்துள்ளார்கள். இவரை அணியில் மீண்டும் சேர்த்தது ரஞ்சியில் அவருடைய ஆட்டத்தை வைத்துத்தான். மற்றபடி சமீபகாலமாக இந்திய A அணிகளிலோ, அல்லது போர்ட் பிரஸிடண்ட் அணிகளிலோ அவர் ஆடவேயில்லை. ஆனாலும் திடீரென, ஒரு அதி ஆர்வமுள்ள கிரிக்கெட் விசிறியும் எதிர்பாராத வண்ணம், ஜாபர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜாபருக்கு அகமதாபாத்தில் வாய்ப்பு தரப்படுமா? இல்லாத பட்சத்தில் பாகிஸ்தான் செல்லும் அணிக்கு அவருடைய பெயரை பரிசீலனை செய்வார்களா?ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆகாச் சோப்ரா நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார். சில சொற்ப ஸ்கோர்களுக்கு பின்னால் அவரையும் ஒதுக்கி விட்டார்கள்.

எதிர்காலத்தை குறித்த பார்வை இருக்க வேண்டும் என்று கூறும் பட்சத்தில், ஒரு புதிய துவக்க ஆட்டக்காரரை முயற்சிக்காமல் மீண்டும் ஏன் ஜாபரை எடுத்தார்கள் என்று தெரியவில்லை.

ஜாகிர்கானிற்காக பலர் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் ஜாகிர் ஒதுக்கப்பட்டிருப்பது அவரது ஒழுங்கின்மைக்காக என்றே படுகிறது. பயிற்சி முறைகளை சரியாக பின்பற்றாமல் கிரிக்கெட் ஆடலாமென்பது சாப்பல் சாம்ராஜ்யத்தில் சரிப்பட்டு வராது. பாலாஜிக்கு ஏதோ அடி. ரஞ்சி மேட்சில் கூட ஆடவில்லை.

டால்மியா காலத்தில் டீப்தாஸ் குப்தா, லஸ்மி ரட்டன் சுக்லா என்று பல கிழக்கு பிராந்திய ஆட்டக்காரர்கள் போதிய திறமையின்றியும் அணியில் இடம் பிடித்தார்கள். இம்முறை மேற்கு பிராந்தியத்திலிருந்து பல ஆட்டக்காரர்கள் சேர்க்கப்படலாம்.

தமிழ்நாட்டு ஆட்டக்காரர்களுக்கு விமோசனமே இல்லை. பதானி, வித்யூத் சிவா போன்றவர்கள் நிரந்தரமாக போர்ட் பிரஸிடெண்ட் அல்லது ரெஸ்ட் ஆப் இந்தியாவிற்கு மட்டும் ஆடி பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

Tuesday, December 13, 2005

இந்தியா வெற்றி

தில்லி டெஸ்டில் இந்தியா இலங்கையை 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என்ற முன்னணியில் உள்ளது.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஜெயவர்தனா, வாஸ் இருவரும் விக்கெட் இழக்காமல் ஆடிக்கொண்டிருந்தனர். நாற்பது ரன்களை உணவு இடைவேளைக்குப் பின் சேர்த்தனர். ஆனால் ஒரு விக்கெட் விழுந்தாலும் அனைவரும் ஆல் அவுட் ஆகிவிடுவார்கள் என்ற நிலைதான். முதலில் அவுட் ஆனது ஜெயவர்தனா. பார்வர்ட் ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பின் அடுத்த இரண்டு ஓவர்களில் ஆட்டம் முடிந்துவிட்டது. வாஸ் கும்ப்ளே பந்தை மிட்விக்கெட் திசையில் உள்ள ஹர்பஜன் சிங்கிடம் கேட்ச் கொடுத்தார். முரளிதரன் ஹர்பஜன் பந்தை வானளாவ அடிக்க, தோனி ஓடிச்சென்று பிடித்தார்.

ஆட்டத்தில் 157 ரன்களைக் கொடுத்து 10 விக்கெட்டுகளைப் பெற்ற அனில் கும்ப்ளே ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

அடுத்த (கடைசி) டெஸ்ட் அஹமதாபாதில்.

இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி!!

அப்பாடா! ஒரு வழியாய் ஜெயித்தாகிவிட்டது!

இன்று காலையில் ஜெயவர்த்தனேயும் தில்ஷனும் ஆடிக்கொண்டிருக்கும்போது எங்கே கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்று பயந்தேன். நல்ல வேளை மீண்டும் கும்ப்ளே வந்து காப்பாற்றினார். ஹர்பஜனும் பரவாயில்லை. முதல் இன்னிங்க்சில் ஏமாற்றினாலும் இரண்டாவதில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி வயிற்றில் பால் வார்த்தார்.

சரி அடுத்த டெஸ்ட்டுக்கு அணியில் ஏதாவது மாற்றம் வேண்டுமா?

நிச்சயம் வேண்டும். அகர்க்கார். அவர் இந்திய அணியில் அதுவும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அளவுக்கு தகுதி பெற்றவர் இல்லை. ஒருநாள் போட்டிகளுக்குக்கூட நெஹ்ரா, ஜாகீர்கான் மற்றும் பாலாஜி போன்றவர்கள் இருக்க இவரை ஏன் மீண்டும், மீண்டும் அணியில் சேர்க்கிறார்கள் என்றுதான் விளங்கமாட்டேன் என்கிறது.

இப்போது அவர் பேட்டிங்கிலும் பிரகாசிப்பதில்லை. Tail Endersஐ விட மோசமாக ஆடுகிறார். இருந்தும் எப்படி? கடந்த முறை இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட போதும் அவருக்காக 'நாங்கள் மேனேஜ் செய்துக்கொள்கிறோம்.'என்று சாப்பல் வாதாடியதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. திறமையில்லாத ஒருவரை அணியில் சேர்த்துக்கொண்டு இவர் என்ன மேனேஜ் செய்வது? பாக்கிஸ்தானுக்கு எதிராக பிரகாசித்த பாலாஜியை ஏன் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள்?

இதே கேள்வியை ஸ்ரீகாந்தும், அமர்நாத்தும் கூட டி.டி.யில் Fourth Umpire விவாதத்தின் போது கேட்டார்கள்.

கடந்த காலங்களில் செய்தது போன்று. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற அணியையே மூன்றாவதுக்கும் Retain செய்யாமல் பாலாஜி, ஜாகிர்கான் இருவரில் யாராவது ஒருவரை சேர்க்கவேண்டும். அதே போன்று ஷேவாக் திரும்பி வரும்போது இரண்டாவது டெஸ்ட்டில் இரண்டு இண்ணிங்க்ஸிலும் சரியாக விளையாடாத காம்பீரை நீக்க வேண்டும்.

செய்வார்களா?

இலங்கையின் விடாமுயற்சி

இன்று காலை வேகமாக சுருண்டுவிடும் இலங்கையின் இன்னிங்ஸ் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றம். ஆனால் அதே சமயம் மொஹாலியில் பாகிஸ்தான் டிரா செய்தது போல நடக்காமல் இரண்டு விக்கெட்டுகளையாவது காலையில் கைப்பற்றியது இந்தியாவின் சாமர்த்தியம்.

அகர்கர் முபாரக்கை எல்.பி.டபிள்யூவும், கும்ப்ளே தில்ஷனை பவுல்டும் செய்தனர். இப்பொழுது இலங்கை உணவு இடைவேளையின்போது 203/7 என்ற ஸ்கோரில் உள்ளது. ஜெயவர்தனா ஒருவர்தான் அங்கீகரிக்கப்பட்ட மட்டை விற்பன்னர். வாஸ், முரளிதரன், பெர்னாண்டோ ஆகியோர் மட்டுமே பாக்கி. இந்தியா எவ்வளவு சீக்கிரம் ஆட்டத்தை முடிக்கும் என்று பார்ப்போம்.

கிரிக்கெட் நீரோக்கள்-'அப்துல் ஜப்பார்'

‘வித்தகக் கவிஞர்’ விஜய்யின் ‘உடைந்த நிலாக்கள்’ கவிதைத் தொகுதியின் ஒலிப்பதிவில் நீரோ மன்னன் பாத்திரம் எனக்கு. எனக்கு அப்போது ஒன்று தெரிய வந்தது. ரோம் நகர் தானாகப் பற்றி யெரியவில்லை. பற்ற வைத்ததே நீரோதான் என்பது!. தீயைப் பாட விரும்பிய அவன் அதை நேரிடையாக உணர வேண்டும் எனகிற வக்கிர மனம் படைத்திருந்தான். விளைவு ரோம் பற்றியெரிந்தது. அவன் பிடில் வாசித்தான்

சென்னை கிரிக்கெட்டை மழை பாதித்து ஏமாற்றவில்லை. மழை பாதிக்கும் என்று தெரிந்திருந்தும் ஏமாற்றினார்கள் அதுதான் உண்மை. மழை வருமா வராதா என்பது தெரியாத நிலையில் முன்கூட்டியே நுழைவுச்சீட்டை விற்றதை வேண்டுமானால் அறியாமை என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் மழை வரும் என்று தெரிந்திருந்தும் விற்றது கொடுமையிலும் கொடுமை. அது மட்டுமல்ல. காப்பீடு என்கிற வகையிலும் சுளையாக ஒரு தொகையைப் பெற்றிருக்கிறார்கள். காப்பீடை எப்படி ஏற்றார்கள் பிறகு எப்படி இழப்பீடு தர சம்மதித்தார்கள் என்பது ஒரு விளங்காத - விளக்கமளிக்கப்படாத புதிர்.

‘வாலிபனுக்கு வாழ்க்கைப்பட்டு வாழ்விழந்த பெண்ணை கிழவனுக்குக் கட்டிக்கொடுத்த கதையாக’ ஒருநாள் போட்டி ஆட்டமே ஒன்றுமில்லாமல் போய் விட்ட நிலையில் அடுத்த சின்னாட்களிலேயே டெஸ்ட் போட்டி ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்தது என்ன நியாயம்? வருடக்கணக்கில் சென்னையை காயப் போட்ட காலம் உண்டு. அப்படி இருக்க, இந்த அடைமழை காலத்தில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளை ஏற்பாடு செய்து அடம் பிடித்து சென்னையின் தலையில் அடித்து ஏற்பித்தது ஏன்?

இரண்டாவது ஆட்டத்துக்கு காப்பீடு வழங்க எந்த நிறுவனமும் முன் வராத நிலையில் முதல் ஆட்டத்திற்கே ‘நடந்தது தவறு இந்தா பிடியுங்கள் நீங்கள் செலுத்திய் காப்பீடு கட்டணம் இழப்பீடு தரமுடியாது’ என்று அவர்கள் மறுத்திருக்க வேண்டும். மறுத்திருந்தால், அதிலுள்ள நியாயத்தை எதிர்த்து எதுவும் செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. ‘சலம்பாமல்’ இழப்பீடை வழங்கி விட்டார்கள். அதுபோல் ரசிகர்கள் செலுத்திய நுழைவுக் கட்டணத்தையும் இழப்பீடாகக் கிடைத்த தொகையை தாங்களுக்கு ஏற்பட்ட செலவுகளுக்கும் இழப்புகளுக்கும் காப்பாக வைத்துக் கொண்டு திருப்பி கொடுத்திருக்க வேண்டும்.

அதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பது உண்மை. எனவே தார்மீக ரீதியாக இந்தத் தொகையை அப்படியே டாக்டர் ராமதாஸ் சொல்வது போல் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கி விடுவதுதான் நியாயமாக இருக்கும். அது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும் பெருமை சேர்க்கும். ரசிகர்களுக்கும் ஏதோ ஒரு நல்ல காரியத்துக்கு உதவினோம் என்கிற ஆறுதலையும் தரும். செய்வார்களா? நல்ல மனிதர்கள் செய்வார்கள். நீரோக்கள் செய்ய மாட்டார்கள்.

தமிழகமே தண்ணீரில் தத்தளீத்தபோது அந்த அவலத்தின் மத்தியிலும் ‘மூன்று நாட்கள் ஆட்டமில்லையே’ என்று புலம்பி தீர்த்து நான்காம் நாள் மதியத்துக்கு மேல் விடாப்பிடியாக ஆட்டத்தைத் துவங்கி, இந்த ‘நீரோக்கள்’ எதை சாதித்துக் கிழித்தார்கள்? அதை விட ஆட்டத்தையே ரத்து செய்திருந்தால் எவ்வளவு கௌரவமாக இருந்திருக்கும்?

இலங்கைக்கெதிரான மகத்தான வெற்றியின் மதமதப்பில், மகிழ்ச்சியில் மூழ்கித் திளைத்திருந்த நிலையிலேயே தென்னாப்பிரிக்காவிடம் முதலில் அடிவாங்கி, பிறகு எழுந்து அதன் பிறகு விழுந்து, மீண்டும் நிமிர்ந்து என்கிற அளவில் தொடர் சமநிலையில் முடிந்தது. இரண்டு ஆட்டங்களில் அணிகளின் திறமையை விட ஆடுகளத்தின் நிலை காரணமாகவும் பின்னேரப் பனியின் ஈரப்பதம் காரணமாகவும் ‘டாஸ்’தான் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்தது. இதில் ஒன்று இந்தியாவுக்கெதிராகவும் மற்றது அனுகூலமாகவும் அமைந்தது.

சச்சின் எடுத்த எடுப்பில் எழுந்தார்.பிறகு விழுந்தார். விழுந்து கிடந்த யுவராஜ் சிங் விஸ்வரூபம் எடுத்தார். பரிட்சார்த்தம் அளவோடு நிற்காமல் எல்லையைக் கடந்தது. பலன்? இர்•பான் பதான் ஒன்றில் துவக்க ஆட்டக்காரராக அனுப்பபட்டு பலிகடாவாக்கப்பட்டார். நான்கு பந்துகளைக் கோட்டை விட்டு ஐந்தாவதில் ஒரு நான்கை அடிப்பது அல்லது ஐந்து பந்துகளைத் தவறவிட்டு ஆறாவதில் ஒரு சிக்ஸரை அடிப்பதென்பது ஒருவகை. அது நடைபெறாவிட்டால் அத்தனையும் பூஜ்யம் - கன்னி ஓவர்! அதை விட ஒவ்வொரு பந்திலும் ஒன்றைத் தட்டி விட்டு ஒரு ஓவரில் ஆறு ரன்களைச் சேர்த்து விடுவது என்கிற ஜாவேத் மியான்தாதின் வித்தையை முகமது கை•ப் கனகச்சிதமாகக் கற்று வைத்திருக்கிறார். இதன் மூலம் பந்து வீச்சாளர்களின் சீரான போக்கைச் சிதறடிப்பது களப்பணியாளர்களைக் கால் விரல்களின் நுனியில் நிற்க வைப்பது என்கிற கலையில் இன்று கை•பை விட்டால் ஆளில்லை என்று துணிந்து சொல்லலாம்.

ஆடுகளத்தின் ஆதரவு இருக்குமாயின் எடுத்த எடுப்பிலேயே எதிரிகளின் இடுப்பை ஒடிக்கும் கலை இர்•பான் பதானுக்கு நன்றாகக் கை வந்திருக்கிறது. ஆனால் ரன்களை வாரி வழங்கும் அஜித் அகர்கரை இன்னும் கட்டிக்கொண்டு அழுவதுதான் ஏனென்று புரியவில்லை. பத்தில் சோபித்தார் என்பதற்காக நூறு சந்தர்ப்பம் கொடுப்பது எதில் சேர்த்தி? இருபதில் சோபித்து இருபத்தொன்றில் தோற்றார் என்பதற்காக ஸஹீர் கான், லக்ஷ்மிபதி பாலாஜி ஆகியோரைக் கழற்றி விட்டது என்ன நியாயம்? அகர்கருக்குத் திரும்பத் திரும்ப வழங்கப்படும் சந்தர்ப்பம் இவர்களுக்கு வழங்காதது ஓரவஞ்சனையின் உச்சமல்லவா?

மட்டையாட்சியில் தொடர்ந்து குட்டு வாங்கிய கங்குலியை ‘பந்து வீச்சில் கில்லாடி எனவே பன்முகத்திறமைசாலி(allrounder)’ என்கிற சொத்தைக் காரணத்தைச் சொல்லி பயிற்சியாளர் கிரேக் சேப்பலின் பரிந்துரையை மீறி தேர்வாளர்கள் யஷ்பால் ஷர்மாவும், பிரணாப் ராயும் இன்னொரு தேர்வாளரும் கூட்டு சேர்ந்து கொண்டு தேர்வாளர்கள் கிரன் மோரேயையும் சந்திரசேகரையும் எண்ணிக்கை அடிப்படையில் தோற்கடித்து கங்குலியை உள்ளே கொண்டு வந்தார் பாருங்கள். அதற்கு கைமேல் பலன். வாரியத்தலைமை பீடத்தின் ஆட்சி மாறியதும் முதலில் வெளியே தூக்கி எறியப்பட்டவர்கள் இந்த மூன்று தேர்வாளர்கள்தான். அந்த வாசல் இன்னும் திறந்தேயிருக்கிறது. அது கங்குலிக்காக இருக்கலாம்.

கிரிக்கெட் வாரியத்தின் தலைமைப் பீடத்துக்கான தேர்தல் இழுபறி என்றாகி நீதிமன்றம் தலையிட்டு அதன் பிறகும் இழுத்தடிக்கப்பட்டு முன்னால் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் தேர்தலை நடத்தும் பொறுப்பை உச்ச நீதி மன்றம் ஒப்படைத்தபோதும், அவர் விதித்த சில நடைமுறைகளுக்கு எதிராக சிலர் உச்ச நீதி மன்றத்தை அணுகிய போதும் அதில் ‘நாங்கள் தலையிட விரும்பவில்லை’ என்று உச்ச நீதிமன்றம் திரும்ப ஓங்கி தலையில் அடித்தபோதும் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமென்பது ஓரளவு தெளிவாக விளங்கி விட்டது.

சென்ற தேர்தலில் ‘ஜெகஜ்ஜால கில்லாடி’ ஜெகன்மோகன் டால்மியா வங்காளம் சார்பாகவும் வாக்களித்தார். பிறகு சமம் என்கிற நிலை வந்தபோது தன்னுடைய நிர்ணாயக வாக்கையும் (casting vote) செலுத்தினார். ஆனால் இம்முறை ‘ஒருவர் ஒரு வாக்கு மட்டுமே அளிக்கலாம் தலைவர் தேவைப்பட்டால் மட்டுமே தன்னுடைய நிர்ணாயக வாக்கை அளிக்க முடியும்’ என்று கிருஷ்ணமூர்த்தி வைத்தார் பாருங்கள் ஒரு ஆப்பு. டால்மியாவால் ஆடவும் முடியவில்லை. அசையவும் முடியவில்லை ஏன் மூச்சு விடக்கூட முடியவில்லை. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் சரத்பவார் ‘தொட்டுக்கோ தொடைச்சிக்கோ’ என்கிற அளவில்தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது போக, முப்பதில் இருபது வாக்குகள் பெற்று அவர் பெற்ற வெற்றி டால்மியாவின் எதேச்சதிகரப் போக்கில் எவ்வளவு பேர் கடுப்புடன் இருந்தார்கள் என்பதைத் தெளிவாக்கியது.

சரி ஆட்சி மாற்றம் வந்தாயிற்று. எல்லாம் சரியாய் விடுமென்று நம்புகிறீர்களா? நடக்காது! கங்கு கரையற்று பணம் கரைபுரண்டு ஓடும் ஒரு ஸ்தாபனத்தில் பொறுப்புக்கு வருபவர்கள் கரையில் நின்று கை,கால், முகம் மட்டுமே கழுவிக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. முங்கிக் குளிக்கவே ஆசைப்படுவார்கள் அது தவிர்க்க முடியாது. போனது போக இருப்பது லாபம் என்பதுதான் இனி எந்தக் காலத்திலும் கிரிக்கெட் வாரியத்தின் தலைவிதியாக இருக்கப் போகிறது.

எழுபதுகளில் ஆரம்பிகப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த தமிழ் நேர்முக வர்ணனை 2004 அக்டோபரிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. தனியாக அலைவரிசை இல்லையென்பது சரியான காரணமாக இருக்க முடியாது ஏனெனில் அது, ‘கடந்த 25 வருடங்களாக இருந்தது இப்போது எங்கே காணாமல் போயிற்று?’ என்கிற கேள்வியை எழுப்பும். இதன் வர்த்தக சாத்தியக் கூறுகள் பற்றி சரியாக் எடுத்துச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டியவர்கள் சொல்லாமல் விட்டு விட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

தொலைக்காட்சி இந்தளவுக்கு வீச்சு பெறாத காலத்தில் தமிழ் வர்ணனைததன் கிரிகெட்டை தமிழகத்தின் மூலை முடுக்கு களுக்கெல்லாம் எடுத்து சென்றது என்பது ஒரு நிர்வாண உண்மை. கிரிக்கெட் மட்டுமல்ல. ஏனைய எல்லா விளையாட்டுக்களும் கிராம மக்களைச் சென்றடைய தமிழ் வர்ணனை அவசியம். சென்னையில் நடந்த சர்வதேச ஹாக்கி போட்டி, டென்னிஸ் போட்டி ஆகியவற்றுக்குக் கூட தமிழ் வர்ணனை இல்லையென்பது ஒரு பெரிய சோகம். விளையாட்டில் தமிழ் ஒலிபரப்புக்காக ஒரு தனி அலைவரிசையே துவங்கப்பட்டாலும் அதன் நீண்ட கால நன்மைகள் தற்கால நட்டங்களை பெரிய அளவில் ஈடு செய்யும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

‘அப்படிப்பட்ட ஒலிபரப்பை யார் கேட்பது?’ என்று அதிகாரத்திலிருக்கும் நண்பர் ஒருவர் இளக்காரமாகக் கேட்டார். ‘பண்பலை ஒலிபரப்பில் கூட 90க்கும் அதிகப்பட்ட சதவிகிதத்தை ‘சூரியனு’க்கும், ‘மிர்ச்சி’க்கும் தாரை வார்த்து விட்ட நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கக் கூடாது’ என்று பதிலிறுத்தேன். தமிழ் தலைவர்கள் சிலரை கண்டு முறையிடலாமென்று நினைத்தபோது கூட வர வேண்டிய நண்பர், ‘மாலைக்கும் சால்வைக்கும் என்னிடம் காசு இருக்கிறது. ஆனால் நடையாய் நடப்பதற்கும் சென்று காத்துக் கிடப்பதற்கும் என்னிடம் நேரமில்லை’ என்றார். That says it all!!!

சச்சின் சாதனைக்கா(ர)ர் என்பதில் சந்தேகமில்லை. காவஸ்கரின் 34 சதங்கள் என்கிற உலக சாதனையை முறியடித்து 35 சதங்கள் என்கிற சாதனையை அடைந்துள்ளார். இருவரும் எடுத்துக் கொண்ட தூரம் 125 போட்டிகள். ஒருநாள் போட்டி ஆட்டத்தில் அதிகமான போட்டிகளில் கலந்து கொண்டது, அதிகமான ரன்களைக் (13909) குவித்தது, அதிகமான சதங்கள் (38), அதிகமான அரைச்சதஙக்ள் (71) என்கிற அத்தனை சாதனைகளுக்கும் சொந்தக்காரர் டெண்டுல்கர்.

டெஸ்ட் போட்டி ஆட்டங்களில் 10,000 என்கிற இலக்கை முதலில் கடந்தவர் கவாஸ்கர். பிறகு ஆலன் பார்டர் அந்த எல்லையைக் கடந்தார். சச்சின் தொடர்ந்தார். இப்போது அந்த சாதனை மேற்கிந்தியத் தீவுகளின் பிரையன் லாராவின் கையில். அதையும் சச்சின் எட்டுவார் - கடப்பார் என்பது உறுதி

1989-இல் 16 வயதில் டெஸ்ட் ஆடத் துவங்கிய உலகிலேயே மிக இள ஆட்டக்காரர் 17வது வயதில் இங்கிலாந்துக்கெதிராக இங்கிலாந்திலேயே கன்னிச்சதம். சச்சின் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் 50 சதங்களை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 34க்கும் 35க்கும் இடையிலான இடைவெளி ஏறக்குறைய ஒரு வருடம் என்பதை வைத்துப் பார்க்கும்போது 40 சதங்கள் வரை சாதிப்பார் என்று நம்பலாம்.. என்றாலும் அதை அடையும் அளவில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமில்லை என்பது டெண்டுல்கரின் சாதனைக்கு மேலும் மகிமை சேர்க்கிறது. அவர் 10,000 ரன்களைப் பூர்த்தி செய்தபோதுஒரு கட்டுரையில் டென்(தவுசண்ட்)டுல்கர் என்று குறிப்பிட்டிருந்தேன். இப்போது ‘நூறாண்டு வாழ்க! நூறு சதத்தையும் எட்டுக!!’ என்று வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

'சாத்தான்குளம்' அப்துல் ஜப்பார் துபாயிலிருந்து

இந்தியா வெற்றிக்கு ஒருபடி அருகில்

நான்காம் நாள் ஆட்டம் முடியும்போது இலங்கை 436ஐத் துரத்தவேண்டிய நிலையில் 123/5 என்ற கணக்கில் உள்ளது. நாளின் கடைசிப்பந்தில் ஹர்பஜன் சிங் சமரவீரவை அவுட்டாக்கினார்.

இலங்கை தன் இன்னிங்ஸை நன்றாகவே தொடங்கியது. முதல் இன்னிங்ஸ் போலவே இப்பொழுதும் பதான் முதல் விக்கெட்டைப் பெற்றார். சொல்லப்போனால் இந்தியா, இலங்கை இரண்டிலுமே "G"யில் தொடங்கும் தொடக்க ஆட்டக்காரர்கள் இரண்டு இன்னிங்ஸிலும் எதிரணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரிடம் ஒரே மாதிரியாக எல்.பி.டபிள்யூ ஆகியுள்ளனர்!

அதையடுத்து அட்டபட்டுவும் சங்கக்காரவும் மிக நன்றாக விளையாடினார்கள். அணியில் எண்ணிக்கை 100ஐத் தாண்டியும் இரண்டாவது விக்கெட் விழாததால் எப்பொழுதும்போல இந்திய ரசிகர்கள் பொறுமை இழந்தனர். நம் பதிவிலேயே ஒரு நண்பர் கீழ்க்கண்ட பின்னூட்டத்தை விட்டுச்சென்றார்: "நம்மாளுங்க ஜெயிப்பாங்களா என்று நினைக்கிறீங்க?.... நம்பிக்கை இருக்கா அப்பு?"

நான்காவது இன்னிங்ஸில் 250 அடிப்பதே கஷ்டம் என்பது இந்திய ரசிகர்களுக்குப் புரியவேண்டும். பொறுமையும் வேண்டும்.

இந்த ஆட்டத்தில் விக்கெட்டே எடுக்காத அகர்கர் ஒரு ரிவர்ஸ் ஸ்விங் பந்தில் சங்கக்காரவை ஏமாற்றி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்கவைத்தார். அதன்பின் கும்ப்ளே ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளைப் பெற்றார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் நன்றாக விளையாடிய அணித்தலைவர் அட்டபட்டு கும்ப்ளே பந்துவீச்சில் அவருக்கே ஒரு கேட்சைக் கொடுத்தார். அதே ஓவரில் நைட்வாட்ச்மேன் மலிங்க பண்டாரா எல்.பி.டபிள்யூ ஆனார். குறையும் வெளிச்சத்தில் நாளின் கடைசி ஓவரில் ஹர்பஜன் சிங் பந்தில் சமரவீரா ஸ்லிப்பில் நிற்கும் திராவிடிடம் பிடிகொடுத்தார்.

இனி நாளை தில்ஷன், முபாரக் இருவரும் ஜெயவர்தனாவுடன் கூட்டுசேர்ந்து எவ்வளவு நேரம் இந்தியாவை அலைக்கழிப்பார்கள் என்று பார்க்கலாம்.

நாளைக் காலையிலேயே ஆட்டம் முடிந்துவிடும் என்று நினைக்கிறேன்.

Monday, December 12, 2005

இந்தியா 375/6d, லீட் 435

உணவு இடைவேளைக்குப் பிறகு நான் சொன்னது போலவே 40 நிமிடங்களில் யுவராஜும் தோனியும் சேர்ந்து 55 ரன்கள் பெற்றனர். தோனி 51*, யுவராஜ் 77*. 375/6 என்ற ஸ்கோரில் திராவிட் டிக்ளேர் செய்தார்.

இலங்கை ஜெயிக்க 436 ரன்கள் தேவை.

நான்காம் நாள் உணவு இடைவேளை

இந்தியா இன்று காலை ஒரு விக்கெட் (கங்குலி) மட்டும் இழந்து 83 ரன்கள் பெற்றுள்ளது. இப்பொழுதைய லீட் 380 ரன்கள். இலங்கை ஜெயிப்பது மிகவும் கடினம். பிரகாஷ் சொன்னதுபோல ஒன்றும் நடக்கவில்லை.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகான முதல் ஒரு மணி நேரம் இந்தியா விளையாடினால் போதுமானது. அந்த ஒரு மணி நேரத்தில் இந்தியா 40-50 ரன்கள் பெற்றால் போதும். 420-430 லீட் இருக்கும்போது ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவிக்கலாம். அல்லது அதற்குள்ளாக இந்தியா ஆல் அவுட் ஆனாலும் குற்றமில்லை.

பொதுவாக முதல் இன்னிங்ஸில் 400 அடிப்பதற்கும் கடைசி இன்னிங்ஸில் அடிப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. வெகுசில அணிகளே அதனைச் செய்துள்ளன. அதற்கு நல்ல ஆடுகளமும் அவசியம். தில்லி ஆடுகளம் மிகவும் மெதுவாகவும் பந்து உயரம் குறைந்தும் வருவதால் ஜெயவர்தனே, சங்கக்கார போன்ற அடித்தாடுபவர்களுக்கு ஏதுவானதல்ல. அட்டபட்டு நின்று ஆடலாம். குணவர்தன, தில்ஷன், முபாரக், சமரவீரா போன்றவர்கள் அனுபவம் குறைந்தவர்கள். பிற இயற்கை இடையூறுகள் வராவிட்டால் இந்த டெஸ்ட் இந்தியா பையில் என்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.

காலையில் விழுந்த ஒரே விக்கெட் கங்குலி; முரளியில் தூஸ்ராவில் உள்விளிம்பில் பட்டு பவுல்ட் ஆனார். பெற்ற ரன்கள் 39. யுவராஜ் சிங் 56 ரன்களுடனும் தோனி 21 ரன்களுடனும் விளையாடுகின்றனர்.

டெல்லி டெஸ்ட் --- வெற்றியை நோக்கி இந்தியா ????

இரண்டாம் டெஸ்டின் மூன்றாம் நாள் முடிவில் இந்தியா நல்ல வலுவான நிலையில் இருக்கிறது. இந்த மூன்று நாள்களும் ஆட்ட நேர முடிவில் இந்தியா வலுவான நிலையிலிருப்பதும் பின்னர் மறுநாள் இலங்கையின் பதிலடிக்கு பின்னர் மீண்டும் அந்நிலைக்கு வருவதும் தொடர்கதையாகியிருக்கிறது.
இந்த மூன்று நாள் ஆட்டங்களிலும் காலை முதல் ஒருமணி நேர ஆட்டமும், மதிய தேநீர் இடைவெளிக்கு பிந்தைய ஆட்டமும் நல்ல விறுவிறுப்பான முடிவுகளை கொடுத்தது நிஜம்.

இன்று ஆட்டநேர முடிவில் 237/5 எடுத்து 297 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கும் இந்திய அணி நாளை காலை முதல் ஒரு மணி நேரத்தை தாக்கு பிடித்து 400 முதல் 450 வரை முன்னிலை பெற்றால் வெற்றியை நோக்கி பயணிக்கலாம். இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆட்டமிழக்காமலிருக்கும் கங்குலி இந்த ஆட்டத்தில் தன் திறமையை வெளிப்படுத்தி ரன் குவித்து அணியில் தன் இடத்தை உறுதிபடுத்தலாம்.

ஆனால் இந்திய அணியின் வெற்றி இனிமேல் பந்துவிச்சாளர்களின் கையில் குறிப்பாய் கும்ளே பதானிடம் உள்ளது எனலாம். நாளை அணியினர் எவ்வளவு விரைவாய் ரன் சேகரித்தாலும், இல்லை ஆட்டமிழந்தாலும் இலங்கை அணியின் பேட்டிங்கும் பலமாயிருப்பதால் பந்து வீச்சாளர்களின் பணி மிக முக்கியமானதாக இருக்கிறது.

மொத்தத்தில் நாளை ...

இந்தியா 400 முதல் 450 ரன்கள் முன்னிலை.
இலங்கை 3 முதல் 5 விக்கெட்டுகள் இழப்பு

டெல்லி டெஸ்ட் இந்தியா வசமாக அவசியமாகிறது......

(பி.கு): இன்றைய ஆட்டத்தில் மற்றொரு சிறப்பம்சம் 94 போட்டிகளில் 8000 ரன்களை கடந்து இந்திய அணியின் கேப்டன் ராகுல் டிராவிட் இந்திய பேட்ஸ்மென்களில் டெஸ்ட் போட்டிகளில் இந்த எண்ணிக்கையை பெற்ற மூன்றாவது வீரராயிருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள் ....

பிற நாடுகளில்...

நான் ஊருக்குப் போகும் முன்னர் சில ஹேஷ்யங்களை விட்டுச்சென்றேன். எல்லாமெ தவறாக முடிந்தன.

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மிக அதிகமான ரன்ன்களைத் துரத்தி வெற்றிகண்டு ரெகார்டை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் எட்டு விக்கெட்டுகள் விழுந்தபின்னர், ஒன்பதாவது விக்கெட்டுக்காக மெக்கல்லம், வெட்டோரி ஜோடி சேர்ந்து 74 ரன்களுக்கு பெற்றுக் கிடைத்த வெற்றி. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 331/7 என்ற ஸ்கோரைப் பெற்றது. கடைசி நான்கு ஓவர்களில் மட்டும் ஆஸ்திரேலியா பெற்ற ரன்கள் 71!! இதற்குப் பிறகும் கூட நியூசிலாந்து இந்த ஆட்டத்தை ஜெயிக்கும் என்று யார் எதிர்பார்த்திருப்பார்கள்?

ஆனால் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியா, தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

ஸ்கோர்கார்ட்

-*-

பாகிஸ்தான் - இங்கிலாந்து முதலாம் ஒருநாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் ஜெயிக்கும் என்றேன். இங்கிலாந்து வென்றது. இங்கிலாந்தின் அனைத்து மட்டையாளர்களுமே நன்றாக விளையாடினர். ஐம்பது ஓவர்களில் 327/4 என்ற ஸ்கோரைப் பெற்றனர். பாகிஸ்தான் நன்றாகவே இந்த எண்ணிக்கையைத் துரத்தினாலும் விக்கெட்டுகள் விழுந்தகொண்டே இருந்த காரணத்தால் ஆல் அவுட் ஆகி, தோற்றது.

ஸ்கோர்கார்ட்

அதற்கடுத்து இன்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் பழிக்குப் பழி வாங்கியது.

முதலில் ஆடிய இங்கிலாந்து சடசடவென எட்டு விக்கெட்டுகளை இழந்தபோது அதன் ஸ்கோர் வெறும் 130தான்! ஆனால் ஒன்பதாவது விக்கெட்டுக்கான ஜோடி - ப்ளங்கெட், சோலங்கி இருவரும் சேர்ந்து 100 ரன்கள் பெற்றனர். இதனால் இங்கிலாந்து 230க்கு ஆல் அவுட். இந்த எண்ணிக்கையை பாகிஸ்தான் எளிதாகவே பெற்றது. ஏழி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி. கம்ரான் அக்மல் சதமடித்தார்.

இந்தியா மிக வலுவான நிலையில்

மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடைந்துள்ள நேரத்தில் இந்தியா மிக வலுவான நிலையில் உள்ளது.

இர்ஃபான் பதான் தொடக்க ஆட்டக்காரராக வந்து இலங்கை அணியை நிலைகுலையச் செய்தார். முதல் இன்னிங்ஸிலேயே பதான் தொடக்க ஆட்டக்காரராக வருவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். எனக்கு பதானைத் தொடக்க ஆட்டக்காரராக அனுப்புவது பிடிக்கவில்லை.

இரண்டாவது இன்னிங்ஸிலும் கூட தோனியை முதலில் அனுப்பியிருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். ஆனால் சாப்பல், திராவிடின் முடிவு நன்மையாக முடியும்போது நான் என்ன நடுவில் சொல்ல? பதானின் விளையாட்டைக் கொஞ்சம் மட்டும்தான் தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது. முழுதாக ஆல் இந்தியா ரேடியோவில்தான் கேட்டுக்கொண்டிருந்தேன்.

பார்த்த அந்தக் கொஞ்ச நேரத்தில், பதான் மிக அற்புதமாக விளையாடினார். ஒரு மேல்வரிசை ஆட்டக்காரர் எவ்வாறு விளையாட வேண்டுமோ அந்த ஒழுக்கத்துடனும் அமைதியுடனும் தன்னம்பிக்கையுடனும், எந்தவிதமான பயமும் இன்றி, தயக்கமும் இன்றி விளையாடினார்.

இடதுகை மட்டையாளர்கள் வலது கை ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர்களிடம் தடுமாறுவார்கள் என்பது பொது அறிவு. ஆனால் முரளிதரனை பதான் நன்றாகவே எதிர்கொண்டார். புதுப்பந்தை இயக்க வந்த முரளியை முதல் ஓவரிலேயே சிக்ஸ் அடித்ததில் - 'நீ முதல் இன்னிங்ஸில் என்ன செய்திருந்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை' - என்ற த்வனி இருந்தது.

ஆனாலும் பதான் சதம் அடிக்காததில் எனக்கு மிகுந்த வருத்தம். பதான் முதன்முறையாக இந்தியாவுக்காக ஒரு நல்ல இன்னிங்ஸ் ஆடியபோது நான் லாஹூரில் மைதானத்தில் இருந்தேன். பதானின் பெற்றோர்களும் அங்கு இருந்தனர். பதான் நிச்சயமாக அரை சதத்தைத் தாண்டுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அரை சதத்தின் வாயிலில் அவுட்டானார். யுவராஜும் பதானும் அந்த ஆட்டத்தில் மிக நன்றாக விளையாடினார்கள். ஆனாலும் அந்த டெஸ்டில் இந்தியா தோற்றது. இந்த டெஸ்டிலும் பதான் 90ஐத் தாண்டியதும் சதம் நிச்சயம் என்றே நினைத்தேன். ஆனால் கிடைக்கவில்லை.

பதான் - இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை.

இன்று திராவிட் விளையாடியதும் நன்றாக இருந்தது. அந்தத் தேவையற்ற ரன் அவுட் தவிர்த்து, அவர் வேகமாக ரன்கள் சேர்க்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து விளையாடினார். பதானும் திராவிடும் பலமுறை தடுப்பாளர்களைத் தடுமாற வைக்கும் விதமாக வேகமாக 1, 2 ரன்களைப் பெற்றனர்.

பதான், திராவிட் அடுத்தடுத்து அவுட்டானதும் இந்தியா நிலைகுலையும் என்று இலங்கை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் யுவராஜும் கங்குலியும் வேறு நினைப்பில் இருக்கிறார்கள். நாளைக் காலையில் முரளியை நன்றாக எதிர்கொண்டால் இந்தியா 350க்கு மேல் முன்னிலையை எட்டலாம். அந்த நிலையில் இந்தியாவுக்குத்தான் வெற்றி நிச்சயம் என்று சொல்லிவிடலாம்.

அடுத்த ஆட்டத்துக்கு சேவாக் வந்துவிடுவார். எனவே யுவராஜ் வெளியேற வேண்டும். கவுதம் கம்பீரை இன்னமும் ஓர் ஆட்டத்துக்கு வைத்துக்கொள்ள வேண்டும். பதான் இருக்கிறார் என்ற கணக்கில் கம்பீரைத் தூக்கிவிட்டு பதானை முழுநேர தொடக்க ஆட்டக்காரராக விளையாட வைப்பது எனக்கு ஏற்புடையதல்ல.

அகர்கருக்கு பதில் ஜாகீர் கான் - நிச்சயம் இந்த மாற்றமாவது இருக்க வேண்டும்.

Sunday, December 11, 2005

வாஸ் 300 விக்கெட்டுகள்

இரண்டாவது இன்னிங்ஸிலும் வாஸ் கவுதம் கம்பீரை எல்.பி.டபிள்யூ அவுட் செய்து டெஸ்ட் வாழ்க்கையில் தன் 300வது விக்கெட்டைப் பெற்றார்.

இரண்டு அணிகளும் ஆளுக்கொரு தடவழியை (strategy) முன்வைத்தனர். முதல் இன்னிங்ஸில் திராவிட் ஆட்டத்தைத் தொடங்க வேண்டியிருந்தது. இம்முறை இர்ஃபான் பதானை தொடக்க ஆட்டக்காரராக அனுப்பினார்கள். பதான், தோனி ஆகியோர் முதல் இன்னிங்ஸில் முரளிதரன் பந்துவீச்சில் மிகவும் சிரமப்பட்டனர். பதானை முன்னதாக அனுப்பியதன் மூலம் அவர் வேகப்பந்து வீச்சாளர்களை நன்றாக சமாளித்து அதன்மூலம் இந்தியாவுக்கு முக்கியமான சில ரன்களைப் பெற்றுத்தருவார் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் இலங்கை தன் தடவழியாக இரண்டாவது ஓவரிலேயே முரளியைப் பந்துவீச அழைத்தனர். இது சரியானதாக எனக்குத் தோன்றவில்லை. முரளியால் புதுப்பந்தை வழுக்காமல் சரியாகப் பிடித்துச் சுழல வைக்க முடியும் என்று தோன்றவில்லை. கொஞ்சம் அளவு குறைந்தாலும் கூடினாலும் காட்டமாகத் தண்டிக்கப்படுவார்.

பதானைத் தொடக்க ஆட்டக்காரராகக் கொண்டுவந்தபின் திராவிட் 3-ம் இடத்தில் வராமல் லக்ஷ்மணை அனுப்பியது ஏன் என்று புரியவில்லை. டெண்டுல்கர் 4-ம் இடத்தை விட்டு நகர மாட்டார். இதனால் திராவிட் 5-ம் இடத்திலும் கங்குலி 6-ம் இடத்திலும் யுவராஜ் 7-ம் இடத்திலும் வரவேண்டும்! இதனால் இந்த ஆட்டத்தில் பெரிய பிரச்னை இல்லை - ஒருவேளை யுவராஜ், கங்குலியை முன்னால் அனுப்பி கொஞ்சம் ஆக்ரோஷமாக அடித்தாடச் சொல்லலாம். தோனியைக் கூட முன்னதாக அனுப்பலாம். எப்படியும் 220 ரன்கள் முன்னணியில் இருந்தால்தான் இந்த ஆட்டத்தை ஜெயிக்க எளிதாக இருக்கும். முடிந்தால் 300 ரன்களுக்கு மேல் கையிருப்பு வைத்திருப்பது நலம்.

இந்தியா முதல் இன்னிங்ஸில் முன்னணியில்

மூன்றாம் நாள் காலை கும்ப்ளே தன் திறமையான பந்துவீச்சைத் தொடர்ந்தார்.

வாஸ் சீக்கிரமாகவே கும்ப்ளே பந்துவீச்சில் மிட்விக்கெட்டில் நின்றிருந்த ஹர்பஜன் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பதான் மலிங்க பண்டாராவை பவுல்ட் ஆக்கினார். முரளிதரன் ஒரு பெரிய சிக்ஸ் அடித்ததற்குப் பிறகு, கும்ப்ளே பந்தில் பவுல்ட் ஆனார். கடைசி விக்கெட்டுக்கு முபாரக்கும் பெர்னாண்டோவும் மிக முக்கியமான சில ரன்களைச் சேர்த்ததும் கடைசியாக பெர்னாண்டோ ஹர்பஜன் சிங் பந்தில் கங்குலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்தியாவுக்கு 60 ரன்கள் முன்னணி.

இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா கம்பீர், பதான் இருவரையும் பேட்டிங் செய்ய அனுப்பியுள்ளது. இதற்கு மாற்றாக இலங்கை முரளிதரனை இரண்டாவது ஓவரிலேயே பந்துவீச அழைத்துள்ளது. இந்த ரிப்போர்டை எழுதும்போது பதான் முரளியை ஒரு சிக்ஸ் அடித்துள்ளார்.

ஆட்டம் சுவையாகச் செல்கிறது!

தமிழில் தொலைக்காட்சி வர்ணனை

Zee Sports தொலைக்காட்சியில் ஆங்கிலம், ஹிந்தியைத் தவிர தமிழ், வங்காளம் என்ற இரு மொழிகளிலும் கிரிக்கெட் வர்ணனைகள் செய்வதாகத் தகவல்கள் வந்துள்ளன. (செய்தி)

இப்பொழுது நடக்கும் இந்தியா-இலங்கை ஆட்டங்கள் தூரதர்ஷனிலும் Zee Sports சானலிலும் ஒரே நேரத்தில் காண்பிக்கப்படுகின்றன. அடிப்படை ஒளியோடை TWI நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறது. இத்துடன் வருவது ஆங்கில வர்ணனை மட்டுமே. இதுதான் உலக நாடுகள் அனைத்துக்கும் போகிறது.

தூரதர்ஷன் இந்த ஒளியோடையை எடுத்துக்கொண்டு அத்துடன் வரும் ஆங்கில வர்ணனையை வைத்துக்கொண்டு, அவ்வப்போது ஹிந்திக்கு மாறும். அதற்கென சில வர்ணனையாளர்களை வைத்திருப்பார்கள்.

Zee Sports ஒரே நேரத்தில் தமிழ், வங்காளம், ஹிந்தி என்று மூன்று வர்ணனைகளை அளிக்கிறார்கள். தமிழில் WV ராமன், திரு.குமரன் - இருவரும் முன்னாள் கிரிக்கெட்டர்கள், அரி-கிரி அசெம்ப்ளி புகழ் பாஸ்கி ஆகியோர்.

நான் சென்னையில் இருப்பதால் இலவசமாக Zee Sports சானலைப் பார்க்க முடியாது. செட் டாப் பாக்ஸ் மூலம் தனியாகப் பைசா தரவேண்டும். தமிழகத்தில் இருக்கும் பிறர் இந்தத் தமிழ் வர்ணனையைக் கேட்டு உங்கள் விமரிசனங்களை எங்களுக்கு எழுதுங்கள்.

இந்தக் கூட்டுப்பதிவின் சக பதிவர் ஆசிப் மீரானின் தந்தை அப்துல் ஜப்பார் சென்னை வானொலிக்காக தமிழில் கிரிக்கெட் வர்ணனை செய்திருப்பது உங்களுக்குத் தெரியும். அவருடன் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சன் டிவியிடம் கிரிக்கெட் ஒளியோடையை மட்டும் பெற்றுக்கொண்டு அதன்மேல் தமிழில் வர்ணனையைச் சேர்த்துத் தரலாம் என்ற யோசனையைச் சொன்னதாகச் சொன்னார். ஆனால் சன் டிவி அதனைச் செயல்படுத்தவில்லை. Zee Sports அதனைச் செய்தால் நான் நிச்சயம் அவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடமிருந்து தொலைக்காட்சி உரிமத்தைப் பெறுவதைப் பெரிதும் வரவேற்பேன்.

தில்லி டெஸ்ட் டிராமா

இன்றுதான் ஹைதராபாதிலிருந்து வந்தேன். ஹைதராபாத்-சென்னை சார்மினார் அதிவிரைவு வண்டியை வேறு ஏதாவது பெயரால் அழைக்கலாம். நேற்று இரவு 8.10க்குக் கிளம்பிய வண்டி இன்று காலை 12.40க்கு சென்னை வந்து சேர்ந்தது!

கடந்த இரண்டு நாள்களில் தில்லி டெஸ்டில் என்னென்னவோ நடந்துவிட்டன. என் சக வலைப்பதிவர்கள் இவற்றைப் பற்றி இங்கு நிறைய எழுதியிருப்பார்கள் என்று பார்த்தால் ஒன்றும் காணோம்!

நிறைய வேலைகள் தலைக்கு மேல் இருப்பதால் கொஞ்சம் மட்டும் இப்போது...

டெண்டுல்கரின் 35வது டெஸ்ட் சதம். ஆதிக்கம் செலுத்தி அடித்த சதம் அல்ல. அவரது மிக அழகான சதமும் அல்ல. ஆனால் ரெகார்ட் என்ற விதத்திலும் இரண்டாம் நாள் ஆட்டம் சென்றதைப் பார்க்கும்போதும் அவருக்கும் இந்தியாவுக்கும் மிக முக்கியமான சதம். சதத்துக்கான ஒரு ரன்னைப் பெற்றதும் அவர் அதைக் கொண்டாடிய விதமே அவர் எவ்வளவு தூரம் இந்தச் சதத்தை எதிர்பார்த்தார் என்று காண்பித்தது.

முரளியின் பந்துவீச்சு. டெண்டுல்கர், கங்குலி இருவரும் விளையாடியதைப் பார்க்கும்போது இந்தியா 400ஐப் பெறுவது கடினமில்லை என்று தோன்றிய நிலையில் சடசடவென்று இரண்டாம் நாள் காலை முரளிதரன் பெற்ற விக்கெட்டுகள் இந்தியாவைத் தடுமாற வைத்தன. முரளியின் தூஸ்ராக்கள் திராவிட், டெண்டுல்கர் போன்றவர்களையே தடுமாற வைக்கும்போது தோனி, ஹர்பஜன் சிங் ஆகியோர் எம்மாத்திரம்? முரளி லெக் ஸ்பின் பந்து வீசுகிறாரோ என்று பயமுறுத்த வைக்கும் விதத்தில் அவரது தூஸ்ராக்கள் சுழலுகின்றன. 7-100 என்ற கணக்கில் இந்தியாவை அசர வைத்தார் முரளி.

கும்ப்ளேயின் பதிலடி. இந்தியா 254/3 என்ற கணக்கிலிருந்து 290 ஆல் அவுட் ஆனதைத் தொடர்ந்து இலங்கை தொடக்க ஆட்டக்காரர்கள் விக்கெட் ஏதும் இழக்காமல் 50ஐத் தாண்டினர். அவ்வளவுதான்... இனி இந்தியா திண்டாட்டம்தான் என்று நினைக்கும்போது இர்ஃபான் பதான் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார். முரளி மாதிரி நம் அணியில் ஏன் ஸ்பின்னர்கள் யாரும் விக்கெட்டுகளைப் பெறவில்லை என்று நினைக்க வைத்த அட்டபட்டு, ஜெயவர்தனா விளையாட்டு. அப்பொழுது கும்ப்ளே வீசிய அற்புதமான பந்துவீச்சு. முதலில் ஜெயவர்தனா ஸ்வீப் செய்யப்போய் எல்.பி.டபிள்யூ ஆனார். அடுத்து சமரவீரா அற்புதமான லெக் பிரேக்கில் க்ளீன் பவுல்ட். அடுத்த பந்திலேயே - ஃபிளிப்பர் - தில்ஷன் எல்.பி.டபிள்யூ. இந்தப் பந்து கொஞ்சம் லெக் ஸ்டம்புக்கு வெளியே போயிருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் டெண்டுல்கருக்கும் கூட அப்படித்தான். கடைசியாக நாளின் கடைசிப்பந்தில் அட்டபட்டுவை ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் கேட்ச் பிடிக்க வைத்தது. இப்படியாக கும்ப்ளேயின் 4-54, ஆட்டத்தை நிச்சயமாக இந்தியா பக்கம் சாய்த்துள்ளது!

மூன்று சாம்பியன்கள், இரண்டே நாள்களில்! இனி அடுத்த மூன்று நாள்களில் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ!

Wednesday, December 07, 2005

சச்சின் - டெல்லி - 35 ?

34 சதங்களை அடித்து, கவாஸ்கருடன் அதிக டெஸ்ட் சதங்களுக்கான உலக சாதனையை சமன் செய்துள்ள சச்சினுக்கு தேவை இன்னும் ஓர் சதம். 35வது சதத்தை நடந்து கொண்டிருக்கும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடித்து சாதனை புரிய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் சச்சினின் தற்போதைய ஃபார்ம் கவலை அளிக்கிறது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் ஆடியதோடு சரி. அதற்கு பிறகு ஆடிய 8 ஒருநாள் ஆட்டங்களிலும் (இலங்கைக்கு எதிராக - 4, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக - 4) சரியாக ஆடவில்லை. அவரது வழக்கமான ஆட்டமுறையை பார்க்க இயலவில்லை.

இலங்கைக்கு எதிராக, சென்னையில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் சச்சின் விளையாடியதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வந்து விட்டது. அவ்வளவு மோசமாக ஆடினார். பிட்ச் சுமார்தான். பந்து எழும்ப வில்லை. வாஸ் மற்றும் முரளீதரன் நன்றாக பந்து வீசினார்கள். இருந்தாலும் திறமையான ஆட்டக்காரரான சச்சின் இத்தகைய சூழ்நிலையை எதிர்கொண்ட விதம் கேள்விக்குறியானதே.

22.3 ஓவர்கள் விளையாடி 22 ரன்கள் எடுத்தார். இதுவே கூட ஒரு சாதனையாக இருக்கலாம். கொஞ்சம் அடித்து ஆடியிருந்தால் நெருக்கடி குறைந்திருக்கக் கூடும். சச்சினின் தடுமாற்றத்தினால் இலங்கை வீரர்கள் உற்சாகம் பெற்று நன்றாக பந்து வீசினர். பிற இந்திய வீரர்களுக்கும் நெருக்கடி அதிகரித்தது. வாஸ் 10 ஓவர்கள் தொடர்ந்து ரன் எதுவும் கொடுக்காமல் பந்து வீசினார். நடுவில் சச்சின் கொடுத்த ஒரு கேட்ச் வாய்ப்பினை விக்கெட் கீப்பர் சங்ககரா நழுவ விட்டார். ஒருவழியாக சச்சின் அவுட்டான போது, வருத்தத்தை விட கோபம்தான் வந்தது.

இருந்தாலும் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் இன்னமும் சச்சினே. சச்சின் களத்தில் இருப்பது இந்திய வீரர்களுக்கு ஊக்கத்தையும், எதிரணி வீரர்களுக்கு கலக்கத்தையும் தருவது உண்மையே. கடந்து 16 வருடங்களாக தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் சச்சின் சீக்கிரம் ஃபார்முக்கு திரும்புவதையும், சாதனை படைப்பதையும் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்குகிறார்கள்.

அடுத்த டெஸ்ட் டெல்லியில் நடக்கிறது, பார்ப்போம் டெல்லி கை கொடுக்குமா என்று? இந்தியா இந்த டெஸ்ட்டில் வெற்றி பெற்றால், ஐசிசி தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறலாம்!

நாளை மறுநாள் தொடங்கும் மூன்று ஆட்டங்கள் - முன்னோட்டம்

நாளை மறுநாள் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா கடைசி ஒருநாள் ஆட்டம். பாகிஸ்தான் - இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி.

முதலாவதில் ஆஸ்திரேலியா ஜெயிக்க வாய்ப்புகள் அதிகம். இரண்டாவதில் பாகிஸ்தான்.

நாளை மறுநாள்தான் இந்தியா-இலங்கை இரண்டாவது டெஸ்ட் தில்லியில் தொடங்குகிறது. சென்னையில் நடந்த ஆட்டத்தை மறந்துவிட்டுதான் இந்தியா விளையாடவேண்டும்.

அகர்கர் அணியில் இருக்கவேண்டுமா என்பது கேள்வி. ஆனால் இப்பொழுதைய டீம் நிர்வாகத்துக்கு அவர் மீது அப்படி என்ன நம்பிக்கையோ தெரியவில்லை. ஒருநாள் போட்டிகள் வேறு, டெஸ்ட் போட்டிகள் வேறு. ஜாகீர் கான் அணிக்குள் வந்தால் நன்றாக இருக்கும். அதேபோல பாலாஜிக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. ரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாடு அணிக்காகக் கூட இந்த வருடம் இதுவரையில் ஆடவில்லை.

பதான், கும்ப்ளே இருவரும் விக்கெட் எடுக்கக்கூடியவர்கள். ஹர்பஜன் சிங் சென்னையில் விக்கெட் எடுக்காவிட்டாலும் நம்பகமானவர். நிறைய விக்கெட்டுகளை எடுக்கக்கூடியவர். ஆனால் அகர்கர் மீது அப்படியான நம்பிக்கை எனக்கு இல்லை.

இந்தியாவின் பேட்டிங்கிலும் சில பிரச்னைகள். டெண்டுல்கர், லக்ஷ்மண், கங்குலி - மூவருமே பல்வேறு காரணங்களால் நம்பிக்கை தரும் விதமாக விளையாடவில்லை. இதில் லக்ஷ்மண், கங்குலி இருவருமே ஒருநாள் போட்டிகளில் விளையாடாதவர்கள். அதனால் அவர்களது ஃபார்ம் பற்றி முழுமையாகச் சொல்லமுடியாது.

இவர்கள் மூவரில் யாராவது இருவராவது நல்ல ஃபார்முக்கு வருவது இந்தியாவுக்கு அவசியமாகிறது.

Tuesday, December 06, 2005

ஆஸ்திரேலியா மீண்டும் வெற்றி

இன்றைய ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்தை வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஆண்டிரூ சைமாண்ட்ஸின் அபார சதம்

ஆண்டிரூ சைமாண்ட்ஸ் 127 பந்துகளில் 156 ரன்கள் எடுத்தார் (12x4, 8x6). இவருடைய கேட்ச் ஒன்று ஆரம்பத்திலேயே கோட்டை விடப்பட்டது. இதன் விளைவை நியூசிலாந்து சந்திக்க வேண்டியதாயிற்று. சைமாண்ட்ஸும் கிளார்க்கும் ஜோடி சேர்ந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 220 ரன்கள் பெற்றனர். 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 322/5 என்ற எண்ணிக்கையைப் பெற்றது.

இந்த மைதானத்திலும் (வெல்லிங்டன்) எல்லைக்கோடுகள் மிக அருகிலேயே இருந்தன.

நியூஸிலாந்தின் அதிரடி எதிர்ப்பு

ஆனால் நியூசிலாந்து உடனடியாக அடிபணிந்துவிடவில்லை. தொடக்க ஆட்டக்காரர் லூ வின்செண்ட் 49ஏ பந்துகளில் 71 ரன்கள் பெற்றார். கிறிஸ் கெய்ர்ன்ஸ் 52 பந்துகளில் 60 ரன்கள் பெற்றார். தொடர்ந்து ஜேகப் ஒராம், பிரெண்டன் மெக்கல்லம் இருவரும் அணியை வெற்றியை நோக்கிச் செலுத்தினர். ஆனால் கடைசியில் விழுந்த சில விக்கெட்டுகள் நியூசிலாந்தின் நிலையை மோசமாக்கின. அப்படியும் கடைசி இரண்டு ஓவர்களில் 24 ரன்கள் பெற்றால் வெற்றி என்று இருந்தது. 49வது ஓவரில் மெக்கல்லம், அணித்தலைவர் வெட்டோரியுடன் சேர்ந்து 18 ரன்கள் பெற்றார். இப்பொழுது 50வது ஓவரில் 6 ரன்கள் எடுத்தாலே போதும். ஆனால் மெக்கல்லம் அவசியமில்லாத ஒரு ரன்னைப் பெறப்போய் கிளார்க்கால் ரன் அவுட் ஆனார். ஒரு பந்தில் ரன் எடுக்காவிட்டால் குடி முழுகிப் போயிருக்காது. மெக்கல்லம் 9வது விக்கெட். க்டைசியாக மட்டையாட வந்தவர் கைல் மில்ஸ் பந்து வீச்சாளரிடமே தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க முயற்சி செய்து தானும் ரன் அவுட் ஆனார்.

ஆக கைக்கு வந்து வாய்க்குப் போகாமல் தோற்றது நியூசிலாந்து!

மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற நிலையில் முன்னணியில் உள்ளது.

சென்னை ஆட்டம் டிரா

இலங்கை இந்தியாவின் எண்ணிக்கையை விட ஒரு ரன் அதிகமாகப் பெற்றதும் ஆட்டத்தை முடித்துக்கொள்ள இரு அணியினரும் ஒப்புக்கொண்டனர்.

அட்டபட்டுவின் விக்கெட்டையும் கும்ப்ளே பெற்றார்.

இந்தியாவின் பந்துவீச்சு எந்த அளவுக்கு தில்லி ஆட்டத்தில் சிறப்பாக இருக்கும் என்பதை வைத்துத்தான் இந்தியாவின் வெற்றிவாய்ப்புகள் பற்றிப் பேசமுடியும்.

இலங்கை நல்ல பதிலடி

இந்தியாவின் 167க்கு பதிலாக இலங்கை மோசமாகத் தொடங்கியது. முதல் ஓவரிலேயே ஆவிஷ்கா குணவர்தனே பதான் பந்துவீச்சில் தோனியால் பிடிக்கப்பட்டு அவுட்டானார்.

ஆனால் தொடர்ந்து சங்கக்கார, ஜெயவர்தனா இருவரும் மிக நன்றாக விளையாடினார்கள். அகர்கர், பதான் பந்துவீச்சு அவ்வளவு சரியாக இல்லை. மேலும் ஆடுகளம் சற்று எளிதாக மாறியிருக்கலாம்.

கும்ப்ளே சங்கக்காரவை எல்.பி.டபிள்யூ அவுட் ஆக்கினார். தொடர்ந்து ஜெயவர்தனே தேநீர் இடைவேளை வரை அவுட்டாகாமல் விளையாடினார். ஹர்பஜன் சிங்கை அடித்து விளாசினார்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு கும்ப்ளே பந்துவீச்சில் கம்பீரிடம் பிடிகொடுத்து ஜெயவர்தனா ஆட்டமிழந்தபோது 71 ரன்கள் பெற்றிருந்தார். (14x4, 1x6). இரு அணிகளிலும் சேர்த்து இதுவரையில் விளையாடியவர்களில் மிகச்சிறப்பாக ஆடியவர் இவர்தான் என்பதில் சந்தேகமில்லை.

இப்பொழுது அட்டபட்டுவும் சமரவீராவும் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். நிச்சயமாக இலங்கை உளவியல்ரீதியாக இந்தியாவுக்கு பெருத்த அடியைக் கொடுத்துவிட்டது.

திராவிட் டாஸில் ஜெயித்ததும் பந்துவீசியிருக்க வேண்டும் என்பது என் கருத்து.

க்ரேக் சேப்பலின் பலிபீடத்தில் நால்வர்

167க்கு ஆல் அவுட் என இந்தியா சேப்பாக்கத்தில் பல்டி போட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்திய அணியின் கோச் க்ரேக் சேப்பலின் வழிமுறைகள் மற்றும் அதற்கு எழுந்துள்ள சில விமர்சனங்களைக் கவனிப்போம்.

சேப்பலை உள்ளே கொண்டுவந்தது ஜக்மோகன் டால்மியா அணி. ஆனால் வளர்த்த கடா மார்பில் பாயும் என்பது போல அவர் கங்குலியின் திறமையிலும், பயிற்சி மற்றும் ·பிட்னஸ் ஆகியவற்றில் கேள்விக்குறி எழுப்பி, அணியை விட்டே துரத்தியடித்தது சென்ற 2 மாதங்களின் முதல் பக்க அல்லது கடைசி பக்க செய்திகள்.

தற்போது சேப்பலின் அடுத்த குறி என இன்னும் 3 நபர்கள் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் யாரால் வெளியேற்றப்பட்ட செலக்டர் - யஷ்பால் ஷர்மா என்.டி.டி.வியின் Big Fight நிகழ்ச்சியில் சென்ற சனியன்று கூறியது - சேப்பலின் அடுத்த குறி ஜாகீர் கான், சேவாக் மற்றும் ஹர்பஜன் சிங்.

சில சுட்டிகள்

http://cricket.indiatimes.com/quickiearticleshow/1318700.cms



http://www.outlookindia.com/full.asp?fodname=20051212&fname=Cricket+%28F%29&sid=2








Photos Courtesy: ESPNSTAR, Prajasakti and Telegraph

இதில் ஜாகீர் கான் அணியில் இடம்பெறாததற்கு அவரின் ·பிட்னஸ் மற்றும் ஜான் ரைட் கோச்சாக இருந்த போது, அவரை மிகவும் மதிக்காமல் (அடிக்கவும் சென்றுவிட்ட) நடந்து கொண்ட விதம் என பேசப்படுகிறது.

சேவாக் பெயர் இடம்பெறுவதற்கு அவரின் சமீபத்திய ·பார்ம் (ஒரு நாள் மற்றும் டெஸ்டில்)என்று காரணம் சொல்லப்பட்டாலும், அவரது ·பிட்னஸ் (தொப்பை அதிகம் விழுந்துள்ளது.. இதை சரி செய்யவேண்டும் என சுனில் காவஸ்கரும் எழுதியிருந்தார்) மற்றும் பயிற்சியின் போது சரியாக பங்கு கொள்ளாமை அல்லது ஒருமுகப் படுத்தும் தன்மை இல்லாமை (focus) என கூறப்படுகிறது. இருந்தாலும் அவர் பந்து வீச்சு மற்றும் குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுப்பதும் தற்போதைக்கு அவரை அணியை விட்டு நீக்காவண்ணம் காப்பாற்றி வருகிறது எனலாம்.

ஹர்பஜன் சிங்: கங்குலி விவகாரம் வெடித்தபோது அவருக்கு ஆதரவாய் குரல் கொடுத்ததும் ஒரு காரணம் என தெரிகிறது. இத்தனைக்கும் ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் எடுக்கும் ஒரு பௌலர். ஆனால் சேப்பலுக்குப் பிடிக்காத காரணம் - பயிற்சியின் போது முழு கவனம் செலுத்தாமை என தெரிகிறது.

அதாவது சேப்பலின் கணிப்புப் படி யாரெல்லாம் அவர் சொல்லும் பயிற்சி மற்றும் ·பிட்னஸ் சங்கதிகளில் சரியாக ஈடுபடவில்லையோ அல்லது உடல்திறனை சொன்னபடி பாதுகாத்து சொல்பேச்சு கேட்காமல் நடந்துகொள்கிறார்களோ அனைவரும் ஹிட் லிஸ்டில் வந்துவிடுவார்கள் என்றே தெரிகிறது.

ஆட்டம் இருக்கும் நாட்களில் (அல்லது முதல் நாள்) இது மாதிரி நைட் கிளப்புகளுக்குச் செல்வது / ஆட்டம் பாட்டம் என இருப்பது நிச்சயம் மறுநாள் மைதானத்தில் விளையாட ஏதுவாக இருக்கப்போவதில்லை. புதிதாக வந்துள்ள இளைஞர்கள் இதை உணருவார்களா ?


இது இந்திய அணிக்கு நல்லதா, கெட்டதா என்பது ஏப்ரல் மாதக் கடைசியில் தெரிந்துவிடும்.

- அலெக்ஸ் பாண்டியன்
06-டிசம்பர்-2005

Monday, December 05, 2005

இந்தியா ஆல் அவுட்

இந்தியா 167க்கு ஆல் அவுட். சேவாக் (36), தோனி (30) தவிர யாருமே free ஆக விளையாடவில்லை. திராவிட் (32) அதற்கடுத்து கொஞ்சம்.

வாஸ் 4 விக்கெட்டுகள், முரளி 2 விக்கெட்டுகள், பெர்னாண்டோ, பண்டாரா ஆளுக்கு ஒரு விக்கெட். இரண்டு ரன் அவுட்.

இனி இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று பார்ப்போம்.

இதுதான் இந்தியா இலங்கைக்கு எதிராக எடுக்கும் மிகக்குறைந்த டெஸ்ட் இன்னிங்ஸ் ஸ்கோர்.

சென்னையில் ஐந்தாம் நாள் காலை ஆட்டம்

அதிகம் எழும்பாத ஆடுகளம், மட்டையாளர்களின் தேவையில்லாத தடுப்பாட்டம், இலங்கை பந்துவீச்சாளர்களின் - முக்கியமாக சமிந்தா வாஸின் - துல்லியமான பந்து வீச்சு, அத்துடன் சில தேவையற்ற ரன் அவுட்கள், எல்லாம் சேர்ந்து இந்தியாவை படு கேவலமான நிலைக்குத் தள்ளியுள்ளது.

காலை முதற்கொண்டே விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் உள்ளன.

முதலில் திராவிட் - வாஸ் பந்தில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து அவுட். அடுத்து டெண்டுல்கர் முரளிதரன் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. பின்னர் லக்ஷ்மண் ரன் ஒன்றைப் பெற விரும்ப, கங்குலி அதை விரும்பாததால் ரன் அவுட் ஆனார் லக்ஷ்மண். பின் கங்குலி கவரில் கேட்ச் கொடுத்து அவுட். பதான் முரளியின் பந்தில் காட் & பவுல்ட். அகர்கர் மீண்டும் தேவையில்லாமல் ரன் அவுட்.

தோனி ஒருவர்தான் தன்னம்பிக்கையுடன் விளையாடுகிறார். மற்ற அனைவரும் பயந்து நடுங்கிக்கொண்டு விளையாடியது போல இருந்தது.

தோனி ஒரு நோபாலில் கேட்ச் கொடுத்தார் - அதிர்ஷ்டவசமாகத் தப்பினார்.

ஆனால் இலங்கை பேட்டிங் செய்யும்போதும் நிறைய விக்கெட்டுகள் விழும் என்றுதான் தோன்றுகிறது. இன்னமும் ஒரு நாள் இருந்திருந்தால் இந்த ஆட்டத்தில் ரிசல்ட் கிடைத்திருக்கும் என்று தோன்றுகிறது.

வெற்றிக்கு யார் காரணம்?

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானின் அபாரமான வெற்றிக்குப் பின்னால்சுஹைப் அக்தாரின் அதிரடி பந்து வீச்சு காரணமா, முகமது யூசு·பின் இரட்டை சதம் காரணமா, இன்சமாமின் தலைமை காரணமா என்று வெற்றியின் ரகசியத்தை பாகிஸ்தான் பத்திரிகைகள் விவாதம்
செய்து கொண்டிருக்க, முன்னாள் ஆட்டக்காரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா வேறு விதமான கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

'பாகிஸ்தானின் வெற்றிக்கு அதன் பயிற்சியாளர் பாப் வூல்மர்தான் காரணம்' என்று அடித்துச் சொல்லியிருக்கிறார்ரமீஸ் ராஜா. எந்த அணியுமே வெற்றி பெறுவதற்கு ஒருங்கிணைந்து ஆட வேண்டியது மிக அவசியம்.அதுவும்
கிரிக்கெட் போன்ற ஆட்டத்தில் ஆட்டக்காரர்களின் மனநிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பாப் வூல்மர்வந்த பிறகுதான் பாகிஸ்தான் அணியின் 'ட்ரெஸ்ஸிங் ரூமில்' சுமுகமாக நிலை வந்திருக்கிறது. அணியின்
அங்கத்தினர்களுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையையும், நெருக்கத்தையும் உருவாக்குவதில் வூல்மரின் பங்கு மிக முக்கியமானது. இந்த அடிப்படை மாற்றம்தான் பாகிஸ்தானின் வெற்றிக்குக் காரணம்" என்றிருக்கிறார் அவர்.
அவர் சொல்வதும் நியாயமானதாகத்தான் இருக்கிறது. இது போன்ற ஒரு சூழலை இந்திய அணியினரிடையே உருவாக்க சேப்பலால் முடியுமா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்தியா நான்காம் நாள் - 90/2

இன்று ஆட்டம் வெளிச்சப் பற்றாக்குறையால் முடியும்போது இந்தியா 90/2 என்று இருந்தது.

சேவாக் அவுட்டானதும் ரன்கள் மிக மெதுவாக வந்தன. அதிலும் டெண்டுல்கர் மிகவும் defensive-ஆக விளையாடினார். ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. திராவிட் எப்பொழுதும் போல மெதுவாகத்தான் ஆடினார். திராவிட் 30* (95). டெண்டுல்கர் 11* (69).

பல பந்துகள் தரையோடு உருண்டு வந்தன.

இந்தியா டாஸில் வென்றதும் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்திருந்தால் சில விக்கெட்டுகளைப் பெற்று இலங்கையைப் பயமுறுத்தியிருக்கலாம்.

நாளை இலங்கைக்கு பேட்டிங் வாய்ப்பைக் கொடுப்பார்களா இல்லையா என்று தெரியவில்லை. கங்குலிக்கு பேட்டிங் வாய்ப்பு இருக்குமா என்றும் தெரியவில்லை.

சேவாக் அவுட்

சில நல்ல அடிகள், சில மோசமான அடிகள். சேவாக் 36 ரன்கள் (28 பந்துகள், 7x4) பெற்றதும், வாஸ் பந்து வீச்சில் அட்டபட்டுவால் ஷார்ட் கவர் திசையில் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார்.

45/2.

ரசிகர்கள் டெண்டுல்கரிடமிருந்து இப்பொழுது ஒரு சதத்தை எதிர்பார்க்கிறார்கள்.

சலீம் துரானி - அன்றைய ஷேவாக்!!


நான் பள்ளிப்பருவத்திலிருந்தே ஒரு சரியான கிரிக்கெட் பைத்தியம்! எல்லா விளையாட்டுகளிலும் எனக்கு ஒரு ஈடுபாடு உண்டென்றாலும் கிரிக்கெட்டில் அதிக ஈடுபாடு எனலாம்.

நம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பிரகாசித்த அந்நாள் வீரர்களைப் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது. சமயம் கிடைக்கும்போதெல்லாம், வாரம் ஒன்றோ இரண்டோ பதிவுகளை சீரியலாக இடலாம் என்றிருக்கிறேன்.

அவ்வரிசையில் அக்காலத்தில் ஆல்ரவுண்டர் என்ற பட்டத்துக்கு மிகவும் தகுதிபெற்ற சலீம் துரார்னியைப் பற்றி இப்பதிவில் எழுதுகிறேன். இவர் அநாயசமாக சிக்ஸர் அடிப்பதில் பேர் பெற்றவர். அப்போதைய ஷேவாக் என்றால் இளைய தலைமுறையினருக்கு எளிதாகப் புரியும். நல்ல உயரமும் கட்டுமஸ்தான உடல் வாகும் கொண்டவர் என்று என் நினைவில் நிற்கும் அவருடைய உருவம் கூறுகிறது!


1962என்று நினைக்கிறேன். அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். தூய தொன்போஸ்கோ பள்ளி, காட்பாடி. பள்ளி தலைமையாசிரியரின் அறைக்கு வெளியே இருந்த அகண்ட கரும்பலகையில் அன்றைய முக்கியமான செய்திகளை சுருக்கமாக - தலைப்புகளை மட்டும் எழுதுவார்கள்.

அப்போது - மாசம், தேதியெல்லாம் நினைவில்லை - இந்தியாவுக்கும் வெஸ்ட் இண்டீசுக்கும் இடையில் டெஸ்ட் தொடர் நடந்துக்கொண்டிருந்தது. எப்போதும்போல் இந்தியா தோல்வியடைந்தது என்பது வேறு விஷயம். ஆனால் போட்டி நடந்த எல்லா நாட்களிலும் ஒரேயொரு வீரரின் பெயர் மட்டும் - பேட்டிங்கிலும் பெளலிங்கிலும் - பலகையில் இருந்தது. அவர்தான் சலீம் துரானி. அவர் அந்த போட்டியில் சதம் அடித்ததுடன் வெஸ்ட் இண்டீசின் சில விக்கெட்டுகளையும் வீழ்த்தவே அந்த போட்டியின் இறுதி நாளன்று கிரிக்கெட்டில் தீவிர ரசிகனாயிருந்த என்னுடைய வகுப்பு ஆசிரியரும் இதைப் பற்றி வகுப்பில் ஒரு ஐந்து நிமிடம் பேசியதனால்தான் இன்றும் அது என் நினைவிலிருக்கிறது!

பிறகு நான் பள்ளி, கல்லூரி முடித்து வங்கியில் குமாஸ்தாவாக பணியில் சேர்ந்த பிறகு ஒரு ஜனவரிமாதம் - வருடம் நினைவிலில்லை. அதே இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றபோது சலீம் துரானி - I think he was making a come back in that match after a long gap - பட்டோடியின் தலைமையில் கூடியிருந்த ரசிகர்கள் கேட்கும்போதெல்லாம் சிக்சராக விளாசியடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

கூகுள் தேடுதலில் கிடைத்த அவரைப் பற்றிய விவரங்களை கீழே கொடுத்துள்ளேன்.

சலீம் துரானி

Interview with Salim D